Thursday, May 17, 2018

கார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்

சொந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீழே இறங்கி, கார் நிறுத்தி இருக்கும் இடத்தில் (garage) கண்களால் நோட்டம் விட்டேன். ஒன்றும் வித்தியாசமாய்த் தெரியவில்லை அந்த அறையில். ஏதோ நடந்துள்ளது. ஆனால், என்ன என்பது தெரியவில்லை. ஏதேனும் பொருட்கள் விழுந்திருந்தால் தடயம் இருக்கும். எல்லாம் சரியாகவே இருந்தது.

மாலையில் காரேச் (garage) கதவைத் திறக்க முயற்சித்தபோது அது திறக்கவில்லை. மோட்டார் மட்டும் 'ஃகம்' என்ற சத்தத்தோடு திணறிக் கொண்டு இருந்தது.
**
மறுநாள் விடிந்தது. அடிபட்டுச் சென்ற கிரிஃச்டியன் , உடைமாற்றிக் கொண்டு வந்திருந்தான். அருகில் அவனது வீடு இருப்பதாகவும், அதில் சில மனிதர்களை அடைத்து வைத்து இருப்பதாகவும் சொன்னான். உயிர் போகும் நிலையில் கொடியவனிடமும் உதவி கேட்க மனம் துணியும்.

தண்ணீரும் உணவும் கேட்ட அவளுக்கு,  ரம்பத்தைக் கொடுத்தான். ஆம் அவளின் காலை அவளே அறுத்துக் கொண்டு வெளியில்வர. "நீ என்னை சந்தித்தது விதி. இது இப்படித்தான் முடியும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கபட்ட ஒன்று. அதுவே என்னைச் சந்திக்க வைத்தது. நான் உன்னைத் தேடி வரவில்லை. நீதான் என்ன சந்திக்க இந்தப் பாதையை தேர்ந்தெடுத்தாய். தப்பிக்க வழியே இல்லை." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான் மறுபடியும்.
**
Garage Door என்பது 200 முதல் 300 பவுண்டுகள் எடை இருக்கும். அதிக எடையில் இயங்கும் ஒரு இயந்திரம் என்றே சொல்லலாம். வீடுகளில் மோட்டாரால் தூக்கி இறக்கப்படும், அதிக எடையுள்ள ஒரே பொருள் இது. திறப்பதற்கு மோட்டார் இருந்தாலும், எடையைத் தாங்குவது அதனுள் இருக்கும் கம்பிச் சுருள்(Spring). ஊர்ப்பக்கம் கடைகளின் ஃசட்டர்களின் (shutter)மேலே இப்படியான கம்பிச் சுருளைப் பார்த்திருக்கலாம். கதவை மேலே தூக்கும்போது எடையைத்தாங்கி சுலபமாக்குவது கம்பிச்சுருளே. அது உடைந்துவிட்டால் கதவை நகர்த்த நாலுபேர் வேண்டும்.

எனது காரேச் கதவின் கம்பிச்சுருள் உடைந்திருக்க வேண்டும் என்று சில சோதனைகளில் அறிந்து கொண்டேன். மோட்டார் நன்றாக உள்ளது. கதவைத் தூக்கும் 'பெல்ட்& உருளைகள்' சரியாகவே வேலை செய்கிறது. மோட்டாரை விலக்கிய நிலையில் (disengage), ஒரு கையால் உயர்த்தினாலே சுலபமாக மேலே செல்லும் கதவு, இன்று ஒரு அங்குலம்கூட நகரவில்லை. இது உடைந்த கம்பிச்சுருளின் அறிகுறி.

