Wednesday, May 16, 2018

கார், கதவு & Curve: கதவிற்குப் பின்னால் கவலை -1

காலில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்திற்கும், அடிப்பட்ட புண் அகோரமாகி இருந்த வாடைக்கும், காட்டெலி ஒன்று 'ம‌லோரி' (Mallory)யைச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. அதை விரட்டக்கூட முடியாது அவளால். 'மாறுகால் மாறுகை' போல, ஒரு காலில் முழங்காலுக்கு கீழே, பாதம் வரை காரின்  உடைந்த பாகத்தில் மாட்டிக்கொண்டது. ஒரு கையில் உடைந்த‌ எலும்புகளுடன், மல்லாக்க விழுந்த நிலையில், அந்த குப்புறக்கிடக்கும் காரினுள் அசைவதே சிரமமாயிருந்தது அவளுக்கு.
**

நெடிய பாதையின் பயணத்தில் இதயம் நின்றுவிட்டால் எந்தப் பிரச்சனைகளும் இருக்கப்போவது இல்லை. அதனோடு எல்லாம் முடிந்துவிடும். கவலைகள் சார்ந்தவருக்கே. ஆனால், பயணிக்கும் கார் நின்றுவிட்டால்?

எனது '2009' தயாரிப்பான 'கேம்ரி' 150,000 மைல்களுக்கு மேல் ஓடிவிட்ட ஒரு கிழட்டு கழுதை. அதன் மதிப்பு இப்போது சில ஆயிரங்களே இருக்கும். வாரம் 8 மணி நேரங்கள் அத்துவான வழியில் அதிகாலையில் பயணிப்பது சுகானுபவம் என்றாலும், எப்போதும் நின்றுவிடும் அச்சம் இருந்துகொண்டே இருக்கும். இதற்காகவே Portable Jump Starter (Battery), தண்ணீர் பாட்டில்கள், அவசர உணவிற்காக சில பிசுகட்டு போன்றவைகள் எப்போதும் இருக்கும். டயர் மாற்றும்போது கீழே விரிக்க துணி போன்றவையும் இருக்கும். முடிந்த அளவு, எதிர்பாராத தருணங்களை எதிர் நோக்கிய பயணம்.
**

மலோரியும் மகிழ்ச்சியாகவே அவளின் பயணத்தை ஆரம்பித்தாள். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது அவளுக்கு. தனது மணநாளுக்குத் தேவையான அழகு ஆடையுடன், 'டென்வர்' நோக்கி போய்க்கொண்டிருந்தாள் அவள். இடையே தனது தங்கையுடன் பேசுகிறாள். 'கிராண்ட் கேன்யன்' வழியாக சுற்றுப்பாதையில் சென்றால் இயற்கையை இரசிக்க முடியும் என்று, நேரடிப் பாதையில் இருந்து சட்டென திரும்பும் திருப்பத்தில் நுழைகிறாள்.
**

இப்பொழுதெல்லாம் இரவு நேரங்களில், எனது காரின் முகப்பு விளக்கு சரியாகத் தெரிவதில்லை. விளக்கு புதிது என்றாலும், ஆக்சைடு படிமங்கள் படிந்துவிட்ட விளக்கின் வெளிப்புற கண்ணாடிப் பகுதி, மஞ்சளில் இருந்து, 'பழுப்பு மஞ்சளாகி' உயிரைவிடக் கெஞ்சிக் கொண்டிருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றால், குறைந்தது 200 டாலர்கள் தேவை. ஏற்கனவே 5 ஆயிரம் டாலர் அளவிற்கான வேலைப்பட்டியலே நிலுவையில் உள்ளது. ஓடும்வரை ஓடட்டும் என்று போய்க்கொண்டிருக்கும் காருக்கு மேலும் அதிப்பணம் செலவழிக்க விரும்பாமல், நானே விளக்கை சரிசெய்துவிடத் துணிந்தேன்.
**

கிராண்ட் கேன்யன் குறுக்குச் சாலையில் சென்றுகொண்டிருந்த 'மலோரி'யின் ட்ரக் அப்படியே நின்றுவிட்டது. அவசரத்திற்கு கைப்பேசியும் வேலை செய்யவில்லை. ட்ரக்கின் முன்பகுதியை திறந்து தன்னாலான சோதனையைச் செய்தாள். எரிக்கும் வெயிலில், மேலாடையை கழற்றியைக் கொண்டிருந்த நேரத்தில், எங்கிருந்தோ சட்டென்று தோன்றிய ஒருவனை  அவள் எதிர்பார்க்கவில்லை.

ஆள், அரவமற்ற அத்துவானப் பாதையில், எதிர்பாராமல் தோன்றிய ஒருவனைக் கண்ட அவள், தனது மேலாடையை அணிந்துகொண்டு, பேச ஆரம்பிக்கிறாள்.

