Wednesday, January 09, 2008

மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்

டவுளின் நம்பிக்கை பெயரில் சமுதாயத்தை இரண்டாப் பிரித்தால் வருவது இரண்டே இரண்டு பிரிவுகள்.

ஒன்று கடவுள் இருக்கிறார்- என்ற "நம்பிக்கை" உடையவர்கள்.

மற்றொன்று கடவுள் இல்லை- என்ற "நம்பிக்கை" உடையவர்கள். ஆக, இரண்டு குழுவுமே தாங்கள் சரியென்று நம்பும் ஒரு கருத்தின் நம்பிக்கையாளர்கள்.எப்படி "கடவுள் இல்லை" என்று நம்புவர்களின் பேச்சும், செயலும் "கடவுள் உள்ளார்" என்று நம்புவர்களை புண்படுத்துகிறதோ அதுபோலவே, ஆன்மீகம் அல்லது மதம் என்ற பெயரில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சு,எழுத்து,செயல்கள்,கூச்சல்கள் எல்லாம் கடவுள் இல்லை என்று நம்புபவர்களின் நம்பிக்கையை காயப்படுத்துகிறது.

பெரும்பான்மையினர் கடவுள் இருக்கிறார் என்று நம்புவதால், கடவுள் இல்லை என்று நம்புபவர்களின் மனம் புண்பட்டாலும் மருந்துபோட சட்டங்கள் இல்லை.

கடவுளை விமர்சித்து எழுதப்படும் எழுத்துக்கள், பேச்சுகள் எப்படி "கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்களின்" மனதைப் புண்படுத்துகிறதோ அது போலவே, பக்திப் பாடல்களும்,பத்தி இலக்கியங்களும், புராணங்களும் "கடவுள் இல்லை என்று நம்புபவ்ர்களின்" மனத்தையும் புண்படுத்துகிறது.ஆனால், இதை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.பெரும்பான்மை அரசியல் என்பது இதுதான்.


அவர்கள் ("கடவுள் இருக்கிறர்" என்ற "நம்பிக்கை" உடையவர்கள்) உன்னைக் ("கடவுள் இல்லை" என்ற "நம்பிக்கை" உடையவர்களை) குட்டினால் வரும் 'வலி'க்கு நீ அழுகக்கூடாது, அதே சமயம் நீ அவர்களைக் குட்டினால் வரும் 'வலி'க்கு அவர்கள் அழுகலாம், ஆர்ப்பாட்டம் செய்யலாம்,அதற்கும் மேலாக அரசாங்கத்தால் அவர்களுக்கு மருந்தும் தடவப்படும். போனசாக, உன்னை மத நம்பிக்கையைப் புண்படுத்திய காரணத்திற்காக சிறையில் தள்ள சட்டமும் உண்டு.

அடிபட்டவன் அழுவதற்கு உரிமை வேண்டும் என்று கேட்பதே கேவலமாக உள்ளது. கருத்துக்களை சொல்வதற்கும், சொல்லப்பட்ட கருத்துக்களின் மீது விமர்சனமாக மற்றொருவர் அவரின் பார்வையை பதிவு செய்வதற்கும் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் தான் நம்பும் விசயங்கள்தாண்டி , மாற்றுப் பார்வையில் எளிதாக சிந்திக்க முடியாது. அதற்கு நிறைய பக்குவமும் , மன முதிர்ச்சியும் வேண்டும். பல நேரங்களில் கருத்துக்களை சொல்ல முடியாமல் (சமுதாயத்தில் வாழ்வியல் காரணங்களுக்காக) சில சமயம் ஊமையாய் வேடம் போட வேண்டியுள்ளது.