பெரும்பாலான பழைய கதவுகளில் கம்பிச்சுருள் வெளியில் இருக்கும். எங்கள் கதவின் கம்பிச்சுருள் Torquemaster spring என்ற ஒன்று. இதில், கம்பிச்சுருள் இரும்புக்குழாயினுள் இருக்கும். வெளியில் தெரியாது. விசையேற்றப்பட்ட கம்பிச் சுருளை கழற்றி மாற்றுவது என்பது சிக்கலானது. உயிரழப்போ மற்றும் பெரிய காயங்களையோ ஏற்படுத்திய  விபத்துகள் அதிகம். இதை மாற்றுவது என்றால் 700 டாலர்கள் ஆகலாம். கம்பிச்சருளின் விலை 200 என்றாலும், வேலைக்கான கூலி அதிகம்.
**
யாருமற்ற சூழல்களிலும், நிராதரவான நிலைகளிலும் உயிர் பிழைத்திருக்க மனம் மிருக நிலைக்குச் சென்றுவிடும். பிழைத்திருக்க எது வேண்டுமானாலும் செய்யத்துணியும். காலை மட்டும் வெளியில் எடுத்துவிட்டால் தப்பிவிடலாம் என்ற நிலையில், தனது காலை தானே அறுக்கத் துணிகிறாள் 'ம‌லோரி'. அறுக்க ஆரம்பித்த சில நொடிகளில், வலி தாங்கமுடியாமல் நிறுத்திவிடுகிறாள்.

மழை கொட்ட ஆரம்பிக்கிறது. சிறுநீரும் உடலில் வற்றிவிட்ட நிலையில் , மழைநீரை சேகரிக்க முயற்சிக்கிறாள் பாட்டிலில். எப்படியும் கிரிஃச்டியன் மறுபடியும் வருவான் என்ற உள்ளுணர்வில், அவன் வந்தால் அவனைத் தாக்க திட்டமிட்டுகிறாள். எதிர் பார்த்ததபடியே வந்த அவனைத் தாக்கிவிட்டு, அவனிடம் பிடுங்கிய‌ அவனின் கார்ச் சாவியை தூரத்தில் எறிகிறாள். மழை அதிகரிக்கிறது. இவள் கார் விழுந்துகிடந்த இடம் வற்றியிருந்த ஒரு ஓடையின் மையப்பகுதி என்பது, மழைநீர் வரத்துவங்கிய பின்னரே தெரிகிறது.

பள்ளத்தில் இருந்து மேலே ஏறி, சாலைக்கருகில் சாவியைச் தேடச் சென்ற கிரிஃச்டியனை, அவ்வழியே வந்த காவல் அதிகாரி விசாரிக்கிறார். காவலர் வாகனத்தின் சிகப்பு ஒளியை கண்ட 'மலோரி' முடிந்தவரை சத்தமிடுகிறாள். அது முனகலாகவே வருகிறது. எதோ ஒன்றை சந்தேகித்து, சரிவில் இறங்க முயன்ற காவலரையும் அடித்து நிலைகுலையச் செய்கிறான் கிரிஃச்டியன்.
**
கம்பிச்சுருளில் சேர்த்து வைக்கப்பட்ட சக்தியை மெதுவாக வெளியேற்ற வேண்டும். சுருளின் விசையை வெளியேற்ற எதிர்ப்புறமாக (unwind)  சுற்றவேண்டும். இதற்கு சரியான உபகரணம் 'Ratchet and Sockets'. பிடித்திருக்கும் ரேச்சட் நம் கை வலிமை தாண்டி, கம்பிச்சுருளின் விசையை வெளியேற்ற, வேகமாக சுத்த எத்தனிக்கலாம். இதில்தான் அதிக விபத்து நடக்கிறது. முகரக்கட்டைகள் பிய்த்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. மெதுவாக விசையைக் குறைத்து, கம்பிச்சுருளைக் கழட்டினேன். எதிர்பார்த்தது போலவே கம்பிச்சுருள் உடைந்திருந்தது. ஏற்கனவே வாங்கி வைத்திருந்த புதிய கம்பிச்சுருளை மாட்டி, அதற்கு விசை (wind) கூட்டினேன்.
**

