Friday, July 05, 2013

சாதி ,காதல், கொலைகள்,கலாச்சாரம்....புற்றீசல் கருத்துகள்

Image Courtesy www.thelovelyplanet.net
மீபத்தில் நடந்தமுடிந்த சம்பவங்களின் நிழலில், தங்களின் இத்துப்போன கிழிந்த‌ டவுசர்களை உலர்த்தி இன்பம்காண ஆரம்பித்துவிட்டனர் பலர். இதில் மிகவும் பேசப்படும் இரண்டு வார்த்தைகள் கலாச்சாரம் மற்றும் திராவிடம். ஆளாளுக்கு கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும்முன் , சற்று நிதானித்து, கலாச்சாரம் என்ற சொல் உங்கள் மூளையில் என்ன பிம்பங்களை செதுக்கிச் செல்கிறது என்று யோசியுங்கள்.  உங்கள் மூளைக்கு நீங்களே அதிபதி. உங்களுக்கான விளக்கங்களை நீங்களே சமைத்துக்கொள்ளலாம்.

கலை
கலை (Art ) என்பது வெளிப்படுத்தும் ஒன்று. அதாவது exhibiting   தன்மை கொண்டதுதான் கலை. உள்ளுக்குள் வைத்து புகைந்துகொண்டு இருப்பது கலை அல்ல.

கலாச்சாரம்
கலைகளின் சாரம் அல்லது கலையின் ஆதாரம். என்று எப்படி வேணுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். காசா பணமா? ஆனால் அது எதோ ஒரு பழைய ஆதார மூலத்தைத்தைப் பற்றிக்கொண்டு தொங்கும் ஒரு வார்த்தை என்று நான் நம்புகிறேன்.  இன்று உள்ள ஒரு நிலைக்கு அதற்கு முந்தைய நிலையும் உண்டு என்பது.

பண்பாடு
பண்+பாடு. பண்பட்ட (பதப்படுத்தப்பட்ட) பழக்கங்கள் என்பதுவே பண்பாடு எனப்படுவது.

கலாச்சாரம் அல்லது பண்பாடு

பண்பாடு என்றாலே பழைய பழக்கம். ஏன் என்றால் புதிய பழக்கங்கள்,செயல்கள் பண்பட நாட்கள்/ஆண்டுகள் ஆகும்.

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இறந்த காலத்தைச் சுட்டுவது. அல்லது நிகழ்காலத்தில் உள்ள ஒரு பழக்கத்திற்கு வேறு ஒரு பழைய வடிவம் இருக்கலாம் என்பதே கலாச்சாரம்.  (விக்கி ஆண்டவர்: The term "culture" appeared first in Europe in the 18th and 19th centuries, to connote a process of cultivation or improvement, as in agriculture or horticulture.)  மற்றபடி அந்த பழைய வடிவத்தை இன்றும் பின்பற்ற வேண்டும் என்பது கலாச்சாரம் அல்ல.  அதன் பொருளும் அதுவல்ல. அப்படி இருந்தால் நாம் இன்னும் கண்ணகிபோல, கோவலன் போல, வள்ளுவன் போல, அதே கால முறைகளில் ஜீவித்து இருக்க வேண்டும்.  நாம் அப்படியில்லை.  சேலையைக் கலாச்சார கம்பளமாக பறைசாற்றும் நாம், இரவிக்கையில் புரட்சிகள் படைத்துக்கொண்டே உள்ளோம் என்பதை மறக்கக்கூடாது.  அதாவது பிடித்த ஒன்றை கலாச்சாரம் என்று தொங்குவதும், காலத்துக்கு ஒத்துவராத ஒன்றை (உம்: தூக்குவாளி) அப்படியே கடாசிவிட்டு நவீனத்து மாறுவதும் (உம்:ஹாட்பாக்ஸ்) அவரவர் வசதி.

மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களின் பார்வையில் இருந்தே தீர்மானிக்கப்படுகிறது.  உதாரண‌த்திற்கு , இன்று நடக்கும் செயல்கள் எல்லாம் ஏதோ புதிய கலாச்சாரத்தை பதியவேண்டும் என்று திட்டமிடப்பட்டு நடப்பவை அல்ல. வாழ்வு அதன்போக்கில் இன்றைய காலகட்டத்திற்கு தக்க எதையோ கிறுக்கிச் செல்கிறது.  இன்று நடப்பவை கலாச்சார உற்பத்தி அல்ல. வெறும் செயல்கள்/நிகழ்வுகள்/படைப்புகள்.......ஆனால் பத்து வருடம் அல்லது 20 வருடம் அல்லது 100 வருடங்கள் கழித்து இதை அறியவரும் ஒரு கூட்டம், இன்று நாம் செய்து கொண்டிருப்பதை அவர்களின்முன்னோர்களின் கலாச்சாரமாகப் பார்க்கும்.

கலாச்சாரமும் பிரபலபதிவர் என்ற கூமுட்டைகளும்
http://kalvetu.balloonmama.net/2010/10/blog-post_13.html

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு
http://thekkikattan.blogspot.com/2010/11/template-post.html

  •  கலாச்சாரம் என்பது எப்போதுமே இறந்தகாலம். நிகழ்காலத்தில் அதை அப்படியே பிடித்து தொங்கிக்கொண்டிருக்க முடியாது.
  • அது போல இந்த கலாச்சாரம் அல்லது நிகழ்வுகள் அல்லது பழக்கங்கள் மண்,காலம்,சூழ்நிலை என்று கணம் தோறும் மாறுபவை. 
  • உலகம் முழுக்க ஒரே கலாச்சாரம் அல்லது நல்ல பழக்கம் / கெட்ட பழக்கம் என்று எந்த அளவுகோலும் கிடையாது. 
  • ஜட்டி பிராவுடன் அம்பேரிக்கா பீச்சில் தாத்தா,பாட்டி,குழந்தைகள்,நண்பர்கள்,தோழிகள்..என்று இருப்பது அந்த ஊருக்கு இயல்பானது. குற்றாலத்தில் துண்டைக்கட்டிக்கொண்டு குளிப்பவன் , அவனது கோமணத்தை அளவுகோலாகக்கொண்டு,  இதைத் தவறு என்று சொல்ல இயலாது. 
  • அங்கீகரிக்கப்பட்ட அம்மணக்குளியல் தளங்களும், அம்மண ஓட்டங்களும் அம்பேரிக்காவில் உண்டு. அம்பேரிக்கா மட்டும் அல்ல பட இடங்களில்.
  • இதையெல்லாம் உனது கலாசார அடுப்பாங்கரை அடிஸ்கோலில் அளந்து இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் பயன் ஏதும் இல்லை.
இடம்,காலம்,சுற்றுப்புறம்,தட்பவெட்பம்,தேவை ...இன்னபிற காரணிகளில் அந்த அந்த சமூகம் அதற்கான தேவைகளை தீர்மானிக்கட்டும். உங்களின் கலாச்சார அளவுகோலை உங்கள் சமூகத்திற்கு மட்டும் அளக்க பயன்படுத்துங்கள்.

நீதி:
உங்களின் கலாச்சார சொம்புகள் உங்களுக்கானது அல்லது அதிக பட்சம் உங்கள் ஊருக்கானது / நீங்கள் வாழும் குழுவிற்கானது மட்டுமே. உலகமே அப்படிச் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்த்து உயர்வு தாழ்வைச் சொல்லித் திரியவேண்டாம்.

1 comment: