Wednesday, August 28, 2013

எது மாற்றுக்கல்வி? ஏன் மாற்றுக் கல்வி? எப்படி மாற்றுக்கல்வி?

picture. Thanks to http://bigthink.com
மு தலில் கல்வி அல்லது கற்றல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

கற்றல் என்பது தெரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது அவ்வளவுதான். அதாவது "மனிதர்கள் கூட்டமாக வாழ்வது ஊர் எனப்படும்" என்று ஒருவர் சொன்னால் "ஓ அப்படியா" என்று தெரிந்துகொள்வது. மற்றபடி அதை தெரிந்து என்ன புண்ணியம்? என்பது "கற்றலின் வழி செயற்படல் அல்லது தேடல் அல்லது பகுத்தறிதல் " என்ற அளவுகோலில் வரும்.

ஒவ்வொருவருக்கும் குடும்பச் சூழலில் தொடங்கி, பின்பற்றும் கொள்கைகள், நண்பர்கள், பிறக்கும் ஊர், நாடு, அவர் படிக்கும் நூல்கள் .....என்று பல தகவல்கள் தெரியவரலாம். இவை அனைத்தும் கற்றலின் கூறுகளே. ஏற்கனவே தெரிந்து (கற்றலின் மூலம்) வைத்துள்ள அனுபவங்களை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது கல்வி முறை.

இந்த மனிதக்கூட்டம் எதைக் கற்க வேண்டும்?

எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதது காலம்.இதுவரை எவ்வளவு ஆண்டுகள் கடந்துள்ளது , இனிமேல் எவ்வளவு ஆண்டுகள் மீதம் உள்ளது என்பதை யூகம் செய்யலாம. வேதப் புத்தகங்களில் சொல்லும் கதைகள் போல அறுதியிட்டுக்கூறமுடியாது. மனித இனம் (பல விலங்கினங்கள்) அதன் தேவை பொருட்டும், தேடல் மூலமும் (தேடலே தேவை பொருட்டு வருவது) பலவற்றை அந்த அந்தக் காலத்தில் கண்டறியும். கற்கால கருவிகள் முதல் , இந்தக்கால வசதிகள் வரை எல்லாம் ஒரு தொடர்ச்சியான சங்கிலி முன்னேற்றம். இந்த முன்னேற்றத்தில் மாட்டுக்கு 'இலாடம்' கட்டுதலும் ஒன்று. இன்றைய வாழக்கை முறையில், எத்தனை பேர்களுக்கு மாடுகளை படுக்க வைத்து இலாடம் கட்டத்தெரியும்? ஒரு காலத்தில் அது முக்கியம் இன்று ...?

உலகம் முழுக்க காலை உணவாக 'குழிப்பனியாரம்தான்' சாப்பிட வேண்டும் அதுதான் அக்மாரக் சுத்த சன்மார்க்க காலை உணவு என்று யாரும் ஒற்றை அளவுகோலை வைக்க முடியாது. எனவே இன்றைய தலைமுறை எதைக் கற்கவேண்டும் என்பது

இடம்,
தேவை,
காலம்,
சூழல், etc

எல்லாம் சார்ந்த ஒன்று. அனைவருக்கும் பொதுவான கல்வி என்பதுகூட உலகத்தில் உள்ள அனைவருக்கும் அல்ல, ஒரு சின்ன குழுவிற்கு அந்தக் குழுவின் பிரதிநிதிகள் சிலவற்றைப் பாடமாக வைப்பது.

எதைக் கற்கவேண்டும்?

எதைக் கற்கவேண்டும் என்பதை ஒரு குழந்தையை முடிவு செய்யவிட்டால் அது "அழுதால் பால்கிடைக்கிறது. எனவே அழுகையே போதும்" என்றுகூட இருந்துவிடலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? மொழியைக் கற்பிக்கிறார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று கடவுள்,பேய்,பிசாசு என்றும் சொல்லிக்கொடுக்கிறார்கள். குழந்தையை குழந்தையாய் வாழவிடுங்கள் என்று சொல்பவர்கள் ஏன் கடவுள்,பேய்,பிசாசு வகையறாக்களை கற்பிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஒருவன் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு 'சைக்கிள்கடை வைக்கப்போறேன்' என்று சொன்னால் எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்வது இல்லை. இதே பெற்றோர்கள்தான், குழந்தையை குழந்தையாய் இருக்கவிடுங்கள் என்றும் கொடி பிடிப்பார்கள். இன்றுள்ள சூழலில் ஆரம்பப்பளி வரை குழந்தைக்கு எதைக் கற்பிக்கலாம் என்பது பெற்றோர்களிடம் உள்ளது. அதற்குப்பிறகு அவர்களின் சுயதேடல் தொடங்கிவிடுகிறது.

எனவே எதைக் கற்கவேண்டும் என்பது ஒருவயது வரை பெற்றோரும் அதற்குப்பிறகு வளரும் குழந்தையும் முடிவு செய்யவேண்டிய ஒன்று.

தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம் சரியா?

பள்ளிகளில் உள்ள பாடத்திட்டம் என்பது முழுக்க முழுக்க வேலை, பொருளீட்டல் போன்ற உத்திரவாதங்களைக் கொடுக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.  கலைகள்,சரித்திரம்,கனவு ....எல்லாம் வயிறு நிறைந்தபின்னால்தான் என்ற 'பசிநெறியின்' அடிப்படையில், சோற்றுக்கு வழிசெய்யும் ஏதோ ஒரு வேலையை நோக்கிய படிக்கட்டுகளே தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம்.

இது சரியா ? தவறா? என்பது ஒற்றை வரியில் சொல்லக்கூடிய விடை அல்ல. அம்பானியின் முழந்தை 'காக்கயின் சிறகில் சித்திரம் வரைவது எப்படி?' என்ற ஒரு பாடத்தை எடுத்து படிக்கலாம். ஏன் என்றால், அவர்களுக்கு பசியாற்றுவது என்பது முதல் தேவையாய் இல்லாமல் இருக்கலாம். சைக்கிள் ஓட்டும் ஒரு குமாஸ்தாவின் குழந்தையின் தேவை , படித்து கார் வாங்குவதாக இருக்கலாம். இப்படி தேவையின் அடிப்படையில் மட்டுமே பாடத்திட்டங்கள் அமைக்கபப்டுகிறது.

இவை மாறவேண்டும் என்றால், தேவைகளும் நோக்கமும் மாறினால்தவிர இது மாறாது. சைக்கிள் ரிக்சா ஒட்டி சிறப்பான வாழ்வு வாழமுடியும் என்ற நிலைவரும்போது சைக்கிள் ரிக்சாவிற்கான கற்றலின் தேவை வந்துவிடும்.

பாடத்திட்டம் சரி. சொல்லிக்கொடுக்கும் முறை சரியா?

ஒரே பாடத்திட்டத்தை பொதுவான (பெரும்பான்மை) வசதி,தேவை,நேரம் அனைத்தையும் கருத்தில் கொண்டு மாநில அரசு ஒரு முறையை பரிந்துரை செய்கிறது. அது அனைவருக்கும் சரியாக இருக்காது. என்ன செய்யலாம்? பணம் படைத்தவன் அல்லது மாற்றுக்கான வசதி/நேரம் உள்ளவன் அவனுக்கு மாற்று என்றுபடும் ஒன்றை தேடிக்கொள்ளலாம்..மற்றவர்கள்?

நாமக்கல் பாணி பள்ளிக்கூடங்கள்மீது வெறியும் , கோபமும், இயலாமையும் வருகிறது. ஆனால் எடுக்கப்படும் மார்க் மட்டுமே மேல்ப்படிப்பிற்கு உதவும் அதுவே ஒரு குறைந்தபட்ச வாழ்தலுக்கான உத்திரவாதத்தைக்கொடுக்கும் எனும்போது, கோழி வளர்த்து முட்டைகளை வாரி வழங்கிய நாமக்கல் தொழிலதிபர்கள், மாணவர்களிடம் இருந்து மார்க் என்ற முட்டையை எடுக்கும் சரியான (ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் தரும்) வழியை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

'மார்க் மட்டுமே' எனும் தேவை இருக்கும் வரை அதை மட்டுமே அல்லது அதை நோக்கியே உற்பத்தி நிகழும். இதை மாற்ற அதன் தேவை மாறினால்தான் முடியும். வாழ்வாதர வாய்ப்புகளை மொட்டையான மார்க் மட்டும் அல்லாமல் அடுத்த கூறுகளையும் சேர்த்து ஏற்படுத்தும்போதுதான் மாற்றுக்கல்வி அல்லது மாற்று கற்பிக்கும்முறை சாத்தியமாகும்.

உதாரணமாக வரலாறு படித்த ஒருவனுக்கு மாதம் ரூபாய் 60 ஆயிரம் சம்பளத்தில் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்தில் வேலை கிடைக்கும் என்றால் வரலாறு படிக்கும் தேவை கற்றலுக்கு வந்துவிடும்.

பிறந்தவுடன் குழந்தைக்கு சாதியையும், மதத்தையும் அந்தக் குழந்தையைக் கேட்காமலேயே ஞானஸ்தான்ம செய்துவிட்டு, நியுமரலாஜி நேமாலஜி எல்லாம் சேர்த்து கலவையாக ஒரு பெயரையும் கொடுத்துவிட்டு , அதே பெற்றோர்கள் .....குழந்தையின்மீது எதையும் திணிக்கக்கூடாது என்று கொடிபிடிப்பது ஆச்சர்யம். திணிப்பை எதிர்ப்பவர்கள் சாதி, மதங்களை திணிக்காமல் சுத்த சுயம்பு சன்மார்க்க திணிப்பற்றவ்ர்களாக இருக்க எல்லாம் வல்ல பூனைச் சாமி அருள் வழங்கட்டும்.