Friday, November 25, 2005

பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.

பதிவு22:பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.

நான் இதற்கு முன் எழுதிய "பொங்கல் கொண்டாட்டம்-தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி " என்ற பதிவில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்.


1.ஈழத்தில் இது தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அங்கே இது தீபாவளியைவிட முக்கியத்துவம் பெறுகிறது.

2.தமிழ் நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பொங்கலுக்கு அளிப்பதில்லை.

3.ஒரு சிலர் இந்துவாக இருந்தாலும் தமிழன் என்ற வட்டத்திற்குள் வர விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். திராவிடம் ஆரியம் போன்ற பிரச்சனைகளால் இருக்கலாம். என்பது எனது எண்ணம்.

4.கிறித்துவர்களில் RC பிரிவினர் இதனைக் கொண்டாடுகிறார்கள்.மற்றவர்கள் அப்படியே கொண்டாடவிட்டாலும் இது தமிழர் பண்டிகைதான் என்பதை எதிர்க்கவில்லை.(மற்ற பிரிவினர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்).

5.இஸ்லாமியர்கள் மட்டுமே இதனைக் கீழ்கண்ட காரணங்களால் கொண்டாடத் தயக்கம் காட்டுகின்றனர்.

இஸ்லாமியரின் நிலையையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்ட "
நல்லடியாருக்கும்" "நண்பனுக்கும்" நன்றி.

நல்லடியார் தனது புதிய தளத்தில் "பண்டிகைகளும் நல்லிணக்கமும்" என்று மூன்று பகுதிகள் எழுதியுள்ளார்.

http://nalladiyar.blogspot.com/2005/10/1.html
http://nalladiyar.blogspot.com/2005/10/2.html
http://nalladiyar.blogspot.com/2005/11/3.html

நல்லடியார் மற்றும் நண்பனின் பதில்களில் இருந்து ,பொங்கலைத் தமிழர் பண்டிகையாக ஏற்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாக இவர்கள் நினைப்பது.

1.கடவுளை (அல்லாஹ்வை)த் தவிர வணங்குவதற்குத் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இஸ்லாத்தில் இணை வைத்தல் என்று கூறப்படும் மிக கொடிய குற்றம்.அதாவது இறைவனுக்கு இணையாக பிறிதொரு பொருளைக் கொண்டு பொருளைக் கொண்டு வழிபாடுதல்.

நான் சொல்ல வருவதே இதுதான்.பொங்கல் கொண்டாட்டத்துக்கும் எந்தக் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.எதையும் வழிபாடு செய்யவேண்டாம். இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராகவும் எதுவும் செய்யவேண்டாம்.


2.பொங்கல் தமிழர் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் அதை கொண்டாடும் முறை இந்துக்களின் வழிபாடாகவே இருக்கிறது.

இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.இதனைக் கொண்டாடும் இந்துக்கள் அவர்களின் தெய்வத்துக்கும் சேர்த்து நன்றியைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். இதே பொங்கலை, இஸ்லாம் நண்பர்கள் வைத்து அல்லாவுக்கும், அவர்கள் விரும்பும் (இஸ்லாம் நெறிப்படி) வேறு மனிதர்களுக்கோ பெரியவர்களுக்கோ நன்றி சொல்லிக் கொண்டாடலாம்.

3.பொங்கல் கொண்டாட்டத்தில் சூரிய வழிபாடு உள்ளது.

மீண்டும் நான் சொல்வது. சூரியனுக்கு (கடவுள் இல்லை...சூரியன் என்ற கோளுக்கு அது நமக்கு ஒளி தருவதற்காக.), விவசாயிக்கு, மாட்டுக்கு...என்று நன்றி சொல்வதுதான் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமே தவிர வழிபாடு கிடையாது. வழிபாடுகள் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

4.பொங்கலுக்கு முன்வரும் போகி இந்திரவிழா. அது எங்களுக்குப் பொருந்தாது. நல்லடியார் காட்டும் ஆதாரம் http://uyirppu.yarl.net/archives/000190.html

இந்த இந்திரக் கதை எப்படியோ தமிழ்நாட்டிற்கு வந்து விட்டது. சிலப்பதிகார இந்திரவிழாவிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதாகப் பேசப்படுகிறது. இது பற்றிய எனது எண்ணங்கள்.
போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html


அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:


இந்துக்கள் இப்படிக் கொண்டாடுகிறார்கள், அதனால் நாங்கள் இஸ்லாமியர்கள் கொண்டாடத் தடை உள்ளதாக நினைப்பது தவறு.

