Wednesday, October 26, 2005
பதிவு15:தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
தீபாவளிப் பண்டிகை என்றாலே சின்ன வயசில் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது எவன் எந்த மாதிரி சட்டை எடுத்திருக்கான், எந்தக்கடையில தைக்கக் கொடுத்திருக்கான் அப்படீன்னு பாக்குறதே வேலையா இருக்கும். கொஞ்சம் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள் ஒரு மாசம் அல்லது ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே துணி எடுத்து தைக்கக் கொடுத்துருவாங்க, எங்க அப்பா கொஞ்சம் லேட்டாத்தான் எடுப்பார். அரசாங்கம் கொடுக்கிற போனஸ் அப்புறம் "கோ-ஆப் டெக்ஸ்" ல வர்ற தள்ளுபடி விற்பனை, போன்ற பல விசயங்கள் எங்களது தீபாவளி புதுச்சட்டையின் விலையையும் அது எடுக்கப்படும் காலத்தையும் நிர்ணயிக்கும். எங்க அப்பா "கோ-ஆப் டெக்ஸ்" ல இருந்து எப்பவுமே துண்டு,போர்வை,ஜமுக்காளம் மற்றும் அவருக்கு வேட்டி மட்டும் எடுப்பார்.அம்மாவுக்கு பிடித்தது சின்னாளபட்டுதான். அதை எப்பவுமே உள்ளூர் செட்டியார் கடையிலேயே எடுத்துவிடுவோம். சில சமயம் தீபாவளி பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் அம்மாவிற்கு சின்னாளபட்டும் கிடையாது.
எங்களுக்கு எப்போதும் உள்ளூர் செட்டியார் கடையில்தான் துணி எடுப்பார் அப்பா. எங்க ஊர் போஸ்டாபீஸ் பக்கதிலேயே செட்டியார் கடை இருக்கும். நல்ல வசதியாக இருந்த அவர்கள் இப்போது என்ன ஆனார்கள் எங்கே இருகிறார்கள் என்று தெரியாது. இந்த முறை ஊருக்கு போகும் போது விசாரிக்க வேண்டும்.அப்பா கொஞ்சம் முன்பணம் கொடுத்து பாக்கியை பின்பு கட்டுவார். அந்தக் கடை பக்கத்திலேயே தாவாரத்தில் (தாழ்வாரம்) மணி டெய்லர் இருப்பார். அவர்தான் எங்களது ஆஸ்தான டெய்லர். அவர் எல்லாருக்குமே தீபாவளித்துணியை தீபாவளிக்கு முன்னமே கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், எல்லாரிடமும் வாக்கு கொடுத்துவிடுவார்.
தீபாவளி அன்று காலை வரை புதுச்சட்டை கிடைக்காமல் எண்ணெய் தேய்த்த தலையோடு பல குழந்தைகள் அவர் கடை முன் காத்து இருப்பார்கள்.நாங்கள் அவரை இடைவிடாமல் படுத்தி எப்படியும் தீபாவளிக்கு முந்தின இரவே துணி வாங்கி விடுவோம்.இதற்காக தினமும் பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும்போது மணி டெய்லர் கடையில் கொஞ்சநேரம் நின்று, அவர் நம்ம சட்டையை எடுக்கிறார என்று பார்ப்போம். பட்டாசுக் கடையில் கொஞ்ச நேரம் , துணிக்கடையில் கொஞ்ச நேரம் என்று வேடிக்கை பார்த்துவிடு மெதுவாக வீடு வந்து சேருவோம்.
தீபாவளிப் பண்டிகை நாளின் இரவில் ஒரே சோகமாக இருக்கும். "அய்யோ தீபாவளி முடிஞ்சு போச்சே இனி அடுத்த வருசம் தானே வரும்" அப்படீன்னு பக்கத்து வீட்டு நண்பர்களோடு சோகத்தைப் பகிர்ந்து கொள்வோம். என்னதான் சொல்லுங்கள் குழந்தப் பருவ தீபாவளி நாட்கள் மறக்க முடியாத இனிய நினைவுகள். இப்படி கொண்டாடிக் கொண்டிருந்த தீபாவளி எனக்கு வயசு ஆக ஆக விருப்பம் குறையத் தொடங்கியது.அதுவும் கல்லூரிக் காலத்தில் நான் தற்செயலாக சந்தித்த ஒருவரின் கேள்விகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
இது கல்லூரிக் காலத்தில் நான் ஒரு முறை தீபாவளி விடுமுறைக்காக ஊர் செல்லும் போது நடந்தது. அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் என் நினைவில் இருந்து. கல்லூரி முதலாண்டு என்று நினைக்கிறேன்.
