Monday, March 20, 2017

காற்றின் தயவு கிடைக்காத பாய்மரக் கப்பல்கள் - ஐரோம் சர்மிளா

ஒரு உரையாடலில் இணைய நண்பர் , "இணையம் வழியாக நாம் காணும் அல்லது காண வைக்கப்படும் 'ஐரோம் சர்மிளா' என்ற கட்டமைப்பு ,பொய்யாக இருந்தால்?" என்று கேட்டிருந்தார். மேலும் ஒரு படி மேலே போய், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் , சமீபத்தில் மறைந்த செயலலிதா அவர்களை, ஊடகம் வழியாக அறியும் மற்ற மாநிலத்துக்காரர்களின் நிலையோடு ஒப்பிட்டுக் கேட்டு இருந்தார். இது தேவையான , மிகவும் முக்கியமான  ஒப்பீடு. பல நேரம் நாம் மறந்துவிடும் ஒன்று.

இன்று எதைப் படிக்க வேண்டும்,  காலை இணையத்தில் எந்த உரையாடல் முன்னிலை வகுக்கவேண்டும் என்று தீர்மானிப்பது நாம் அல்ல. பல நாட்களில்  அன்றைய பொழுதை ஆரம்பிக்கும்போது , நான் ஒரு கருத்து குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருப்பேன். முந்திய நாள் இரவே அல்லது சில நாட்களுக்கு முன்னரே திட்டம் போட்ட ஒன்றாக இருக்கும். காலையில் இணையம் வந்தவுடன் , ஏற்கனவே பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் செய்தியில் அடித்துச் செல்லப்பட்டு , பேச வந்ததை விடுத்து , நானும் பெரும்பான்மை பேசிக்கொண்டு இருக்கும் ஒரு செய்தியில், கருத்து சொல்லி நான் திட்டமிட்ட செயல் தள்ளிப்போகும். இன்று  பல அமரிக்க Talk Show க்கள் அதிபர் 'ட்ரம்ப்' செய்திகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறது.

நாம் என்ன பேச வேண்டும், யாரைப் பற்றிப் பேசவேண்டும் என்று ஒரு திட்டவட்டமான பட்டியலைக் கொடுத்து,  அதை மட்டுமே பேச வைத்து , அதைச் சுற்றி விவாதங்கள் அமைவதில், சிந்திக்க வைப்பதில் ஊடகம் வெகு நேர்த்தியாகச் செயல்படுகிறது. ஊடகங்களின் நோக்கம் வணிகம் ,பணம் ஈட்டல். அதுதாண்டி ஏதும் இல்லை. பணம் வந்தபிறகு ஏதாவது செய்து Charity Jeep ல் ஏறிக்கொள்வார்கள்.  மற்றபடி அவர்களின் பயணம் பணம் நோக்கியதாக இருக்கும். இது வணிக நியதிப்படி தவறல்ல. நான், நீங்கள் எல்லாரும் பொருள் ஈட்டீ பிழைத்திருக்கிறோம். நமக்கான நியாயங்கள் நமக்கு, அவர்களுக்கான நியாயங்கள் அவர்களுக்கு. அவர்கள் வணிகர்கள், வணிகம் செய்ய இருக்கிறார்கள் என்ற புரிதலுடன் அவர்களைத் தொடர்வது நல்லது.


The Filter Bubble
https://www.youtube.com/watch?v=p6vM4dhI9I8



 வாரமலர் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வாரம்தோறும் 'இளவரசி டயானா' அவர்களின் ஒரு படத்தைப் போட்டு ஏதேனும் ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கும்.  அதைப் படிக்கும்போதும் , அந்தப் படத்தைப் பார்க்கும் போதும் , என் மனத்தில்  இங்கிலாந்து மற்றும் டயானாவின்  வாழ்க்கை இப்படித்தான் என்ற ஒரு பிம்பத்தை நான் தீட்டிக்கொண்டேன். ஒவ்வொரு வாரமும் , வாரமலர் எனக்கு ஒரு செங்கலை எடுத்துக்கொடுத்து, டயானா பற்றிய மிம்பத்தை எனக்குள் மேலும் மேலும் கட்டிக்கொள்ள உதவி செய்யும். வாரமலர் என்ற‌ வட்டத்தை தாண்டியபிறகு,  எனக்கு வந்து சேர்ந்த செய்திகள், இளவரசி டயானா குறித்து வேறு செய்திகளைச் சொல்லி, என் பழயை புரிதல்களை மாற்றிக்கொள்ள உதவியது.

