Friday, March 01, 2019

அன்று அவனும் போயிருப்பான்:நின்றுவிட்ட கார்

வாகனக் காப்பீட்டு சார்பாக வந்தவர், வாகனத்தைப் பார்த்த உடன், "I have a bad news. Sorry,this is total loss" என்று சொல்லிவிட்டார். 11 வருடங்களாக உழைத்த கார் அது. வீடு வாங்கும்போது , கடனுக்காக‌ கொடுக்க வேண்டிய முன் பணத் தேவைக்காக  (down payment)  இதன் பேரில்  (collateral loan) பணக்கடன் வாங்கி இருந்தேன். எல்லாம் போக, கைக்கு 2000 டாலர் வந்தது. 

கால் இல்லாமல் கூட வாழலாம் இங்கே , ஆனால் கார் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன், அதிலும் பதின்மவயது, மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுடன் வாழ்வது சிக்கலானது.
**
அன்றும் வழக்கம் போல விடிந்தது. Civil calendar படியான புதுவருடம் 2019 பிறந்து, ஐந்தாவது நாள். கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்திருந்தது. இந்த ஆண்டு செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட, அருகில் உள்ள ஊரின் காஃபிக் கடையில் தனியாக அமர்ந்து இருந்தேன். டிசம்பர் மாதம் நடந்த ஒரு வாகன விபத்திற்கான காப்பீட்டுத் தொகை ஆவணங்களை, தயாரித்து அனுப்புவது, அன்றைய முதல் நோக்கமாக இருந்தது எனக்கு. 

எங்கள் ஊரில் நடந்த ஒரு பனிப்பொழிவின்போது, வழுக்கலாக இருந்த தரையில், Minivan ஐ வீட்டினுள் நிறுத்தும் போது, பக்கவாட்டுச் சுவரில் உராய்ந்து, வீட்டின் சுவறும், காரின் முன்பக்கமும் சேதமடைந்து விட்டது. வீட்டிற்கான வேலையை நானே பார்த்துவிடுவேன். காருக்கு 2000 $ வரை ஆகலாம். எனவே காப்பீட்டுத் தொகைக்காக ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருந்தேன். 
**


அந்தக் கடையில், "French Press Coffee சிறப்பாக இருக்கும்" என்று அந்தக்கடை பணியாளர் சொன்னதன் பேரில், அதை வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். முதல் அழுத்தத்தில் (Press ) வந்த‌ காஃபியை சுவைத்து முடித்த நேரத்தில், மனைவியிடம் இருந்து செல்பேசி அழைப்பு. "தம்பி கார் ஆக்சிடென்ட் ஆயிருச்சு. நீங்க எங்க இருக்கீங்க? உடனே போங்க" என்றார் பதட்டத்துடன்.

நரம்புகள் எல்லாம் அறுந்து உணர்வற்றவனாய் இருந்தேன் சில நொடிகள்.

காப்பீடு தொடர்பான வேலைகளை செய்து கொண்டிருந்த நான், அப்படியே கணினியை மூடிவிட்டு, மனைவியை அழைத்து, சில விவரங்களைக் கேட்டுகொண்டு, கடையில் இருந்து கிளம்பினேன். விபத்தின் தன்மை தெரியவில்லை. நான் இருந்த காஃபி கடையில் இருந்து, விபத்து நடந்த இடம் செல்ல, 10 ‍முதல் 15 நிமிடங்கள் ஆகும். போகும் வழியெல்லாம் பல கவலைகள்.
**
அமெரிக்காவில், மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு பள்ளியின் வழியாக‌, சில வகுப்புகளை நடத்தி, ( Driving Eligibility Certificate and a Driver's Education Certificate course) சில கட்டுப்பாடுகளுடன், ஓட்டுநர் உரிமம் கொடுப்பார்கள்.குறைந்தபட்ச வயது 15. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். 

Level 1: Limited learner permit Supervised operation of a Class C vehicle
பள்ளியின் வழியாக மேற்சொன்ன வகுப்புகளை முடித்துவிட்டால், 15 வயதில் கொடுக்கப்படும் இந்த‌ Level 1 உரிமத்துடன் மாணவர்கள்,  5:00 AM  முதல் 9:00 PM வரை மட்டுமே ஓட்ட முடியும். அதுவும் Adult ஒருவர் உடன் இருக்க வேண்டும். செல்பேசி பயன்படுத்தக்கூடாது. 

இப்படி ஓட்டி, 16 வயதில் சாலையில் ஓட்டிக்காட்டி தேறினால் ( road test) அடுத்த கட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Level 2: Limited provisional license
(Unsupervised driving from 5 a.m. to 9 p.m. and to/from work or any volunteer fire, rescue or emergency medical service)

இந்தக்கால கட்டத்திலும், வாகனம் ஓட்டும்போது அவர்களுக்கு செல்பேசி பயன்படுத்த அனுமதி இல்லை. இப்படி குறைந்தது ஆறு மாதம் வாகனம் ஓட்டி, அந்தக் கால கட்டத்தில் எந்த வாகன விதி மீறல்களிலும் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

Level 3: Full provisional license. Unsupervised driving at any time
இந்தக் கால கட்டத்திலும், வாகனம் ஓட்டும்போது அவர்களுக்கு செல்பேசி பயன்படுத்த அனுமதி இல்லை. இப்படி கடுமையான சட்டங்கள், விதிமுறைகள் உள்ளது. பள்ளியே இலவசமாக பயிற்சியும் கொடுக்கிறது அனைவருக்கும்.
**
மகன் இப்போது Level 3 நிலையில் உள்ளான். தனியாக செல்ல சட்டப்படி அனுமதியும் , எங்களின் அனுமதியும் உண்டு. 11 ஆம் வகுப்பில் இருந்து பகுதி நேர நீச்சல் பயிற்சியாளராகவும் வேலை செய்வதால், அவன் வேலைக்குச் செல்லவும் வாகனம்  தேவை. அன்று நண்பன் ஒருவனுடன் வந்தவன், இரண்டு சாலை சந்திப்பில், இடப்புறச் சாலைக்கு செல்ல எத்தனிக்கும் போது, நேராக வந்த ஒரு வாகனம் மோதிவிட்டது. என்ன நடந்தது என்று சிந்திப்பதற்குள், புகை மண்டலமாகி கார் நின்று விட்டது. 


**
மகளுக்கான இசைக்குழு மெதுவாகவே செல்கிறது. மகனைப் போல மகளிடம் அவ்வளவு ஆர்வம் இல்லை. இருந்தாலும், வாய்ப்பை வழங்க வேண்டியது நம் கடமை என்பதால், சின்ன குழுவை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இந்த முறை இன்னொரு நண்பரை  முன்னெடுக்கச் சொல்லி உள்ளோம். நான் பின்னிருந்து உதவுவதாக ஏற்பாடு. விபத்து நடந்த பொழுது அவர்களின் பயிற்சி வீட்டில் நடந்து கொன்டு இருந்தது. அவரும், என மனைவி மற்றும் மகளும் வீட்டில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு கிளம்பிவிட்டார்கள்.
**

கார் பலத்த சேதமடைந்து இருந்தது. மகனுக்கும், அவன் நண்பனுக்கும் எந்த சேதமும் இல்லை வெளிப்புறத்தில். இது போன்ற விபத்துகளில், சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்து , சில அறிகுறிகள் தெரியலாம். ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் ஒருமுறையும், இன்னொரு வாகன விபத்திலும் (என் மனைவி ஓட்டிய போது) ஒருமுறையும், என்று இதுவரை இரண்டு concussion (an injury to the brain that results in temporary loss of normal brain function) எற்பட்டுவிட்டிருந்தது.

இரண்டாவது முறை வந்தபோது, 11 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு எழுத முடியாமல், அவனுக்காக சிறப்பு சலுகைகளை பள்ளி வழங்கியது. தொடர்ந்து மூன்று மாத சிகிச்சைக்குப்பிறகு நன்றாக இருந்தவன், இதோ இன்று மிகப்பெரிய விபத்தில், பிழைத்து நிற்கிறான்.

சிறிது நேரம் அவனையே பார்த்துகொண்டிருந்தேன். அவனோ, எதுவும் நடவாத மாதிரி, அவன் நண்பர்களுக்கு செய்தி சொல்லிக் கொண்டு இருந்தான்.

**

அவசர உதவிக்கு வந்த காவலர் சென்ற பிறகு, சேதமுற்ற வாகனத்தை மெதுவாக உருட்டி அருகில் உள்ள ஒரு அடுக்ககத்தின் அருகே நிறுத்திவிட்டு, மனைவி குழைந்தைகளை வீட்டுக்கு அனுப்பினேன். உடைந்து நொறுங்கிப்போன‌ காரை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல AAA towing service ஐ அழைத்துவிட்டு காத்திருந்தேன் அந்த இரவில். ஆம் விபத்து நடந்த நேரம் இரவு 8 மணி இருக்கும். அது சார்ந்த வேலைகளை முடிக்க நேரம் ஆகிவிட்டது. அனைவரையும் அனுப்பிவிட்டு தனியே நின்று இருந்தேன். நின்றுவிட்ட காருடன். தோழன் போன்ற வாகனம் இது எனக்கு. சோ வென்று மழை பெய்தால் தேவலை என்று தோன்றியது அப்போது. 

