Friday, October 28, 2005

பதிவு16: தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?


மொத மொத இந்த அமெரிக்காவுக்கு கையில
இரண்டு சூட்கேசோட வந்து, டெக்சாஸ் மாகாணம் Dallas அருகில் இருக்கும் Irving என்ற ஊரில்தான் "பெஞ்ச" தேய்ச்சுக்கிட்டு இருந்தோம். இருந்தோமுன்னா அந்த அபார்ட்மெண்ட்டுல 8 பேர் இருந்தோம். எல்லாரும் அமெரிக்கா கனவுகளோட "ஜாவா" கப்பல்ல ஏறி வந்த மக்கள். ஜாவாவ அரைகுறையாப் படிச்சுட்டு டாட்காம் புண்ணியத்துல எப்படியோ எங்களுக்கும் விசா கிடைச்சு ( அதான் விசா விசா மட்டுமே வேலை இல்லை ) வந்து சேர்ந்து ஆறு வருசமாகப் போகிறது. என்ன இருந்தாலும் எனக்கும் என் நண்பனுக்கும் Irving -ல் ஏற்பட்ட Halloween அனுபவம் மறக்க முடியாதது.

நாங்க இருந்த அந்த அபார்ட்மெண்ட் தரைத்தளதில் இருந்தது. நாங்கள் வந்து இரண்டுவாரமே ஆகி இருந்தது. எங்களை அழைத்து வந்த கன்சல்டிங் கம்பெனிக்காரர்கள் எங்களை " அநாவசியமாக வெளியில் போகக்கூடாது. அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பலர் இந்த அபார்ட்மெண்ட்டில் தங்கி இருப்பதால் ,அபார்ட்மெண்ட்காரர்கள் எதாவது நடவடிக்கை எடுக்கக்கூடும்" என்று எச்சரித்து இருந்தார்கள். அதனால் சமைப்பது,இரவில் மட்டும் போய் தாபால் செக் பண்ணுவது டெலிபோன் இன்டர்வியூ attend பன்ணுவது என்று எங்கள் இரண்டுவார வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது.

ஒருநாள் இரவில் கதவில் தட் தட் தட் என்று பலர் தட்டும் சத்தம். போச்சுடா அபார்ட்மெண்ட்காரர்கள்தான் வந்துவிட்டார்கள் என்று நினைத்து இருந்த 8 பேரில் 4 பேர் போய் ஒளிந்து கொள்ள, நானும் மற்ற நண்பர் ஒருவரும் கதவில் உள்ள Eye Piece வழியாகப் பார்த்தோம். வீட்டுக்கதவுமுன் பல சிறுவர் சிறுமியர்கள் நின்று கொண்டு இருந்தனர்.கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேய்,நாய்,சூப்பர் மேன், தேவதை போன்ற பலவிதமான் ஆடை அலங்காரத்தில் நின்று கொண்டுஇருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் பெரிய கூடை நிறைய பலவிதமான வண்ண சாக்லேட்டுகளும், இன்னும் பல பேர் புரியா வகை வஸ்துகளும் இருந்தது. எங்கள் இருவருக்கும் என்ன ஏது என்று புரியவில்லை.

அவர்களைப் பார்த்து Hello சொன்னோம். அவர்கள் கோரசாக என்னமோ சொன்னார்கள். அவர்கள் பேசிய ஆங்கிலம் எங்களுக்குப் புரியவில்லை,நாங்கள் பேசிய ஆங்கிலம் அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு எங்கே இருந்து அது தோன்றியதோ தெரியவில்லை. நான் அது அவர்களின் பிறந்த நாள் என்று நினைத்து,ஒரு குழந்தையின் கூடையில் கையைவிட்டு சில சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தேங்க்யூ சொன்னேன். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் என்னை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு, அவர்களுக்குள் என்னமோ பேசிக்கொண்டு அடுத்த வீட்டிற்கு செல்ல ஆயத்தமானர்கள். அவர்களை நிறுத்தி எனது நண்பனும் அவன் பங்குக்கு சாக்லேட் எடுத்துக்கொண்டு அவர்களிடம் தேங்க்யூ சொன்னான். அவர்கள் எங்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓட ஆரம்பித்து விட்டார்கள்.பிறந்தநாள் சாக்லேட் கொடுத்துட்டு ஏன் இதுக இப்படி ஓடுதுக? அப்படீன்னு நொள்ள பேசிக்கிட்டு சாக்லேட்டை வாயில் போட்டோம்.