பொங்கலை சாதி, மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

ஒரே வகையான சமையற் குறிப்பில் அவரவர் அவருக்கு ஏற்ப உப்பு,மிளகாய் சேர்த்துக் கொள்வது போல அவர்களுக்குத் தேவையான வழிபாட்டு முறைகளை சேர்த்துக் கொள்ளட்டும்.ஆனால் அதையே காரணம் காட்டி ஒரு நல்ல கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டாம்.

சாதி, மத,ஆரிய, திராவிட பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து தமிழர்களும் இதனைக் கொண்டாட வேண்டும்.

தமிழர் சார்பாக கருத்து தெரிவிக்க எனக்கு உரிமையை அந்த இரு தரப்பினரும் (குஷ்பூ ஆதரவு & எதிர்ப்பு) கொடுக்கவில்லை என்பதால், நான் என் சார்பாக மட்டும் இதனை எப்படிச் சிறப்பாக சாதி, மத அடையாளம் இல்லாமல் சமூக விழாவாகக் கொண்டாடலாம் என்பதை இன்னொரு நாள் பதிகிறேன்.


****************



****************

17 comments:

  1. என் சார்பாக நானும் இந்த கருத்தினை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  2. இது ஒரு Thanks giving Day ன்றதாலே 'எல்லாரும்' தாராளமாக் கொண்டாடலாம்.

    ReplyDelete
  3. ரொம்ப சரி.. தமிழர் திருநாளை, தமிழன் என்று சொல்லுபவன் எல்லோரும் கொண்டாடவேண்டும் .
    நன்றின்னு சொல்றதுக்கூடவா மேலிட பெர்மிஷன் வேண்டும்?

    ReplyDelete
  4. என் சார்பாக நானும் இந்த கருத்தினை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  5. http://abumuhai.blogspot.com/

    காஷ்மிருக்கு சுயநிர்ணய உரிமை கொடுன்னு இந்திய பிரிவினைக்கு அடிபோடற மாதிரி சிலர் எழுதறாங்க

    தேசபக்தி முதல்ல வரணும்ங்க.அப்துல்கலாம் அபுல்கலாம் ஆசாத் இவங்க எவ்வளவு பெரிய தேசபக்தர்.அவங்க மாதிரி தேசபக்தியோடு இருக்கவேண்டாமா?

    ReplyDelete
  6. அன்புள்ள அனானி,
    தேச பக்தி என்பது யாருக்கும் யாரும் சொல்லி வருவதல்ல என்பது எனது கருத்து.
    அதுபற்றியும் எனக்கு ஒரு பார்வை உண்டு.

    இப்போது அது பற்றிப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.

    பொங்கல் பற்றி வலைப்பதிவர் அனைவரின் கருத்தையும் அறிய ஆவலாய் இருப்பதால் எடுத்த இந்த முயற்சி முடியும் வரைக்கும் "Comment moderation " செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வேறு விவாதங்களால் திசை திருப்பப்பட்டுவிடக்கூடாது என்பதே எனது எண்ணம்.

    ReplyDelete
  7. I reckon!
    btw, is it not a "Harvest Festival"?
    I often wondered the way Malloo's celebrating ONAM irrespective of Religion!

    ReplyDelete
  8. //ஒரு சிலர் இந்துவாக இருந்தாலும் தமிழன் என்ற வட்டத்திற்குள் வர விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். திராவிடம் ஆரியம் போன்ற பிரச்சனைகளால் இருக்கலாம். என்பது எனது எண்ணம்//

    i have posted this feedback in some other blog..i stand by that

    ReplyDelete
  9. அன்பின் கல்வெட்டு,

    உங்களின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். உங்களின் இந்த முயற்சி நல்முயற்சியாக மாறி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. என் சார்பாக நானும் இந்த கருத்தினை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  11. தமிழர் எல்லாரும் ஒண்றாக கொண்டாடக் கூடிய பண்டிகை கட்டாயம் தேவை! பொங்கள்தான் இத்தேவையை பூர்த்திசெய்பும் என்பதும் எனது கருத்து!!