**
என் நண்பர் ஒருவரின் மகனும், என் மகனும் ஒரே வகுப்பு , ஒரே வயது , ஒன்றாக வளர்ந்தவர்கள். என் மகன் விபத்து நடந்த இடத்தில் இருந்து, அவனது நண்பனுக்கு செய்தி அனுப்பி இருந்திருக்கிறான். அதைப் பார்த்து, எனக்கு உதவுவதற்காக, அவர் வீட்டில் இருந்து கிளம்பும்போது, அவசரத்தில் அவர் காரை அவர் வீட்டின் garage door ல் மோதி, கார் கதவு உடைந்து போனது. அந்த உடைந்த கதவுடன் எனக்கு உதவுவதற்காக அவர் வந்தார். 

அவரின் கதை கேட்டு நான் குற்றவுணர்வாய் உணர்ந்தேன்.
**


ஒரு வாரங்கள் ஓடியது காப்பீடு தொடர்பான பஞ்சாயத்துகளில். என் மகனுக்கும், அவனுடன் வந்த அவன் நண்பனுக்கும் எந்தவிதமான உள்காயங்களின் வலிகள் தெரியவில்லை. விபத்து குறித்து வாகனக் காப்பீடு நிறுவனத்தில் முறையிட்டுவிட்டு அடுத்து என்ன செய்வது என்று மருண்டு கொண்டு இருந்தேன். 

இரணடு வாகனங்களில், ஒன்று முன்புறம் உடைந்து ஓடிக்கொண்டுள்ளது. மற்ற ஒன்று இதோ நொறுங்கிவிட்டது.

பிள்ளைகளை அழைத்து, "அப்பா அம்மா இருக்கும்போது பிள்ளைகள் சாவது என்பது, உலகத்தில் நடக்கும் கொடுமைகளில் பெரிய கொடுமை. தயவு செய்து கவனமாக இருங்கள். வீடு, பொருள், பணம் குறித்தான கவலைகள் எனக்கு இல்லை. ஆனால், நீங்கள் இறந்துவிட்டாலோ அல்லது பெரிய அளவில் அடிபட்டு, நிரந்தரமாக படுத்த படுக்கையாகிவிட்டாலோ, அது போன்ற துன்பம் பெற்றோருக்கு கிடையாது. பெற்றோர்களுக்கு மிகுந்த வலியைக் கொடுக்கக்கூடியது அது . கவனமாக இருங்கள். வாழ்வதற்கு பிழைத்திருப்பதும் அவசியம்" என்று சொன்னேன்.
**

இதோ, எனது பயணங்களில் என் உடன் வந்த, என் குடும்பத்தைச் சுமந்த, என் மகனின் முதல் வாகனமாக இருந்த இந்த 2009 Camry அதன் வாழ்வை முடித்துக்கொண்டு , இறுதிப் பயணத்திற்கு தயாராகிவிட்டது. 

அன்று நடந்த விபத்தில், சில கோணங்கள் மாறியிருந்தால், என் மகனையும் இப்படி அனுப்பி வைத்துவிட்டு, மனங்கலங்கி நான் நின்றிருக்கக்கூடும் நான். நல்ல வேளை அவன் இருக்கிறான்.
**


இதற்கிடையில் நானும் அந்த நண்பரும் மேலும் இரண்டு வாகன விபத்துகளில் இருந்து மயிரிழையில் தப்பினோம். சாலை சந்திப்பில், எங்களின் பாதைக்கான போக்குவரத்து விளக்கு எரிவதற்கு காத்திருக்கும் போது, நின்று கொண்டிருந்த எங்கள் வாகனத்திற்கு முன் நடந்த ஒரு பெரிய விபத்தில், உருண்ட கார் ஒன்று, எங்கள் காரை மோதும் அள‌விற்கு வந்து, நின்று புகை கக்கி பாதி எரிந்து நின்றது. துடுக்குற்று, நாங்கள் நிதானத்திற்கு வருவதற்குள், சுற்றி இருந்த பிற வாகனங்களில் இருந்து பலர் இறங்கி வந்துவிட்டனர். 

அனைவரும் நலம்.

**
நவம்பரில் நான் அப்பலாச்சியன் மலையில் இருந்த போது என் அலுவலக மேலாளரின்( White) மகள் (முதுகலை மாணவி) இறந்துவிட்டாள். சென்ற‌ வாரம் அவரின் தந்தை இறந்துவிட்டார். இதோ நாளை சனிக்கிழமை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்கிறேன் பக்கத்து ஊருக்கு.


நாளை என்பது வெறும் கனவு.
**

விட்டுப்போய்விட்ட காரின் பழைய நினைவுகள்


எப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்
http://kalvetu.blogspot.com/2018/07/blog-post.html

கார், கதவு & Curve: கதவிற்குப் பின்னால் கவலை -1
http://kalvetu.blogspot.com/2018/05/curve-1.html

கார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்
http://kalvetu.blogspot.com/2018/05/curve.html

No comments:

Post a Comment