என்ன தம்பி என்ன படிக்கிறீங்க?
இஞினியரிங் காலேஜ்
இப்ப என்ன தீபாவளி லீவா?
ஆமா?
உங்க காலேஜுல தீபாவளிக்கெல்லாம் லீவு விடுவாங்களா என்ன? அது கிறிஸ்டியன் காலேஜு ஆச்சே.
இல்ல லீவு விடுவாங்க.
கேட்குறேன்னு தப்பா நினைக்காத தம்பி, உனக்கு இந்த தீபாவளியோட பின்னனி தெரியுமா?
என்னடா இப்படி தொந்தரவு பண்ணாறாரேன்னு நினைச்சுக்கிட்டு நான் "அதுதான் நரகாசுரன கடவுள் கொன்ன நாள்" என்றேன்.
தம்பி ராமரோ துர்க்கையோ அந்த சாமிகள் வதம் செய்யும் கொடுமைக்காரர்கள் எல்லாம் ஏன் கருப்பா இருக்காங்கன்னு தெரியுமா? என்னிக்காவது எங்கேயாவது கருப்பசாமியோ அல்லது முனியாண்டி
சாமியோ செவப்பா இருக்கிறவங்கள வதம் பண்றதா பாத்து இருக்கீங்களா? என்றார்.
எனக்கு அப்போது இருந்த அறிவில் இதல்லாம் தலையில் ஏறவில்லை. ஆனால் அவர் எதோ தி.க கட்சிக்காரர் என்று என் மனது சொன்னது.
"இல்லங்க எனக்கு தெரியாது" என்று சொல்லிவிட்டு கையில்
இருந்த குமுதத்தை விரித்துக் கொண்டு படிப்பது போல் நடித்து அவரது பேச்சைப் தவிர்க்கப் பார்த்தேன்.
"இல்ல தம்பி, இந்த கதைகள் எல்லாம் திராவிட நாட்டுக்காரங்கள கேவலப்படுத்த மற்றவங்க கட்டிய கதை. இதையும் நம்பி நாமளும் அவுகளோட சேர்ந்து இதக் கொண்டாதுவது சரியில்ல. நானோ எனது குடும்பமோ தீபாவளி கொண்டாட மாட்டோம்" என்றார்.
"நீங்க என்ன தி.க கட்சியா?" என்று கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே " நான் எந்தக் கட்சியும் இல்ல தம்பி. புராணத்துல இருக்குற இந்த விசயம் எனக்கு ஒத்துவராத ஒன்னு. அதனால இந்தப் பண்டிகைய கொண்டாட மாட்டேன். " என்றார்.
பின்பு அவரும் அவர் கையில் இருந்த தினசரியைப் படிக்கத் தொடங்கி விட்டார். அப்பாடா ஆள விட்டாரே என்று நிம்மதியாக இருந்துவிட்டேன். தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடத ஆட்களும் இருக்கிறார்கள் என்ற செய்தியே எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் போன்ற பிற மதக்காரர்கள்தான் தீபாவளி கொண்டாட மாட்டர்கள் என்றும், எதோ தீபாவளியை இந்தியா முழுக்க அனைத்து இந்துக்களும் கொண்டாடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்த எனக்கு அப்போது இது பேரதிர்ச்சியாக இருந்தது.
கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்கள் மேலும் ஆச்சர்யத்தைத் தருகின்றன.
எனக்கு இன்றும் புரியாதவை
1.வட மாநிலங்களில் இது 5 நாள் பண்டிகை. தமிழ் நாட்டில் மட்டும் ஒரு நாள்.
2.இந்த விழா நவ ராத்திரியோடு சம்பந்தப்பட்டதாகத் தெரிகிறது. தீபாவளி கொண்டாடும் எல்லாரும் நவராத்திரியோ கொலுவோ கொண்டாடுவது இல்லை.
3.தீபத்திருநாள் என்று சொல்லப்பட்ட போதும் யாரும் கார்த்திகை அளவுக்கு தீபம் ஏற்றுவதாகத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் இதை யாரும் தீபத்திருநாளாக கொண்டாடியது இல்லை. சும்மா நரகாசுரனுக்காக எண்ணெய் தேய்த்து குளிப்பதாகவே தெரிகிறது.
அதிக தகவல்களுக்கு
http://diwalimela.com/celebrations/index.html
http://www.kamat.com/kalranga/festive/diwali.htm
http://www.diwalifestival.org/diwali-in-history.html
குழந்தையாய் இருக்கும் போது கொண்டாடினேன். இப்போது குழந்தைகளுக்காக கொண்டாடுகிறேன்.ஏன் கருப்பு மனிதர்கள் மட்டும் அரக்கர்களாச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி.
தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************