Wednesday, August 09, 2006

"A Day With Sister" ரக்க்ஷா பந்தன்







Dating எனபது மேற்கு கலாச்சாரத்தின் ஒரு முகம்.உறவுகளால் இணைக்கப்பட்ட இரண்டு மனிதர்கள் (ஆண்,பெண்,கணவன் ,மனைவி,நண்பர்கள்,அப்பா,மகன்,மகள்,அம்மா,மாமா,மருமகன்,மருமகள்,ஆசிரியர்,மாணவன்,...) அல்லது தொழில் ரீதியாக இணைக்கப்பட்ட இரண்டு மனிதர்கள் ,ஒரு நாளை அல்லது ஒரு நேரத்தை தங்களுக்காக ஒதுக்கி சந்தித்துப் பேசுதல்.ஒன்றாக சில மணி நேரங்கள் சேர்ந்து இருத்தல் என்பதே இதன் உண்மையான அர்த்தம்.

Father-Daughter dance எனபது மேற்கு கலாச்சார திருமணங்களில் காணலாம்.மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும்.இதற்காக ஒத்திகைகளும் உண்டு.அது போல் அப்பா-மகள் , அம்மா-மகன் என்று Datingம் உண்டு. எல்லாப் பிரச்சனைகளையும் விட்டு விட்டு இந்த உறவுகள் தங்களுக்காக மட்டுமே நேரம் செலவிட எடுத்துக் கொள்ளும் ஒரு முயற்சியே இந்த Dating. என்ன காதலன்-காதலி, கணவன் -மனைவி Dating -ல் காமம் மெல்லிய பின்னனியில் இசைபாடும் அதுவே அதன் சிறப்பும் , வித்தியாசமும். அதற்காக Dating அவர்களுக்கு மட்டுமேயான ஒன்று என்று முத்திரை குத்துவது அறியாமை.


ஒரு பெண் தன் சகோதரனுக்கு "சகோதரா, உனது சகோதரியாக எனது முழு அன்பும்,அரவணைப்பும் உனக்கு எப்போதும் உண்டு.அதே போல் நீ எனக்குத் தேவையான பாதுகாப்பையும் அன்பையும் வழங்குவாய் என்று நம்புகிறேன்.ஒரு தாய் வயிற்றில் பிறந்த நமது உறவு மிகவும் புனிதமானது.எனது சுக துக்கங்களில் நீ எப்போதும் பங்கு பெற வேண்டும். அதன் அடையாளாமாக நான் இந்தக் கயிற்றை இந்த நாளில் உனக்கு அணிவிக்கிறேன்" என்று சொல்லி கட்டப்படும் கயிறே "ராக்கி". அந்த ஆணும் அவளுக்கு அந்த உறுதியைக் கொடுக்கிறான்.

இந்த உணர்வு இல்லாமல், "தோ பாரு , நா உனக்கு ராக்கி கட்டிட்டேன் இனிமே என்னை சைட் அடிக்காதே" என்ற ரீதியில் விளம்பரப்படுத்தப்படும் கொச்சையான விழா அல்ல இது.கலாட்டாவிற்காக "ராக்கி" கட்டுவதும் கட்டிக் கொள்வதும் இந்த விழாவின் வணிகமயமாக்கப்பட்ட மற்றொரு முகம்.

"ரக்க்ஷா பந்தன்" எனது வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு நல்ல விழா.இதனையும் இந்து விழாவாகக் முத்திரை குத்தி விட்டார்கள்.இனிமேல் எல்லாரும் வாங்க கொண்டாடுங்க என்றால் யாரும் வரப்போவது இல்லை. ரக்க்ஷா பந்தன் விழாவை தமிழகத்தில் இருக்கும் தாய் மாமன் உறவுடனும் அதன் முக்கியத்துவத்துடனும் ஒப்பிடலாம்.இரண்டுமே இப்போது வெறும் சம்பிரதாயமாக நீர்த்துப் போய்விட்டது.

ஒரு நல்ல விழாவும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் வீணடிக்கப்படுகிறது.இந்தியாவில் எதுவுமே ஒரு நல்ல சமுதாய விழாவாக,அனைவரும் சேர்ந்து கொண்டாடும்விழாவாக இருக்க முடியாது.இது இந்தியாவின் சாபக்கேடு.சுதந்திரதினம் குடியரசு தினங்களில்கூட வேற்று நாட்டுக் கொடியை ஏற்றி இந்திய எதிர்ப்பைக் காட்டும் மக்கள் உள்ள பூமி இது.சரி நாடுதான் பிடிக்கவில்லை உனது எதிர்ப்பைக் காட்டுகிறாய் மனிதனாய் ஒரு விழாவை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் வா என்றால்,அதில் பல நடைமுறைச் சிக்கல்கள்.

நாடு ,மாநிலத்தை விடுங்கள். அவைகள் எல்லாம் பெரிய முயற்சி. ஒரு தெருவில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு விழாவைக் கொண்டாட முடியுமா? முடியாது மத,சாதி,சமயக் குப்பைகள் தனது கோர முகத்தைக் காண்பிக்கத் தொடங்கிவிடும்.

சாஸ்திர,சம்பிரதாய,சாதி,மத,குப்பைகளை எல்லாம் விட்டுவிட்டு மனித உறவுகளில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ரக்க்ஷா பந்தன் கொண்டாடலாம்.

  • இதில் எந்த சம்பிரதாயங்களும் இல்லை.
  • எந்த கடவுளையும் வணங்கத் தேவை இல்லை.
  • எந்த புனித மந்திரங்களையும் பாடத் தேவை இல்லை.
  • எந்த பழைய புத்தகங்களையும் புரட்டத் தேவை இல்லை.
  • அனைத்திற்கும் மேலாக இதனைச் செய்வதால் உங்களின் கடவுள் உங்களை நரகத்தில் தள்ளமாட்டார்.

உடன் பிறந்த சகோதர,சகோதரி இல்லாதவர்கள் இந்த நாளில் ஒருவரை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு புதிய உறவுக்குப் பாலம் அமைக்கலாம். "God Father" போல் இத்தகைய உறவுகளும் ஒரு நல்ல வழிகாட்டியாக ,நண்பனாக இருக்கலாம்.எல்லாமே மனித உறவுகளே.இங்கும் அன்பு,ஏமாற்றம் ,கயமை,புறங்கூறுதல்,கோபம்,கருத்து வேறுபாடுகள் வரலாம். இருந்தாலும் அதையும் மீறி ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுதான் சிறந்த உறவு.


  • இந்த நாளில் ஒரு மணி நேரத்தையாவது சகோதர,சோதரிகள் ஒரு இடத்தில் சந்தித்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
  • தொலை தூரத்தில் உள்ளவர்கள் குறைந்த பட்சம் தொலை பேசிக் கொள்ளலாம்.
  • ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட சகோதர ,சகோதரிகள் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சேர்ந்து (குழந்தை,கணவர்,மனைவி எல்லாத்தையும் விட்டுவிட்டு ) எங்காவது சிறிய தூரப் பயணம் செய்யலாம்.
  • சும்மா ஒரு இடத்திற்கு சேர்ந்து மிதிவண்டிப் பயணம் செய்யலாம்.
மனித உறவுகள் இனிமையானவை.



  1. குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
  2. கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
  3. தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
  4. தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
  5. போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
  6. பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.