நியூயார்க் வயலின் பெண் தொடர்ச்சி
மாமாமீடியா அப்படீன்னு ஒன்னு இருக்கு. யாருக்காவது தெரியுமா? வீட்ல குழந்தைகளுக்குப் பொழுதுபோலேன்னா இங்க போய் கொஞ்சம் விளையாடச் சொல்லுங்க.என்னடா இந்த பலூன்காரன், இப்படி மாமாமீடியான்னு ஒரு இடத்துக்கு பிள்ளைகளப் போகச் சொல்றானேன்னு பயப்பட வேண்டாம்.இது குழந்தைகளுக்கான இணையத்தளம்.நான் கொஞ்சநாள் இங்க குப்பை கொட்டி இருக்கேன்.நியூயார்க்கின் இன்னொரு பரிணாமத்தை Soho ஏரியாவுலதான் பாக்கணும்.அப்படி ஒரு அரதப் பழசான கட்டடங்களைப் பார்க்கலாம்.இது கார்ப்போரேட் கலாச்சாரம் உடைய Manhattan பகுதிக்கு நேர் மாறான இடம். மாமாமீடியா புண்ணியத்தில்தான் எனக்கு இந்த ஏரியா அறிமுகமானது.இங்க நான் வேலை பார்த்த இந்த மாமாமீடியா ஒரு அசாதரணமான அலுவலகம்.வேலை செய்பவர்கள் ஒரு உன்னத மகிழ்வுணர்வோடு வேலை செய்து வந்தார்கள்.
அமெரிக்காவுல யாரும் "நீங்க எங்கே வேலை பாக்குறீங்க?"ன்னு கேட்க மாட்டாங்க. அவர்கள் கேட்கும் கேள்வி "What you do for living?" என்று அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். புரியுதா? அட மக்கா உங்களத்தேன் புரியுதா? இங்கே வாழ்வதும் (living) வாழ்வதற்காக செய்யும் வேலையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கப்படும். நம்மூர்மாதிரி வேலையே வாழ்க்கையாக இருக்க மாட்டார்கள். இங்கே பெரும்பாலானவர்களுக்கு வாழ்வது (வாழ்ககை) என்பது தனி. செய்யும் வேலை, வாழும் வாழ்க்கைக்கு பொருளீட்ட மட்டுமே. பலர் தனக்குப் பிடித்த மற்ற ஒரு தொழிலை, தங்களுக்கு அது பிடித்து இருக்கிறது என்பதற்காகவே செய்வார்கள்.இவ்வாறு செய்யப்படும் வேலை (?) அவர்களுக்கு மன மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் ஒரு நிறைவையும் தருகிறது
நான் பார்த்த வயலின் பெண்ணும் அப்படித்தான். அன்று அவரை நேரில் பார்த்தவுடன், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் நோக்கில், ஆர்வம் பொங்க நேரில் பேசிவிட முடிவெடுத்து அவரை அணுகினேன். நான் அவரிடம் அவரைப் பார்த்த இடங்கள் , அவரின் வயலின் வாசிக்கும் நேர்த்தி போன்ற பலவற்றை சுருக்கமாகச் சொல்லி அவரிடம் பேச வேண்டும் என்ற விருப்பத்தைச் சென்னேன். (யாரங்கே ஜொள்ளுன்னு சிரிக்கிறது?) அவர் முதலில் என்னை நம்பவில்லை.ஒரு கேள்விக்குறி கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தார், பின்பு எப்படியோ நம்பிகை வந்தவராக, என்னுடன் பேச சம்மதித்தார்.அன்று மதியம் Soho ஏரியாவில் உள்ள ஒரு ரோட்டோர கடையில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த மக்களின் வாழ்க்கை முறையே அலாதியானது.குளிர்காலத்தில் பனியுடன் மண்டை காஞ்சு(?) போன மக்கள் கோடை காலத்தை ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். என்னிக்காவது "sunny day" என்றால் மக்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். இந்த ரோட்டோர உணவுக்கடைகளில் இதற்காகவே வெளியே நல்ல வசதி செய்து கொடுப்பார்கள். திறந்த வெளியில் (நடைபாதையில்) அப்படியே பராக்கு பார்த்துக்கிட்டு சாப்பிடலாம்.Soho பகுதியில் இப்படி நிறைய கடைகள் இருக்கும்.எனக்கு நியூயார்க்கில் ரொம்பப் பிடித்த விசயம், காலை வேளையில் தள்ளுவண்டியில் விற்கும் "bagel" ம் காப்பியும்தான். சும்மா google ல்ல bagel ன்னு தேடிப்பாருங்க . நம்ம ஊர் இட்லி மாதிரி இந்த நியூயார்க் பேகல் பிரசித்தி பெற்றது. என்ன மொத மொத சாப்பிடறவங்களுக்கு இது ஏதோ வேகாத சப்பாத்தி மாவு போல இருக்கும். பல்லுல பூராம் ஒட்டிக்கும். ஆனா பிடிச்சுப்போச்சுன்னா நீங்க ரொம்ப பாக்கியவான். பின்ன ஒரு டாலர் கொடுத்தால் கிரீம் போட்ட பேகலும் ஒரு சுடச்சுட ஒர் காப்பியும் தருவார்கள்.பேகல் பிடித்த எனனைய மாதிரி ஆளுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
காலையில ஒரு பேகல், காப்பி மத்தியானம் இப்படி ஏதேனும் ஒரு பிளாட்பாரக் கடையில் பாதி வெந்தும் வேகாத பீன்ஸ், கொஞ்சம் Rajma (red kidney bean) கலந்த சோறு சாப்பிட்டால் ஆண்டி கூட ஒரு நாளை சிக்கனமாக ஓட்டிவிடலாம் இங்கே.அன்றைக்கும் அப்படியே நான் ஒரு சாப்பாட்டை சொல்லிவிட்டு அவருடன் பேச ஆரம்பித்தேன். அவர் bake செய்யப்பட்ட உருளைக்கிழங்கும், கீரைகள் நிறைந்த காய்கறிக் கலவைவையும் (salad) வாங்கிக் கொண்டார்.எங்கள் பேச்சு எங்கெங்கோ சுத்திவிட்டு கடைசியில் அவரின் வயலின் விசயத்தில் வந்து நின்றது.
