Tuesday, November 10, 2015

The Arab Of The Future - Graphic Memoir by Riad Sattouf

க்ஃச்போர்ட் பல்கலைகழகத்தில் கிடைத்த பேராசிரியப் பணியை வேண்டாம் என்று மறுத்துவிட்டு லிபியா செல்கிறார் வரலாற்றுப் பேராசிரியர்  அப்தல் ரசாக் ஃசட்டோவ் (Abdel-Razak Sattouf). அவருக்கு லிபிய அதிபர் கடாபியின் சித்தாந்தங்களில் பெரும் நம்பிக்கை இருந்தது. கடாபி மீது கொண்டிருந்த நம்பிக்கையும், லிபியா அரசியலில் முக்கியப் பங்காற்றலாம் என்ற எண்ணமும் அவரை அப்படிப் போக வைத்தது.

சிரியாவில், காம்ஃச் ( Homs ) அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் கடைக்குட்டியாகப் பிறக்கிறார் அப்தல். நோய் வந்தால் கொடுக்க மருந்துகூட இல்லாத ஊர் அது. அப்தலுக்கு மற்ற உடன்பிறப்புகளுக்கு கிடைக்காத சலுகை கிடைத்தது.  ஆம் அவருக்கு மட்டுமே சிறுவயதில் பள்ளி செல்ல வாய்ப்புக்கிடைக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கிய அப்தலுக்கு, சிரிய அரசாங்கத்தின் கல்வி உதவிகள் கிடைக்கிறது. அவர் குடும்பத்தில் அவர் மட்டுமே எழுதப் படிக்கத்தெரிந்தவர் ஆகிறார். மேற்படிப்பிற்காக பல மேற்குநாடுகளுக்கு விண்ணப்பம் இடுகிறார். அப்படி அனுப்பிய விண்ணப்பங்களில் அவருக்கு ஒரே ஒரு பல்கலைமட்டுமே பதில் அனுப்புகிறது. அது பிரான்ஃச் நாட்டு "சர்பான்" ( Sorbonne )  பல்கலைக்கழகம். அங்கு அவர் வரலாற்றுப் பாடத்தில் முனைவர் பட்டம் பெறுகிறார்.

சுன்னி இசுலாமியரான அப்தலுக்கும் , கேத்தலிக் கிறித்துவரான கிளமன்டைனுக்கும் (Clementine ) சர்பானில் படிக்கும்போது நட்பு ஏற்பட்டு மணமுடிக்கிறார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தை ரியாட் ஃசட்டோவ் (Riad Sattouf) . குழந்தை பிறந்த நேரத்தில்தான் அப்தலுக்கு லிபியாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் இருந்து பேராசிரியப் பணிக்கான அழைப்பு வருகிறது. லிபியாவிற்கு திரும்பிச்செல்லும் திட்டம் அப்தலின் மனதில் இருந்து கொண்டே இருந்துள்ளது. மேலும் தான் கற்ற மேலை நாட்டுக்கல்வி போன்று அரபு நாடுகளுக்கு கொடுக்கவேண்டும் என்ற ஆசையிம் அவருக்கு உள்ளூர இருந்துள்ளது. ஆனால் அதுகுறித்து அவர் மனைவியிடம்கூட ஏதும் சொல்லியிருக்கவில்லை. பிரான்ஃசில் படித்து இருந்தாலும் , 'மனைவி கணவனைப் பின் தொடரவேண்டும்' என்பது போன்ற பழைய நம்பிக்கைகள் இருந்து வந்துள்ளது அப்தலுக்கு.

கிளமன்டைனும் காதல் கணவருக்காக , குழந்தையுடன்,  பிரான்ஃசில் இருந்து, லிபியாவில் உள்ள ட்ரிப்போலி Tripoli  என்ற இடத்திற்கு 1978 ல் இடம் பெயர்கிறார். லிபியாவில் அப்தலுக்கு நல்ல வேலையுடன் வீடும் கிடைக்கிறது. அப்போது கடாபியின் ஆட்சிக்காலம். அனைவருக்கும் இலவச வீடு திட்டம் நடைமுறையில் இருந்த காலம். அப்தலின் குடும்பத்திற்கு நல்ல வீடு கிடைக்கிறது. ஒருநாள்,  தனது மனைவி , கைக்குழந்தையுடன் அவர்கள் வீட்டில் இருந்து கொஞ்சதூரம் நடந்து சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிகிறார்கள். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் வெளியில் வைக்கப்பட்டு இருந்தது.  அந்த வீட்டில் வேறு ஒரு குடும்பம் இருந்ததைப் பார்த்து அப்தலுக்கு அதிர்ச்சி. "இது என்னுடைய வீடு. நீங்கள் யார்?" என்று கேட்டார் அப்தல். "லிபியாவில் தனிப்பட்ட சொத்து என்று யாருக்கும் இல்லை. இது இப்போது என் வீடு" என்றார் அந்த வீட்டிற்குள் இருந்த மனிதர்.