    ReplyDelete
  12. //ரொம்ப சரி.. தமிழர் திருநாளை, தமிழன் என்று சொல்லுபவன் எல்லோரும் கொண்டாடவேண்டும் .
    நன்றின்னு சொல்றதுக்கூடவா மேலிட பெர்மிஷன் வேண்டும்?//
    LLDasu-வை நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  13. கடந்த வருட தைப்பொங்கல், திருவள்ளுவரின் பிறந்தநாளாகவும் அனுட்டிக்கப்பட்டதென்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.
    நல்ல முயற்சி கல்வெட்டு. வாழ்த்துக்கள்.
    சித்திரை வருடப்பிறப்பு பற்றியும் குழப்பங்கள் உண்டு. தைப்பொங்கலையே தமிழரின் வருடப்பிறப்பாகக் கொண்டாடுவோருமுளர்.

    ReplyDelete
  14. நண்பர் கல்வெட்டு அவர்களே!

    நீங்க தொடங்கியிருக்கும் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

    பொங்கல் திருவிழாவை நன்றி சொல்லும் விழாவாக கொண்டாட சொன்னாலும் அது இந்து பண்டிகை போல் அமையும் என்ற இஸ்லாமிய நண்பர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். அவர்களின் நம்பிக்கை அப்படியே இருக்கட்டும்.

    இப்போ என் மனதில் தோன்றுவதை சொல்கிறேன்.

    மலையாள நண்பர்கள் எப்படி ஓணம் பண்டிகை அதுவும் ஒரு இந்து பண்டிகை போல் தான், மகாபலி மன்னர் வருகை தருகிறார் என்பது ஐதீகம், ஆனால் அதில் விழா, கொண்டாட்டம், விருந்து போன்றவற்றில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்கிறார்கள்.

    நானும் இரமதான் மாதம் முழுவதும் நண்பர்களுடன் தான் இருப்பேன், நோம்பு திறக்கும் போதும் கூடவே இருப்பேன், பின்னர் அவர்கள் தொழுகை செய்யும் போது நான் என் கணக்கிற்கு மனதில் முருகனை வேண்டிக் கொண்டிருப்பேன்.

    தொழுகை முடிந்ததும் மீண்டும் அனைத்து நண்பர்களும் ஒன்று கூடி உண்டு மகிழ்வோம். இப்போ எல்லாம் வருடம் முழுவதும் இரமதான் மாதம் இருக்கக்கூடாதா என்று நினைப்பேன்.

    அந்த முறையை நாம் அனைவரும் பொங்கல் கொண்டாடவும் பின்பற்றலாம்.

    பொங்கல் கொண்டாடும் ஒவ்வொரு இந்து தமிழரும் தனக்கு தெரிந்த தமிழ் கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்களை தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு குடும்பத்தோடு அழைக்க வேண்டும்.

    சிறுவர் சிறுமியர்கள் ஒன்றாக கூடி விளையாடி மகிழ்வார்கள்.

    பெண்கள் ஒன்று கூடி விருந்து தயார் செய்யட்டும், தொலைக்காட்சி பார்க்கட்டும், பேசி மகிழட்டும். ஆண்கள் ஒன்று கூடி நம் நாட்டு முன்னேற்றம், மத நல்லிலக்கணம், நாட்டு பொருளாதாரம், மற்ற விசயங்களை கூடி பேசட்டும்.

    சூரியனுக்கோ, மாட்டுக்கோ மற்றவைகளுக்கோ பூஜை செய்யும் போது அவர்கள் கலந்துக் கொள்ள வேண்டாம். விருப்பட்டால் அங்கே வந்து நிற்கட்டும்.

    இப்படியாக சில ஆண்டுகள் கொண்டாடினாலே போதும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மதத்தை தேர்ந்த தமிழர்களும், பொங்கல் வரும் அன்று தங்கள் வீட்டில் பொங்கல் பொங்கி, குடும்பத்தோடு சாப்பிடலாம். இஸ்லாமிய நண்பர்கள் அல்லாவுக்கே நன்றி செலுத்தலாம். கிறிஸ்தவ நண்பர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

    ஆனால் வீட்டில் தமிழ் பண்டிகை கொண்டாடினோம் என்ற மகிழ்ச்சி இருக்கும், குழந்தைகளும் எப்போ பொங்கல் வரும் என்று ஆவலோடு இருப்பாங்க.