பின்பு நாங்கள் இருவரும் விசயம் தெரிந்த சிலரிடம் கேட்டபோதுதான் தெரிந்தது அது "Halloween" விழாவாம். நாம் தான் குழந்தைகளுக்கு மிட்டாய் போடவேண்டுமாம். அவர்கள் சட்டி பானையில் இருந்து மிட்டாய் எடுக்கக்கூடாதாம். அன்று குழந்தைகளிடம் மிட்டாய் எடுத்த பாவத்திற்காக இப்போது வருடா வருடம் நான் பல குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கி Halloween ஐ சிறப்பாக கொண்டாடி வருகிறேன்.

Halloween வரலாறு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (அப்பல்லாம் நம்ம தமிழ் மொழி இருந்துச்சுபோல அதனாலதன் செம்மொழி அந்தஸ்து ஆமா) இப்போது அயர்லாந்து,இங்கிலாந்து மற்றும் வடக்கு பிரான்ஸ் நாட்டுப் பகுதிகளில் "செல்ட்ஸ்" இன மக்களின் புத்தாண்டு நவம்பர் 1. கோடைகாலம் முடிவடைந்து, வயல் வரப்பு வேலைகள், அறுவடை எல்லாம் முடிஞ்சு கடுங்குளிர் காலத்தோட தொடக்கம் தான் இந்த நவம்பர் 1. அந்த "செல்ட்ஸ்" இன மக்களுக்கு ஒருவிதமான நம்பிக்கை இருந்தது. இந்த அக்டோபர் 31 இரவு முடிந்து நவம்பர் 1 ஆரம்பிக்கும், அந்த நடுநிசி வேளையில், இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஒரு நம்பிக்கை. அந்தக் காலங்களில் அவர்கள் விதவிதமான உடைகள் அணிந்து இரவில் அவர்களுக்குள் குறி சொல்லிக்கொண்டும், அந்தப் பேய்களுக்கு தானியங்கள்,விலங்குகளைப் பலியாகக் கொடுப்பதும் வாடிக்கை. இந்த விழா Samhain (pronounced sow-in) என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த இன மக்கள் AD 43 வாக்கில் ரோமர்களின் கட்டுப்பாட்டில் வந்ததாகத் தெரிகிறது. அதற்குப்பின் ரோமர்களின் "பெரலியா "(Feralia) பண்டிகை மற்றும் "பொம்னா" (Pomona) பண்டிகைகளுடன் கலந்தே இதுவும் கொண்டாடப்பட்டு வந்தது. கி.பி 800 ஆம் ஆண்டுவாக்கில் கிறிஸ்துவ மதத்தின் தாக்கம் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்பட்டு இருக்கிறது. அப்போது போப் ஆண்டவர் "Pope Boniface IV" நவம்பர்1 ஐ இறந்தவர்களுக்கும்(martyrs), சாதுக்களுக்குமான நாளாக அறிவிக்கிறார். இறந்தவர்களுக்காக "செல்ட்ஸ்" மக்கள் கொண்டாடிய விழாவை கிறிஸ்துவம் சம்பந்தப்பட்ட விழாவாக போப் மாற்றி விட்டதாக நம்பப்படுவதும் உண்டு.

இந்த விழா "அல் ஹாலோஸ்" (All-hallows) அல்லது "அல் ஹலோமாஸ்" (All-hallowmas) என்றும் அழைக்கப்படும். (Alholowmesse meaning All Saints' Day). அதுவே இப்போது ஹலோவீனாக (Halloween) மாறி உள்ளது.

Halloween தகவலின் மூலம்:
http://www.historychannel.com/exhibits/halloween/?page=origins

மேலும் விவரங்களுக்கு:
http://www.halloween.com/
http://www.historychannel.com/exhibits/halloween/


தெரிந்தவர்கள் சொல்லுங்கள்:
நம்ம ஊர் கிறிஸ்துவர்கள் ஏன் இதைக் கொண்டாடுவது இல்லை?தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்


****************


****************

17 comments:

 1. "அவர்களுக்குள் என்னமோ பேசிக்கொண்டு அடுத்த வீட்டிற்கு செல்ல ஆயத்தமானர்கள். "

  அனேகமா 'பொறம்போக்கு"னு திட்டியிருக்கும்.

  ReplyDelete
 2. //அனேகமா 'பொறம்போக்கு"னு திட்டியிருக்கும்//

  ஆதிரை,
  அப்போது எங்களுக்கு இந்த விழாவப் பத்தியும் அந்தக் குழந்தைகள் என்ன சொன்னார்கள் என்றும் தெரியாது. இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரியும். அப்படியா சொன்னார்கள் :-)

  ReplyDelete
 3. அன்பின் கல்வெட்டு,

  நன்றாக இருக்கிறது உங்கள் ஆக்கம். நீங்களாவது ரெண்டு சூட்கேசோடு சென்றீர்கள். நானெல்லாம் துணி வாங்கினால் கொடுப்பார்களே மஞ்சள் பை? அதோடு ஊரைவிட்டுக் கிளம்பியன். அது ஒரு மஞ்சள்பை காலம்!

