சினிமாவில் டாக்டராக நடிப்பவரைப் பார்த்து "நீ டாக்டருக்கு படித்துள்ளாயா? என்ன தகுதியின் அடிப்படையில் டாக்டராக நடிக்கிறாய்?" என்று யாரும் கேட்பது இல்லை. மகாபாரதக் கதை ரீமேக் செய்பவரைப் பார்த்து "நீ மகாபரதப்போரில் பங்கு கொண்டாயா? குந்திக்கு போத்தீசில் சேலை வாங்கினாயா? என்ன தகுதியில் போரைப் பற்றிப் புனைகிறாய்?" என்று கேட்பது இல்லை. ஆனால் கதைப் பொத்தகம் எழுதும் ஒருவரின் அன்றாட செயல்பாட்டை, அவரின் பதிவுகள் வழியே அவர் அறியத்தருவதை வைத்து விமர்சித்தால், "நீ அவரின் கதைப் புத்தகம் படி" என்று சொல்லும் மடையர்கள் உள்ளார்கள் இங்கே. வங்கி ஊழியர் பணத்தை கையாளும் விதத்தைப் பற்றி வக்கிரமாக விமர்சிக்கும்போது , அல்லது தொப்பி&திலகம் எழுதி மறைந்து கொள்ளும்போது "நீ சினிமாவில் நடித்துள்ளாயா? உனக்கு என்ன தகுதி உள்ளது?" என்று எந்த முட்டாள்கள்களும் கேட்பது இல்லை.
தமிழ் இணையவெளியில் முதலில் வந்தவர்களில் பெரும்பாலனவர்கள் வாரப்பத்திரிக்கை முதல் பெத்தப் பெரிய கதை பொத்தகம் வரை படித்தவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு பேச எதுவும் இல்லாத காரணத்தால், அடுத்தவர் எழுதி , இவர்களின் சன்னலில் வீசப்பட்ட ரொட்டித்துண்டுகளை வைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்தவன் அவன் பார்வையில் வடிக்கும் செய்தியின் வழியாக, இவர்களுக்கு வரும் செய்திகள், உணர்வுகள் மட்டுமே இவர்களுக்கு பெரிதாக இருந்தது மட்டும் அல்ல , அதுவே இறுதி என்றும் நம்பினார்கள்.
இவர்களுக்கான கதவை திறந்துகொண்டு , தனக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு சென்று சுயமாக அறிய எந்த முயற்சியும் செய்யாதவர்களாக மாறிப்போனார்கள். அலங்காநல்லூரில் பிறந்து அந்த வாடிவாசலில் ஏறிக்குதித்த என்னிடமே , அலங்காநல்லூர் சல்லிகட்டு பற்றி அறிய யாரோ ஒருவர் எழுதிய "வாடிவாசல்" கதைப் புத்தகம் படி என்று சொல்லும் அளவிற்கு தங்களை இருத்திக்கொண்டார்கள்.
மதவாதிகள் உலக விசயங்கள் அனைத்திற்கும் விடையை அவர்களின் மதப்புத்தகத்தில் தேடுவதுபோல, இவர்கள், தங்களின் பீடாதிபதிகளின் புத்தகங்களில் எல்லாவற்றுக்குமான விடைகளைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். கதையும் கதை சார்ந்த வாசிப்பு அதையொட்டிய இரசிக சபை என்று இதை ஒரு மதமாக்கி வருகிறார்கள்.
புத்தகம் ஒரு சன்னல். ஆனால் உங்களுக்கான கதவை நீங்கள்தான் திறக்க வேண்டும். எல்லாவற்றையும் நேரடி அனுபவத்தில் அறியமுடியாது. அப்படியான வேளையில் புத்தகங்கள்தான் சன்னல். ஆனால் சன்னல்வழி பிம்பத்திலேயே தங்கிவிடுதல் என்பது நோய்.
தமிழில் "படைப்பு" (Creative work) , "படைப்பாளி" (creative worker) என்ற வார்த்தைகளுக்கு, தாயத்து கட்டி, மந்திரம் ஓதி அதைப் புனிதமாக உருவேற்றி , கதைப் பொத்தகம் எழுதும் தொழிலுக்கு தாலியாக கட்டிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.
கதை எழுதுபவன் மட்டுமே படைப்பாளி , மற்ற தொழில்கள் செய்பவன் படைப்பாளியாக இருந்துவிடவே முடியாது என்று நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். "மல்ட்டி லெவல்" மார்க்கெட்டிங்கில் இருக்கும் பதவிகள் போல , இவர்களின் வாசகப் பதவியை அடைகிறார்கள். அதைப் புனிதம் என்றும் மனதார நம்புகிறார்கள். "சினிமா என்ற படைப்பின் இரசிகனும் , கதை என்ற படைப்பின் இரசிகனும் , படைப்பு & இரசிகன் என்ற தளத்தில் ஒன்றே" என்றால், ஏதோ மேன்மக்களை தீண்டத்தகாதவர்களோடு ஒப்பீடு செய்துவிட்டதுபோல பதறுகிறார்கள்.
இவர்களின் புனித வார்த்தையான படைப்பு /படைப்பாளி என்றால் என்ன என்று பார்ப்போம்.
சின்னக்குழந்தையின் கிறுக்கல்கள்கூட Creative (படைப்பு) என்ற வகையில்தன் வரும். கதைபொத்தக் தொழிலும் Creative (படைப்பு) தன்மை உள்ளது. கதைபொத்தம் எழுதுபவர்கள் மட்டுமே Creative (படைப்பு) தன்மையுள்ளவர்கள் என்று இவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். ஓவியம், நாடகம், சிற்பம், பேச்சு கட்டடக்கலை, கோலம் போடுதல் என்று எல்லா செயல்பாடுகளிலும் Creative (படைப்பு) தன்மை உள்ளது. புரோட்டா சுற்றும் 100 பேரை எடுத்துக்கொண்டால் , ஒவ்வொருவரின் கை லாகவமும் ஒருமாதிரி இருக்கும். அந்த தொழிலிலும் படைப்பு வாய்ப்பு (creative scope ) உள்ளது என்பதை, கதைத் தொழிலில் உள்ளவர்கள் ஏற்கவே மறுக்கிறார்கள். எழுதுவதை வேலை (work), தொழில் (job/business) , பொழுது போக்கு (hobby ) என்று எந்த வகைப்பாட்டில் வைத்தாலும் , அதைப்போல மற்ற செயல்களுக்கும் படைப்பு வாய்ப்பு (creative scope ) இருக்கலாம் என்பதை மனதார மறுக்கிறார்கள். இது ஒரு மன நோய்.
ஒவ்வொரு தொழிலும் அந்த தொழிலைச் செய்பவருக்கு அந்த தளத்திற்கான படைப்பு வாய்ப்பு (creative scope ) உள்ளது. இதுதான் உண்மை. அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார்கள் , அதில் இருந்து சமூகத்திற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது அடுத்த கட்டம். உடனே பிக்பாக்கெட்டும் தொழில்தானேஎன்றால் "ஆம் தொழில்தான்". ஆனால் , அது சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதில் அடுத்த கட்டம் உள்ளது. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் , அந்த சமூகத்தில் அதற்கான தடத்தை விட்டுச் செல்கிறது. எது சரி? எது தவறு? எது அளவில் சிறந்தது? என்பது எல்லாம், அடுத்த கட்ட அளவீடுகள்.
