Monday, August 05, 2013

திண்ணையும் காம்பவுண்டு சுவரும்



இதை பலமுறை பல இடங்களில் சொல்லியாகிவிட்டது. இன்று பார்த்த ஒரு கூகிள் ப்ளஸ் மறுபடியும் சொல்லத்தூண்டுகிறது. பெரிய பெரிய திண்ணைகள், தாழ்வாரங்கள் என்று ஒருகாலத்தில் வீடுகள் இருந்தது. எனக்கு நினைவு தெரிந்து கட்டப்பட்ட வீடுகளில்கூட திண்ணைகள் வைத்தே கட்டப்பட்டது. எங்கள் வீட்டில் திண்ணை இல்லாதது எனக்கு பெருங்குறையாகவே இருந்தது. ஆரம்பபள்ளிக் காலங்களில் பக்கத்துவீட்டில் திண்ணைகள் இருக்க எங்கள் வீட்டில் திண்ணை இல்லாமல் இருந்தது. அந்தவயதில் , கல் ,செம்மண் கொண்டு நானே ஒரு திண்ணையைக் கட்டி முடித்தேன். அதற்கு பிறகு  அங்கே யாரவது தங்கிச் செல்லும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். மோர் விற்கும் பாட்டி, இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு ஊருக்கு போகமுடியாமல் , படுத்து எந்திரித்து போகும் தெரிந்த உறவுகள், யாரென்று தெரியாமல்கூட யார் யாரோ வந்து உட்கார்ந்துவிட்டு, தண்ணி வாங்கி குடித்துவிட்டுப்போன கதைகள் உண்டு.

திண்ணை தவிர்த்து ஊரில் உள்ள ஒரு மடத்திலும், பலர் தங்கிச்செல்வார்கள், படுத்து இருப்பார்கள். திண்ணை என்பது யாரும் எப்போதும் வரலாம் என்று எப்போதும் எதிர்பார்த்து இருக்கும் கதவுகள், கட்டுப்பாடுகள் அற்ற இடம். ஆனால் காலம் செல்லச் செல்ல திண்ணைகள் கக்கூஸ்களாக உருமாறியது. இடப்பற்றாக்குறையில் , முதலில் கைவைக்கப்பட்டது கிராமங்களின் திண்ணை. பலர் அதையும் சேர்த்து ரூம் கட்டிவிட்டார்கள். பலர் சின்ன கக்கூஸ்களை கட்டிக்கொண்டார்கள். ரோடு உயர்ந்ததில் எங்கள் திண்ணை புதையுண்டுவிட்டது.

புதியவீடுகள் , திண்ணைகள் இல்லாதது மட்டுமில்லாமல், காம்பவுண்டு சுவருடன் கட்டப்பட்டன. இன்றைய பொழுதில் யார் வீட்டிற்கும் சொல்லாமல் போனால் அது கொடுந்துயராமாகவே பார்க்கப்படுகிறது. எப்போ வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தங்கிச்செல்ல இன்னும் சில இரயில் நிலையங்களும் பஸ்டாண்டுகளும் மட்டுமே உள்ளது. உறவு, விருந்தினர், தெரிந்தவர் என்பது எல்லாம் பல கட்டுப்பாடுகளுடன், அவர்களுக்கான எல்லைக்கோட்டினுள் மட்டுமே இயங்கமுடிகிறது.

தெரிந்தவர்கள் வந்து தங்கிச்செல்ல இதயமும் இல்லை இடமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், இன்றைய வாழ்க்கைச்சூழல் இடம் கொடுப்பது இல்லை. கணவன் , மனைவி , வேலை, குழந்தைகள் பள்ளிக்கூடம் என்று சீராக ஒடும் பற்சக்கரத்தின் இடையில், சொல்லாமல் கொள்ளாமல் நுழைந்துவிடும் யாரும் அந்தக்குடும்பத்தின் ஓட்டத்தை தடைப்படுத்தவே செய்கிறார்கள்.

வீடுகளை விடுங்கள். கோவில்கள் எப்படி மாறிவிட்டது. மதிய நேரங்களில் மீனாட்சி கோவிலின் குளப்படிகட்டுகளில் உட்கார்ந்தது ஒருகாலம். பிற்காலத்தில் படிகளில் கேட் போடப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் காலையில் ஒரு நேரத்திற்குப்பிறகு நடை சாத்திவிடுவார்கள். கடவுளேயானாலும் அவரும் குறிப்பிட்ட மணிநேரங்கள்தான் தரிசனம் கொடுப்பார். அப்படியான நேரங்களில், குளத்தைச் சுற்றியுள்ள மண்டபத்தில் உட்காரலாம்.நடை திறந்தபின் கோவிலுக்குப் போகலாம். ஆனால் இப்போது, கோவிலைவிட்டு மொத்தமாக விரட்டி அடித்துவிடுகிறார்கள். அதற்கென்றே ஒரு படையும் உள்ளது.

இதைச் சொன்னால் சிலர் "அது கடவுள் செய்வது அல்ல. நிர்வாகம் செய்வது" என்று கடவுளுக்கே வாய்தா வாங்குவார்கள். சரியான நிர்வாகத்தினரைக்கூட தேர்வுசெய்யமுடியாத கடவுள் உனக்கு என்ன வழியைக் காட்டப்போகிறார்?

திண்ணை மட்டுமல்ல ஆலய மண்டபங்கள் மடங்கள் எல்லாம் அழிந்துவிட்டது. யாரும் எந்த எதிர்பாராத‌ விருந்தினரையும் ஏற்றுக்கொள்ளமுடியாத வாழ்க்கைமுறை.

1 comment: