Wednesday, March 13, 2019

அதிக கடனுடன் நிறைவேறிய‌ கனவு : The Jeep wave

ன்று காலையில் அரைமணி  நேரத்திற்கு முன்பே எழுந்துவிட்டேன். வழக்கமாக 4:30 க்கு எழுந்திருப்பவன், இன்று 4:00 மணிக்கே எழுந்துவிட்டேன். காலையில் அனைவருக்கும் உணவு தயாரித்துவிட்டு, குழந்தைகளுக்கு மதிய உணவும் செய்ய, இரண்டு மணிநேரம் ஆகிவிடுகிறது. அதற்குப்பின் குளித்து அலுவலகம் கிளம்ப 30 நிமிடங்கள். வாகனத்துக்கு பெட்ரோல் போட Costco பேரங்காடி நிலையத்தை அடைந்தபோது நேரம் 6:40 ஆகி இருந்தது. காற்றில் அதிகாலை இருட்டுடன், மெல்லிய வாடைக் காற்றும் கலந்திருந்தது . ஞாயிற்றுக்கிழமைதான் நேரம் மாற்றப்பட்டது. குளிர்காலம் முடிந்து, இளவேனிற்காலம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன், கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் (forward) நகர்த்திவிடுவார்கள். இந்தக்காலத்தில் கிடைக்கும் அதிக பகற்பொழுதை பயன்படுத்திக்கொள்ள இந்த ஏற்பாடு. நவம்பர் முதல்வாரத்தில், பழையபடி கடிகாரத்தை பின்னோக்கி ஒரு மணிநேரம் தள்ளி வழக்கமான நேரத்திற்கு வந்துவிடுவார்கள்.

Costco பேரங்காடி பெட்ரோல் நிலையத்தில் அப்போது கூட்டம் இல்லை. பகல் நேரத்தில் குறைந்தது 20 வாகனங்கள் வரிசையில் இருக்கும். இப்போது என்னைததவிர ஒரே ஒரு வாகனம் மட்டுமே இருந்தது. மற்ற இடங்களைவிட இங்கே பெட்ரோல் விலை குறைவு. அதுவும் உறுப்பினர்களுக்கு மட்டும் என்பதால், முடிந்தவரை இங்கேதான் பெட்ரோல் நிரப்புவது. "Fill it quickly, price is going to change in few minutes" என்றவாறே வந்தார் அந்த நிலைய பணியாளர். அவருக்கு வணக்கம் சொன்னேன். "Are you enjoying your jeep" என்று கேட்டார் சிரித்துக்கொண்டே.

ப்பொழுது எல்லாம், யாராவது என் புது வாகனம் பற்றிக் கேட்டால், நிறுத்திக் கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறேன். எனது பழைய 2009 கேம்ரி கார் விபதிற்குள்ளானது, என் மகன் நலமாக இருப்பது தொடங்கி, என் சின்ன வயது கனவான வரை "Mahindra Jeep" வரை பேசிவிட்டுத்தான் ஓய்வேன். என்னை எப்போதாவது பார்க்க நீங்கள் நேர்ந்தால் உங்களுக்கும் இந்தக் கதை சொல்வேன்.

நான், தேவை (need) தாண்டி ஆசைக்காக (want) வாங்க நினைத்த இரண்டே இரண்டு பொருட்களில் ஒன்று வாங்கவே முடியாமல் போனது.
👇👇👇
எப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்

ரண்டாவது ஆசையும், "ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஃச்டமோ கழுதை மேய்க்க” என்றொரு பழமொழி உண்டு. அதுபோல தள்ளிக்கொண்டே போனது. "இருக்கும் கார் அதுவாக நின்றால்தவிர, வேறு ஒரு வாகனம் வாங்கப் போவது இல்லை" என்றே இருந்தேன். சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் இருக்கும் கார் நின்றுவிட்டது.
👇👇👇
அன்று அவனும் போயிருப்பான்:நின்றுவிட்ட கார்

ரு மாத காலம், நண்பர் ஒருவர் இரவல் கொடுத்த, ஏற்கனவே 190,000 மைல்கள் ஓடியிருந்த "2001 Honda Accord" வாகனத்தை வைத்து ஓட்டிக்கொண்டிருந்தோம். அமெரிக்க மக்களுக்கு, வீட்டிற்கு அடுத்த பெரிய முதலீடு முதலீடு அல்ல அது கடன், வீட்டிற்கு அடுத்த பெரிய கடன் வாங்கல் வாகனத்திற்காகவே இருக்கும். பெரிய தொகை என்பதால், நிறுத்தி, நிதானமாக அடுத்து எந்த வாகனம் வாங்கலாம் என்று, ஒரு மாதம் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. குடும்பத்தில் அனைவருக்கும் எனது "Mahindra Jeep" ஆசை தெரியுமாதலால், "இனிமேல் நாம புதுசா ஏதும் வாங்கப் போவது இல்லை. இப்பொழுது உங்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். எனக்குத்தான், பணக்கணக்கு பலவாறு இடித்தது. மகன் இந்த ஆண்டு கல்லூரிக்கு போகிறான். அதற்கு திட்டமிடுவதற்குமுன், வாகனம் வாங்கவேண்டியதாகிப் போனது. தேவை என்ற அளவில் ஏதோ ஒரு வாகனம் நாலு பேர் உட்கார்ந்து செல்லும் அளவில் அவ்வளவே. ஆனால், எனது ஆசையானது பெரும் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தது பின்னணியில்.

ருந்த இரண்டு வாகனங்களில் ஒன்று போய்விட்ட நிலையில், வாகனம் வாங்க வேண்டியது தேவை(need). இந்த தேவையுடன், எனது ஆசையை(want) பிற்சேர்க்கையாக சேர்க்காவிடில், நான் என்றுமே எனது "Mahindra Jeep" க‌னவை நிறைவேற்றிக்கொள்ள‌வே முடியாது என்பதை உணர்ந்தே இருந்தேன். அமெரிக்காவில், Jeep Wrangler ல் SPORT, SPORT S, SAHARA, RUBICON & MOAB என்று ஐந்து Trim level (different versions of the same model) உள்ளது. இங்கே உள்ள மூன்று முக்கிய முகவர்களிடமும், எனக்கு தேவையான வண்ணமும், வடிவமும், வேறு சில must have தேவைகள் எல்லாம் சேர்ந்ததுபோல ஒன்றுமே இல்லை. ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது. அனைத்து முகவர்களும் அவர்களின் உள்ள இருப்பில்( inventory) உள்ள வாகனத்தை விற்கவே முயல்கிறார்கள் தவிர, என் ஆசைகளை மதிப்பது இல்லை. அவர்கள் கவலை அவர்களுக்கு. ஒரு மாதமாக தேடினேன். மஞ்சள் வண்ணம் முதலாவதாகவும், இரண்டாவாதாக பச்சை வண்ணமும் என் விருப்பமாக இருந்தது. ஆனால் மற்ற  must have  தேவைகளுடன் அந்த வண்ணம் கிடைக்கவில்லை நான் தேடிய காலத்தில்.

ன் விருப்ப பட்டியலிலேயே இல்லாத வெள்ளை வண்ணம் எனக்கு சட்டன்று பிடித்துவிட்டது. ஆம் அது தற்செயல். வெள்ளை மற்றும் சின்னச் சின்ன சிகப்பு அடையாளங்களுடன் இருந்த Jeep Wrangler-Rubicon அதன் கம்பீரம் பிடித்துவிட்டது. அதிலும் ஒரு குறை இருந்தது. அனைத்து வடிவங்களிலும் ( SPORT, SPORT S, SAHARA, RUBICON & MOAB) மேற்கூரைக்கு இரண்டுவிதமாக வரும். Hardtop or Soft Top என்று. இரண்டிலுமே நிறைகுறைகள் உண்டு. இதுதான் சிறந்தது என்று இல்லை. ஆனால், எனது தேர்வு Soft Top. அது இந்த வாகனத்தில் இல்லை. Jeep Wrangler ன் சிறப்பு என்பது, அதன் மேற்கூரை, கதவுகள், முன் புறக் கண்ணாடி(windshield) அனைதையும் கழற்றி வைத்துவிட்டு, வெறுமனே கீழ்ப்பகுதியுடன் பயன்படுத்த முடிவதே.

Best off Road vehicle Jeep Wrangler என்பது என் நிலைப்பாடு. இப்படி off road போகும் போது, மேற்கூரையை சுலபமாக நினைத்த நேரத்தில் சுருட்டிவிட ஏதுவானது   Soft Top என்பதால்,  அதுவே எனது விருப்பமாக இருந்தது. "இதற்கு  Soft Top மாற்றிக்கொடுத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்" என்றேன் விற்பனையாளரிடம். புதிய வாகனங்கள் எப்படி வந்ததோ, அப்படியே விற்கவே முயல்வார்கள். வேறு சில முகவர்கள் மாற்றிக் கொடுக்கமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். நானே மாற்றிக் கொள்ளலாம்தான். நானே மாற்றிக்கொண்டால், தேவையான பொழுது Hardtop ம், தேவையான பொழுது Soft Top ம் மாறி மாறி பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கழற்றிய Hardtop ஐ வைக்க இடமும், புதிய Soft Top வாங்க அதிகமாக சிறிது பணமும் தேவை. எனவே, முகவரே, Hardtop ற்கு பதில்  Soft Top மாற்றிக் கொடுத்துவிட்டால் நல்லது என்பதால், முகவரிடம் அந்த கோரிக்கையை வைத்தேன். தனது மேலாளரிடம் பேசிவிட்டு வந்த விற்பனை முகவர், "OK we will do it for you but we won't give the hardtop back" என்றார். சரி என்று ஒத்துக்கொண்டேன். இதோ என் கனவு அதிக கடனுடன் நிறைவேறிவிட்டது.

மெரிக்காவில் "Jeep wave" என்ற ஒரு பண்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை என்பது தெரியும். மற்ற நாடுகளில் இது உள்ளதா என்று தெரியாது. சாலையில் நீங்கள் செல்லும் போது, எதிரே மற்ற ஒரு Jeep Wrangler வாகனத்தை பார்த்தால், அவர்களுக்கு கையசைக்க வேண்டும். இது எப்படி ஆரம்பித்தது என்பதற்கு பல கதைகள் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதிகமாக இராணுவ வீரர்களே இந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்ததால், அவர்களுக்குள் ஆரம்பித்த வழக்க‌ம் என்றும், "இல்லை இல்லை, இது Jeep சிவிலியன் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வந்த பழக்கம்" என்றும் பல கதைகள் உண்டு.

Jeep Wave Explained
https://www.youtube.com/watch?v=Pq1iJLQQox8

ல கோடிகள் கொடுத்து, ராக்கெட் வேகத்தில் செல்லும் வாகனத்தை வாங்கினாலும், அத‌ற்கு இல்லாத சிறப்பு Jeep Wrangler க்கு உண்டு. ஆம், தினமும் 5 முதல் 10 பேராவது எனக்கு கையசைப்பதும்(wave) நான் அவர்களுக்கு கையசைப்பதும் நடந்து கொண்டுள்ளது. எந்த அறிமுகமும் இல்லாமல், வினாடியில் கடந்து போகும் ஒருவர் மற்றொருவருக்கு wave செய்து கடப்பது சிறப்பு! மகிழ்ச்சி!

ந்த வாகனம் எனக்கு பல புதிய வழிகளைத் திறந்துள்ளது. கடற்கரையின் அருகில், தண்ணீரில் கால் நனையும் தூரத்தில் கூடாரம் அமைத்து (camping) தங்குவதற்கென்றே சில இடங்கள் உள்ளது. அதற்கான முக்கியத் தேவை 4 wheel drive . Jeep Wrangler அதில் அரக்கன். நடந்து போகும் (hiking)அப்பலாச்சியன் மலைப்பாதைகள் போல, வாகனத்தில் செல்லுவதற்கென்றே சவாலான மலைப்பாதைகள் உண்டு. Rubicon என்பதே புகழ்பெற்ற Rubicon Trail ஐக் குறிப்பது.

The Rubicon Trail Off Road Trail for Jeep Fans
https://www.youtube.com/watch?v=HoWXXcTdDMk


ஆம்  Jeep Wrangler வடிவம், அந்த புகழ்பெற்ற Jeep மலைப்பாதையான Rubicon Trail ஐ குறிக்கும் விதத்தில் வைக்கப்பட்ட பெயர்தான். இந்த மலைப்பாதை பயணத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. என்றாவது ஒருநாள் அந்தப் பாதையில் இதை ஓட்டிவிட வேண்டும்.