Monday, November 01, 2010

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு

னவுகளுக்கு எல்லையில்லை. கனவுகாணுங்கள் இளைஞர்களே என்பது போன்ற கூக்குரல்களைக் கேட்டிருக்கலாம். ஆப்ரிக்காவின் அகண்ட காட்டுப்பகுதிகளில் நான் கேள்விப்பட்டிராத ஒரு இடம் ,செயல் , மக்களைப் பற்றி எனக்கு கனவு வ‌ந்ததே இல்லை.  கனவு என்பது காட்சி. அதற்கு ஒரு பிம்பம் வேண்டும். பிம்பத்தை கட்டமைக்க சில கட்டுமானப்பொருட்கள் வேண்டும். எங்காவது படித்த சில கதைகள் , செவிவழிக் கேட்ட கருத்துகள், கண்களால் கண்ட சில பிம்பங்கள் ...என்று ஏதாவது ஒன்று எனது மூளையின் டேட்டாபேஸில் இருந்தாக வேண்டும். அப்படி எனது மூளையில் இதுவரை புறவழி உணர்வுகளால் இன்னும் பதிவு செய்யப்படாத‌ ஒரு காட்சிப் பிம்பத்தை கனவாகக் காண்பது எனக்கு வாய்க்கவில்லை. உங்களுக்கு வாய்த்திருக்கிறதா?

சின்னவயதில் பேய்க்கனவு வாய்ப்பதற்கு முன் , பேய்க்கதைகள் என்னும் வடிவில் எனது மூளையில், பேய்க்கனவிற்கான கட்டுமானப் பொருட்கள் யார்மூலமோ ஏற்றப்பட்டு இருந்தது. அது இல்லாமல் பேய்க்கனவு சாத்தியமாகவில்லை.  "ஜகன் மோகினி" பார்த்தபின் பேய்க்கான ஒரு தெளிவான பிம்பம் விட்டலாச்சாரியின் தயவில் என் மூளையிள் வந்து உட்கார்ந்து கொண்டது.  அதற்குப்பின் வரும் பேய்கள் எல்லாம் சில காலம் "ஜகன் மோகினி"  பேய்களாகவே குட்டி குட்டியாக வெள்ளை டைட்சூட்டில் வந்தது.  இதுவே சில காலம் கழித்து அழகிய பெண்வடிவ மோகினியாக சேலை , மல்லிகை, வளையல்,கொலுசு  இத்யாதிகளுடன் அழகிய பேயாக மாறிவிட்டது.  ஒருவேளை ஆர்னிகா நாசர்  அல்லது ஜாவர் சீத்தாராமன் ?  கதை வழிவந்த உருவமோ? என்னமோ ஒன்று.  ஏதோ ஒரு புறவழி கதைகளால் என்னுள் பதியப்பட்ட‌  அழகிய பெண்வடிவ மோகினி அந்தக் கனவு பிம்பத்தை கட்டி எழுப்பியிருக்கிறது.

 கக்மக்சிக்பக்சிசுசா என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நான் கேள்விப்படவில்லை அதாவது அது எப்படி இருக்கும் என்ற காட்சியை யாரும் எனக்கு அறிமுகப்படுத்தவில்லை.  கக்மக்சிக்பக்சிசுசா என்று ஒரு கனவு வந்ததே இல்லை.  ஒருவேளை நாளை யாராவது ஒருவர் கக்மக்சிக்பக்சிசுசா கதை சொன்னால் நாளைய கனவில் அது வரலாம்.

கதைகளை மட்டுமே படித்த கதைபுத்தக வாசகர்கள் அதே கதை திரைப்படமாக வரும்போது மிகவும் ஏமாந்துவிடுவார்கள். கதையில் இருந்து திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர், இவர்களின் கற்பனைகளை குலைத்து இருப்பார்.  ஒரு கதையில் வார்த்தைகளால் "அடர்ந்த காட்டில்  இருக்கும் அழகிய குளத்தின் அருகே இருக்கும் வீட்டில்... " என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