அவர் சொன்ன தவல்கள் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.அறிவியலில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்.சில காலம் ஒரு பெரிய நிறுவனத்தில், பெரிய அதிகாரம் வாய்ந்த பதவியில் இருந்தவர்.இவை எல்லாத்தையும் உதறிவிட்டு பகுதி நேர வேலையாக தாபால் நிலையத்தில் வேலை செய்கிறார். காரணம் கேட்டால். "எனக்கு இது மகிழ்வைத் தருகிறது" என்கிறார். முன்னர் இருந்த வேலையில் அதிக வேலைப்பளு வாழ்க்கையை வாழ முடியவில்லை, என்றும் இப்போது தன்னால் காலையில் மனதுக்குப் பிடித்த வயலின் வாசிக்கவும்,மதியம் தபால் நிலையத்தில் வேலை செய்யவும்,இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து எங்காவது சுற்றுவும் முடிகிறது என்கிறார்.வருடம் ஒரு முறை ஏதேனும் ஒரு புதிய நாட்டுக்குச் செல்கிறார்.அதற்காக எவ்வளவு பணம் தேவையோ அதை தனது கடன் அட்டை மூலம் செலவு செய்துவிட்டு அதை திருப்பிச் செலுத்தும் வரை மட்டும் இரண்டு வேலை பார்க்கிறார்.
இங்கே ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலை பார்ப்பது மிகச் சாதாரணம்.இவர் தனக்கு எது தேவை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். அதற்காக மட்டுமே உழைக்கிறார். அதிகப் பணம் சேர்க்கும் ஆர்வமோ , பணம் சம்பந்த்ப்பட்ட கனவுகளோ கிடையாது. அவரைப் பார்த்தால் மிகவும் பொறாமையாக இருந்தது எனக்கு. பணத்திற்காக எது வேண்டுமானலும் செய்பவர்கள் மத்தியில், அதுவும் உலகின் பொருளாதாரத் தலை நகரில் இப்படியும் சிலர்.இவ்வளவுக்கும் இடையில் இவர் ஒரு முதியோர் இல்லத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்கிறார்.சம்பளம் கிடையாது.எதையும் எதிர்பார்க்காமல் ஒரு தவம் போல் செய்து வருகிறார்.அவரிடம் எனக்கு இருந்த பிரமிப்பு மிகவும் கூடியது. என்னிடம் அவர் இந்தியா பற்றி பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அதற்குப்பிறகு நான் அவரை பலமுறை அதே பாதாள இரயில் பாதையில் பார்த்து இருக்கிறேன். இப்போதெல்லாம் ஒரு சிநேகப் புன்னகையையுடன் என்னைப்பார்த்து வயலின் வாசிப்பிற்கு இடையேயும் தலையசைப்பார்.எனக்கும் அவர் போல மனமகிழ்வுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.நம்ம குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கிறகாரியமா? மாமா மீடியாவில் எனக்கு இருந்த வேலை ஒப்பந்தம் முடிந்து (அதாவது சீட்டைக் கிழித்து) அனுப்பிவிட்டார்கள்.
அதற்கு பிறகு வேலை கிடைத்த இடம் வேறு மாநிலம்.மூட்டை முடிச்சுகளோடு வீட்டைக் காலி செய்து வடக்கு கரோலைனா வந்து விட்டோம்.இருந்தாலும் எனக்கு நியூயார்க் பாதாள இரயில் பாதையில் அவரைப்போல பொழுது போக்கும் ஆசை விடவே இல்லை.என்ன செய்யலாம் என்று யோசித்த போது "saxophone" வாசிக்கலாம் என்று தோன்றியது.எனக்கு ரொம்ப காலமாக இந்த "saxophone" ல் ஒரு ஆசை. அதன் பளப்பளா கலரும் அதன் வடிவமும் ஒரு கவர்ச்சியாக இருக்கும்.என்ன கற்றுக் கொள்ளலாம் என்று குழம்பிய போது இந்த "saxophone" கனவில் வந்து ஆசை காட்டினார்.
நானும் இந்த "saxophone" வுடன் என்னை நியூயார்க் பாதாள இரயில் பாதையில் கற்பனை செய்து கொண்டேன்.எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை.உடனேயே ஒரு "saxophone" குருவைத் தேடி பாடம் படிக்க இயலவில்லை. நம்ம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? காலம் செல்லச் செல்ல நான் இந்தக் கனவையே மறந்து விட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென்று அந்தக் கனவு நனவாகத் தொடங்கியது.எனக்கும் ஒரு குரு கிடைத்தார்.
தொடரும்.....
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************