லருக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்த ஒரு பிம்பம் இருக்கும். அந்த பிம்பம் நீங்கள் படித்த, அறிந்த செய்திகளின் செங்கலில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்கும். நானும் அவரை நேரில் சந்தித்தது இல்லை. அம்மக்களைப் போல நான் போர்கால சூழல்களின் அவலங்களை , இனக்கொடுமைகளை  அனுபவித்ததும் இல்லை. எல்லாம் செவிவ‌ழிச் செய்தி. திண்டுக்கல்லில் படித்துக்கொண்டு இருந்தபோது, எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்த ஒரு மாணவன் மூலம் எனக்கு வேறு சில பிம்பங்கள் கிடைத்தது.

அப்போது நான் துக்ளக்கும் , அமுதசுரபியும், மஞ்சரியும், வண்ணத்திரையும்,அம்புலிமாமவும் , யுனஃச்கோ கூரியரும் (The UNESCO Courier) , உண்மை இதழும் கலந்துகட்டி வாசித்துக்கொண்டிருந்தேன். என்னை வந்து சேரும் செய்திகள் திக்குமுக்காடச் செய்தாலும் , பிரித்தறிய என்னால் இயலவில்லை. ஆனால் எல்லாவற்றையும் மனதில் சேகரித்து வைத்துக்கொண்டேன். ஒருவேளை பின்னாட்களில் அசை போட உதவலாம் என்று. ஆம் உதவியது. இன்றுவரை உதவுகிறது

துக்ளக் மட்டும் படித்திருந்தால் அல்லது 'இந்தியா டுடே'யில் அப்போது வந்த ஈழம் குறித்த கட்டுரைகள் மட்டும் படித்து இருந்தால் அல்லது இவை ஏதும் இல்லாமல் என்னுடன் படித்த அந்த ஈழத்து மாணவனிடம் மட்டும் பழகி இருந்தால் இன்று எனக்கும் புரிதல் இல்லாமலே போய் இருக்கும் ஈழ விசயங்களில். என் புரிதல் சரியா? தவறா? என்று சொல்லமுடியாது. ஆனால், மையத்தில் இருந்தும் , விளிம்பில் இருந்தும் பார்த்து, அதன் மூலம் நான் எற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள் தாண்டி, எனக்கு வாய்க்கப்பெறாத வேறு சில கோணங்களும் இருக்கலாம்,  என்று ஒரு புரிதல் கைவரப்பெற்றது.

'யாசர் அராபத்' உங்களுக்கு தெரிந்து இருக்கும். எனக்கு கிடைத்த முதல்பக்க செய்திகள் எல்லாம், அவர் எப்போதும் ஏதேனும் ஒரு தலைவரைச் சந்தித்துக்கொண்டே இருப்பார் என்பதுபோலவே இருக்கும். யார் இவர்? ஏன் இப்படி தலைவர்களைப் போய் சந்திக்கிறார்? என்று மேற்கொண்டு தேடல் செய்ய அது உதவியது என்பது உண்மை. நான் வெறுமனே வாரமலர் அல்லது பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளோடு கடந்து போயிருந்தால், இன்று என்னுள் இருக்கும் டயானா, பிரபாகரன் மற்றும் யாசர் அராபத்தின் பிம்பங்கள் அந்த பத்திரிக்கைகள் சொன்ன பிம்பமாகவே இருந்து இருக்கும். இந்த பிம்பங்கள் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , உங்கள் மூளையின் ஓரத்தில் இருக்கும். யாராவது இது பற்றிக்கேட்டால்,  உங்களுக்குத் தெரிந்த செய்தியில் இருந்து சிலவற்றைச் சொல்வீர்கள்.