வாசகன்1:
அதிகபட்சம் கிராமக் தோப்புகளில் மட்டுமே சுற்றித்திரிந்த ஒருவன் காடு சம்பந்தமாக வேறு எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கதையைப்படிக்கும் அவன் "அடர்ந்த காடு" என்பதை அவன் அறிந்த கிராம தோப்புகளின் பிம்பததிற்கு உட்பட்டே கற்பனை செய்துகொள்ள முடியும். அவனால் அமேசான் காட்டினை இந்தக் கதையின் கற்பனைக்கு காட்சிப்படுத்திக் கொள்ளமுடியாது.
வாசகன்2:
வேடந்தாங்கல் மற்றும் டாப்சிலிப்ஸ் போன்ற காட்டுப்பகுதிகளைச் சுற்றிய ஒருவனுக்கு கதையாசிரியர் சொல்லும் "அடர்ந்த காடு"  என்பதை கற்பனை செய்துகொள்ள பல சாத்தியக்கூறுகள் உள்ளது. அவனால் மிகச்சிறந்த காட்டின் பிம்பத்தை கட்டிஎழுப்பி அதனில் கதையை நகர்த்த முடியும்.
வாசகன்3:
தமிழகத்தில் எழுதப்பட்ட கதை பெரு நாட்டில் வாசிக்கப்படும்போது அங்கே உள்ள ஒருவனுக்கு அமேசான் காட்டை "அடர்ந்த காடு"  என்பதற்கு இட்டு நிரப்பமுடியும்.

இயக்குனர்:
இந்தக் கதையால் கவரப்படும் ஈராக்கைச் சேர்ந்த ஒரு இயக்குனர் திரைப்படம் எடுக்கும்போது, அவரின் மண்சார்ந்த  பாலைவனச் சோலையை காடு என்பதாகக் காண்பிக்கிறார் / காட்சிப்படுத்துகிறார்.

முன்னரே பாலைவனச் சோலை பற்றிய அறிமுகம் இல்லாமல் , மேலே சொன்ன மூவரும் ஏமாற்றமாகிவிடுவார்கள். ஏன் என்றால் கதையைப் படிக்கும்போது  பாலைவனச் சோலையை அவர்களால் கற்பனைகூட செய்திருக்கமுடியாது.  அப்படியே தெரிந்து இருந்தாலும் கதையைப் படிக்கும்போது , அவர்கள் அவர்களின் வாழ்வோடு பொருந்திய / அறிமுகமான காட்டின் பிம்பத்தையே கதைக்காக எடுத்துக் கொள்வார்கள்.

அவர்களின் கற்பனையை மீறி திரைப்பட இயக்குனர் காட்சிப்படுத்தும்போது , "ஆகா இப்படியும் இருக்கலாம்" என்பதைமீறி , "நான் நினைத்ததுபோல இல்லையே" எனும்போது ஏமாற்றம் வருகிறது.

சரி அதை விடுங்கள். நீங்களே இந்தக் கதையின் வாசகன் என்று வைத்துக்கொள்ளுங்கள். கதைசொல்லி ""அடர்ந்த காட்டில்  இருக்கும் அழகிய குளத்தின் அருகே இருக்கும் வீட்டில்... " என்று சொல்லும்போது உங்களால் நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு வீட்டை கற்பனை செய்யமுடியுமா? என்ன இருந்தாலும் உங்களுக்கு வீடு என்பதற்கான ஒரு அடிப்படை பிம்பம் ஏற்கனவே மனிதில் இருந்தாக வேண்டும்.

 பி ரச்சனைகளுக்கு எல்லாம் பெரிய பிரச்சனை நமது மூளையின் செயல்பாடு. எந்தப்புதிய தகவல் வந்தாலும் அதை ஏற்கனவே உள்ள ஒரு தகவல் கிடங்கில் அது இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து அப்படி இருந்தால் அதனுடன் ஒப்பிட ஆரம்பித்துவிடும். அப்படி ஏதும் இல்லாவிட்டால், புதிய தகவல்களை அது எதிர்கொள்ளும்போது அது குறித்த சில விவரங்கள் மூளையில் புதிதாகப் பதிவாகிறது. பின்னாளில், அதுவே அடுத்து வரும் அது சார்ந்த தகவல்களை ஒப்பிடப் பயன்படுகிறது.

