Monday, October 29, 2018

'பீ' மேலாண்மை: திரு.சக்கியின் சபரிமலை-கக்கூசு ஒப்பீடு

"Mount Whitney" அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள உயரமான மலை. எந்தப் புனிதக் கதைகளும் இட்டுக்கட்டப்படாத இயற்கையான, அழகான‌ இடம். ஆண்களும் பெண்களுமாக, பல ஆயிரக்கணக்கில் மலையில் ஏறி, மலை உச்சியை அடைவார்கள். விரதம் இல்லை வெறும் பொழுது போக்காக மட்டும். பெண்கள் அவர்களின் சானிட்டரி நாப்கின்களுடன் ( or  tampons/menstrual cup) செல்லலாம். மலையின் சுத்தம் காட்டி அல்லது அந்தக்கால கதைகளைக் காட்டி பெண்களை பலிகடா ஆக்குவத்தில்லை. ஆனால் இந்தமலை, சபரிமலையைவிட அதிக சுத்தமான இடம்.

"பீ" மற்றும் "மூத்திரம்" கழிப்பது குறித்த கடுமையான விதிகள் உள்ளது இங்கே. 22 மைல்கள் பாதையில் கக்கூசு கிடையாது. ஒரு காலத்தில் வைத்து இருந்தார்கள். பராமரிப்பு பிரச்சனைகளால் இப்போது கக்கூசுகள் இல்லை.

பீ வந்தால் என்ன செய்வது? ஆண் என்றாலும் பெண் என்றாலும் நீங்கள் பேண்ட பீயை, நீங்களே பையில் பிடித்து எடுத்து வரவேண்டும். ஆம். இதனால் அழகிய ஓடைகள் அழகாகவே உள்ளது. ஓடைகள் ஆய் கழுவ பயன்படுவதில்லை.

Mt. Whitney: Human Waste
https://www.fs.usda.gov/detail/inyo/recreation/hiking/?cid=stelprd3820395

மலையில் ஏற கொடுக்கப்படும் அனுமதித்தாளுடன், 'பீ' போக என்று அதற்கான  பைகளையும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது. கொடுக்கப்பட்ட பையில் குத்தவச்சு பேண்டுவிட்டு, அதை மடித்து பொட்டலமாக்கி, நீங்களே சுமந்து, அதற்காக இருக்கும் கழிவுக்கூடையில் போட வேண்டும்.

அரசன் ஆனாலும்,  ஆண்டியானாலும், சாமியார் ஆனாலும், சாமியே ஆனாலும்,  ஆண்ட பரம்பரையே என்றாலும் அனைவருக்கும் ஒரே நடைமுறைதான்.
Using A “WAG” (Waste Alleviation and Gelling) Bag
http://www.mount-whitney.com/hiking_backpacking_mt_whitney/mt_whitney_wag_bags

இதனால் இன்றும் அந்தப் பாதைகள் சுத்தமாகவும், மலை, எந்தப் புனிதக் கதைகளும் சாமியும் இல்லாமல், சுத்தமாக உள்ளது.
**

இந்தியாவில் ஆன்மீகம் என்பது பூசணிக்காயை தெருவில் உடைப்பது தொடங்கி, சட்டை இல்லாமல் வெற்றுடம்புடன் பெண்  சிலைகளை தொட்டு குளிப்பாட்டும் பூசாரிகள் தொட்டு, கங்கையில் பிணத்தை தூக்கி எறியும் சிவிக் பண்புகள் அற்ற வெற்றுச் சடங்குகளே.

சாலை விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட தெருவோர கோவில்களும் (எல்லா மதங்களும் அவர்கள் பங்கிற்கு) , அந்த ரோட்டில் அடைத்துக்கொன்டு பைக்கை நிறுத்திவிட்டு பயபக்தியாய் வணக்கிச் செல்லும் நல்லவர்களைக் கொண்ட ஆன்மீகம் இந்திய ஆன்மீகம்.

