ஊருக்குப்போனால், அங்கு என் நண்பர்களிடம், என் அப்பாவின் நண்பர்களிடம் நான் பேசுவேன். இவர்கள் எனக்கான வட்டம். இங்கே அவர்களின் பேச்சில் "சொந்தக்காரர்களே மோசம்" என்ற வரியின் "மோசம்" என் அண்ணனைச் சுட்டும்.
நண்பர்களுக்குள்ளும் இது பொருந்தும். "யாரையும் நம்பவே கூடாது. பழக்கவழக்கம் சரியில்லை" என்று ஒருவர் ஒரு இடத்தில் புலம்பினால், இவரைப்பற்றி இன்னொருவர், இதே வரிகளை வேறு ஒரு இடத்தில் சொல்லிக் கொண்டிருப்பார்.
நல்லது கெட்டது, நல்லவன் கெட்டவன், சரி தவறு என்பது absolute value அல்ல. அது ஒரு ஒப்பீட்டு அளவு (relative term). பிறர் சரியில்லை, உறவுகள் சரியில்லை,நண்பர்கள் சரியில்லை என்று புலம்புவது வீண்வேலை. அவர்கள் அளவீட்டில் நீங்களும் சரியில்லாதவரே.
உங்களைப் பிடிக்காதவர்கள் உண்டு. உங்களைப் போலவே அவர்களும், அவர்களின் நட்பு வட்டத்தில் "யாரையும் நம்பக்கூடாது. இன்று எனக்கு புரிந்தது" என்று எழுதி வைத்தால், அதை ஆமோதிக்க ஐந்துபேர் இருப்பார்கள்.
நல்லவன் கெட்டவன் யோக்கியன் மோசமானவன் என்பது , யாரின் பார்வையில் எந்த குழுவில் என்பதைப் பொறுத்தது.
நீங்கள் யாரையாவது பாராட்டி உள்ளீர்களா? இல்லையென்றால் அதைச் செய்யுங்கள். சொந்தம் மோசம் , நட்பு ஏமாற்று என்று புலம்புவது வெட்டிவேலை. நீங்கள் யாரை நோக்கி புலம்புகிறீர்களோ அவர்களின் நட்புவட்டத்தில் வில்லன் நீங்கள்தான்.