படைப்பு = Creation
படைப்புத்தன்மை = Creativeness
எழுத்து = Writing
எழுத்தாளுமை = Proficiency in writing.
ஒவ்வொரு துறையிலும் ஆளுமைகள் (professional and commanding) ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படைப்பு/ஆளுமை என்பதை ஒரு துறைக்கும் மட்டுமான புனித பரிவட்டமாக மாற்றிவிட்டார்கள் இந்த தமிழ் எழுத்துவேலை செய்பவர்களும் , அவர்களின் இரசிகர்களும்.
இணையத்தில் இவர்கள் அரசியல் அடியாட்கள்போல , அவர்களுக்கான ஒரு அடியாட்கள் கூட்டத்தையும் வைத்துள்ளார்கள். இவர்களை எதிர்த்து ஏதேனும் சொல்லிவிட்டால் "நீ முட்டாள். கதை படி " என்ற மந்திரத்தை எடுத்து வீசுவார்கள்.
இப்படியான ஒரு கூட்டத்தை செயமோகன் என்பவர் இணையத்தில் வளர்த்து வருகிறார். வருடம் ஒரு முறை ஊட்டியில் தங்கி இலக்கியம் பேசுவது என்று காலம் தள்ளிய இவர்கள், இவருக்கு மத்திய அரசின் விருது வேண்டி நடிகர்களின் சிபாரிக்கடிதங்களை பெற்றவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள் இவரின் எதிர் முகாம் மக்கள். வெகுசன அங்கீகார மோகம் தலைக்கேறிய பித்தசபை இது. இறுதியில் இவர்களே "விசுணுபுர அவார்டு கம்பெனி" ஒன்றை ஆரம்பித்தும் விட்டார்கள். இது எல்லாம் அவர்களின் தொழில் சார்ந்தது , இருந்துவிட்டும் போகட்டும்.
இவர்களில் பலர் வேத (வர்ணாசிரம) விரும்பிகளாகவும், இந்துத்துவா கட்சி சார்பானவர்களாகவும் இருப்பதில் வியப்பு இல்லை. ஆரம்பத்தில் இருந்து நான் இவரை, வர்ணாசிரமப் பற்றாளராக , இந்துத்துவா இயக்கங்களின் இலக்கிய அதிகாரகமாகவே அறிந்து வந்துள்ளேன். அதற்கு அவரே இன்று சாட்சியமும் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் மறைந்த அசோகமித்திரன் என்ற எழுத்தாளரை ஒட்டி இவர் சொல்லிய கருத்துகள் பொய்யா இல்லையா என்பது கதை பொத்தக தொழிற்சாலைப் பணியாளர்களின் பிரச்சனை. ஆனால் அந்த விசயத்தைப் பற்றிப் பேசும்போது, இவர் எப்படி சாதியத்தைக் கையாள்கிறார் என்பது இவரைக் காட்டிக்கொடுக்கிறது. http://www.jeyamohan.in/96793#.WNkeP1PytyE
கருத்து, செய்தி என்ற அளவில் மாறுபடுகிறார்கள் என்பதற்காக, தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் " அந்த எழுத்தாளரின் சாதிக்காகப் பேசுபவர்கள்" என்று சொல்லுகிறார். அரசியல்வாதிகளில் பலர் இப்படி உள்ளார்கள். ஊரையே அடித்து உலையில் போடும்போது எதையும் சொல்லாதவர்கள், ஏதாவாது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் "நான் இன்ன சாதி என்பதால் என்னை இபப்டிச் செய்கிறார்கள். மக்களே பாருங்கள்" என்று கதறுவார்கள். இந்த நபர் இன்று செய்வதும் அப்படித்தான் உள்ளது.
இவருக்கு கப்பம் கட்டாவிட்டால் கடை நடத்த விடமாட்டார் போல. உயிர்க் காப்பீடு எடுப்பது போல தமிழகத்தில் எழுத்து தொழிலில் இருப்பவர்கள்,இவரிடம் காப்பீடு எடுத்து , அதற்கான பிரீமியத்தை கட்டிவிடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் மறைந்த சிலமணி நேரத்தில், எதையாவது எழுதி, உங்களின் நண்பர்களை அல்லது குடும்பத்தை கேலிக்குரியவர்களாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்.
சமீபத்திய நீயா நாயா நிகழ்ச்சியில் (March 19, 2017) இருந்து எனக்கு தெரிவது
இது காசுக்காக நடக்கும் தொலைக்காட்சியின் சம்பாதிக்கும் வேலை
வேண்டும் என்றே இவர்கள் இப்படி திரைக்கதை தயாரித்து நடிக்கச் சொல்கிறார்கள்.
அல்லது மதில்மேல் இருக்கும் அரைகுறைகளை இப்படி தள்ளிவிட்டு விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாரிக்கிறார்கள்.
அல்லது உண்மையில் இப்படி ஒரு தறுதலைச் சமுதாயம் வளர்ந்து வருகிறது
இருப்பாங்களோ இருக்க மாட்டாங்களோ (பெற்றோர்) சாகுறதுக்குள்ள சொத்தை மாத்திக்கொடுத்தா நல்லது. பத்திரம் பதிவுன்னு அலைச்சல் இல்லை.
திருமணம் என்பது மண வாழ்க்கையின் தொடக்கம் அல்ல. அடுத்தவன் வயுறு எரிய வைக்கும் ஆடம்பரம்.
அதுதான் பொம்பளப்பிள்ளை பொறந்துருக்குல்ல ஏன் சேத்து வைக்கைல. அது உன் குற்றம் இப்ப கடன் வாங்கு.
எங்க அப்பா நல்ல வாழ்க்கை வாழவே இல்லை. இன்றும் கடின உழைப்பு உழைக்கிறார். அது போல என் கணவன் கசுடப்படக்கூடாது. அதனால என் அப்பா இன்னும் நாசமாப் போனாலும் எனக்கு 50 பவுன் போட வேண்டும்.
சாகுறவரை பென்சன் வருது, செஞ்சா என்ன குறைஞ்சிருவியா நீயி? ( பெற்றோரைப் பார்த்து)
அப்பா கார் ஓட்டி காசு சம்பாதித்தாலும், கடன்பட்டாவது எனக்கு கார் வாங்கிக் கொடு. என்ன குறைஞ்சா போவாங்க. இசுசேட்டட்சு இருக்கில்ல.
பெற்றோருக்கான கேள்வி:
"அண்ணனுக்கு கல்விக்கு காசு உனக்கு சீர் வரிசைக்கு காசு" என்ற ஒற்றை நிலைப்பாட்டில் இவர்களை பிரியாணிக்கு வளர்க்கப்படும் ஆடு போல, இந்த நூற்றாண்டிலுமா நீங்கள் வளர்க்கிறீர்கள்?
தறுதலைப் பிள்ளைகளுக்கு கேள்வி:
திருமணம் என்பது இணைந்து வாழும் வாழ்க்கை. நீங்கள் அதைச் சுற்றியுள்ள சடங்குகளில்தான் இன்னும் இருக்கிறீர்கள். உங்களின் கல்வி உங்களை வேற்று மொழியில் இருந்து ஆடம்பரத்தை அறிந்து கொள்ள கற்றுத்தந்துள்ளதே தவிர வேறு எதையும் அல்ல.
நான் தெரிந்து கொண்ட வார்த்தைகள்:
சங்கீத் , மெகந்தி, லெகங்கா, சிரிவாரி மண்டபம், காசா கிராண்டே வில்லா.
என்ன கருமங்கள் இது? இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?
