நடிகர்கள் , அதுவும் குறிப்பாக நடிகைகள் குறித்து எனக்கு நிறைய மரியாதை உண்டு. சின்னவயதில் " டேய் சூப்பரா நடிச்சிருக்காண்டா ரஜினி" என்ற அளவில் பேசித் திரிந்துள்ளேன். மரியாதை என்பது கற்றுத்தரப்படவில்லை என்பதைவிட பால்காரன், வேலைக்காரன் என்ற அளவில் சினிமா நடிகர் நடிகைகளையும் ஒருமையில் அழைக்கும் நோய் அதுவாகவே எனக்கும் வந்து சேர்ந்து இருந்தது. எனக்கு மட்டும் அல்ல என் வயதினர் அனைவரும் அப்படியே.
கல்லூரி காலங்களில்கூட அந்த நோய் இருந்தது. எப்போது மாறினேன் என்று தெரியவில்லை. நடிகர் நடிகர்களை மரியாதையுடன் அழைக்க / பேச வலிந்து மாற்றிக்கொண்டேன். எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் படம் பார்க்க ஆரம்பித்தவுடன் , நடிகர் நடிகைகளை மிகவும் மரியாதையாக அறிமுகம் செய்து வைத்தேன். குழந்தைகளுக்கு வடிவேல் மிகவும் பிடிக்கும். வடிவேல் / விஜய் நகைச்சுவைக்காட்சிகள் அதிகம் பிடிக்கும். அபப்டி அவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் நேரத்தில் "இவர்தான் வடிவேல் அங்கிள். இவருக்கும் குடும்பம் உள்ளது. மனைவி, குழந்தைகள் உள்ளார்கள். அப்பா வேலை செய்வதுபோல இவர் நடிக்கும் வேலை செய்கிறார்." என்ற அளவில் அறிமுகம் இருக்கும்.
நடிகைகள் என்றால்... "இந்த ஆண்டி அப்பா கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து நடிக்கிறார். இவருக்கு குழந்தைகள் உள்ளார்கள். (குழந்தைகளின் பெயர்கள் தெரிந்து இருந்தால் அவையும் சொல்லப்படும்) அப்பா இவருக்கு இரசிகராக இருந்தேன். நன்றாக நடனம் ஆடுவார்" என்ற அளவில் இருக்கும். கமலின் குழந்தைகளை யார் என்றும் சொல்லி உள்ளேன்.
Shakira - Hips Don't Liஎ குடும்பத்துடன் அடிக்கடி பார்ப்போம்.... அப்போதும் அதில் நடனம் ஆடும் Shakira அழகு, நளினம் வெளிப்படையாக பேசப்படும். அந்தப் பாட்டு பண்பலையில் வந்தால் அப்பா உங்க பாட்டு என்று சொல்லிவிடுவார்கள் குழந்தைகள்.
Taylor Swift எப்படி இளமைக் காலத்தில் இருந்து பாடல்களில் ஆர்வம் காட்டி கடின உழைப்பில் முன்னேறினார் என்பது போன்ற ஆவணப்படங்களும் பார்ப்பது உண்டு. பொழுதுபோக்கு ( திரைப்படம், தொலைக்காட்சி, ...) உலகத்தில் இருப்பவர்கள் இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன் குழந்தைகளிடம்.
இதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்வதன் காரணம்..... நடிகர்/நடிகைகளின் புற அழகு / குரல் / நடனம் இரசிக்கப்பட்டாலும் அது அவர்கள் திரையில் செய்யும் ஒரு தொழில்/வேலை தானே தவிர , அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. திரை வாழ்க்கைக்கும் நிச வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக.
***
இவை எல்லாம் சினிமா இரசிகன் தொடங்கி கதைபுத்தக இரசிகன் வரை அனைவருக்கும் தெரியவேண்டும்.
டமில் வொலகத்தில் இருக்கும் பிரச்சனையாக நான் (நான் ) நினைப்பது இரசிகர்கள் மட்டும் நடிகர்/கதைபுக் ரைட்டர்களின் துதிபாடிகளாக இருப்பது இல்லை.... அந்த நடிகர்/கதைபுக் ரைட்டர்களும் அதையே விரும்புகிறார்கள் அல்லது அவர்களின் தொழில் பிம்பத்தை அவர்களே உண்மையாக நினைத்து வாழவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அந்த வழியில்தான் இந்த இளம் நடிகையும் என்று நினைக்கிறேன். உங்களின் மதங்கள் எதை அனுமதிக்கிறது என்று தெரிந்துகொண்டு திரைக்கு வருவது நல்லது. இப்படியான புகார்கள்/மதங்களைத் தொடர்புபடுத்தி காரியங்கள் செய்து படத்திற்கு விளம்பரங்கள் செய்வதற்கு பதில் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துவிடலாம். அங்குதான் எந்தவிதான செயலும் மக்கள் நலனாக அல்லது சாணக்கியத்தனமாக போற்றப்படும்.