எந்த வெட்கமும் இல்லாமல் வாழும் யோக மனநிலை கொண்டது. அதுதான்  அதன் சிறப்பே. பொது வாழ்வு சிந்தனைகள் அற்ற ஒன்று.  சமூகம் , இயற்கை, மற்றும் அன்றாட சிவில் செயல்பாடுகள் என்று எல்லா இடங்களிலும் அயோக்கியத்தனங்கள் செய்தாலும், ஏதாவது ஒரு மதத்தைப் பிராக்டீசு செய்தால் அவன் புனிதமானவனாகிவிடுவான் இந்தியாவில்.
Image from: https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Pumpkins-broken-on-roads-despite-instructions/article15783243.ece
**

சபரிமலை, சக்கி அவர்களின் கக்கூசு உதாரணம்
-----------------------------------------------
சபரிமலை குறித்து ஏகப்பட்ட விவாதங்கள். தந்திரிக்குச் சொந்தமா? மலைவாழ் மக்களுக்குச் சொந்தமா?

அய்யப்பன் பிரம்மச்சாரி, பருவப் பெண்களை அவரிடம் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என்று ஒருபக்கம்.

"அனுமாரும் பிரமச்சாரிதானே? அவர் கட்டுப்பாடாக இருக்காரே? ஏன் அய்யப்பனும் அப்படி இருக்கக்கூடாது?" என்று ஒருபக்கம்.

இந்த விவாதங்களில், உடற்பயிற்சி சொல்லித்தரும் பிரபல தொழிலதிபர் திரு. சக்கி வாசுதேவன் அவர்களின் பேட்டியில், "பெண்கள் கக்கூசிற்கு ஆண் போகாதது போல, ஆண்களுக்கான கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாது" போன்றதொரு வாதத்தை வைக்கிறார். https://youtu.be/IqmAxB5qiH4?t=330

சரிதான் சக்கி அவர்களே. சபரிமலையில் 10 ல் இருந்து 50 வயது பெண்கள் மட்டும் வரக்கூடாது என்பது ஏன்?

50 வயதுக்கு மேல் உள்ள ஆணை பெண்கள் கக்கூசில் அனுமதிப்பார்களா என்ன? அல்லது, ஆண்கள் கக்கூசில் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களை அனுமதிப்பார்களா என்ன?

நீங்கள் சொன்ன கக்கூசு உதாரணம்போல, எந்த வயதிலும் பெண்கள் வரக்கூடாது என்று சொன்னால்கூட ஒரு நியாயம் உள்ளது.


**
'பீ' மேலாண்மை
-----------------------------
சக்கியின் வழியாக, கக்கூசு மற்றும் 'பீ' மேலாண்மை குறித்தான சிலவற்றைப் பேசலாம்.

நான் 1984 ல் பழனிக்கு நடைபயணமாகச் சென்றுள்ளேன். குருசாமிகளின் அலப்பரையினால் , அவர்களைத் தவிர்த்து, எனக்கு நானே மாலைபோட்டு, பழனி சென்றுள்ளேன். மூன்று நாள் நடைப் பயணமாக.

அப்போதெல்லாம் பயணத்தில் எங்கே மலம் கழிப்பது என்ற கவலையோ, அது குறித்து சிந்திக்க வேண்டும் என்ற தேவைகளோ இல்லாதிருந்தது. அப்படி சிந்திக்க வேண்டும் என்று யாரும் சொல்லித்தரவில்லை. குருசாமி நடத்தும் பசனைக் கூட்டங்களில்கூட, எதைச் சாப்பிடுவது என்றும், என்ன பாட்டு பாடுவது என்றும், மாலையை எப்படி அணிய வேண்டும் என்ற‌ சடங்குகளையே சொல்லிகொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

குருசாமியிடம் மாலை போட்டுக்கொண்ட மேலச்சின்னம் பட்டி சரவணனுக்கும், எங்கே எப்படி மலம் கழிப்பது குறித்தான விசயங்களை அவனின் குருசாமி சொல்லிக் கொடுக்கவில்லை.

வாய்க்கால் கரை, கம்மாக் கரை என்று நீர்நிலைகளை ஒட்டி, எங்காவது குத்தவைத்து மலம் கழித்துவிட்டு அந்த நீர்நிலைகளிலேயே குண்டியைக் கழுவிட்டு முருகன் பேரைச் சொல்லி நடந்து கொண்டிருப்பார்கள் சாமிகள். சாமிகள் செல்லும் வழியெல்லாம் சந்தனக் குவியலாய் 'பீ'யை விட்டுச் செல்வார்கள்.

சந்தனம் மணக்கும் முருகனைக் காணச் செல்லும் வழியெல்லாம் பீக்காடாக ஆக்கிச் செல்வது குறித்த எந்த குற்றவுணர்வும் இல்லாமல், "முருகன் சிரசில்" ஒட்டிய சந்தனம் என்று புரோக்கர்கள் கொடுத்த சந்தனத்தை வாங்கிவருவதே முக்கியமாக இருந்தது.
**
ஒரு தலைமுறையே, ஒரு சமுதாயமே 'பீ' மேலாண்மை குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல், ஏன் அதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ளாமல், கிடைத்த இடத்தில் பேண்டு கழித்த காலங்கள் அது.  அதே சமயம், பக்தி என்ற பெயரில் பசனைப் பாடல்களும், மாலையில் துணை மாலை முக்கியமா? என்ற கடுமையான விதிகள் இருந்தது.

கருவறையில் குசுவை நசுக்கிவிட்டால்கூட தவறே இல்லை. ஆனால், ஒரு அவசரத்திற்கு  குழந்தைகளை ஒன்னுக்கு இருக்கவிடக்கூட‌  கோவிலில் கழிப்பறையைக் காண முடியாது. மனிதர் கூடும் இடங்களில் கருவறைகளைவிட கக்கூசின் தேவை முக்கியம்.
**

சபரிமலை
---------------------
நான் சபரிமலை சென்றது இல்லை. சபரிமலைப் பாதையில் பீ, மூத்திரம் வந்தால் சாமிகள் அதை அந்த புனித ம‌லையிலேயே கழிந்து விட்டு வருகிறார்களா? அல்லது அய்யப்பன் மலை என்பதால், தங்களின் பீயை பையில் எடுத்து வந்து, புனித மலை தாண்டி, அடிவாரத்தில் போடுகிறார்களா என்று தெரியவில்லை.

"பெண்களின் இரத்தப் போக்கு இந்தக் கோவிலுக்கு தீட்டு" என்று சொல்லி 10 ல் இருந்து 50 வயது பெண்கள் வரக்கூடாது என்று கொந்தளிக்கும் ஆண் சாமிகள் நிச்சயம் அவர்கள் தினந்தோறும் பேளும் பீயை அய்யப்பன் வாழும் புனித மலையில் விட்டு வரமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
**

மலை ஏறி இறங்கும் வரை, தினந்தோறும் புனித மலையில் மலம் கழிப்பவன் அய்யப்பனைப் பார்க்கலாம்.

மலை ஏறி இறங்கும் வரை தினந்தோறும் புனித மலையில் ஒன்னுக்கு போகிறவன் அய்யப்பனைப் பார்க்கலாம் என்பதால், மாதத்தில் மூன்றுநாள் வந்து போகும் "கருப்பை இரத்தம்" உள்ள பெண்கள் போவதில் பிரச்சனை இருக்காது அல்லவா?
**

ஒருவேளை, புனித மலைக்கு எந்த மனிதக் கழிவுமே ஆகாது என்றால், Mount Whitney சட்டதிட்டங்கள் போல‌ இப்படி ஒரு சட்டம் போடுவோம்.