இன்றைய திருமணங்களில் ஆண்களும் சிகினா வேலைப்பாடுகள் கொண்ட சுரிதார்களை அணிய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு "குருதா குருமா" என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளார்கள்.
முட்டாள்களே, 5 பேரை வைத்து டவுசர் போட்ட மாப்பிள்ளையுடன் பீச்சில் எளிய முறையில் இன்றும் திருமணங்கள் நடக்கிறது அம்பேரிக்காவில்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் இன்றும் எளிய திருமணங்கள் நடக்கிறது.
இந்த தறுதலைப் பெண்களை இப்படி ஆக்கியது சம்முவம் என்று சொல்லிவிடாதீர்கள். இதே சம்முவத்தில்தான் நல்ல பெண்களும் உள்ளார்கள். தறுதலைகளாக வளர்த்த பெற்றோர்கள் முக்கிய குற்றவாளிகள் இதில்.
ஒரு உரையாடலில் இணைய நண்பர் , "இணையம் வழியாக நாம் காணும் அல்லது காண வைக்கப்படும் 'ஐரோம் சர்மிளா' என்ற கட்டமைப்பு ,பொய்யாக இருந்தால்?" என்று கேட்டிருந்தார். மேலும் ஒரு படி மேலே போய், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் , சமீபத்தில் மறைந்த செயலலிதா அவர்களை, ஊடகம் வழியாக அறியும் மற்ற மாநிலத்துக்காரர்களின் நிலையோடு ஒப்பிட்டுக் கேட்டு இருந்தார். இது தேவையான , மிகவும் முக்கியமான ஒப்பீடு. பல நேரம் நாம் மறந்துவிடும் ஒன்று.
இன்று எதைப் படிக்க வேண்டும், காலை இணையத்தில் எந்த உரையாடல் முன்னிலை வகுக்கவேண்டும் என்று தீர்மானிப்பது நாம் அல்ல. பல நாட்களில் அன்றைய பொழுதை ஆரம்பிக்கும்போது , நான் ஒரு கருத்து குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருப்பேன். முந்திய நாள் இரவே அல்லது சில நாட்களுக்கு முன்னரே திட்டம் போட்ட ஒன்றாக இருக்கும். காலையில் இணையம் வந்தவுடன் , ஏற்கனவே பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் செய்தியில் அடித்துச் செல்லப்பட்டு , பேச வந்ததை விடுத்து , நானும் பெரும்பான்மை பேசிக்கொண்டு இருக்கும் ஒரு செய்தியில், கருத்து சொல்லி நான் திட்டமிட்ட செயல் தள்ளிப்போகும். இன்று பல அமரிக்க Talk Show க்கள் அதிபர் 'ட்ரம்ப்' செய்திகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறது.
நாம் என்ன பேச வேண்டும், யாரைப் பற்றிப் பேசவேண்டும் என்று ஒரு திட்டவட்டமான பட்டியலைக் கொடுத்து, அதை மட்டுமே பேச வைத்து , அதைச் சுற்றி விவாதங்கள் அமைவதில், சிந்திக்க வைப்பதில் ஊடகம் வெகு நேர்த்தியாகச் செயல்படுகிறது. ஊடகங்களின் நோக்கம் வணிகம் ,பணம் ஈட்டல். அதுதாண்டி ஏதும் இல்லை. பணம் வந்தபிறகு ஏதாவது செய்து Charity Jeep ல் ஏறிக்கொள்வார்கள். மற்றபடி அவர்களின் பயணம் பணம் நோக்கியதாக இருக்கும். இது வணிக நியதிப்படி தவறல்ல. நான், நீங்கள் எல்லாரும் பொருள் ஈட்டீ பிழைத்திருக்கிறோம். நமக்கான நியாயங்கள் நமக்கு, அவர்களுக்கான நியாயங்கள் அவர்களுக்கு. அவர்கள் வணிகர்கள், வணிகம் செய்ய இருக்கிறார்கள் என்ற புரிதலுடன் அவர்களைத் தொடர்வது நல்லது.
வாரமலர் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வாரம்தோறும் 'இளவரசி டயானா' அவர்களின் ஒரு படத்தைப் போட்டு ஏதேனும் ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கும். அதைப் படிக்கும்போதும் , அந்தப் படத்தைப் பார்க்கும் போதும் , என் மனத்தில் இங்கிலாந்து மற்றும் டயானாவின் வாழ்க்கை இப்படித்தான் என்ற ஒரு பிம்பத்தை நான் தீட்டிக்கொண்டேன். ஒவ்வொரு வாரமும் , வாரமலர் எனக்கு ஒரு செங்கலை எடுத்துக்கொடுத்து, டயானா பற்றிய மிம்பத்தை எனக்குள் மேலும் மேலும் கட்டிக்கொள்ள உதவி செய்யும். வாரமலர் என்ற வட்டத்தை தாண்டியபிறகு, எனக்கு வந்து சேர்ந்த செய்திகள், இளவரசி டயானா குறித்து வேறு செய்திகளைச் சொல்லி, என் பழயை புரிதல்களை மாற்றிக்கொள்ள உதவியது.
பலருக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்த ஒரு பிம்பம் இருக்கும். அந்த பிம்பம் நீங்கள் படித்த, அறிந்த செய்திகளின் செங்கலில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்கும். நானும் அவரை நேரில் சந்தித்தது இல்லை. அம்மக்களைப் போல நான் போர்கால சூழல்களின் அவலங்களை , இனக்கொடுமைகளை அனுபவித்ததும் இல்லை. எல்லாம் செவிவழிச் செய்தி. திண்டுக்கல்லில் படித்துக்கொண்டு இருந்தபோது, எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்த ஒரு மாணவன் மூலம் எனக்கு வேறு சில பிம்பங்கள் கிடைத்தது.
அப்போது நான் துக்ளக்கும் , அமுதசுரபியும், மஞ்சரியும், வண்ணத்திரையும்,அம்புலிமாமவும் , யுனஃச்கோ கூரியரும் (The UNESCO Courier) , உண்மை இதழும் கலந்துகட்டி வாசித்துக்கொண்டிருந்தேன். என்னை வந்து சேரும் செய்திகள் திக்குமுக்காடச் செய்தாலும் , பிரித்தறிய என்னால் இயலவில்லை. ஆனால் எல்லாவற்றையும் மனதில் சேகரித்து வைத்துக்கொண்டேன். ஒருவேளை பின்னாட்களில் அசை போட உதவலாம் என்று. ஆம் உதவியது. இன்றுவரை உதவுகிறது
துக்ளக் மட்டும் படித்திருந்தால் அல்லது 'இந்தியா டுடே'யில் அப்போது வந்த ஈழம் குறித்த கட்டுரைகள் மட்டும் படித்து இருந்தால் அல்லது இவை ஏதும் இல்லாமல் என்னுடன் படித்த அந்த ஈழத்து மாணவனிடம் மட்டும் பழகி இருந்தால் இன்று எனக்கும் புரிதல் இல்லாமலே போய் இருக்கும் ஈழ விசயங்களில். என் புரிதல் சரியா? தவறா? என்று சொல்லமுடியாது. ஆனால், மையத்தில் இருந்தும் , விளிம்பில் இருந்தும் பார்த்து, அதன் மூலம் நான் எற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள் தாண்டி, எனக்கு வாய்க்கப்பெறாத வேறு சில கோணங்களும் இருக்கலாம், என்று ஒரு புரிதல் கைவரப்பெற்றது.