உலகம் தட்டையானது என்று நம்பிக்கொண்டிருந்த பழமைவாதிகளின் கற்பனையை உடைக்க அந்தக் காலத்தில் எவ்வளவு சிரமங்கள் இருந்ததோ, அதே அளவிற்கு சற்றும் குறையாமல் இப்போதும் பழமைவாதிகளின் எதிர்ப்பு எல்லா விசயங்களிலும் இருக்கிறது. நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்டபோது அதைப் "பேய்" என்றவர்களும் உண்டு.அறிவியலும், வரலாறும் எப்போதும் கடவுள்/மதம் சார்ந்த நம்பிக்கைகளை எதிர் நீச்சல் போட்டே வளர்ந்து இருக்கிறது. அது இன்னும் வளரும் அவர்களை எதிர்த்து. சூரியன் ஒரு நட்சத்திரம் என்று அறிவியல் சொன்னால், சூரியன் ஒரு கிரகம் என்று மற்ற நம்பிக்கைகள் சொல்லலாம் ஆனால் இரண்டும் ஒன்றாகாது.

எல்லா மதங்களிலும் கடவுள் நம்பிக்கையைத் தாண்டி, சடங்குகளும் புனிதப்புத்தகங்களின் புனைவுகளுமே பிரதான இடம் வகிக்கிறது. அந்தப் புனிதத்தன்மையில் மயங்கியே இருக்க மக்களும் விரும்புகிறார்கள். கடவுளர்களின் /மத குருக்களின்/ அவதாரங்களின் புனிதத்தை உடைத்து "அவர்களும் குசு விடுவார்கள்" என்று சாதரணமனிதனால் நம்பமுடியவில்லை. கடவுளர் அவதாரங்களின்/மத குருக்களின் கற்பனைகளை சிலாகிக்கும் இவர்கள், அவர்களும் கக்கூஸ் போனார்கள், கையால் கழுவினார்கள் என்ற சராசரி உண்மைகளை சிந்திக்க அஞ்சுகிறார்கள்.

அவதாரங்களும் ஆய் போவார்கள்!

கதாநாயகன் ஒரே அடியில் 10 பேரை சாய்ப்பது புனைவு என்று அறிந்து அதனை இரசிப்பது பிரச்சனையில்லை.ஆனால், அதன் புனைவுத்தன்மையில் மயங்கி, தன்னை மறந்து இரசிகர் மன்றம் வைப்பது வரை போவது என்பது, சுய புத்தியை இழந்தவர்களின் செயல். அது போலத்தான் மத நம்பிக்கையாளர்களும்.

மனிதர்களில் பெரும்பாலானவர்கள் புனைவுத்தன்மையில் மயங்கியே இருக்க விரும்புகிறபடியால் தங்களை, கேள்வி கேட்க முடியாத ஒரு புனிதத்திற்கு ஒப்புக்கொடுகக வரிசையில் நிற்கிறார்கள். இவர்களால் ஒப்புக்கொடுக்கமுடிய்யாமல் நிற்க முடியாது.

வெற்றிடத்தில் நிற்கப்பயந்தவனுக்கு எப்போதும் சாய்ந்துகொள்ள ஒரு சுவர் வேண்டும்.மதம்/கடவுள் நம்பிக்கைகள் களைப்புற்ற ஒருவனுக்கு சாய்ந்துகொள்ள உதவும் ஒரு குட்டிசுவராக இருக்கலாம்.எல்லாம் இழந்த ஒருவனுக்கு அந்த கணத்தில் சாய்ந்து கொள்ள மத/தெய்வம் ஒரு குட்டிச்சுவராக இருந்தால் அதனால் சமூகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் அந்தச் சுவர், அவனுக்கு கண நேர ஓய்வு தந்தது என்பதற்காக அங்கேயே தங்கி விடுவதும் , அது சார்ந்த கதைகளைப் மேலும் மேலும் புனைவதும் சமூகத்திற்கு நல்லதல்ல. களைப்பு நீங்கியவுடன் குட்டிச்சுவரை விட்டு விலகி நடக்கத் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால், மதவாதிகள்/மதப்பிரியர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு குட்டிச் சுவரைப் பிடித்து, தொங்கிக்கொண்டு இருக்கவே விரும்புகிறார்கள்.