  அன்புடன்,
  மூர்த்தி.
  http://www.muthamilmantram.com

  ReplyDelete
 4. //நான் அது அவர்களின் பிறந்த நாள் என்று நினைத்து,ஒரு குழந்தையின் கூடையில் கையைவிட்டு சில சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தேங்க்யூ சொன்னேன்.//

  இதைப் படித்து வாய்விட்டு சிரித்தேன்!! அவங்க என்ன சொல்லியிருப்பாங்கன்னு சொல்லி உங்களை வருத்தபட வைக்க மாட்டேன்!!! :-)

  ReplyDelete
 5. Mask of Zerro மாதிரி வேடம் போட்டுருக்கறது நீங்க தானா? :-)

  ReplyDelete
 6. சில இடங்களில் சிரிக்க வைத்தது. ஹாலோவீனுக்கு இன்னொரு கதையும் உண்டு. ஏழை மக்கள் வீடுவீடாக சென்று பிச்சை கேட்பதாகவும், உணவு தரும் போர்வீரர்களின் மனைவி இறந்து போன தங்கள் கணவனின் ஆத்மா அமைதியடைய அவர்களை வணங்க சொல்வதாகவும் உண்டு.
  பொதுவாக குழந்தைகள் பலவகை நகைச்சுவை பாடல்களை சொன்னாலும் பெரும்பாலானவர்கள் சொல்வது "trick or treat, smell my feet, if you dont give me something nice to eat"

  ReplyDelete
 7. தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?"

  Theriyum.. :-)

  ReplyDelete
 8. கல்வெட்டு,

  இங்கேயும் 'ஹாலோவீன்' வந்து இப்ப ஒரு 15 வருசமாச்சு.

  இங்கே என்னன்னா'stranger danger'னு பிள்ளைங்களுக்குச் சொல்லிக்கொடுக்கறாங்க. அப்புறம் தெரியாத வீடுங்களுக்க்ப் போய் 'ட்ரிக் ஆர் ட்ரீட்' பண்றது
  தப்புன்னு ஒரு கூட்டம் சொல்ல ஆரம்பிச்சிருக்கு.

  எப்படியோ கடைங்க பணம் பண்ணுது இந்த ஹலோவீன் காஸ்ட்யூம் விற்பனையில்.

  ReplyDelete
 9. மூர்த்தி,
  மஞ்சள்பை காலமா? நானும் அப்படிக் டவுனுக்கு போயிருக்கிறேன். என்ன இங்க வரும்போது கொஞ்சம் பெரிய பை தேவைப்பட்டது :-)

  ரம்யா,
  நீங்க வேற எதையாவது சொல்லி என்ன நோகடிக்காதீங்க :-).
  அந்த நிகழ்ச்சிக்குப்பின் நானும் எனது நண்பரும் பல பேரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டோம்.

  சிவா (சிவபுராணம்),
  அந்த Mask of Zerro நாந்தேன் :-) அது 2004 ஹலோவீன் போது எடுத்தது.

  தேன் துளி,
  "trick or treat, smell my feet, அப்படியெல்லாமா பாடுவாங்க?
  நாங்க(நானும் நான் கூட்டிச்செல்லும் குழந்தைகளும்) இதுதான் பாடுவோம்.
  trick or treaters trick or treaters
  knock knock knock
  knock knock knock
  Halloweens are here Halloweens are here
  knock knock knock

  துளசி,
  அங்கேயும் வந்துருச்சா?
  தெரியாதவங்க வீட்டுக்கு போறது இங்கேயும் கிடையாது. பொதுவா நண்பர்கள் வீடுகளுக்குத்தான் குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள். பல வணிக வாளாகங்களில் (Shopping Mall) இதைக் கொண்டாடுவதால் பல பெற்றோர்கள் அங்கே சென்று குழந்தைகளுடன் பொழுதைக் போக்குவது உண்டு.

  அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 10. இப்பத்தான் படித்தேன்

  // ஒரு குழந்தையின் கூடையில் கையைவிட்டு சில சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தேங்க்யூ சொன்னேன் //

  // அவர்களை நிறுத்தி எனது நண்பனும் அவன் பங்குக்கு சாக்லேட் எடுத்துக்கொண்டு அவர்களிடம் தேங்க்யூ சொன்னான். //

  அந்த குழந்தைங்க முகத்த கற்பனையே பண்ணி பாக்க முடியலையே... நன்றாக சிரித்தேன் ;-)))

  ReplyDelete
 11. தெரிந்துகொண்டேன் .. நினைத்து நினைத்து சிரிக்க வேண்டிய நிகழ்ச்சி .. பாவம் அந்த குழந்தைகள் .. 'புனிதர்கள் தினம்' இந்திய கத்தோலிக்கர்களால் கொண்டாடப்படுகிறது ..ஒரு நீண்ண்.ட வழிபாடாக .

