Wednesday, July 24, 2013

பாதி வழியில் இறங்கிக் கொண்ட பயணி


பிறந்த இடம் தாண்டி வேறுமாநிலம் அல்லது வேறுநாடுகளில் வாழும் அனைவருக்கும் எப்போதாவது இது உணர்த்தப்பட்டு இருக்கும். உணர்வது அல்லது பிறரால் உணரவைக்கப்பட்டு இருக்கும். அப்படி இல்லை என்பவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் இந்தி படங்களின் இறுதி காட்சியில் வரும் கூட்டு குடும்ப நடனம்போல ஆடி மகிழ்ந்துகொள்ளலாம். இது வழியில் இறங்கிக்கொண்ட ஒரு பயணியின் புலம்பல்.

குடும்பத்தைவிட்டு ஓடிவிடவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு யாரும் புலம்பெயர்வது இல்லை. உள்ளூரில் பொருளீட்ட முடியாமல் அல்லது பொருளீட்ட வக்கற்ற நிலையில்தான் அடுத்த ஊர் நோக்கிய பயணங்கள் கனவுகள் தொடங்குகிறது. அப்படி சென்றபிறகு பல்வேறு காரணங்களால் பெயர்த்து நடப்பட்ட மரம்போல,  புதிய மண்ணில் கிடைத்த இடத்தில் வேர்விடத்துவங்கி , கிளைபரப்பி அடுத்து நகரமுடியாமல் ஆகிவிடுகிறது. ஒருவேளை புலத்தில் இருந்து மறுபடியும் பெயர்ந்து பிறந்த மண்ணில் மறுபடியும் பூத்துக்குலுங்கும் சோலைகள் நீங்கள் என்றால்  நீங்களும் பாக்கியவான்கள். நீங்களும் இந்தி படங்களின் இறுதி காட்சியில் வரும் கூட்டு குடும்ப நடனம்போல ஆடி மகிழ்ந்துகொள்ளலாம்.

கல்யாணம் காட்சி , நல்லது கெட்டது என்று வேட்டியை மடித்துக்கொண்டு களம் இறங்கி அன்பு வளர்க்க  ஆசை இருந்தாலும், புலிவாலைப் பிடித்தகதையாக வாழ்வு ஒடிக்கொண்டுள்ளது. 20 ஆண்டுகள் குடும்பத்தில், உறவுகளில் வெறும் தொலைபேசியில் பேசி எந்தவிதமான உறவுகளையும் வளர்த்துவிடமுடியாது எனப்து நிதர்சனம். இடையில் 30 நாட்கள் விடுப்பில் வந்தாலும் சொந்தவீட்டில் விருந்தாளியாகவே நடத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை.

அம்மா அப்பா கூட அவசரத்திற்கு உதவமுடியாத தொலைதூர பிள்ளைகளின் வெறும் போன் பேச்சுகளால் ஒருவிதபயனும் இல்லை என்பதை அறிந்தே உள்ளார்கள். குடும்பத்தில் நடக்கும் எந்த விதமான கொள்கை முடிவுகள், செயல்கள் என்றாலும் "நீ என்ன 10 நாள் இருந்துட்டு போயிருவ , சும்மா வந்தமா இருந்தமான்னு இரு. நாங்க பாத்துக்கிறோம்" என்று சொல்லி வலிய குடும்ப ஜீப்பில் ஏறினாலும் இறக்கிவிட்டுவிடுகிறார்கள்.

ஒரு பயணத்தின் பாதிவழியில் இறங்கிக்கொண்ட பயணியால், விடுபட்ட பயணத்தை ஒருக்காலும் தொடரமுடியாது. அது மற்றவர்களின் பயணமாகிவிட்டது.