"புனித மலையான சபரிமலையில், பேள்வதற்கு தடை. அது கக்கூசாக இருந்தாலும், கம்மாக்கரையாக இருந்தாலும். புனிதமான மலையில் பேள்வது பெரிய குற்றம். மலை ஏறுபவர்கள் அவர்களின் பீயை அவர்களே பையில் எடுத்து வரவேண்டும். அதை அதற்கென உள்ள பெட்டியில் போடவேண்டும்"

இப்படியான சட்டங்கள்தான் உண்மையான தூய்மை காக்கும்.

A tea stall inside a toilet block at Sabarimala
https://www.thehindu.com/news/national/kerala/a-tea-stall-inside-a-toilet-block-at-sabarimala/article6279967.ece

Sabarimala 2016 | Toilet waste are overflowing to Pampa
https://www.youtube.com/watch?v=GhveJAb6pwg

**
ஆண்களுக்கு  மட்டுமான கிளப்
---------------------------------------------------
ஆண்களுக்கு  மட்டும் என்று சில இடங்கள் இருக்கலாம் தவறே இல்லை. ஆண்களுக்கு மட்டுமான தனிப்பட்ட கடவுளாக அய்யப்பன் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், "ஏன் பெண்கள் வரக்கூடாது?" என்ப‌தற்காக ஆன்மீக அடியாட்கள் கொடுக்கும் விளக்கங்கள்தான் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

அய்யப்பன் திருமணமாகாத ஆண்:
-----------------------------------------------------------
திருமணமாகாத ஆண் ஒருவரைப் பார்க்க ஏன் திருமணமான ஆண்களை அனுமதிக்கிறார்கள்? விரதம் இருந்தால் "திருமண தோசம்" போய்விடும் என்றால் அது பெண்ணுக்கும் பொருத்தம்தானே?

பெண்கள் மலையேற முடியாது:
-------------------------------------------------------
10 இருந்து 50 வயது பெண்கள் மட்டும் மலை ஏற முடியாதா? 60 வயது பாட்டியால் ஏற முடிந்த மலையை 30 வயது பெண்ணால் ஏற முடியாதா என்ன? அப்படியே ஏற முடியாது அல்லது கூடாது என்றால், ஏன் இந்த வயதுக்கட்டுப்பாடு?

மலையில் புலி உள்ளது:
-------------------------------------
புலிக்குத் தேவை மாமிசம்தான். அதற்கு ஆண் மனித மாமிசம், பெண் மனித மாமிசம் என்ற வேறுபாடு இல்லை. மாமிச உடலுடன் ஆண் போகும் போது ஏன் அதே மாமிச உடலுடன் பெண் ஏன் போகக்கூடாது?

கருப்பை இரத்த வாடைக்கு புலி வரலாம் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும்,  தனது பக்தைகளை புலியிடம் இருந்து காப்பாற்ற முடியாத அய்யப்பன் எப்படி புலியிடம் பால் கறந்திருக்க முடியும்? என்ன மாதிரியான கடவுள் இவர்?
**

பெண்களின் இரத்தப் போக்கு இந்தக் கோவிலுக்கு தீட்டு என்பதே "10 ல் இருந்து 50 வயது பெண்கள் வரக்கூடாது" என்பதற்கான காரணம். செயல்படும் நிலையில் உள்ள கருப்பையுடைய பெண்கள், கன்னிச்சாமியின் கருவறைக்கு வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த மனிதத்தை அவமதிக்கும் செயல்.

ஒவ்வொரு மாதமும் உருவாகும் முட்டைகள், குழந்தைகளை உற்பத்தி செய்யக்கூடிய தகுதியான முட்டைகள். அது நடக்காதபோது இயற்கையாக வெளியேறும் ஒரு நிகழ்வு. இந்தக் காலத்தில் பெண்கள் அய்யப்பனைப் பார்க்கக்கூடாது என்று சொல்லி, இவர்கள் பெண்ணையும், அய்யப்பனையும் ஒருசேர அவமானப்படுத்துகிறார்கள்.
.
பழைய தகவல்
மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
https://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html

No comments:

Post a Comment