'யாசர் அராபத்' உங்களுக்கு தெரிந்து இருக்கும். எனக்கு கிடைத்த முதல்பக்க செய்திகள் எல்லாம், அவர் எப்போதும் ஏதேனும் ஒரு தலைவரைச் சந்தித்துக்கொண்டே இருப்பார் என்பதுபோலவே இருக்கும். யார் இவர்? ஏன் இப்படி தலைவர்களைப் போய் சந்திக்கிறார்? என்று மேற்கொண்டு தேடல் செய்ய அது உதவியது என்பது உண்மை. நான் வெறுமனே வாரமலர் அல்லது பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளோடு கடந்து போயிருந்தால், இன்று என்னுள் இருக்கும் டயானா, பிரபாகரன் மற்றும் யாசர் அராபத்தின் பிம்பங்கள் அந்த பத்திரிக்கைகள் சொன்ன பிம்பமாகவே இருந்து இருக்கும். இந்த பிம்பங்கள் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , உங்கள் மூளையின் ஓரத்தில் இருக்கும். யாராவது இது பற்றிக்கேட்டால், உங்களுக்குத் தெரிந்த செய்தியில் இருந்து சிலவற்றைச் சொல்வீர்கள்.
நமக்கு வாய்த்த சன்னல்களின் வழியே, நமக்குத் தெரிந்த தகவல்கள் அது அவ்வளவே. இது யாரின் குற்றமோ அல்லது குறையோ அல்ல. சன்னல்களில் நீள அகலங்கள் , மேலும் சன்னல் தாண்டி நமக்கான கதவை நாமே திறந்துகொண்டு , எவ்வளவு தூரம் பயணப்பட தயாராகிறோம் என்பதைப் பொறுத்து நம்மிடம் உள்ள தகவல்கள் மாறும்.
'தலாய் லாமா' குறித்து இப்படியான ஒரு பிம்பம் உங்களுக்கு இருக்கலாம்.அமெரிக்காவில் மக்களால் பாராட்டப்படும் சிலரில் 6 வது ( Gallup Poll ) இடத்தில் இருப்பவர் 'தலாய் லாமா'. John Oliver - ன் நிகழ்ச்சியின் சார்பாக சிலரை "தலாய் லாமா யார்?" என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்கள் " அவர் நல்லவர், வல்லவர், வழிகாட்டி , நல்ல கருத்துகளைச் சொல்பவர் , அமைதியானவர்" என்று சொல்கிறார்கள். இங்கே இவர்கள் ஊடகம் தலைப்புச் செய்திகள் வழியாக அவர்களுக்கு கொடுத்திருந்த ஒன்றைச் சொல்கிறார்கள். அடுத்த கேள்வியாக "சரி , தலாய் லாமா என்னதான் செய்கிறார்?" என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். பிறகு சிந்தித்து , "இந்துக் கடவுள் ..புத்தக் கடவுள்" என்று யூகம் செய்கிறார்கள்.
இப்படித்தான் , நமது சன்னல்களின் வழியாக வந்துசேரும் தலைப்புச் செய்திகள் சில பிம்பங்களை நம் மூளையில் விட்டுச்செல்லும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். எது தலைப்புச் செய்தியாக வேண்டும், எப்போது அது பேசப்படவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வது இல்லை. ஊடகங்கள் முடிவு செய்கிறது.
செயலலிதா அவர்கள் இறந்தவுடன் , அவர் நல்லவர் வல்லவர் , இரும்புப் பெண்மணி, பெண்கள்குல வழிகாட்டி, ரோல்மாடல் என்று பல பெண்கள் இங்கே பேசினார்கள். இவர்கள் அனைவரும் செயலலிதாவால் பலகாலம் ஆளப்பட்டவர்கள். வாக்களித்தவர்கள். ஒப்பீட்டளவில், தமிழர்கள் 'யாசர் அராபத்', 'இளவரசி டயானா', 'பிரபாகரன்' ஆகியோரைவிட 'செயலலிதா 'அவர்களின் செயல்களை நன்கு அறிந்தவர்கள். ஆனால் அவர்களே ஒரு அதிர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டார்கள். தர்மபுரி பேருந்து எரிப்பு , ஆசிட் வீச்சு, ஆடிட்டர் கலவரம் , அமிர்தாஞ்சன் கலவரம் என்று செய்திகள் வந்ததையும் தாண்டி , இவர்கள் மனதில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால் அந்த ஊடகங்களின் வலிமையை என்ன சொல்வது?
ஒரு மனிதரை அல்லது தலைவரை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது நேர்த்தியான திரைக்கதை எழுதுவதை விடவும் மேலான சவாலான ஒன்று. ஒரு எடுத்துக்காட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு அப்படியான ஒரு நல்ல திரைக்கதை அமைப்பாளர்கள் வாய்த்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.
ஐரோம் சர்மிளா அவர்கள் இப்படி தெளிவான திரைக்கதையுடன் , நமது சராசரி ஊடகம் உருவாக்கிய பிம்பமா?
---------------------------------------------
இல்லை நிச்சயம் இல்லை. இவர் ஊடகங்களால் , எதை நாம் ஊடகங்கள் என்று நம்பிக்கொண்டுள்ளோமோ , எது நமது சன்னல்கள் வழியாக நம் மூளையில் பிம்பங்களை உருவாக்கி , நம்மை அவர்கள் சொல்லும் திசையில் சிந்திக்க வைக்கிறதோ, அவைகள் இவரை கண்டுகொள்ளவே இல்லை. தவிர்த்தார்கள் என்பதே உண்மை. ஆடம்பரமாக பந்தல்போட்டு , கல்யாண உண்ணாவிரதம் இருந்த 'அன்னா கசாரே' போன்ற நடிகர்களுக்கு கிடைத்த ஊடக வெளிச்சம் இவருக்கு ஒருமுறைகூட கிடைத்தது இல்லை.
Sovereignty என்ற ஒன்று தமிழில் 'இறையாண்மை' என்று அறியப்பட்டு அதற்கு ஒருவித வார்த்தைக்கு ஒருவித 'இறைபக்தி' போன்ற என்ற அர்த்தத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இறையாண்மை என்பது ஆளுவதற்கான அல்லது ஆண்டுகொள்வதற்கான அதிகார அமைப்பின் அதிகாரத்தைக் குறிப்பது. சுருக்கமாகச் சொன்னால் , இந்தியாவின் இறையாண்மை என்பது இந்திய அரசு இந்தியாவை வேறு எந்த தலையீடுகளும் இல்லாமல் ஆளும் அதிகாரம் என்று சொல்லலாம். இதில் 'அதிகாரம்தான்' பேசப்படுகிறதே தவிர 'புனிதங்கள்' என்று ஏதும் இல்லை. மக்களாட்சியில் மக்களுக்கு அதிகாரம். மக்களின் அரசு செயல்படும்போது மக்களுக்காக அது செயல்படும்.