உங்களின் இன்றைய கனவு மற்றும் கற்பனையின் எல்லை, நீங்கள் நேற்றுவரை சேமித்த தகவல்களின் எல்லைக்கு உட்பட்டதே. புற உணர்வுகளால் ஏற்கனவே அறிமுகமாயிராத ஒன்றைப்பற்றி அகம் கனவுகாண முடியாது. அப்படி உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் உள்ள மனிதர்களின்(??) உருவங்களை இதுவரை புறவுணர்வுகளால் நீங்கள் அறிந்திராத ஒன்றாக கனவு காண , கற்பனை செய்ய முடிந்துள்ளதா?

உங்களின் புரிதலுக்கு அப்பால் அல்லது உங்களின் டேட்டாபேசை தாண்டிய தகவல்கள் உங்களை வந்து அடையும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?


Picture courtesy http://download-free-pictures.com

14 comments:

 1. மீண்டும் ஒரு நல்ல கட்டுரை... இதனில் கூறப்பட்டிருப்பதை நம்மால் குறுக்காய்வு செய்து பார்த்துக் கொள்ள முடியும். நாடு(வீடு) விட்டு நாடு (வீடு) சென்று அங்கே பொழங்க ஆரம்பிக்கும் பொழுது நாம் அந்த நாட்டைப் (வீட்டைப்) பற்றி நம்முள்ளே எழுப்பியிருந்த பிம்பங்கள் சுருங்கி புற காட்சிகள் மிரட்டியும், ஒன்று மற்றதாகவும்கூட ஆக்கிக் காமிக்கும் விந்தை.

  கண்டிப்பாக நம் மூளை காணும், கேள்விப்படும் வார்த்தைகளை ஏற்கெனவே பதியப்பட்டிருக்கும், புரிந்து கொண்டு உள்ளே இரக்கி வைத்திருக்கும் விசயங்களோட தொடர்புபடுத்தியே interpret செய்து கொள்கிறது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துமில்லை. எனவே, ஒருவர் தவளையாக இருந்து கொண்டு தன்னை டைனோசாராக எண்ணிக்கும் கொள்ளும் அபத்தமும் இதன் எச்சமே!

  //தமிழகத்தில் எழுதப்பட்ட கதை பெரு நாட்டில் வாசிக்கப்படும்போது அங்கே உள்ள ஒருவனுக்கு அமேசான் காட்டை "அடர்ந்த காடு" என்பதற்கு இட்டு நிரப்பமுடியும்//

  அதுக்குத்தான் இந்த மாதிரி சுருங்கிப் போயி இருந்திரக் கூடாதுன்னு நாங்க சல்வடோர் எல்லாம் போயி தமிழ் டான்ஸ் ஆடி படப்பிடிப்பு நடத்துறோம்... கனவின் எல்லைகளை விரித்துக்கொள்ள... ;)

  ReplyDelete
 2. நன்றி தெகா,
  காட்டைப்பற்றி எழுதும்போதும் டாப்சிலிப்ஸ் என்று எழுதும் போதும் உங்களின் கட்டுரைகள் நினைவில் வந்து போனது. அதையும் தாண்டி உங்களின் காட்டாட்சியின் மீது பொறாமையும் வந்தது. :-))

  **

  //எனவே, ஒருவர் தவளையாக இருந்து கொண்டு தன்னை டைனோசாராக எண்ணிக்கும் கொள்ளும் அபத்தமும் இதன் எச்சமே!//

  :‍-)))

  .

  ReplyDelete
 3. //உங்களின் புரிதலுக்கு அப்பால் அல்லது உங்களின் டேட்டாபேசை தாண்டிய தகவல்கள் உங்களை வந்து அடையும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?//

  நான் ஏற்றுக்கொள்கிறேன்.

  இப்படிக்கூட சொல்லாம், ஏற்றுக்கொண்டால் அது ஆன்மீகம்.

  எதிர்கொண்டு மறுத்தல் நாத்திகம்.
  இதற்கும் சிலைவழிபாட்டிற்கும் சம்பந்தமில்லை.