**
எனது காரின் விளக்கை சரி செய்யத் தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு, ஒரு வார இறுதியில் என் வேலையை ஆரம்பித்தேன். உப்புக்காகிதத்தில், விளக்கின் முன் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக தேய்க்க வேண்டும். அதிக சிராய்ப்புத்தன்மை உள்ள பேப்பரில் ஆரம்பித்து, மென்மையான பேப்பருக்கு மாறவேண்டும். மஞ்சள் நிறம் நீங்கியவுடன், ஆல்ஃககால் வைத்து கழுவிவிட்டு, கிளியர் கோட் (Clear Coat) அடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், இன்னும் பல மாதங்களுக்கு இருக்கும் விளக்கை வைத்து ஒப்பேற்றலாம். தேவையான பொருட்களின் விலை 50 டாலர் வரை ஆயிற்று.
**

பார்ப்பதற்கு கவர்ச்சியானவனாக இருந்த கிரிஃச்டியன் (Christian) அவளின் ட்ரக்கை மறுபடியும் ஓட வைக்க உதவுகிறான். நடந்தே பயணித்துக்கொண்டிருப்பதாக‌ச் சொன்ன அவனை, தன்னுடன் ஏற்றிச் செல்ல முதலில்  மறுத்தாலும், சில மீட்டர் தொலைவு சென்றபிறகு மனம் மாறி, அவனையும் தன் ட்ரக்கில் ஏற்றிக்கொள்கிறாள் மலோரி.

சில தருணங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையையே புரட்டிப்போடும்.  ஏன் நடக்கிறது என்பதற்கோ, ஏன் இப்படிச் செய்கிறோம் என்பதற்கோ விளக்கங்கள் அந்த தருணங்களில் கிடைப்பது இல்லை.

பேச ஆரம்பித்த சில வினாடிகளிளேயே, "எனது ஆண்குறியை உன் தொண்டையில் வாங்க முடியாது" என்று சொல்லி தன் சைக்கோ பக்கத்தைக் காண்பிக்கிறான் கிரிஃச்டியன். ட்ரக்கை நிறுத்தி அவனை இறங்கச் சொல்கிற 'மலோரி'யை கத்தியக் காட்டி மிரட்டி, தான் சொல்லும் ஒரு மோட்டலுக்கு ஓட்டச்சொல்கிறான் கிரிஃச்டியன்.
**
400 கிரிட் (Grit) உப்புக்காகிதத்தில் ஆரம்பித்து 600, 2000 என்று தேய்த்து முடித்தேன். இப்போது விளக்கில் இருந்த மஞ்சள் போய் பளிச்சென்று இருந்தது. இந்த நிறம் இப்படியே இருக்காது. சில நாட்களில் ஆக்சிடைசாகி மஞ்சள், பழுப்பு என்று மாறிவிடும். இதைத் தவிர்க்க இதன் மீது கிளியர் கோட் அடிக்க வேண்டும். கிளியர் கோட் அடிக்க அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்தேன்.  தேவையில்லாத இடத்தில் பட்டுவிடாமல் இருக்க, விளக்கின் முகப்பைச் சுற்றி பெயிண்டர் டேப்பை ( Painter's Tape) ஒட்டி, மீதிப்பகுதியை மறைத்தேன். ஆல்கஃகாலால் ஒற்றி எடுத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து கிளியர் கோட் அடித்து உலர வைத்தேன். மறுநாள் காலையில் விளக்கு பளிச் சென்று இருந்தது.
**

வன்முறையாக தன்னைக் கடத்துபவனை, என்ன செய்யலாம் என்று யோசித்து, சீட் பெல்ட் போடாமல் வரும் அவனை, எதிர்வரும் வளைவில் வேகமாக ட்ரக்கை திருப்புவதன் மூலம் வெளியே தள்ளிவிடலாம் என்று 'மலோரி' ட்ரக்கைச் செலுத்த, அது பெரும் விபத்துக்குள்ளாகிறது.

கிரிஃச்டியன் ட்ரக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும், 'மலோரி' தலைகீழே புரண்ட வண்டியின் உட்புறமாக , கால்கள் மாட்டிய நிலையில் தலைகீழாக தொங்கிய நிலையில் தேங்கிவிடுகிறாள்.

திறக்கவே முடியாத அளவிற்கு கதவும், எடுக்கவே முடியாத அளவிற்கு மாட்டிக்கொண்ட காலும், சேமடைந்த ட்ரக்கின்  நெளிவுகளில் அவளை சிறை வைத்தது. வலியுடன் குருதியும் சேர்ந்து ஒவ்வொரு நேரத்துளியும் மரண விசமாய் இறங்கியது அவளுக்கு. தூக்கி எறியப்பட்ட கிரிஃச்டியன் காயங்களுடன் பிழைத்துவிட்டான். அவனின் இருப்பு இவளின் பயத்தை அதிகமாக்கியது. ட்ரக்கை விட்டு வெளிவர முடியாத நிலையில், அவன் இவளை என்ன வேண்டுமானாலும் செய்வான்.

உணவிற்கு ஏதும் வழியில்லாத நிலையில், தன்னைக் கடிக்கவந்த காட்டெலியை அடித்து, சிகரெட் லைட்டர் உதவியுடன் சுட்டு தின்கிறாள். இருந்த கடைசிச் சொட்டு நீர்த்துளியும் தீர்ந்துவிட்டது. பகல் முழுதும் கழித்த நிலையில், குப்புற விழுந்திருக்கும் ட்ரக்கினுள் மல்லாந்து கிடக்கும் நிலையில், தனது டவுசரை சிறிது இறக்கி, தனது சிறுநீரையே பாட்டிலில் பிடிக்கிறாள். அதுவே அவளின் தாகம் தீர்க்கிறது.

தொடரும்......