இந்த இறையாண்மை வார்த்தைக்கு அடுத்து அதிகப் புனிதம் உள்ள மற்ற ஒரு வார்த்தை 'இராணுவம்'. எந்த ஒரு நாட்டிலும், சரியோ, தவறோ அந்த நாட்டின் இராணுவத்தை நோக்கி விமர்சனம் வைக்கவே முடியாது. அமெரிக்காவில் 'ஈராக் போர் தவறு', 'வியட்நாம் போர் தவறு' என்று வெளிப்படையாக சொல்லும் அரசியல்வாதிகள், பொதுமக்கள்கூட , இராணுவம் என்று விமர்சனம் வைத்துவிடமுடியாது. மிகவும் புனிதமானது இராணுவம் . அவர்கள் செய்யும் செயல்கள் நாட்டுக்காக , அதற்காக அவர்கள் உயிரைப்பணயம் வைக்கிறார்கள். எனவே அவர்களை விமர்சிப்பது நடைமுறையில் தவிர்க்கப்படும் ஒன்று. இலங்கையில் இருந்து வந்த அமைதிப்படையை வரவேற்கவில்லை என்பதற்காக 'முதல்வர் கருணாநிதி 'அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இராணுவம் என்ன செய்தது என்பதை விமர்சிக்க இடம் இல்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது.
ஐரோம் சர்மிளா போராடியது இப்படியான இராணுவ நடவடிக்கையை எதிர்த்து Armed Forces (Special Powers) Acts (AFSPA). ஊடகங்கள் அவரை திட்டமிட்டு தவிர்த்தது. உதாரணத்திற்கு நீங்கள் கலெக்டர் முன்னிலையில் சத்தம் போடலாம். ஆனால் காவல் ஆணையாளர் முன்னால் சத்தம் போட்டால், அடிவிழுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இன்னொரு உதாரணம் 'மேதாபட்கர்' போராடியது சிவில் வழக்கு என்றால் , ஐரோம் சர்மிளா போராடியது இராணுவ வழக்கு. ஊடகங்களால் ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஒருவரை அங்கீகரிக்கவே முடியாது. தேசத்துரோகிகளாக கட்டம் கட்டப்படுவார்கள்.
நான் அறிந்துள்ள ஐரோம் சர்மிளா , தலைப்புச் செய்திகளில் வழியே அல்லது கல்யாண உண்ணாவிரத விழாக்கள் மூலம் , மோடி மற்றும் செயலலிதா போல தேர்ந்த திரைக்கதை அமைப்பாளர்களின் திறமையில் ஊடகங்களின் உதவியால் அறியக்கிடைத்த பிம்பம் அல்ல. தேடினால் மட்டுமே அதிக தகவல் கிடைக்கும் தொலைவில்தான் இவர் இன்றும் இருக்கிறார். தகவல்கள் வந்து சேராது நம் சன்னல் வழியாக.
திபெத் பிரச்சனையில் என்ன நிலைப்பாடுகளின் பேரில் இந்தியா 'தலாய் லாமா'விற்கு அடைக்கலம் கொடுத்துள்ளதோ , அதே மாதிரியான ஒரு நிலையில் போராடும் தன் குடிமகளின் கோரிக்கைகளை புறக்கணித்தது. மணிப்பூர் மட்டும் அல்லாமல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் மத்தியரசால் நடத்தப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி , ஒருகாலத்தில் கடைகள் இருந்தது. அதில் கம்பளி விற்ற இந்தியர்களை , நான் சீனர்கள் என்றே நம்பியிருந்தேன். இந்தியாவின் மைய நீரோட்டத்தில் அவர்கள் இல்லை என்பதும் மீடியா புறக்கணிப்பிற்கு ஒரு காரணம்.
ஐரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை விடுத்து "தேர்தலில் நிற்பேன்", என்ற போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இவர் வெற்றி பெறுவார் என்று நம்பவில்லை என்றாலும் , வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது எனக்கு. மிகவும் குறைவான வாக்குகள் பெற்று (90) தோற்றது எனக்கு வலியான ஒரு நிகழவுதான்.
ஊடகத்தின் வெளிச்சம் , பணம், அரசியல் விளையாட்டில் வெற்றி பெறவென்றே இருக்கும் விதிகள் எல்லாவற்றையும்தாண்டி ,இவருக்கு மக்கள் வாக்களிக்காமைக்கு காரணமாக நான் நினைப்பது இரண்டு காரணங்கள்.
முதல் காரணம்:
மக்கள் Armed Forces (Special Powers) Acts (AFSPA), க்குப் பழகிவிட்டார்கள் . இன்றைய தேதியில் வலிகளுடன் வாழ்வை நகர்த்துவது எப்படி என்று கற்றுக்கொண்டுவிட்டார்கள . அவர்களுக்கு ஐரோம் சர்மிளா தேவைப்படவில்லை.
இரண்டாவது காரணம்:
ஐரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை விட்டது அவர்களுக்கு ஏமாற்றம். சாய்ந்து கொள்ள, நம்பிக்கை வைக்க என்று இருந்த ஒன்று இல்லாமல் போய்விட்டதின் விரக்தி. மணிப்பூரின் அடையாளமாக , மணிப்பூரிகளின் 'தலாய் லாமா'வாக இருந்த ஒருவர் , சட்டடென்று அந்த நிலையைவிட்டு இறங்கியது, சக மனிதர்களுடன் மனிதராக அரசியலில் நிற்க நினைத்த முடிவை அவர்கள் ஏற்கவில்லை.
நீங்கள் கடவுள் என்றும் நம்பும் பிம்பமானது, ஒருநாள் தரைக்கு வந்து, 'பப்ளிக் பாத்ரூமிற்கு' வழிகேட்டால், என்ன செய்வீர்கள்? "இவருக்கு எதுக்கு இந்தவேலை" என்று சொல்வீர்கள் அல்லது ஏன் பீடம் விட்டு இறங்கினாய் என்று கோபம் கொள்வீர்கள். அதுதான் ஐரோம் சர்மிளாவிற்கு நடந்துள்ளது. அவர் சாதரண மனுசியாக இருக்க விரும்புகிறார். ஆனால் மக்கள் அதை அங்கீகரிக்க வில்லை.
தனக்கு சரியென்றுபடுவதை முன்னெடுத்து செல்வதுதான் வாழ்க்கை. மற்ற அனைத்தும் பிழைப்பு. நீங்கள் உங்கள் விருப்பத்தின்படி வாழ வாழ்த்துகிறேன்.
இசங்கள் , சத்தகுருக்கள், பொரட்சிகள், சூப்பருகள், காமகோடிகள் எல்லாம் என்ன அர்த்தங்களை தருகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். "நான் ஒரு பெரியாரிஃச்ட்" அல்லது "நான் அம்மாவின் அடிமை" என்று "யாட்கின்" ஆற்றில் மீன்பிடிக்கும் ஒரு 70 வயது வெள்ளக்கார தாத்தாவிடம் நான் சொன்னால் அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார்? நிற்க, அப்படியே இதற்குமுன் நான் எழுதிய
// நிகழ்காலப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய சிந்தனைகள் வளரவேண்டும். கம்யூனிசம் அல்லது காந்தி சொன்னார் என்பதற்காக கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. கடிவாளத்தை அடிப்படையாக அல்லது உதாரணமாக வைத்து காருக்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர கடிவாளத்துடன் வாழ்க்கை முழுவதும் அலையக்கூடாது. இசங்களைப் படித்தவர்கள் அங்கேயே நின்றுவிட்டதால்தான் நிகழ்கால சமூகப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் இன்னும் பழைய புத்தகங்களிலேயே தேடப்படுகிறது. //
***
அக்மார்க் ஒரிசினல் கம்யூனிசம் என்பது மார்க்ஃசும் எங்கெலும் சேர்ந்து வெளியிட்ட அறுபது பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை (The Communist Manifesto published 1847 -1848 ) .
ஒகே இப்போது கேட்போம்.
கம்யூனிஃச்ட் என்பவர் யார்?