இதில் யாருடைய குட்டிச்சுவர் தரமானது என்று நீள,அகல .உயர வேறுபாடுகள் குறித்து சண்டைகள் வேறு.மத/சாதி அடையாளங்களைத் துறந்தால் இவர்களிடம் ஏதும் இல்லை.தனக்கென்று ஒரு அடையாளம் உருவாக்கத் தெரியாதவன் பிறர் ஏற்படுத்திய அடையாளங்களில் ஒழிந்து கொள்கிறான்.அதுவே அவனின் கேள்வி கேட்கும் திறனை இழக்கச் செய்கிறது.

நான் அறிந்த வரையில் உலகில் 90 சதவீதத்து மேலான மக்கள் ஏதோ ஒரு மதம் சார்ந்த தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டால், தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் 1% கூட இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். 99% தெய்வ நம்பிக்கை உடைய இந்த நாடு எப்படி இருக்கவேண்டும்? இவர்களின் தெய்வமும் , அந்த நம்பிக்கையும் , அது சார்ந்த விசயங்களாலும் நாட்டிற்கு ஏதாவது பயன் உண்டா? ஒருவன் தெய்வ நம்பிக்கை உடையவன் என்பதற்காக அவன் ரோட்டில் குப்பை போடாமலோ அல்லது சமுதாயக் குற்றங்களில் ஈடுபடாமலோ இல்லை. அய்யப்ப சாமிக்கு மாலை போட்டவனும், சிலுவையை கழுத்தில் தொங்கவிட்டவனும், தொப்பி போட்டவனும் , அவன் நம்பும் மத அடையாளங்களைத் தாங்கி இருப்பதற்காக ரோட்டின் ஓரத்தில் ஒண்ணுக்குப்போக தயங்குவதே இல்லை.

எந்த மதமும் நல்ல குடிமகனை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டது இல்லை. நல்ல மதவாதியை மட்டுமே உருவாக்குகின்றன. ஒரு நாட்டிற்குத் தேவை நல்ல குடிமகன்களே தவிர , மதவாதிகள் அல்ல. மதங்களின் பின்னால் அணிவகுப்பவர் யாரும் நல்ல மனிதராக இருக்கவே முடியாது.ஒரு மதத்தை சார்ந்தவன் அடுத்த மதத்தை "சகித்துக்"கொள்ளமுடியுமே தவிர போற்ற முடியாது. மதங்களுக்கு இடையே "சகிப்புத்தன்மை" என்பதே, பிடிக்காத ஒன்றை அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை "சகித்துக்கொள்" என்றுதான் அர்த்தம் வரும். சகித்துக்கொள் என்பது , சுயமிழத்தல் என்பதாகும். சாவும்,உயிரின் இருப்பும் ஒரே சமயத்தில் ஒரு உடலின் அடையாளமாக இருக்க முடியாது.

எந்த மதத்தையும் சாராமல் இருக்கும் போது சகிப்புத்தன்மை என்ற போலி ஓடிவிடும். மதங்களைப் பார்த்து நகைத்துவிட்டுப் போக நம்மால் சுலபமாக முடியும்.

கடவுள் நம்பிக்கை உடையவனும், நம்பிக்கை இல்லாதவனும் ரோட்டில் ஒண்ணுக்குப்போவதில் இருந்து கொலை செய்வதுவரை ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள். கட்சிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப்போல, இவர்கள் எந்தக் கூடாரத்தில் இருந்தாலும் அவர்களாகவே,அப்படியே இருக்கிறார்கள். 99 % மத நம்பிக்கையாளர்கள் உள்ள இந்த நாடு ஏன் இப்படிச் இலஞ்சம்,AIDS,Civic Sense போன்றவற்றில் சீரழிந்து கிடக்கிறது. மத நம்பிக்கை ஆசாமிகள் சாமி கும்பிடுவதன் முதல் காரணம் (அல்லது subtext ஆக உள்ள காரணம்)..."என்னைக் காப்பாற்று " என்பதே தவிர " நான் இன்று ட்ராபிக்கில் சரியானவிதிகளைக் கடைபிடிக்காவிட்டால் போலீஸ் வரும் வரை காத்திராமல் , நீயே எனக்கு தண்டனை வழங்கு" என்றோ "இன்று முழுக்க குப்பை போடாமல் இருக்க உதவு" என்றோ அல்லது எந்த ஒரு சமூகக் காரணிகளைக் குறித்தோ அல்ல.சிறைச்சாலைகளில் இருப்பவர்களும் 99% தெய்வ நம்பிக்கையாளர்களே.