நமக்கு வாய்த்த சன்னல்களின் வழியே,   நமக்குத் தெரிந்த தகவல்கள் அது அவ்வளவே. இது யாரின் குற்றமோ அல்லது குறையோ அல்ல. சன்னல்களில் நீள அகலங்கள் , மேலும் சன்னல் தாண்டி நமக்கான கதவை நாமே திறந்துகொண்டு , எவ்வளவு தூரம் பயணப்பட தயாராகிறோம் என்பதைப் பொறுத்து நம்மிடம் உள்ள தகவல்கள் மாறும்.

'லாய் லாமா' குறித்து இப்படியான ஒரு பிம்பம் உங்களுக்கு இருக்கலாம்.அமெரிக்காவில் மக்களால் பாராட்டப்படும் சிலரில் 6 வது ( Gallup Poll ) இடத்தில் இருப்பவர் 'தலாய் லாமா'. John Oliver - ன் நிகழ்ச்சியின் சார்பாக சிலரை "தலாய் லாமா யார்?" என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்கள் " அவர் நல்லவர், வல்லவர், வழிகாட்டி , நல்ல கருத்துகளைச் சொல்பவர் , அமைதியானவர்" என்று சொல்கிறார்கள். இங்கே இவர்கள் ஊடகம் தலைப்புச் செய்திகள் வழியாக அவர்களுக்கு கொடுத்திருந்த ஒன்றைச் சொல்கிறார்கள். அடுத்த கேள்வியாக "சரி , தலாய் லாமா என்னதான் செய்கிறார்?" என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். பிறகு சிந்தித்து , "இந்துக் கடவுள் ..புத்தக் கடவுள்" என்று யூகம் செய்கிறார்கள்.

Dalai Lama: Last Week Tonight with John Oliver (HBO)
https://www.youtube.com/watch?v=bLY45o6rHm0

இப்படித்தான் , நமது சன்னல்களின் வழியாக வந்துசேரும் தலைப்புச் செய்திகள் சில பிம்பங்களை நம் மூளையில் விட்டுச்செல்லும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். எது தலைப்புச் செய்தியாக வேண்டும், எப்போது அது பேசப்படவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வது இல்லை. ஊடகங்கள் முடிவு செய்கிறது.

செயலலிதா அவர்கள் இறந்தவுடன் , அவர் நல்லவர் வல்லவர் , இரும்புப் பெண்மணி, பெண்கள்குல வழிகாட்டி, ரோல்மாடல் என்று பல பெண்கள் இங்கே பேசினார்கள். இவர்கள் அனைவரும் செயலலிதாவால் பலகாலம் ஆளப்பட்டவர்கள். வாக்களித்தவர்கள். ஒப்பீட்டளவில்,  தமிழர்கள் 'யாசர் அராபத்', 'இளவரசி டயானா', 'பிரபாகரன்' ஆகியோரைவிட 'செயலலிதா 'அவர்களின் செயல்களை நன்கு அறிந்தவர்கள். ஆனால் அவர்களே ஒரு அதிர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டார்கள். தர்மபுரி பேருந்து எரிப்பு , ஆசிட் வீச்சு, ஆடிட்டர் கலவரம் , அமிர்தாஞ்சன் கலவரம் என்று செய்திகள் வந்ததையும் தாண்டி , இவர்கள் மனதில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால் அந்த ஊடகங்களின் வலிமையை என்ன சொல்வது?

ரு மனிதரை அல்லது தலைவரை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது நேர்த்தியான திரைக்கதை எழுதுவதை விடவும் மேலான சவாலான ஒன்று. ஒரு எடுத்துக்காட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு அப்படியான ஒரு நல்ல திரைக்கதை அமைப்பாளர்கள் வாய்த்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

ஐரோம் சர்மிளா அவர்கள் இப்படி தெளிவான திரைக்கதையுடன் , நமது சராசரி ஊடகம் உருவாக்கிய பிம்பமா?
---------------------------------------------

இல்லை நிச்சயம் இல்லை. இவர் ஊடகங்களால் ,  எதை நாம்  ஊடகங்கள் என்று நம்பிக்கொண்டுள்ளோமோ , எது நமது சன்னல்கள் வழியாக நம் மூளையில் பிம்பங்களை உருவாக்கி , நம்மை அவர்கள் சொல்லும் திசையில் சிந்திக்க வைக்கிறதோ,  அவைகள் இவரை கண்டுகொள்ளவே இல்லை. தவிர்த்தார்கள் என்பதே உண்மை.  ஆடம்பரமாக பந்தல்போட்டு ,  கல்யாண உண்ணாவிரதம் இருந்த 'அன்னா கசாரே' போன்ற நடிகர்களுக்கு கிடைத்த ஊடக வெளிச்சம் இவருக்கு ஒருமுறைகூட கிடைத்தது இல்லை.