"1847 - 1848 ல் வெளியான Communist Manifesto யை வாசித்தவர்?
வாசித்து அதற்கு ஆமோதித்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போனவர்?
வாசித்து அதற்கு மயங்கி மார்க்ஃசுக்கும் எங்கெலுக்கும் சிலை வைத்து வணங்கியவர்?
வாசித்து அந்த அறிக்கையை பொக்காகப் போட்டு காசு பார்த்தவர்?
இதில் யாரை கம்யூனிஃச்ட் என்பீர்கள்?
மேலே சொல்லியவர்களில் யாரும் கம்யூனிஃச்ட் அல்ல. யாரையாவது நீங்கள் கம்யூனிஃச்ட் என்று சொல்லியே ஆக வேண்டும் என்றால், எவனொருவன் அந்த 60 பக்க அறிக்கை மொத்தத்தையும் தன் வாழ்வில் இம்மி பிசகாமல் கடைபிடிக்கிறானோ அவனை வேண்டுமானால் "கம்யூனிஃச்ட்" என்று சொல்லலாம்.
வேதியியலில் ஒரு தனிமத்தின் கட்டமைப்பில் எதையாவது கூடக் குறைய மாற்றினால் அதற்கு வேறு பெயர் வைக்கப்படும். ஒன்றில் இருந்து சிலவற்றைப் பிரித்து அல்லது சேர்த்து வேறொன்றை உருவாக்கினால், அதை வேறு பெயரில்தான் அறிவியல் அழைக்கும். பீரியாடிக் டேபிளில் Atomic Mass-ல் கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதற்காக பொட்டாசியத்தையும் (k 39.0983) அர்கனையும்(Argon- Ar 39.948) ஒரே பேரில் அழைப்பது இல்லை.
அதுபோல மாவோயும், லெனினையும், நம்மூர் நல்லக்கண்ணுவையும் அவர்கள் அந்த 60 பக்க Communist Manifesto யை வாசித்தவர்கள் என்பதற்காக கம்யூனிஃச்ட் என்று ஒரு வட்டத்தில் சேர்க்கவே முடியாது. மாவோயிசம் , லெனினிசம் , நல்லக்கண்ணிசம் என்று வேண்டுமானல் சொல்லலாம்.
பிரபல கல்லூரி ஓனர் மற்றும் பல நிறுவனங்களின் முதலாளி வீரமணி அவர்களின் கொள்கையை "வீரமணியிசம்" என்று சொல்லலாமே தவிர வேறு பெயரில் அழைக்க முடியாது. கூடாது. சரி 'பெரியாரிஃச்ட்' என்று யாராவது இருக்க முடியுமா என்றால், இல்லை. இல்லவே இல்லை. தன் சுய புத்தியைப் பயன்படுத்தி , தனக்கான சரி தவற்றை அறிந்துகொள்ள அல்லது தேடிக்கொள்ள முடியாதவன் அல்லது பழைய இசங்களில் தன்னை தோய்த்து அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகிறவன் , நிச்சயம் பெரியாரைப் புரிந்தவனாக இருக்கவே முடியாது.
எனவே 'பெரியாரிஃச்ட்' என்பது நகைமுரண்.
இராமசாமி அய்யா "இதுதான் 10 கட்டளைகள். இதை தினந்தோறும் ஓதினால் அல்லது கடைபிடித்தால் நீ என் விசுவாசி/அடிமை/பக்தன் என்று போட்டுக்கொள்ளலாம்" என்று சொல்லியது இல்லை.
அவர் சொல்லியவற்றை சீர்தூக்கிப் பார்த்து , பகுத்து அறிந்து எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் , அதில் ஏதாவது உங்களுக்கு சரி என்று பட்டால் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவர் சொன்னதில் இருந்து பட்டி டிங்கரிங் பார்த்து "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றும் உங்களுக்கான புதிய இசங்களை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் , அப்படி அமைத்துக்கொண்ட பிறகு , அதை அவர் சொன்னார் என்று அவர் கருத்தாகச் சொல்ல வேண்டாம். அது உங்கள் கருத்தாகவே இருக்கட்டும்.
ஏதோ ஒரு இடத்தில் இன்று அய்போன் பயன்படுத்தும் ஒரு 6 ஆம் வகுப்பு மாணவருக்கு, கிரகாம்பெல்லில் இருந்து ஃச்டீவ் வரையும் , போனுக்கு செலவிடும் மின்சாரத்தை கடத்தி வர , விஞ்ஞானிகளுக்குள் நடந்த AC vs DC சண்டைகளும் மின்சார வரலாறும், அய்போன் தயாரிக்க சீன மக்கள் கொடுக்கும் விலையும், அதன் முதலீட்டார்களின் பயன்களும் ஏதும் தெரிந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. அந்த மாணவருக்கு அது அவரின் அப்பா கொடுத்த ஒரு gadget அவ்வளவுதான். அவரிடம் போய் மல்லுக்கு நிற்பது , 'யாட்கின்' ஆற்றில் மீன் பிடிக்கும் 70 வயது வெள்ளைக்கார முதியவரிடம் "அம்மாதான் தமிழகத்தின் நிரந்த முதல்வர் , ஆனா செத்துட்டார், நிரந்தர பொதுச்செயலாளர் சிறையில் இருக்கார்..." என்ற கதைகள் எல்லாம் தேவை அற்றது.
ட்வீட்டரில் "ராமசாமி என்ன கிழித்தார் எனக்கு?" என்று கேட்கும் பெண்களின் கேள்விகளுக்கு விடை . "அம்மா அவர் ஒன்றும் கிழிக்கவில்லை அப்படி ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கவே இல்லை. சுவீட் எடு கொண்டாடு " என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதான்.
இராமசாமியை விமர்சிக்க எத்தனையோ இருக்கிறது. அதைவிடுத்து
எனக்கு என்ன செய்தார்?
கிழவன் குமரியைக் கல்யாணம் செய்யலாமா?
பெரியாரைப் பிடிக்கும் என்று சொல்கிறாயே நீ ஒரு கிழவனைக் கட்டிக்கொள்வாயா?
போன்ற மயிர் பிளக்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உள்ளது? மனைவி இறந்த பிறகு , சட்டப்படி திருமண வயதை அடைந்த பெண்ணை , மனம் ஒப்பி மணப்பதை எதிர்க்கும் சம்முவம் இப்படியான கேள்விகளையும் கேட்கலாம்.
ரெண்டு பொண்டாட்டிக்கார கடவுளை வணங்குகிறீர்களே , "அய்யாம் ஆல்ரெடி மேரிடு, பட் அய் லைக் யூ ஆசைக்காக கட்டிக்கொள்கிறேன் " என்று ஒரு குறவர் வந்து கேட்டால் , ரெண்டாவது பொண்டாட்டியாக வாக்கப்படுவீர்களா?
அடுத்தவன் பொண்டாட்டியை அபகரித்த கடவுளை வணங்குகிறீர்களே உங்கள் குடும்பத்தில் அப்படி நடந்தால் அதை ஏற்பீர்களா?
சிறு பிள்ளைகளை மணந்தவர்களை புகழ்கிறீர்களே , சிறு பிள்ளைகளை காவுகேட்டவர்களை கடவுள் சொல்கிறீர்களே என்று கேட்டுக்கொண்டே போகலாம். Hypocrisy க்கு ஏதேனும் விடை உள்ளதா என்ன?
