Thursday, September 26, 2019

I could have been a better father:வழிநெடுக எண்ணங்கள்

காலையில் Derrick Knob Shelter ல் இருந்து, மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்தை Garmin tracker மூலம் அனுப்புவிட்டேன். அன்று நடக்க வேண்டிய 15 மைல்கள் நடந்து, Siler Bald shelter அடையும் வரை அவனது நினைவாகவே இருந்தது. எனக்கும் என் அப்பாவுக்குமான உறவு ஒருபுறமும், எனக்கும் என் மகனுக்குமான உறவு ஒருபுறமும் நினைவுகளில் எழுந்து எரிந்துகொண்டு இருந்தது. நடக்கும் போதே அழுதுவிடுவேன். கத்தி அழுதாலும் கேட்க யாரும் அற்ற அப்பலாச்சியன் காட்டில், எனது அழுகை என்னமோ சத்தமற்ற கண்ணீராக வழிந்துகொண்டு இருந்தது.
**

குழந்தைகள் வளர்ப்பு பற்றி யாரும் தெரிந்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது இல்லை. On the job training போல அவர்களை வளர்த்தே வளர்ப்பு பற்றி அறிகிறோம். ஓரளவு நமக்கு புரிவதற்குள் அவர்கள் சிறகு முளைத்து வெளியேறிவிடுகிறார்கள். மகனை கல்லூரியில் விட்டு வந்தகையோடு என் அப்பலாச்சியன் பயணம் தொடங்க்கிவிட்டது. அவன் பிறந்தநாளின்போது நான் Smoky Mountain காட்டுக்குள் எங்கோ நடந்து கொண்டுள்ளேன். மகளும் மனைவியும் வீட்டில்.

மகளின் பிறந்த நாளின்போது நான் வீட்டுக்கு வந்துவிடும் திட்டத்தோடுதான் என் 23 நாள் பயணத்தை நான் அமைத்து இருந்தேன். மகனும் அந்த நாளின் கல்லுரியில் இருந்து வந்துவிட்டால், இருவரின் பிறந்த நாளையும் ஒரே நாளில் கொண்டாடிக்கொள்ளலாம் என்று திட்டம்.
**
எனக்கும் என் மகனுக்குமான உறவு அவனின் சின்னவயதில் வசந்தமாக ஆரம்பித்து, பிற்காலத்தில் இலையுதிர்கால மரங்கள் போல பொலிவிழந்து இருந்ததுண்டு. அவனின் 10 ஆம் வகுப்பு காலம், எங்கள் வீட்டில் புயல்போன்றது. குழந்தைகளை அவர்களின் டீன் வயதில் வழிநடத்துவது சிக்கலானது. First one is a throw away என்பார்கள். முதல் குழந்தை, பெற்றோர்கள் வளர்த்துப்பழகும் குழந்தையாகவே இருந்துவிடுகிறது. அதற்காக முதல் குழந்தையை வளர்த்த அனுபவம், இரண்டாம் குழந்தையை வளர்க்க உதவும் என்றால் அதுவும் இல்லை.

குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்கள் அளவில் தனித்துவமானவர்கள் என்பதால், ஒரு குழந்தையை வளர்த்ததில் கற்ற எதுவும் உதவுவது இல்லை.
**
மகனின் இந்த பிறந்தநாள் முக்கியமானது. 18 வயது ஆகிறது. கல்லூரியில் காலடி எடுத்து வைத்துள்ளான். சண்டைகளும் சச்சரவுகளுமிருந்தாலும், . பள்ளியில் பலர் அழைத்து பேசக்கேட்கும் அளவிற்கும், நண்பர்கள் மத்தியில் விரும்பப்படுபவனாகவும் வளர்ந்துவிட்டான். பள்ளியில் Founder's Award பெற்றான். கல்லூரியில் என்ன படிக்கப் போகிறான் என்பதும் அவனின் விருப்பம். "பிடித்ததைப்படி. வாங்கப் போகும் சம்பளத்திற்காக கல்லூரி வாழ்க்கையை வீணடிக்காதே. College education is an experience you should not study for future job & salary in mind" என்றுதான் சொன்னேன்.

அவன் விருப்பப்படியே நல்ல கல்லூரியில் சேர்ந்துவிட்டான். எனக்கு அதிகம் செலவு இருக்கக்கூடாது என்று அவன் federal loan எடுத்துள்ளான். எனக்கு தெரிந்து இங்கே என் நண்பர்கள் வட்டத்தில் இப்படி வங்கி கடன் வங்கியுள்ளது இவன் ஒருவனே. This brings the responsibility.

**
மகனைச் சந்திக்கும்போது அவனது பிறந்த நாளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டே நடந்தபோது கிடைத்ததுதான் இந்த காய்ந்துபோன மரக்குச்சி.Smoky Mountain ல் அவனின் பிறந்தநாளின்போது எடுத்தது. அதை என்ன செய்யவேண்டும்? அதில் என்ன எழுத வேண்டும்? என்ற எண்ணம் அப்போது ஓடியது. மகளின் பிறந்தநாளும் வருவதால் அவளுக்கு என்ன கொடுக்கலாம் என்ற சிந்தனையிலும் நடந்து கொண்டே அன்று இரவு தங்க வேண்டிய shelter  ஐ அடைந்தேன்.
**


Smoky Mountain ல் விடாது பெய்த மழையில் எனது hiking gear பாதிக்கப்பட்டு எனது பயணம் இரண்டு நாட்கள் தடைப்பட்டபோது, பயணத்தை இடையில் நிறுத்தியதன் ஒரு முக்கிய காரணம் குழந்தைகளின் பிறந்த நாள். 23 நாள் பயணம் முடித்து, வீடு வந்தால்தான், மகன் ஊருக்கு வரும்போது நான் வீட்டில் இருக்க முடியும். பயணத்தில் ஏற்பட்ட எதிர்பாராத அதிகப்படியான இரண்டு  நாட்கள் மொத்த நாட்களை 25 ஆக்கும் என்பதால், Hot springs என்ற‌ ஊரோடு பயணத்தை  முடித்துக்கொண்டேன்.
**



வீட்டிற்கு வந்ததும், மகனுக்கும் மகளுக்கும் என் கைப்பட பரிசுப் பொருட்களை செய்தேன். மகனுக்கு எனது எண்ணங்களை எழுதி, அதை metal plate engraving செய்யக் கொடுத்த இடத்தில், அதை வாசித்துவிட்டு, அதன் பணியாளர்கள் என்னிடம் பேசிகொண்டிருந்தார்கள். கண் கலங்கியபடியே என் எண்ணங்கள், ஏன் அப்படி நான் என்று சொன்னேன். ஆம் நான் இப்போது எல்லாம் அதிகம் கதை சொல்கிறேன்.


தனிமைப் பயணங்கள் அதுவும் ஆளில்லா காட்டில் கரடிகள் பயத்திலும், புதிய மனிதர்களைச் சந்திப்பதும் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளது.

  • It's impossible to explain what I have witnessed.
  • Its impossible to explain what I have done.
  • Impossible to express what I have become.

*****
Dear ---,
I ran with you when you were a toddler. Somewhere along the run , I stopped and let you run alone. I know there were ups and downs in our relationship. As a father, I could have done better in making you feel happy at home. Trust me, I have tried but I was not sure what to do.

I know I didn't hand you a golden baton, but you ran with it well. Continue your successful run dude. I always miss you at home.

~I could have been a better father~

On your 18th birthday
Appa,

From "Appalachian Trail"
Derrick Knob Shelter,
Aug xx, 2019
*****