    இவ்வாறு செய்யும் போது பொங்கல் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பண்டிகை என்றாகி விடும். 20, 30 ஆண்டுகளில் அந்த கனவு நனவாகலாம்.

    அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  15. தமிழர் திருநாளை, தமிழன் என்று சொல்லுபவன் எல்லோரும் கொண்டாடவேண்டும் // சொன்னவர் L.l Dasu . வழிமொழிந்தவர் ஜோ.
    நான் ஜோவை வழி-வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  16. குமரன்,துளசி,எல் எல் தாஸு,நற்கீரன்,பொட்டிக்கடை,மூர்த்தி,கருணா,அனானி,ஜோ,வன்னியன்,பரஞ்சோதி மற்றும் தருமி உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

    எல் எல் தாஸு,
    //நன்றின்னு சொல்றதுக்கூடவா மேலிட பெர்மிஷன் வேண்டும்?//

    இஸ்லாம் நண்பர்கள் சூரியன்,விவசாயி மற்றும் கால்நடைகளுக்கு செலுத்தும் நன்றியையும் அத்துடன் சேர்த்து இந்துக்கள் அவர்களின் கடவுளுக்கு செலுத்தும் வணக்கத்தையும் சேர்த்து குழப்பிக் கொள்கின்றனர். அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது நோக்கம்.

    ----------

    பொட்டிக்கடை,
    //btw, is it not a "Harvest Festival"? //

    இது முழுக்க முழுக்க அறுவடைத்திருவிழாதான். விவசாயத்திற்கு உதவிய சூரியன், வயல், கால்நடை என்று பலவற்றுக்கும் நன்றி சொல்லி கொண்டாடப்படுகிறது.

    ------

    வன்னியன்,
    //கடந்த வருட தைப்பொங்கல், திருவள்ளுவரின் பிறந்தநாளாகவும் அனுட்டிக்கப்பட்டதென்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.//

    பொங்கலின் மூன்றாம் நாள் திருவள்ளுவர்தினம்.

    //சித்திரை வருடப்பிறப்பு பற்றியும் குழப்பங்கள் உண்டு. தைப்பொங்கலையே தமிழரின் வருடப்பிறப்பாகக் கொண்டாடுவோருமுளர்//

    தைப்பொங்கலை அறுவடைத்திருவிழாவாக சூரியன், வயல், கால்நடை என்று பலவற்றுக்கும் நன்றி சொல்லி கொண்டாடலாம். சித்திரையுடன் குழப்பவேண்டாம் என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  17. பரஞ்சோதி,
    உங்களின் விரிவான விளக்கத்திற்கும் நன்றி.

    //மலையாள நண்பர்கள் எப்படி ஓணம் பண்டிகை அதுவும் ஒரு இந்து பண்டிகை போல் தான், மகாபலி மன்னர் வருகை தருகிறார் என்பது ஐதீகம், ஆனால் அதில் விழா, கொண்டாட்டம், விருந்து போன்றவற்றில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்கிறார்கள்.//

    உண்மைதான். இதுபற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும் http://kalvetu.blogspot.com/2005/10/10.html என்ற பதிவைப் பார்க்கவும்.

    இருந்தாலும் இந்தப் பொங்கல் உண்மையிலேயே மதக்கலப்பு இல்லாத உண்மையான அறுவடைத்திருவிழா. காலப்போக்கில் வழிபாடுகள் சேர்ந்து கொண்டது என்பதே எனது எண்ணம். ஓணத்தைவிட 100 மடங்கு மதம் சம்பந்தமில்லாத ஒன்று இந்தப் பொங்கல்.

    //இப்போ எல்லாம் வருடம் முழுவதும் இரமதான் மாதம் இருக்கக்கூடாதா என்று நினைப்பேன்.அந்த முறையை நாம் அனைவரும் பொங்கல் கொண்டாடவும் பின்பற்றலாம்.//

    உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு.

    //...இவ்வாறு செய்யும் போது பொங்கல் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பண்டிகை என்றாகி விடும். 20, 30 ஆண்டுகளில் அந்த கனவு நனவாகலாம்.அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்பது என் எண்ணம்.

    நம் அனைவரின் எண்ணமும் ஒரு நாள் நனவாகும். நனவாக வேண்டும்.

    ReplyDelete