காற்றும் மழையுமாக கொட்டியதில், காட்டாறு குப்புறக்கிடந்த ட்ரக்கை புரட்டிப்போடுகிறது. ட்ரக்கும் அவளும் மிதந்து போகிறார்கள் வெள்ளத்தில். எசகுபிசகாக சிக்குண்ட அவளின் கால், வெள்ளத்தாலும், ட்ரக் நேராகத் திரும்பியதாலும் கொஞ்சம் இலகுவாகி, வெளியில் எடுக்க முடிகிறது. ஆம் அவள் த‌ப்பிக்கிறாள். இரண்டு நாட்கள் கொடுமையில் இருந்து. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவள், கரையேறிய இடம், அந்த சைக்கோ கிரிஃச்டியனின் வீட்டருகில்.

**
Garage கதவைச் சரிசெய்த பிறகு, அதை இயக்கிப் பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தாலும், கதவு மூடும்போது ஒரு சின்னச் சிக்கல் இருந்தது. என்ன முயற்சித்தும் அது என்ன என்று கண்டுபிடிக்கமுடியாமல், குருப்பானில் (Groupon) ஒரு நிறுவனத்தின் சேவையை 80 டாலர்களுக்கு வாங்கினேன். சென்சரில் இருந்த ஒரு பிரச்சனையை சரிசெய்தபின் கதவு இயங்கத் தொடங்கியது. காரும் ஓடத் தயாரானது.
**

அன்று அலுவலகத்தில் இருந்து புறப்பட நேரம் ஆகிவிட்டது. மெல்லிய மழை, கீற்றுகளாய் தரையைத்தொட்டு சிதறி விழுந்துகொண்டு இருந்தது. பாதிவழியில் இருள் கவியத் தொடங்கியது. ரேம்சர் (Ramseur) என்ற ஊரைத் தாண்டிய போது, சாலையின் ஓரத்தில், தனித்துவிடப்பட்ட காரும், அதற்கு 10 அடி தள்ளி பெண் ஒருத்தி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதையும் கண்டு மனம் பதைபதைத்தது. சென்ற வாரம் பார்த்த Curve (https://www.imdb.com/title/tt3212904/) என்ற படத்தின் நாயகி 'ம‌லோரி' மனதில் வந்துபோனாள்.


ஏதேனும் உதவி தேவையா என்று கேட்கலாமே என்று நினைத்துக்கொண்டே, நிற்காமல் சென்றுவிட்டேன் நான். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது. 'ம‌லோரி' போல இவளும், இறுதியில் வென்று விட்டிருப்பாள் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். கிரிஃச்டிய‌ன் வீட்டை தட்டித்த்டுமாறி அடைந்த அவள், அவனை வென்று சிலரை அவனின் சைக்கோ சித்ரவதைகளில் இருந்து மீட்டுவிடுவாள்.
**
தினமும் சாலையில் ஏதேனும் ஒரு வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டு இருப்பதைக் காணும் போதெல்லாம், "என்னவாகியிருக்கும் இவர்களுக்கு? ஏதும் பெரிய பிரச்சனையாய் இருக்காது, இருந்திருக்கக்கூடாது' என்றே மனம் விரும்புகிறது. அன்றுகூட கைகாட்டி நிறுத்தச் சொன்ன ஒருத்தியை கடந்துவிட்டேன். வேகமான சாலைகளில் என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்குள் காரும், காலமும் கடந்துவிடுகிறது.

It’s The Things You Don’t Do That You Regret Most

சட்டெனத் திரும்பும் வளைவுகளில் கார் நின்றுவிட்டால் என்னாகும்? ஏதோ ஒன்று ஆகும்வரை இந்தக் கேள்வி ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
*

முந்தைய பகுதிகார், கதவு & Curve: கதவிற்குப் பின்னால் கவலை -1http://kalvetu.blogspot.com/2018/05/curve-1.html