இராமசாமியை விமர்சித்து துவைத்துக் காயப்போடுவதே நீங்கள் அவருக்கு செய்யும் நல்ல செயல். அதற்காக இப்படி மொக்கை வாதங்களை வைக்க வேண்டாம்.
அன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களுக்கான விடைகளையும் சேர்த்தே கேளுங்கள். கடவுள் என்ற கதாபாத்திரம் சொன்னதாகச் சொன்னாலும் நம் வள்ளுப்பாட்டையா சொன்னதைக் கடைபிடியுங்கள். பாட்டையாவையும் கேள்வி கேளுங்கள். ஈரோட்டுக் கிழவனின் வாய் என்றாலும் , கடவுளின் வாய் என்றாலும் உங்களின் காதுகளுக்கு வரும் செய்திகளை, கேள்வியோடு எதிர்கொள்ளுங்கள்.
வடுகபட்டியில் இருந்து 'தனிச்சியம்' பிரிவு வழியாக 'கொண்டையம்பட்டி' வந்து சேரவேண்டும். ஒரு நாளைக்கு மூன்றுமுறை மட்டுமே இந்த தடத்தில் அரசு பேருந்து இருக்கும். பகல் நேரங்களில், சர்க்கரை ஆலைக்குச் செல்லும் 'ட்ராக்டர் வண்டிக்காரர்' ஏற அனுமதித்தால் , அதில் ஏறி வந்துவிடலாம். 'டயர் வண்டிக்கார (மாட்டு வண்டி with டயர் சக்கரம்) அண்ணனுக்கே உட்கார இடம் இருக்காது. கரும்பை கழுத்துவரை கட்டி இழுத்து வரும் வண்டி அது. எனவே சும்மா வண்டியை வழித்துணைக்குப் பிடித்துக்கொண்டே வரவேண்டும்.
அப்போது 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். மதுரைப் பதிப்பாக வரும் 'தினத்தந்தி' மற்றும் 'தினமலருக்கு' இடையே கண்ணுக்கு தெரியாத வாய்க்கா வரப்பு தகராறு நடந்துகொண்டே இருக்கும். சில நேரம் அது வெளியில் தெரியும் அளவுக்கு "ஆதித்தனார் எல்லாருக்கும் அப்பாவா?" என்று தினமலர் அதன் தகுதிக்கு (அதன் தகுதி எனக்கு பின்னாட்களில்தான் தெரிந்தது) பேசும். அந்த வயதில் எனக்கு தினத்தந்தியில் வரும் "சிந்துபாத்" தொடரும் , தினமலரில் வரும் "டார்சன்" தொடரும் பிடிக்கும் என்பதால் , இரண்டுக்குமே இரசிகன். தினமலர் 'வாரமலர்' வந்தவுடன் , தினமலர் ஏதோ தரம் உயர்ந்துவிட்டது போல எனக்குத் தோன்றியது. அப்பாவிடம் சொல்லி , ஞாயிற்றுக்கிழமை மட்டும் தினமலர் வீட்டுக்கு வருமாறு சந்தா செலுத்தி வாரமலர் வாசகனாகிவிட்டேன்.
வாரமலரில் 'ஆர்னிகா நாசர்' என்ற புனைப்பெயரில் வரும் பேய்க்கதைகள் , டெரர் கதைகள் அப்போது எனக்கு பிடித்திருந்தது. "அடுத்தவாரம் என்ன நடக்கும்?" என்று பள்ளியில் மதிய நேர இடைவேளையில் 'வாவரக்காச்சி' மரத்தடியில் உட்கார்ந்து விவாதிப்போம் நாங்கள். அப்படியான சூழலில் , "நாம் ஏன் டெரர் கதை எழுதக்கூடாது?" என்ற விபரீத ஆசை வந்தது எனக்கு. ஆனால் எனக்கு அந்த தேதியில் பேய் அனுபவங்கள் இருந்தது இல்லை என்பது பெருங்குறை. நேரடி அனுபவம் இல்லாமல் எப்படி கதை எழுதமுடியும்? கதை புனைவாக இருந்தாலும், பார்க்காத பேய்களை கதையில் எப்படி கூட்டிவருவது? என்ற அறிவுச்சிக்கல் எனக்கு.
நீங்கள் பேயைச் சந்தித்து இருக்கிறீர்களா? எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒருவேளை பேய்களுக்கு என்னை பிடிக்காமல் போய் இருந்திருக்கலாம். இத்தனைக்கும் பக்கத்துவீட்டில் எதிர்காலத்தை கணிக்கும் சோதிடரும் , பேய்களையும் , முனிகளையும் பெண்களிடம் இருந்து விரட்டும் சாமியாடியும் (முத்தண்ணனின் தம்பி அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை) இருந்தார். எங்கள் பக்கத்துவீட்டுச் சோதிடரின் தம்பி பிற்காலத்தில் கேப்டனின் ஆஃச்தான சோதிடராக ஆகிவிட்டார் என்பது தனிக்கதை. நான் பத்தாவது பெயில் ஆவேன் , என்று கணித்துச் சொன்னவர் அவர். அப்பாலிக்கா 435 (445 ??) மார்க்கும் கணக்கில் சதமும் அடித்தபின்னால் அவர் வீட்டு வழி போகும் போதெல்லாம், 'அய்யோ பாவம் விசயகாந்த்' என்றுதான் தோன்றும். நிசமாகவே கேப்டன் இன்று பாவமாகிவிட்டார்.
அது என்னவோ எங்கள் ஊர் பேய்களும் , முனிகளும் பெண்களை மட்டுமே பிடிக்கும் போல. பக்கத்துவீட்டு சாமியாடி அண்ணன் , பெண்களைப் பிடித்த பேய்களை ஓட ஒட விரட்டி , 'கல்லணை' போகும் வழியில் உள்ள ஒரு மரத்தில், ஆணி அடித்து முடிப்பார். மண்டையை மரத்தோடு சேர்த்து , பெண்ணின் முடியில் சில கற்றைகளை எடுத்து ஆணியில் மரத்தோடு அறைந்து, சடக்கென்று மண்டையை ஆட்டி , முடி பிடுங்கிக்கொள்ளுமாறு செய்வார்.. இந்த சிகிச்சை , பேயின் 'பிடி' தன்மைக்கு ஏற்ப மாறும். சில பேய்கள் சாமியாடி சொன்னாலே போய்விடும். சில பேய்களை தண்ணீர் அடித்து விபூதி அடித்து சில நேரம் கம்பால் அடித்தும் விரட்டுவார். இவரின் இந்த அட்டூழியங்களை அருகில் இருந்து பார்த்து பார்த்து , "எனக்கு பேய்பிடிச்சா சின்னப்பேயா பிடிக்கனும் விபூதி தண்ணீர் அடிப்பதில் ஓடும் பேயாக இருக்க வேண்டும்" என்று ஊர் முனியாண்டியிடம் வேண்டிக்கொள்வேன்.