  ReplyDelete
 12. முகமூடி,
  நாங்க செஞ்ச செயலை கிண்டல் பண்ணி ஊரே சிரிக்குது நீங்களும் சிரித்துவிட்டுப் போங்கள் :-)))

  எல்.எல். தாசு,
  நம்மூர் கத்தோலிக்கள் கொண்டாடும் புனிதர்கள் தினம் இதுதானா?
  நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் இதுபோல் அவர்கள் கொண்டாடிப் பார்த்தது இல்லை.
  நீங்கள் சொன்னது போல் வழிபாட்டுடன் முடித்துக் கொள்வார்கள் என்றால் தவறு. இப்படிக் கலக்கலா கொண்டாட வேண்டாமா?

  அப்புறம் கல்லறைத்தினம் அப்படீன்னு ஏதோ ஒன்னு (ஒண்ணு எது சரி ??) அவர்கள் கொண்டாடுவார்கள் அதுபற்றி விசாரிக்க வேண்டும்.

  ReplyDelete
 13. Kalvettu

  This is basically a pagan festival and not a christian festival.

  Many of pre christian era functions( have been successfully integrated into christiantiy, esp by Catholics.
  This goes true for
  Easter Day,Christmas,Halloween
  "Why are major Christian holidays layered on older Pagan festivals? The central reason is that as Christianity was struggling for acceptance in Europe, the country-folk would not give up their age-old traditions. By blending the old with the new, it was easier for the Church to convert the locals."

  ReplyDelete
 14. கணேஷ்,
  // By blending the old with the new, //
  நீங்கள் சொல்வதுதான் நான் குறிப்பிடுள்ள
  Halloween தகவலின் மூலம்
  http://www.historychannel.com/exhibits/halloween/?page=origins

  என்ற இணையப் பக்கங்களிலும் உள்ளது. கிறிஸ்துவ (கத்தோலிக்கர்கள்) மடங்கள் பழைய/பிராந்திய திருவிழாக்களை உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதே உண்மையாக இருந்தாலும், அது ஏன் இந்தியாவில் உள்ள அதே கிறித்துவ அமைப்புகளால் அதே முறையில் நாய்,பேய் மற்றும் பலவகை ஆடை(காஸ்ட்யூம்) அணிந்து கொண்டாடவில்லை என்பதே எனது கேள்வி. மேலே உள்ள எல்.எல் தாசுவின் பின்னூட்டைதையும் அதற்கான என்பது பதிலையும் பார்க்க.

  பி.கு:
  இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்கள் (அல்லது யாராவது) அமெரிக்காவில் கொண்டாடுவது போல இதனைக் கொண்டாடினால் நானும் சேர்ந்து கொண்டு வேசம் கட்டலாமே என்று ஆசைதான்.வேறு ஒன்றும் இல்லை :-)))))

  ReplyDelete
 15. கல்வெட்டு,
  நல்லா சிரிச்சேன்.நன்றி!
  கத்தோலிக்கனாக இருந்தும் இப்படி கொண்டாடுவதை கேள்விப்பட்டது கூட இல்லை .மற்றபடி நவம்பர் 1 -சகல புனிதர்கள் தினம் (All saints day) ,நவம்பர் 2 - சகல ஆத்மாக்கள் தினம் (All souls day) என்று தெரியும்.

  ReplyDelete
 16. //அவர்கள் எங்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓட ஆரம்பித்து விட்டார்கள்.பிறந்தநாள் சாக்லேட் கொடுத்துட்டு ஏன் இதுக இப்படி ஓடுதுக? அப்படீன்னு நொள்ள பேசிக்கிட்டு சாக்லேட்டை வாயில் போட்டோம்//
  ஹா, ஹா! ஏன் உள்ளே பதிங்கியிருந்ததுங்களும் வந்து நாலு அள்ளு அள்ளியிருக்கலாமே :-)
  ரொம்ப நாளாச்சு இப்படி நகைச்சுவை பதிவைப் படித்து!

  ReplyDelete
 17. kalvettu
  First of all christian right and evangelist (mainly protestant) groups dont want any pagan festivals to be celebrated.
  Well they even dont like catholics and call them neopagans(with all their saints, symbols etc).
  since you are here in US you should be knowing the amount of influence evangelist have over the current adminstn.

  ReplyDelete