சாமி கும்பிடுபவன் செய்யும் தவறுகளுக்கு சாமி பொறுப்பில்லை என்றால், உங்கள் சாமி எதற்குத்தான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்?

மதம் சார்ந்த தவறுகள் அல்லது மதத்தை முன்னிலைப்படுத்தி நடக்கும் கொலைகள், அட்டூழியங்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு?

இவைகள் நடக்கும்போதெல்லாம் , மதவாதிகள் "இது தனிமனிதனின் அல்லது குழுவின் செயல்" என்று விலகிப் போய்விடுவார்கள். தனிமனிதனுக்கு சமுதாயத்தில் இணைந்து வாழும் அடிப்படை ஒழுங்கை/தகுதியைக்கூட கற்றுத்தராத மதம் என்ன மதம்? அதனால் என்ன பயன்?

மதங்கள் ஒரு அரசியல் கட்டமைப்பு. மதங்களில் நல்ல மதம் கெட்ட மதம் அல்லது சிறப்பான மதம் என்ற ஒன்றும் கிடையாது. பெண்களின் யோனி சுத்தமாக ,இரத்தப்போக்கு இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்கும் தெய்வ நம்பிக்கைகளை என்ன செய்வது? பூசாரியில் இருந்து கோவிலுக்குப்போகும் அனைவரும் குசுவிடவே செய்கிறார்கள். தெய்வம் இருக்கும் இடம் என்று யாரும் குசுவிடாமல் இருப்பது இல்லை.சிறுவயதில் எல்லாப் புனைவுகளும் , நம்பிக்கைகளும் ஆச்சர்யமாகவே இருக்கும். ஆனால் ஒரு காலத்தில் புனைவையும்,உண்மையையும் பகுத்தாராயத் தெரியவேண்டும். எத்தனை காலம்தான் குழந்தைகளாகவே நம்மை கற்பனை செய்துகொண்டு இன்னும் தவழ்ந்து கொண்டே இருப்பது? ஒரு நிலையில் நாம் நம்மைச் சுற்றியுள்ள விசயங்களை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.நாம் வாழும் இந்தக் காலத்தில், நமது கண்முன்னால் நடக்கும் சிதைவுகளையும், திரிபுகளையும் எதிர்த்துக் கேள்வி கேட்கவிட்டாலும், எது புனைவு என்ற குறைந்தபட்ச புரிதலாவது இருக்க வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா ?

இருந்துவிட்டுப் போகட்டும் அதனால் என்ன?

இவ்வளவு மதங்கள்/கடவுள்கள் இருந்தே இந்தியாவில் Civic Sense மற்றும் சமுதாயக் குற்றங்கள் இந்த இலட்சணத்தில் உள்ளது.இவர்கள் இல்லாவிட்டால் ஒன்றும் குறைந்துவிடப்போவதும் இல்லை.இவர்கள் இருப்பதினால் நான் வாழும் சமுதாயம் ஒன்றும் திருந்திவிடப் போவதும் இல்லை. எனவே, இவர்களின் இருப்பு குறித்தான கவலைகள் எனக்கு இல்லை.