Sovereignty என்ற ஒன்று தமிழில் 'இறையாண்மை' என்று அறியப்பட்டு அதற்கு ஒருவித வார்த்தைக்கு ஒருவித 'இறைபக்தி' போன்ற என்ற அர்த்தத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.  இறையாண்மை என்பது ஆளுவதற்கான அல்லது ஆண்டுகொள்வதற்கான அதிகார அமைப்பின் அதிகாரத்தைக் குறிப்பது. சுருக்கமாகச் சொன்னால் , இந்தியாவின் இறையாண்மை என்பது இந்திய அரசு இந்தியாவை வேறு எந்த தலையீடுகளும் இல்லாமல் ஆளும் அதிகாரம் என்று சொல்லலாம். இதில் 'அதிகாரம்தான்' பேசப்படுகிறதே தவிர 'புனிதங்கள்' என்று ஏதும் இல்லை. மக்களாட்சியில் மக்களுக்கு அதிகாரம். மக்களின் அரசு செயல்படும்போது மக்களுக்காக அது செயல்படும்.

இந்த இறையாண்மை வார்த்தைக்கு அடுத்து அதிகப் புனிதம் உள்ள மற்ற ஒரு வார்த்தை 'இராணுவம்'. எந்த ஒரு நாட்டிலும், சரியோ, தவறோ அந்த நாட்டின் இராணுவத்தை நோக்கி விமர்சனம் வைக்கவே முடியாது.  அமெரிக்காவில் 'ஈராக் போர் தவறு', 'வியட்நாம் போர் தவறு' என்று வெளிப்படையாக சொல்லும் அரசியல்வாதிகள், பொதுமக்கள்கூட , இராணுவம் என்று விமர்சனம் வைத்துவிடமுடியாது. மிகவும் புனிதமானது இராணுவம் . அவர்கள் செய்யும் செயல்கள் நாட்டுக்காக , அதற்காக அவர்கள் உயிரைப்பண‌யம் வைக்கிறார்கள். எனவே அவர்களை விமர்சிப்பது நடைமுறையில் தவிர்க்கப்படும் ஒன்று. இலங்கையில் இருந்து வந்த அமைதிப்படையை வரவேற்கவில்லை என்பதற்காக 'முதல்வர் கருணாநிதி 'அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இராணுவம் என்ன செய்தது என்பதை விமர்சிக்க இடம் இல்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது.

ஐரோம் சர்மிளா போராடியது இப்படியான இராணுவ நடவடிக்கையை எதிர்த்து Armed Forces (Special Powers) Acts (AFSPA). ஊடகங்கள் அவரை திட்டமிட்டு தவிர்த்தது. உதாரணத்திற்கு நீங்கள் கலெக்டர் முன்னிலையில் சத்தம் போடலாம். ஆனால் காவல் ஆணையாளர் முன்னால் சத்தம் போட்டால், அடிவிழுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இன்னொரு உதாரணம் 'மேதாபட்கர்' போராடியது சிவில் வழக்கு என்றால் , ஐரோம் சர்மிளா போராடியது இராணுவ வழக்கு. ஊடகங்களால் ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஒருவரை அங்கீகரிக்கவே முடியாது. தேசத்துரோகிகளாக கட்டம் கட்டப்படுவார்கள்.

நான் அறிந்துள்ள ஐரோம் சர்மிளா , தலைப்புச் செய்திகளில் வழியே அல்லது கல்யாண உண்ணாவிரத விழாக்கள் மூலம் , மோடி மற்றும் செயலலிதா போல தேர்ந்த திரைக்கதை அமைப்பாளர்களின் திறமையில் ஊடகங்களின் உதவியால் அறியக்கிடைத்த‌ பிம்பம் அல்ல. தேடினால் மட்டுமே அதிக தகவல் கிடைக்கும் தொலைவில்தான் இவர் இன்றும் இருக்கிறார். தகவல்கள் வந்து சேராது நம் சன்னல் வழியாக.

