Wednesday, February 06, 2013

பதிவர் டோண்டு மரணம்

"ரணத்தை நோக்கியே வாழ்க்கை பயணிக்கிறது, வழியில் அது வாழ்ந்து செல்கிறது" என்றால் மிகையாகாது. ஒவ்வோரு இரவு உறக்கமும், காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையில்தான் அணைக்கிறது. நாம் எழாமல் போகும் நாட்களில் நமக்காக அழ எத்தனை பேரைப் பெற்று இருக்கிறோம் என்பதில்தான் வாழ்ந்த வாழ்வின் அர்த்தம் உள்ளது.  இதோ இரவில் தூங்கிய ஒரு பதிவர் இன்று எழுந்திருக்கவில்லை. டோண்டு என்ற பதிவர் இறந்துவிட்டார். இனிமேல் அவர் பதிவுகள் எழுதப் போவது இல்லை என்ற துயரமான செய்தியுடன் இன்றைய பொழுது தொடங்குகிறது எனக்கு.

பதிவர் டோண்டு இராகவன் அவர்கள் (http://dondu.blogspot.com), எனக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கொண்டவர். அவரின் அதீத‌ சாதி,மதப் பற்றும், அதை அவர் வெளிக்காட்டிய விதமும், என்னை அவரிடம் இருந்து விலக்கியே வைத்து இருந்தது.  ஆரம்ப காலங்களில் அவரின் பதிவுகளில் உரையாடி இருந்தாலும்,காலப்போக்கில் நான் அவரை ஒதுக்கும் அளவிற்கே அவரின் சாதிப்பற்று இருந்தது. பலமுறை அவரை சந்திக்க எனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், பலமுறை அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தும், நான் அதை ஒதுக்கிவிட்டேன். "இவரிடம் போய் நேரில் பேச வேண்டுமா?" என்று இருந்துவிட்டேன். இன்று பேச நினைத்தாலும் அவர் இல்லை. ஆரம்பகால பதிவர் சந்திப்புகளில் அவர் அடிக்கடி கலந்து கொள்வார். அது போல , அவர் தலைமையில் நடக்கும் "உட்லேண்ட்ஸ் ஓட்டல் போண்டா சந்திப்புகள்" பிரசித்தி பெற்றவை. கருத்து வேறுபாடுகள் தாண்டி அவர் பலரிடம் நன்றாக பழகிவந்துள்ளார். எனது நண்பர் ஒருவரிடம் "எப்படி இவரிடம் எல்லாம் நட்பு வைத்துக்கொள்கிறீர்கள்?" என்று கூட கேட்டதுண்டு.

 கருத்து வேறுபாடுகளால், சந்திக்க விரும்பாதவர்களைக்கூட சந்தித்துவிடவேண்டும் , பேசிவிட வேண்டும் என்று இந்த ஆங்கில புத்தாண்டில் பலரை அழைத்துப் பேசிவிட்டேன் உறவுகளில். டோண்டு இன்னும் சில காலம் இருந்திருந்தால் அவரையும் நான் சந்தித்து இருப்பேன். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் நான். நீங்கள்?

அடுத்தவர்களின் நினைவில் வாழ்வதுதான் சொர்க்கம் அதுபோல உங்கள் நினைவில் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பதில் பல சுகங்களும் சுமைகளும் உள்ளது. பதிவர் டோண்டு இராகவன் பதிவர்கள் பலராலும் இன்று நினைக்கப்படுகிறார். ஒத்த கருத்தோ மாற்று கருத்தோ, அவர் பலரை ஆச்சர்யப்படுத்தி உள்ளார். பிடிவாதக்காரராகவும்,கடும் உழைப்பாளியாகவும்,சாதி/மதப் பிரியராகவும் அறியப்பட்ட இவர் இன்று நம்முடன் இல்லை. ஒரு சக பதிவராக பலவேறு கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் , அவர் இல்லாத வெறுமை என்னை அதிர்ச்சி கொள்ளச் செய்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


Feb 06,2013