என்னளவில் , மதம்/கடவுள் என்பது என்பது ஒரு சாதாரண பொழுது போக்குச்சாதனம். அது ஒரு குழு சார்ந்த entertainment அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.அதனை ஒட்டி கொண்டாடப்படும் விழாக்கள் அதுசார்ந்த கூட்டத்தை குஷிப்படுத்துகிறது. One-Way யில் போய்விட்டு அதற்கு பரிகாரம் செய்தால் சரி, வேறு தண்டனை எதுவும் வேண்டாம் என்று இவர்கள் சொல்லாத வரைக்கும்தான் நான் இங்கே வாழமுடியும் அதுவும் வந்துவிட்டால் காட்டிற்குள் போய்விட வேண்டியதுதான்.

ஒருவர் தன்னை மதப்பற்றாளராக அடையாளம் காண்பிக்கும்போது அவரிடம் மதம் பற்றிய நமது மாற்றுக் கருத்துக்களை அவராக நம்மிடம் கேட்டால் தவிர பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.அதுவே சாதிக்கும். பூணூல் உடன் ஒருவன் அழையும்போது அவனிடம் போய் பார்ப்பனீயம் பற்றிப் பேசினால் ஒரு புண்ணியமும் இல்லை.

இவர்கள் நம்பிக்கையாளர்கள். தனது நம்பிக்கையை அடையாளமாக தெரிந்தே வெளியில் வெளிப்படுத்துகிறார்கள்.இவர்கள், தங்களின் நம்பிக்கையை தாங்கள் வரித்துக்கொண்ட அடையாளங்களால் தெளிவாக உங்களுக்குச் சொல்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை மதித்து விலகிப் போக வேண்டும்.விவாதிப்பது /உரையாடுவது நேர விரயம்.

குறைந்த பட்சம் தங்களின் நம்பிக்கையை தாங்களே கேள்விக்கு உட்படுத்தாதவர்களின் (மத/சாதி/அதிமுக வின் இரத்தின் இரத்தங்கள்/தி.மு.கவின் உடன் பிறப்புகள்/ரஜினியின் இரசிகர்/சுஜாதாவின் விசிறி.. etc.... போன்றோரின் நம்பிக்கைகள்) நம்பிக்கையை நேரடியாக அவர்களிடமே விவாதிப்பதால் ஒரு பயனும் இல்லை.
அவர்களின் நம்பிக்கை அவர்களை சந்தோசமாக வைத்து இருக்கிறதா?

பொழுதைப் போக்க உதவுகிறதா? விழாக்காலக் கொண்டாட்டங்களைத் தருகிறதா? அதுவே போதும் அவர்களுக்கு. அதன்மீது கேள்வி எழுப்புவது அவர்களையே அசைத்துவிடும் என்பதால், அப்படியே இருக்கவே விரும்புகிறார்கள்.

கடவுள் நம்பிக்கை மட்டும் அல்ல. அதீத இரசிகத்தன்மையால் தன்னை ஒரு அடையாளத்துக்கு ஒப்புக்கொடுத்த யாரும் இவ்வாறே செயல்படுகிறார்கள். ரஜினி இரசிகனாய் ஆன ஒருவன், ரஜினி என்ன சொன்னாலும் அல்லது என்ன நடித்தாலும் இரசிக்க வேண்டிய அல்லது ஆதரித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறான். அது போலவே அரசியல் கட்சிகளின் தொண்டர்களும், எழுத்தாளர்களின் வாசகர்களும்.

"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன - கலீல் கிப்ரான்" (நன்றி : உருப்படாத நாரயண்)

மனிதன் கடவுளை அடைய, மதங்கள் தேவையாய் இருக்கலாம்.

ஆனால், கடவுள் மனிதனை வந்து அடைய,
மதங்கள் தேவை இல்லை.

நல்ல மனமே போதும்


மதங்கள் நிலைத்து இருக்க மனிதனின் உதவி தேவை. ஆனால்,ஒரு நல்ல சமூகப்பார்வையுள்ள மனிதனாக இருப்பதற்கு மதமோ அல்லது தெய்வத்தின் துணையோ தேவை இல்லை , அவசியமும் இல்லை.