திபெத் பிரச்சனையில் என்ன நிலைப்பாடுகளின் பேரில் இந்தியா 'தலாய் லாமா'விற்கு அடைக்கலம் கொடுத்துள்ளதோ , அதே மாதிரியான ஒரு நிலையில் போராடும் தன் குடிமகளின் கோரிக்கைகளை புறக்கணித்தது. மணிப்பூர் மட்டும் அல்லாமல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் மத்தியரசால் நடத்தப்படுகிறது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி , ஒருகாலத்தில் கடைகள் இருந்தது. அதில் கம்பளி விற்ற இந்தியர்களை , நான் சீனர்கள் என்றே நம்பியிருந்தேன். இந்தியாவின் மைய நீரோட்டத்தில் அவர்கள் இல்லை என்பதும் மீடியா புறக்கணிப்பிற்கு ஒரு காரணம்.

காந்தியின் தேசம் என்ற‌ பொய்மை
http://kalvetu.balloonmama.net/2016/08/blog-post_10.html

ஐரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை விடுத்து "தேர்தலில் நிற்பேன்",  என்ற போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இவர் வெற்றி பெறுவார் என்று நம்பவில்லை என்றாலும் , வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது எனக்கு. மிகவும் குறைவான வாக்குகள் பெற்று (90) தோற்றது எனக்கு வலியான ஒரு நிகழவுதான்.

ஊடகத்தின் வெளிச்சம் , பணம், அரசியல் விளையாட்டில் வெற்றி பெறவென்றே இருக்கும் விதிகள்  எல்லாவற்றையும்தாண்டி ,இவருக்கு மக்கள் வாக்களிக்காமைக்கு காரணமாக‌  நான் நினைப்பது இரண்டு காரணங்கள்.

முதல் காரணம்:
மக்கள் Armed Forces (Special Powers) Acts (AFSPA), க்குப் பழகிவிட்டார்கள் . இன்றைய தேதியில் வலிகளுடன் வாழ்வை  நகர்த்துவது எப்படி என்று கற்றுக்கொண்டுவிட்டார்கள . அவர்களுக்கு ஐரோம் சர்மிளா தேவைப்படவில்லை.

இரண்டாவது காரணம்:
ஐரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை விட்டது அவர்களுக்கு ஏமாற்றம். சாய்ந்து கொள்ள, நம்பிக்கை வைக்க என்று இருந்த ஒன்று இல்லாமல் போய்விட்டதின் விரக்தி. மணிப்பூரின் அடையாளமாக , மணிப்பூரிகளின் 'தலாய் லாமா'வாக இருந்த ஒருவர் , சட்டடென்று அந்த நிலையைவிட்டு இறங்கியது, சக மனிதர்களுடன் மனிதராக அரசியலில் நிற்க நினைத்த முடிவை அவர்கள் ஏற்கவில்லை.

நீங்கள் கடவுள் என்றும் நம்பும் பிம்பமானது,  ஒருநாள் தரைக்கு வந்து, 'பப்ளிக் பாத்ரூமிற்கு' வழிகேட்டால், என்ன செய்வீர்கள்? "இவருக்கு எதுக்கு இந்தவேலை" என்று சொல்வீர்கள் அல்லது ஏன்  பீடம் விட்டு இறங்கினாய் என்று கோபம் கொள்வீர்கள். அதுதான் ஐரோம் சர்மிளாவிற்கு நடந்துள்ளது. அவர் சாதரண மனுசியாக இருக்க விரும்புகிறார். ஆனால் மக்கள் அதை அங்கீகரிக்க வில்லை.

தனக்கு சரியென்றுபடுவதை முன்னெடுத்து செல்வதுதான் வாழ்க்கை. மற்ற அனைத்தும் பிழைப்பு. நீங்கள்  உங்கள் விருப்பத்தின்படி வாழ வாழ்த்துகிறேன்.



#Irom Sharmila