ம் , ஒரு சில மணித்துளிகள்கூட வீட்டில் இல்லாவிட்டால் அது காலி வீடாகக் கருதப்படும். யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளலாம். அதுதான் லிபியாவில் அப்போது நடைமுறை. இலவசவீடு என்ற சூத்திரத்திற்குள் இருக்கும் நடைமுறை. வந்த சில நாட்களிலேயா கடாபியின் ஆட்சியின் உண்மை நிலை அப்தலுக்கு முகத்தில் அறைகிறது. அவர்கள் மற்ற ஒரு காலிவீட்டைக் கண்டு பிடித்து அங்கு குடியேறுகிறார்கள். அப்போதைய கடாபியின் ஆட்சியில் சட்டங்கள் விநோதமானவை. அறிவியல் புனை கதைகளுக்கு மேலான சுவராசியம் கொண்டவை. திடீரென்று அனைவரும் அவரவர்கள் பார்க்கும் வேலையை மற்ற ஒருவருடன் மாற்றிகொள்ள வேண்டும் என்பார். பேராசிரியர் விவசாயம் பார்க்கவும், விவசாயி பாடம் நடத்தவும் வேண்டியது இருக்கும்.

தான் எதிர்பார்த்த அளவிற்கு லிபியா சிறந்த நாடாக இல்லை என்பதை உணர்ந்த அப்தல், தனது குடும்பத்தை மறுபடியும் இடம் பெயற்கிறார். இப்போது லிபியாவில் இருந்து தான் பிறந்த நாடான சிரியாவிற்கு அதுவும் தான் பிறந்த ஊருக்கு அருகிலேயே. அங்கு பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் கிளமன்டைனும் , குழந்தையாய் இருந்த ரியாட் ஃசட்டோவும்.

பிரான்ஃசில் , பிரிட்டனி ( Brittany ) என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த கிளமன்டைனுக்கு , சிரியாவில் ஆண்/பெண்பால் வேறுபாடுகள், நடைமுறை வாழ்க்கை சிக்கலை ஏற்படுத்துகிறது. அங்கு இருந்தவர்களுக்கு இவர்கள் பிரான்ஃசில் இருந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது. பிரான்ஃச் , இசுரேலின் கூட்டாளி என்பதும் தெரிகிறது. எனவே இவர்கள் சிரியாவின் எதிரிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.  அவரும் அவரது அம்மாவும் மட்டுமே ஃபிளாண்ட் (blonde) ஆக இருக்கிறார்கள். ரியாட்,  அவரது நண்பர்களால் யூதர் என்றே அழைக்கப்படுகிறார். இப்படியான கால கட்டத்தில் (1990) கிளமன்டைன் தனது கணவரைவிட்டு பிரிந்து மகனுடன் மறுபடியும் பிரான்ஃசிற்கே திரும்புகிறார். அப்போது ரியாட் ஃசட்டோவிற்கு 12 வயது.

வர்தான் பிற்காலத்தில் சார்லி ஃகெப்டொ ( Charlie Hebdo ) இதழுக்கு கார்ட்டூன் துணுக்குகளை வரைந்து கொடுத்தவர். இவர் சார்லி ஃகெப்டொ இதழில் 10 வருடங்கள் வேலை செய்தாலும், இவரது பணி பெரும்பாலும் மின்னஞ்சல் பரிமாற்றம் மூலமே நடந்து வந்தது. மத அடிப்படைவாதிகள்,   'சார்லி ஃகெப்டொ' அலுவலகத்தை சூறையாடி ஒன்பது பேரைக் கொன்ற சம்பவத்திற்கு முன்னரே இவர் தனது பணியில் இருந்து விலகிவிடுகிறார்.

இவரது இளமைக்கால வாழ்க்கையை  "The Arab Of The Future: A Childhood In The Middle East, 1978-1984." என்று காமிக் (Graphic Memoir) புத்தகமாக கொண்டு வந்துள்ளார்.  பிரான்சில் பிரபலமடைந்த இந்த புத்தகம் தற்போது ஆங்கிலப் பதிப்பாக வந்துள்ளது.


தகவல்கள்: 
http://www.npr.org/

No comments:

Post a Comment