  மனதின் தன்மையை அழகாக சுட்டிக்காட்டியதற்கு நன்றிங்க கல்வெட்டு

  ReplyDelete
 4. //க னவுகளுக்கு எல்லையில்லை. கனவுகாணுங்கள் இளைஞர்களே என்பது போன்ற கூக்குரல்களைக் கேட்டிருக்கலாம்.//

  என்னைக் கேட்டால் (ஹி..ஹி ...யாரும் கேட்பதாக இல்லை ) கனவு கண்டது போதும் ....விழிப்பு அடையுங்கள் என்று தான் சொல்லுவேன் :)

  நல்ல பதிவு :)

  ReplyDelete
 5. .
  நிகழ்காலத்தில்,
  //நான் ஏற்றுக்கொள்கிறேன்.
  இப்படிக்கூட சொல்லாம், ஏற்றுக்கொண்டால் அது ஆன்மீகம்.
  எதிர்கொண்டு மறுத்தல் நாத்திகம்.
  இதற்கும் சிலைவழிபாட்டிற்கும் சம்பந்தமில்லை.//


  :‍-)))

  //மனதின் தன்மையை அழகாக சுட்டிக்காட்டியதற்கு நன்றிங்க கல்வெட்டு//

  நன்றி

  *********

  தனி காட்டு ராஜா,
  //என்னைக் கேட்டால் (ஹி..ஹி ...யாரும் கேட்பதாக இல்லை ) கனவு கண்டது போதும் ....விழிப்பு அடையுங்கள் என்று தான் சொல்லுவேன் :)

  :‍-))
  உண்மையும் தேவையும் அதுதான்.

  நன்றி

  ReplyDelete
 6. உண்மைதான்.. ஆனால் காடு என்பதற்கான அடிப்படை வரைவிலக்கணம் இருந்தால் நமக்கு விரும்பியபடி ஒரு காட்டை உருவாக்கலாம்.. இங்கு தான் வாசிப்பின் மகத்துவம் வெளிப்படுகின்றது.. வாசிக்கும் போது சாதாரண ஒவ்வொரு வாசகனும் ஒரு இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஒலி இயக்குனர் ஆகின்றான். திரையில் இந்த அனுபவம் நமக்கு கிடைப்பதில்லை...

  //அவனால் மிகச்சிறந்த காட்டின் பிம்பத்தை கட்டிஎழுப்பி அதனில் கதையை நகர்த்த முடியும்.//

  இது தவறானது. முதல் வாசகனுக்கு தனது வாழைத்தோட்டமே மிகச்சிறந்த காடு. இரானிய இயக்குனருக்கு பாலைவனச்சோலையே மிகச்சிறந்தது.. நான் உருவாக்கும் பிம்பங்கள்தான் எனக்கு மிகச்சிறந்தவை. உங்களுக்கும் அப்படியே. ஏனெனில், காடு என்பதன் வரைவிலக்கணம் ஆளுக்கு ஆள் மாறுபடக்கூடியது..

  ReplyDelete
 7. @நிகழ்காலத்தில்,

  உங்களது நாத்திகம் பற்றிய எண்ணம் தவறானது. நாத்திகத்துள்ளும் ஆன்மிகம் உள்ளது. ஒரு வகையில் நாத்திகம் புத்தக வாசிப்பை போன்றது. பிறர் எடுத்த திரைப்படமான ஆத்திகத்தில் நாம் திருப்தி அடைவதில்லை. இங்கு வாழ்வின் அர்த்தத்தை நாமே எனது பார்வையில் உணர்கிறோம்.

  ஒவ்வொரு உண்மையான நாத்திகனும் ஒரு முனிவன் ஆகின்றான். தவமின்றி மதமின்றி ஒவ்வொரு உண்மையான நாத்திகனும் ஞானம் அடைகின்றான்..

  கடவுள் இல்லையென்று சொல்பவனல்ல நாத்திகன். " ஒரு மதம் கடவுளுக்கு கொடுக்கும் வரைவிலக்கணங்களை புறக்கணித்து, சொந்த வரைவிலக்கணங்கள் மூலமாக கடவுளை தரிசிப்பவனே உண்மையான நாத்திகன்"

  இன்னும் சொல்லப்போனால் புதிய மதங்களை உருவாக்கிய முனிவர்கள், புத்தர், ஜீசஸ், நபி போன்றோரும் நாத்திகர்களே. என்ன ஒன்று, அவர்கள் தனது கருத்துக்களை பிறரையும் நம்ப வைத்தவர்கள். இன்றைய ஆத்திகர்கள் அன்றைய நாத்திகர்களையே பின்பற்றுகிறீர்கள்.

