Monday, October 21, 2019

மயிறு, ஆன்ட்ரே அகாசி & சங்கீதா பிச்லானி


கல்லூரி இரண்டாம் ஆண்டில் ஆரம்பித்த மையல் (crush) பலகாலம் போகவில்லை. இன்று இதை எழுத அமரும்போது பல நினைவுகள் வந்து போகிற‌து. மதுரையில் அலங்கார் திரையரங்கம் என நினைக்கிறேன். அங்குதான் திரிதேவ் (Tridev) பார்த்தேன். கூடைநிறைய பூக்களைக் கொடுத்து ஒன்றை எடுத்துக்கொள் என்றால் என்ன செய்வது? "ஓயே ஓயே" பாட்டு அப்படித்தான் இருந்தது. மூன்று இளம்பெண்கள் "அங்கிள்"களுடன் ஆடவைக்கப்பட்டார்கள். நான் இன்று அங்கிளாகிவிட்டேன் என்பது தனிக்கதை. 

அப்போதெல்லாம் "மாதுரி" இந்த அளவுக்கு வருவார் என்று நான் நினைக்கவே இல்லை. என் மனதில் அப்போது இடம் பிடித்தது "சங்கீதா" தான். "சோனம்" அந்தப்பாடலில் இருந்தாலும் அவ்வளவாக என்னைக் கவரவில்லை. திரிதேவ் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு சென்னை "கேசினோ" (Casino) திரையரங்கில் பல ஃகிந்தி படங்கள் பார்த்துள்ளேன். ரங்கீலா படம் அங்கு வெளியானது என நினைக்கிறேன். அதை பார்த்து "ஊர்மிளா" மீது சிறிது மையல் வந்து போனது.

ஆனால் கல்லூரி காலத்தில் என் அறையில் இருந்த படம் Sangeeta Bijlani ன் படம்தான். பச்சைக்கலர் பாவாடை உடையில் இருக்கும் படம் இன்றும் நினைவில் உள்ளது. 1996 ல் Sangeeta Bijlani அசாருதீனை மமுடித்த போது அசாருதீன்மேல் வெறுப்பு வந்தது. அதே காலகட்டத்தில் பார்த்திபன் சீதா திருமணம் நடைபெற்று, பார்த்திபன் மீதும் வெறுப்பு வந்தது.கல்லூரிக்காலத்தில் வகுப்பறையில் , கணக்குப்பாடம் நடக்கும் போது, ஓயே ஒயே பாடலைப் பாடி ஆசிரியையால் வெளியில் அனுப்பப்பட்டேன். அதே ஆசிரியரை 20 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து மனம்விட்டு பேசிக்கொண்டோம் என்பது தனிக்கதை. என்னை மன்னித்ததோடு என்னுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

கல்லூரிக் காலத்தில் என் அறையில் சங்கீதாவின் படத்துடன் நான் வைத்திருந்த இன்னொரு படம் Andre Agassi ன் படம். 

இப்போது யாரவது Andre Agassi என்று தேடினால் மொட்டத்தலை Andre Agassi தான் வருகிறார். நான் அகாசியை விரும்பியது அவரின் டென்னிஃச் ஆட்டத்திற்காக அல்ல. அவரின் கூந்தல். ஆம் ஆண்களில் அழகான முடி வைத்திருந்தவர் அப்போது அவர்தான் ன்பது என் கணிப்பு. அவரைப் போலவே முடி வளர்க்க ஆசைப்பட்டு, கல்லூரி இம்சைகள், அப்பாவின் கெடுபிடிகள் என கூந்தல் வளர்க்க முடியவில்லை. ஆனால், கழுத்துக்குகீழேயும் முடி தொங்கும் வண்ணம் ஓரளவிற்கு வைத்து, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை அளவில் தேற்றிக்கொண்டேன்.


கல்லூரி முடித்து வேலைதேடி அம்பத்தூர் முதல் அம்பானியின் ரிலையன்சுவரை அலைந்து திரிந்த காலங்களில், "கூந்தல் ஒரு கேடா?" என்று முடிவெடுத்து காலம் ஓடிவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய கூந்தல் வளர்க்கும் ஆசையைச் சொன்னபோது முதல் எதிர்ப்பு என் மகளிடம் இருந்து வந்தது. சரி என்று தள்ளிப்போட்டுவிட்டேன்.

2020 ல் ஒன்றை புதிதாகச் செய்ய வேண்டும் என முடிவெடுத்து "சரி மயிரை வளர்ப்போம்" என்று 'முடி'வெடுத்துள்ளேன். சென்றவாரம் எனக்கு முடி திருத்தும் கசகஃச்தான் (Kazakhstan) பெண்மணியிடம், "கூந்தல் வளர்க்க ஆசைப்படுகிறேன். என்ன செய்யவேண்டும்? அதற்கு ஏற்ப வெட்டிவிடவும்" என்றேன். கடந்த இரண்டு வருடங்களாக இவர்தான் எனக்கு முடி திருத்திவிடுகிறார். அவர் சொன்ன ஆலோசனையின்படி இரண்டுமாதங்கள் வளர்த்துப் பார்க்கப்போகிறேன். பராமரிப்பு மற்றும் மற்ற சவால்களை வைத்து, கூந்தலின் நீளம் மாறும்.

எனது முடிவை மனைவி, மகளிடம் சொன்னேன். மகள் " அப்பா, I don't know you " என்று சொல்லிவிட்டாள். மனைவியும் "எப்படியோ போங்க" என்று சொல்லிவிட்டார். "பெண்கள் மட்டும்தான் கூந்தல் வளர்க்க வேண்டும் என்பது sexism" என்று தத்துவ விளக்கம் கொடுத்துவிட்டு, மயிறு குறித்தான சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.

கல்லூரிக்காலங்கள் வேறு. இப்போது உள்ள நிலையில் இரண்டு இஞ்ச் வளர்ந்தாலே எனக்கு தலையில் கல்லை வைத்தது போல உள்ளது. இருந்தாலும் முடி வளர்த்துப் பார்ப்போம் வந்தால் கூந்தல் போனால் மயிறு என்று இறங்கிவிட்டேன்.

No comments:

Post a Comment