Tuesday, October 25, 2005

பதிவு14: தினமலரில் சானிடரி நாப்கின் விசயம்!

அன்பு வலைப்பதிவர்களே,
இங்கு நாம் விவாதித்த நாப்கின் விசயம் தமிழக அரசு அதிகாரிகள்,காவல்துறையின் உளவுப் பிரிவு ஆகியோர் பார்வைக்கு செல்லும் வகையில் " முதல்வருக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் தினமலர் செய்திமலர் (அக்டோபர் 2005) என்ற இலவச இணைப்பில் வந்துள்ளது.இது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மட்டும் வரும் இணைப்பாக இருந்தாலும் வி.ஐ.பி.க்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. தினமலர் போன்ற ஒரு வெகுசன ஊடகம் மூலம் இந்த செய்தி மக்களுக்கு சென்றடைவதே ஒரு சிறந்த விழிப்புணர்வு முயற்சியாகும்.

தினமலரின் இந்த முயற்சிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தல் நேரமாக வேறு இருப்பதால், எந்த மூலையில் இருந்தாவது ஆதரவுக் குரல் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முன்பே சொன்னபடி இந்த விசயம் விவாதிக்கப்படுவதே ஒரு நல்ல முன்னேற்றம்.

வலைப்பதிவில் முதன் முதலில் இதுபற்றி எழுதிய ரம்யா,நாம் விவாதித்த இந்த விசயத்தை தினமலர்வரை எடுத்துச்சென்ற நமது சக வலைப்பதிவாளர் மற்றும் ஆதராவாய் இருந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

நல்ல விவாதக்களமாக,தமிழ் வலைப்பதிவின் திரட்டியாக இருந்துவரும் தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி.
சானிடரி நாப்கின் - தமிழக முதல்வருக்குக் கடிதம்
சானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்

செய்தியை தெளிவாகப் பார்க்க படத்தின்மேல் சொடுக்கவும்.

தினமலரின் முன்னுரை...

வலைப்பதிவுகளில் காணப்படும் பல செய்திகள் நம்மை வியக்க வைக்கக் கூடியவையாக உள்ளன.

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கடிதமாக 'கல்வெட்டு' என்ற வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் செய்தி,இதுவரை யார் கவனத்திலும் படாத,ஆனால் மிக அடிப்படையான பிரச்னையைப் பேசுவதாக இருக்கிறது. முதல்வரின் கவனத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குக்கிராமத்து, இளம் பெண்களுக்கும் போய்ச் சேர வேண்டிய செய்தியாகவும் இது இருப்பதால் இதை இங்கே வெளியிட்டிருக்கிறோம். படித்து முடித்த பிறகு 'இதுவா...?' என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் காலம் காலமாக வெளியில் சொல்ல முடியாத பல்வேறு ரணங்களையும்,வலிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி அடித்தட்டு பெண்களுக்கு இதன் முக்கியத்துவம் நிச்சயமாகப் புரியும்.






**************************
தமிழ்ப்பதிவுகள் , தமிழ்
***************************