Friday, September 25, 2015

நான் ஏன் கடவுளை நம்பவில்லை - மைக் மால் (Mike Mal)

டவுள் அதாவது பைபிள் காட்டும் கடவுளை நம்பிய ஒருவர்,  இங்கே இவரின் நம்பிக்கை  சாதரண ஒன்று அல்ல. இவர் முற்றிலும் கடவுளை நம்பி ,  வரிக்கு வரி பைபிள் சொல்லும் அனைத்தையும் நம்பியவர் . கடவுள் அழைக்கிறார் என்று பாதிரியாருக்குப் படித்து முடித்து இவர் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" (  Seventh-day Adventist Church. ) ஆலயத்தில் தனது பாதிரியப் பணியைத் தொடர்கிறார்.  இவர் கடவுள் , பைபிள் மற்றும் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" அமைப்புகளின் போதனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டவர் என்பதைவிட முழு நம்பிக்கையாளர். அப்படியான அந்த காலகட்டத்தில், "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" ஆலயத்தின் / நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான "ஏலன் கெளவுஃட் வைட்" ( Ellen Gould White
பற்றி அப்போது பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தது. (இன்றுவரை அது தொடர்கிறது) . கடவுள் மேல் இருந்த அதீத நம்பிக்கையால் இவர் "ஏலன்   வைட்" குறித்து மற்றவர்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்க நினைத்தார்.  அந்த செயல்தான் இவர் வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஆம், அதை ஆராய்ச்சி செய்ய இவர் முதன்முதலாக தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளைத் தாண்டி (பைபிள் மற்றும் அதுசார்ந்த கதைகள்) வெளியில் இருந்தும் படிக்க ஆரம்பித்தார்.

முடிவில் இவர் யாரை சரி என்று நிறுவ நினைத்தாரோ அவர் ( "ஏலன்  வைட்") ஒரு பொய்யர் என்று அறிந்துகொள்கிறார். ஏலன் சொன்ன கதைகள் எல்லாம் பிற புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அறிந்ததருணம் இவரின் நம்பிக்கையில் விழுந்த முதல் நகக்கீறல் .அப்போதுகூட இவர் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" அமைப்பின்மீதுதான் நம்பிக்கை இழக்கிறாரே தவிர , பைபிள் மற்றும் அது காட்டும் கடவுளின் மீது வைத்த நம்பிக்கை மாறவே இல்லை. அடுத்த கட்டமாக, இவர் கடவுளிடமே தனக்கு சரியான வழியைக் காட்டுமாறு பிராத்திக்கிறார். இவர் அறிந்த தகவல்கள் (எல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் இன்றும் அனைவருக்கும் அது தெரியும் வண்ணமே உள்ளது)  பைபிள் ஒரு கட்டுக்கதை என்ற உண்மையைச் சொல்கிறது. சரி பைபிள் தவறு. கடவுளாவது உண்மையா?  என்றால் அதுவும் இவரை ஏமாற்றிவிடுகிறது.

கடைசியில் அறிவியலில் வந்து நிற்கிறார். ஆம் அறிவியல் என்பது இறுதி என்று எந்த ஒரு விதியையும் சொல்லாது. இன்று இருக்கும் தகவல், நாளைய கண்டுப்பிடிப்புகளால் மாறும் என்பதே அறிவியல் காட்டும் உண்மை.

Why I No Longer Believe In God (Documentary) Full Movie  என்ற இவரின் ஒரு மணி நேர இந்த ஆவணப்படத்தை பொறுமையாகப் பார்த்தால், கிறித்துவம் / பைபிள் என்பது எப்படி கட்டமைக்கப்பட்ட கதைகள் என்பது தெரிய வரும்.  இது ஏதோ இந்த ஒரு மதத்திற்கு மட்டுமே இருக்கும் சிக்கல் அல்ல. அனைத்து மதங்களும் புனைக்கதைகளின் மீது கட்டமைக்கப்பட்டவையே.

தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட மதப் புத்தகங்களதாண்டி , உண்மையான வரலாற்றுத் தேடல் ஆர்வம் இருந்தால் ஒவ்வொருவரும் அவர்கள் மத சொல்லிக்கொடுத்த கதைகளை அவர்களே நிராகரிக்கும் அளவிற்கு தகவல்கள் உண்டு.

இது சராசரியான ஆவணப்படம் அல்ல. தகவல்களால் நிரம்பிய ஒரு ஆவணம். கடவுளை கடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு உதவலாம். உண்மையான மனிதம் மற்றும் அறிவியல் இந்த மனித குலத்திற்கு செய்தவற்றை அறிய ஒரு வாய்ப்பு.

Why I No Longer Believe In God (Documentary) Full Movie
https://www.youtube.com/watch?v=M5ZLuRYp8gk



Is God Moral?
https://www.youtube.com/watch?v=uUbz4mpXIbo



தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் Mike Mal இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நான் சொல்லியுள்ளது அவரின் ஆவணம் குறித்த எனது விமர்சனமே.

You Tube, Picture courtesy Mike Mal -https://www.youtube.com/channel/UCU8gjkOuh1b-_vYPCZGY0-g/feed

.