இவர் ஆணி அடித்த அந்த மரங்களைச் சுற்றி சுற்றி வந்தாலும், 'கூட்டாம்பீ பேள 'நண்பர்களுடன் பலமுறை மரத்தைச் சுத்தி உட்காந்தாலும் , பேய்கள் வந்து சிநேகம் கொள்ளவே இல்லை என்னிடம். அனுபவம் இல்லாமல் எப்படி வாரமலர் ஆர்னிகாக நாசர் மாதிரி பேய்க்கதை எழுதுவது? எனக்கு அப்போது இது பெரும் சவாலாக இருந்தது. அதுவும் ஆர்னிகா நாசர் ஊட்டி போன்ற குளிர் பிரதேச 'முட்டைக்கோசு' தோட்டங்களை எல்லாம் வர்ணித்து எழுதும்போது, எங்க ஊர் நெல்வயல் , பாரதிராசா காதல் கதைகளுக்கு மட்டுமே உதவும் என்று நம்பிவிட்டேன். எங்கள் ஊர் புளியமரங்கள்கூட என்னை பேய்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எனக்கும் பேய்க்குமான ஏழாம் பொருத்தங்களை . இத்தனைக்கும் சாமியாடி அண்ணன் பேயோட்டும்போது அவருக்கு எடுபிடி வேலைகளைச் செய்வது நானும் அவரின் மகன் சுப்பிரமணியனும்தான்.
இந்த தடைகளை எல்லாம் உடைத்து , பேய்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் , அந்த அனுபவத்தில் ஒரு ஆர்னிகாநாசர் தரக் கதை எழுதி புகழ் பெறவேண்டும் என்ற வெறி ஏறிக்கொண்டே போனது. ஊர்தாண்டி 'புதுப்பட்டி' அருகே உள்ள 'செவக்காட்டு' பனங்காட்டில் ஒருவரை முனி அடித்துவிட்டதாக செய்தி வந்தது. இந்த 'செவக்காடு' ஒரு காலத்தில் சோளம் விளைந்த பூமி. வீடுகட்ட செம்மண் தோண்டி தோண்டி , இறுதியில் பெரும் பள்ளங்களும் , கத்தாழைகளும் ,பனைமரங்களும் மட்டுமே நிறைந்த இடமாகி, முனிகள் வாசம் செய்ய தோதான இடமாகிவிட்டது. நான் சொன்ன அந்த பக்கத்து வீட்டு முத்தண்ணன் வழி சொந்தங்களில் ஒருவர், எருமைமாடு மேய்ப்பவர். சுமார் 40 எருமைகள் வைத்து இருப்பார். அவரின் சொந்த எருமைகள் போக , பிறரின் எருமைகளையும் கூலிக்கு மேய்ப்பார். அவரோடு சேர்ந்து சின்ன வயதில் அந்த செவக்காட்டு பகுதிக்கு மாடு மேய்க்க சென்றுள்ளேன். அப்போது அது சோளக்காடு.
செவக்காட்டுப் பகுதி மட்டும் இல்லாமல், கொண்டையம்பட்டி செல்லும்வரை பல பேய்கள் இருப்பதாக 'கள்வேலிபட்டி' சகா ஒருவன் சொன்னான். ஆர்னிகா நாசர் பித்தம் தலைக்கேறி, பேய்களைச் சந்தித்து மல்லிப்பூ மற்றும் கொலுசு சத்தத்தை நேரிடையாக அனுபவிக்க வேண்டும் இப்படி எல்லா ஆசைகளும் சேர்ந்து என்னை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தது. வடுகபட்டியில் உள்ள சக ஆசிரிய நண்பரிடம் அப்பா கடன் வாங்கி இருந்தார். அவரிடம் வட்டிப்பணம் கொடுத்துவிட்டு வருவதற்காக என்னை அனுப்பினார். அந்தி சாயும் வேளையில், வடுகபட்டியில் இருந்து வரும் பேருந்தில் திரும்பிவந்துவிடச் சொல்லி என்னை அனுப்பினார். போகும்போது பேருந்தில் சென்றுவிட்டேன். வரும்போது எனது 'பேயாசை' பிடித்து ஆட்ட , வேண்டும் என்றே பேருந்தை தவறவிட்டு விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன்.
'வடுகபட்டியில்' இருந்து 'தனிச்சியம்' வரை வருவது சிக்கல் இல்லை. NH 7 ஃகைவேயில் நடந்து வந்துவிடலாம். திண்டுக்கல் செல்லும் பேருந்தில் அடிபடாமல் இருந்தால் போதும். ஆனால், தனிச்சியம் பிரிவில் இருந்து , 'கொண்டையம்பட்டி' வழியாக ஊர் வந்து சேருவது என்பது இம்சையானது. கரும்புக்காடுகள் சூழ ஆங்காங்கே மண்டவெல்லம் காய்ச்சும் கூடாரங்களில் சிலர் வேலை செய்து கொண்டிருக்க என்று கலவையான வழி. கவலையானதும் கூட. பல மைல் தூரங்களுகுக்கு தவக்கா சத்தம் மட்டுமே துணை.
என் கவலை எல்லாம் பேய்கள் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதுதான். எனவே , ட்ராக்டர் , டயர்வண்டி எல்லாவற்றையும் தவிர்த்து, மங்கிய நிலா வெளிச்சத்தில் நடக்க ஆரம்பித்தேன். கொண்டயம்பட்டி தாண்டி மேலச்சின்னன்பட்டி வரும்வரை பேய்கள் என்னைப் பார்க்கவே இல்லை. கள்வேலிபட்டிக்கும் நான் சொன்ன அந்த செவக்காட்டுக்கும் இடையில் பேய்கள் என்னை சந்தித்தால்தான் உண்டு. இல்லையென்றால் ஊர்வந்துவிடும். கடைசிவரை எந்த கொலுசு சத்தமோ மல்லிகை வாசமோ எனக்கு கிடைக்கவே இல்லை.
புதுப்பட்டி அருகே வரும்போது முதல் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பெண்களின் கொலுசு சத்தமும், அவர்கள் தலையில் வைத்து இருந்த மல்லிகைப்பூ வாசமும்தான் அந்த செவக்காட்டுப் பகுதியில் கிடைத்தது. பேய்கள் என்னைச் சீந்தவே இல்லை.
ஒருவேளை ஊட்டி முட்டைக்கோசு தோட்டங்களில் ஆர்னிகாநாசருக்கு மட்டுமே பேய்கள் கிடைக்கும்போல என்று மனதைத் தேத்திக்கொண்டேன். வீடு வந்து அப்பாவிடம் மண்டகப்படி அர்ச்சனையும் அம்மாவின் பூசைகளும் கிடைத்து கிளைக்கதை. அப்ப எல்லாம் செல்போனா இருந்தது? போன ஆள் திரும்ப வரும் அவரை காத்து இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. திரும்பி வந்துவிட்டால் சாத்துவார்கள் ஏன் போனே என்று. திரும்பி வராவிட்டால் ஊரே கவலைப்பட்டு ஆத்துப்பக்கம் போய் பிணந்தேட ஆரம்பித்துவிடுவார்கள்.
இருந்தாலும் நான் சில பேய்களைச் சந்தித்ததாக கதைகட்டி , அடுத்த நாள் பள்ளிக்கூட வாவரக்காச்சி மரத்தில் கதை கட்டிவிட்டேன். உணவு இடைவேளைக்குப் பிறகும் கதை தொக்கி நின்றதால், கதை எழுதும் நிலை வந்துவிட்டது. நானே ஏற்படுத்தினேன் என்று சொல்லக்கூடாது அது எழுத்தாளருக்கு அழகல்ல. வாரம் ஒரு பகுதியாக திகில்கதை எழுதி கதையின் தொடர்ச்சி கெட்டுவிடாமல் இருக்க அவ்வப்போது செவக்காட்டுப்பக்கம் நடந்துகொண்டு இருப்பேன். நண்பர்களுக்குத்தான் திகில் பிடித்தது எனக்கு கடைசிவரை பேய்பிடிக்கவே இல்லை.