  ReplyDelete
 8. *

  Abarajithan,
  //ஆனால் காடு என்பதற்கான அடிப்படை வரைவிலக்கணம் இருந்தால் நமக்கு விரும்பியபடி ஒரு காட்டை உருவாக்கலாம்//

  நீங்கள் சொல்லும் இந்த "காடு என்பதற்கான அடிப்படை வரைவிலக்கணம்" என்ன?

  எந்தவித காட்டையுமே பார்த்திராத எழுதப்படிக்க மட்டுமே தெரிந்த ஒருவனுக்கு வாசிப்பிற்கு முன்னரே காடு என்பதற்கான அடிப்படை வரைவிலக்கணம் காட்சி வடிவம் யாரல் எப்படி மூளையில் ஏற்றப்பட்டது?

  **
  கண் பார்வை இல்லாதவர்ளுக்கும் தொடுதல் மூலம் பிம்பங்கள் மூளையில் ஏற்றப்படுகின்றன்.

  ReplyDelete
 9. Abarajithan,
  //நான் உருவாக்கும் பிம்பங்கள்தான் எனக்கு மிகச்சிறந்தவை//

  பிம்பங்கள் இல்லாமல் கனவு சத்தியமில்லை என்பதே இந்தப் பதிவின் அடிநாதம்.

  இருக்கும் பிம்பங்களை வைத்தே கனவுக் காட்சி சமைக்கப்படுகிறது. எழுத்தில் உள்ளதை காட்சியாக கற்பனை செய்ய, எழுத்தை வாசிக்கும் முன்னரே பதிவாகியுள்ள பிம்பங்களே ஒருவனுக்குப் பயன்படுகின்றன்.

  அந்த பிம்பங்கள் கண்பார்வையால் மட்டுமே பதியப்படும்.
  கண் பார்வை இல்லாதவர்களுக்கு வடிவங்கள் தொடல் மூலம் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வெறும் வார்த்தைகளால் அல்ல.

  .

  கருத்துப் பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 10. ஆய்வுக்கட்டுரை மாதிரி இருக்கிறதே சார்.அது சரி கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லை இருந்தால் எழுத்து எப்படி பயணிக்கும்?

  ReplyDelete
 11. Tamil News , விமலன் ,polurdhayanithi - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 12. விமலன்,
  //கற்பனைகளுக்கும் எல்லை இருந்தால் எழுத்து எப்படி பயணிக்கும்?//

  நீங்கள் பயணம் என்று எதைச் சொல்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து.

  கற்பனையைச் சொன்னால்...எழுத்து என்பது பயணிக்காது.என்றும் பயணித்ததாக‌த் தெரியவில்லை(என்னளவில்).

  அது அனுபவங்களின் டயரி அல்லது அனுவம் சார்ந்த ஒரு திசையில் தோன்றிய கற்பனை. அத்தகைய கற்பனைகள் எல்லைக்குண்டானவை.

  ஆகச் சிறந்த தமிழ் கதை சொல்லிகளை "அலாஸ்காவின் அடிக்குளிரை" கதையில் கொண்டுவரவோ கற்பனை செய்யவோ முடியாது. அதுபோல‌, அலாஸ்காவாசி எழுதிய உறைபனிக் கட்டுரையை மாயவரத்து மக்கள் படித்து உணர முடியாது. எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் மார்கழி மாதக் குளிரைத் தாண்டாது.(சினிமாவில் பார்க்கும் பனி அவர்களுக்கு குளிர் உணர்வு சார்ந்த கற்பவனையைக் கொடுக்க முடியாது. பார்த்தல் வேறு உடலில் உணர்தல் வேறு)

  ஆனால், ஒருமுறை அலாஸ்கா சென்ற மாயவரத்து மண்ணின் மைந்தன், அலாஸ்காவாசி எழுதிய உறைபனிக் கட்டுரையை படித்து "உணர" முடியும்.

  .

  ReplyDelete
 13. பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும் போது எங்கள மாதிரி சின்னப் பசங்க நின்று வாய் பார்த்துக்கிட்டு இருப்பது தான் முறையாகும்.

  ReplyDelete