Wednesday, July 03, 2013

எந்த ஓவியனும் கிறுக்கியிராத கோடுகளை ஒரு குழந்தை படைத்துக்கொண்டிருக்கலாம்

Image courtesy http://www.spencerart.ku.edu

டைப்பாளி அல்லது படைப்பு குறித்த தமிழ் இலக்கிய உலகின் வர்ணனைகளை ஒதுக்கிவிட்டு எனது பார்வையாக சொல்கிறேன். நீங்கள் ஏதேனும் ஒரு இலக்கிய மடத்திற்கு நேர்ந்து கொண்டிருந்தாலோ அல்லது "இது இப்படித்தான் இதைத்தாண்டி ஒன்றும் இல்லை" என்று இணைய மொண்ணை வசனம் பேசினாலோ இது உங்களுக்கானது அல்ல. மன்னிக்கவும். "நேற்றுள்ளவை இன்று மாறியுள்ளது, அதுபோல இன்றுள்ளவை நாளை மாறும் , மாறாமலும் போகும் எனக்குத் தெரியாது" என்று நினைப்பவர்களுக்கானது இது.  நான் உங்களுடன் பெஞ்சில் அமர்ந்து பேசுகிறேன்.  உங்கள் முன்னால் சிம்மாசனம் போட்டு செய்யும் போதனைகள் அல்ல இது.  நீங்கள் என்னைப்போல நிச்சயம் தனித்துவமானவர்கள் என்பதில் மாற்று இல்லை.

நான் என்னிடம் வரும் அனைத்தையும் மொத்தமாக விலக்கிவிட்டு , பிறகு தேவையானதை தேடிப் பொறுக்கிக்கொள்வேன். வரும் அனைத்தையும் மொத்தமாக ஏற்றுவிட்டு தேவையில்லாததை விலக்கிவிடும் பாக்கியம் வாய்க்கவில்லை. அதனால்தான் எனது பாத்திரம் எப்போதும் காலியாகவே உள்ளது. காலியாக இருந்தாலும் அதில் விழும் அனைத்து நீர்த்துளிகளும் தங்குவது இல்லை. எதிரொலி போல சிதிறியடிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. அப்படி ஏதேனும் தங்கிவிட்டாலும், கொட்டிக் கவிழ்த்துவிட்டு மறுபடியும் தேடி பொறுக்கிக்கொள்ளவே எத்தனிக்கிறேன்.

படைப்பு என்பது சீவிச் சிங்காரித்து வர்ணம் பூசி அழகு படுத்திக்கொள்வது அல்ல. மனிதன் பல வழிகளில் கருத்தைப் பகிர முடியும். ஓவியம், சிற்பம்,எழுத்து,பாட்டு,பேச்சு..இன்றைய மின் வடிவங்கள் என்று பல வழிகள். இவை எல்லாம் ஒரு வகை தொடர்பு சாதானங்கள் (medium) . இந்த சாதனம் வழியாக என்ன சொல்லப்படுகிறது என்பது முக்கியமா இல்லையா என்பதை ஆராயுமுன், இதில் என்னவும் சொல்லப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  "இதுதான், இது இப்படித்தான் , இதைத்தாண்டி சொன்னால்  அது இதுவல்ல"  என்று எப்போது நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே உங்களின் டவுசரின் ஒரங்கள் உங்களாலேயே கிழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்று அறிக.

சிறந்த இலக்கியவாதி பாக்யராஜ் (What is Literature?)
http://kalvetu.balloonmama.net/2013/02/what-is-literature.html

படைப்பாளன் என்பவன் இடித்துக்கட்டுபவன் அல்லது புத்தம் புதிதாக வேறு வடிவம் கொடுப்பவன். படைப்பு என்பது ஓவியம், சிற்பம், எழுத்து, பாட்டு, பேச்சு.. இன்றைய மின் வடிவங்கள் என்று எதுவாகவும் இருக்கலாம். படைப்பாளி குழந்தை மன நிலையில் (பிடித்ததைச் செய்யும் அடம்) இருந்து கொண்டே,  பெரியவர்கள் சொன்னதை இடித்துக்கட்ட முயல்பவன். ஆனால் அப்படி யாரும் இன்றைய சூழ்நிலையில் வாழ்ந்துவிட முடியாது. பல சமூகக் கட்டுப்பாடுகளுடன்தான் படைப்பாளியும் இயங்க வேண்டியிருக்கும். உடைக்கவே கூடாதவற்றை உடைக்க நினைக்கும்படைப்பாளி ,அதை உடைத்தால் அடைக்கலம் கேட்டு போராட வேண்டியதுதான் வழி.

இன்றைய கால கட்டத்தில் படைப்புக்கு எல்லை இல்லை என்று சொல்ல இயலாது. அது சமூகம் (பெரும்பான்மையினர்) வகுத்த வெளிக்குள் நொண்டிக்கொண்டுள்ளது. படைப்பாளி தன்னால் மக்கள் திரளை உருவாக்க (பெரும்பான்மை) இயலும் என்றால் அவனின் படைப்பு வழிவந்த சமூகம் பெரிதாகி, அது புதுவிதி செய்யும். அறிவியல் படைப்புகள் (கண்டு பிடிப்புகள்) எல்லாம்  பெரிய எதிரிகளை எதிர்கொண்டே வளர்ந்துள்ளது. அப்படி வந்தாலும் காலத்தால் "அழியாமல் இருப்பேன்" என்று சவால் விடாமல்,  புதியவை வரும்போது பழையவை மரணக்குழிக்குள் போய்க்கொள்கிறது.

இடித்துக்கட்டப்படுபவையே படைப்பு. அலங்கரிப்படும் குப்பைகள் அல்ல. அப்படிச் செய்பவனே படைப்பாளி.படைப்பு எந்த தளத்திலும் நிகழலாம். இதுதான் படைப்பு இதைத்தாண்டி இல்லை என்று எதுவும் இல்லை.

இதுவரை எந்த ஓவியனும் கிறுக்கியிராத கோடுகளை தினமும் ஒரு குழந்தை உலகின் ஏதோ ஒரு மூலையில் படைத்துக்கொண்டிருக்கலாம். உடைக்கப்படும் அனைத்தும் அடுத்த ஒன்று உருவாக வழிவகுக்கலாம். இல்லாமலும் போகலாம்.படைப்பு கட்டிக்காக்கப்பட வேண்டியதும் இல்லை தொழப்பட வேண்டியதும் இல்லை. படைப்பு பகிர்ந்து கொள்ளப்படவேண்டியது, நிபந்தனை இல்லாமல் இரசிக்க கொடுக்கப்பட வேண்டியது. அதுபோல இரசிப்பவனை எடைபோடாததும் அதுவே.

No comments:

Post a Comment