Thursday, March 16, 2017

பெரியாரிஃச்ட் - ட்வீட்டர் களேபரங்கள்

சங்கள் , சத்தகுருக்கள், பொரட்சிகள், சூப்பருகள், காமகோடிகள் எல்லாம் என்ன அர்த்தங்களை தருகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். "நான் ஒரு பெரியாரிஃச்ட்" அல்லது "நான் அம்மாவின் அடிமை" என்று "யாட்கின்" ஆற்றில் மீன்பிடிக்கும் ஒரு 70 வயது வெள்ளக்கார தாத்தாவிடம் நான் சொன்னால் அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார்? நிற்க, அப்படியே இதற்குமுன் நான் எழுதிய

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு
http://kalvetu.balloonmama.net/2010/11/blog-post.html

என்ற பதிவை வாசித்துவிடவும். அப்படியே இதையும்

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.balloonmama.net/2007/10/blog-post_26.html

// நிகழ்காலப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய சிந்தனைகள் வளரவேண்டும். கம்யூனிசம் அல்லது காந்தி சொன்னார் என்பதற்காக கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. கடிவாளத்தை அடிப்படையாக அல்லது உதாரணமாக வைத்து காருக்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர கடிவாளத்துடன் வாழ்க்கை முழுவதும் அலையக்கூடாது.

இசங்களைப் படித்தவர்கள் அங்கேயே நின்றுவிட்டதால்தான் நிகழ்கால சமூகப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் இன்னும் பழைய புத்தகங்களிலேயே தேடப்படுகிறது. //

***

அக்மார்க் ஒரிசினல் கம்யூனிசம் என்பது மார்க்ஃசும் எங்கெலும் சேர்ந்து வெளியிட்ட அறுபது பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை (The Communist Manifesto published 1847 -1848  ) .

ஒகே இப்போது கேட்போம்.

கம்யூனிஃச்ட் என்பவர் யார்?  

  • "1847 - 1848 ல் வெளியான Communist Manifesto யை வாசித்தவர்? 
  • வாசித்து அதற்கு ஆமோதித்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போனவர்?
  • வாசித்து அதற்கு மயங்கி  மார்க்ஃசுக்கும் எங்கெலுக்கும் சிலை வைத்து வணங்கியவர்?
  • வாசித்து அந்த அறிக்கையை பொக்காகப் போட்டு காசு பார்த்தவர்?

இதில் யாரை கம்யூனிஃச்ட் என்பீர்கள்?

மேலே சொல்லியவர்களில் யாரும் கம்யூனிஃச்ட் அல்ல.  யாரையாவது நீங்கள் கம்யூனிஃச்ட் என்று சொல்லியே ஆக வேண்டும் என்றால், எவனொருவன் அந்த 60 பக்க அறிக்கை மொத்தத்தையும் தன் வாழ்வில் இம்மி பிசகாமல் கடைபிடிக்கிறானோ அவனை வேண்டுமானால் "கம்யூனிஃச்ட்" என்று சொல்லலாம்.

வேதியியலில் ஒரு தனிமத்தின் கட்டமைப்பில் எதையாவது கூடக் குறைய மாற்றினால் அதற்கு வேறு பெயர் வைக்கப்படும். ஒன்றில் இருந்து சிலவற்றைப் பிரித்து அல்லது சேர்த்து வேறொன்றை உருவாக்கினால்,  அதை வேறு பெயரில்தான் அறிவியல் அழைக்கும்.  பீரியாடிக் டேபிளில் Atomic Mass-ல்  கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதற்காக பொட்டாசியத்தையும் (k 39.0983) அர்கனையும்(Argon- Ar 39.948)  ஒரே பேரில் அழைப்பது இல்லை.

அதுபோல மாவோயும், லெனினையும், நம்மூர் நல்லக்கண்ணுவையும் அவர்கள் அந்த 60 பக்க Communist Manifesto யை வாசித்தவர்கள் என்பதற்காக‌ கம்யூனிஃச்ட் என்று ஒரு வட்டத்தில் சேர்க்கவே முடியாது.  மாவோயிசம் , லெனினிசம் , நல்லக்கண்ணிசம் என்று வேண்டுமானல் சொல்லலாம்.

பிரபல கல்லூரி ஓனர் மற்றும் பல நிறுவனங்களின் முதலாளி வீரமணி அவர்களின் கொள்கையை "வீர‌மணியிசம்" என்று  சொல்லலாமே தவிர வேறு பெயரில் அழைக்க முடியாது. கூடாது. சரி 'பெரியாரிஃச்ட்' என்று யாராவது இருக்க முடியுமா என்றால்,  இல்லை. இல்லவே இல்லை. தன் சுய புத்தியைப் பயன்படுத்தி , தனக்கான சரி தவற்றை அறிந்துகொள்ள அல்லது தேடிக்கொள்ள முடியாதவன்  அல்லது பழைய இசங்களில் தன்னை தோய்த்து அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகிறவன் , நிச்சயம் பெரியாரைப் புரிந்தவனாக இருக்கவே முடியாது.

எனவே 'பெரியாரிஃச்ட்' என்பது நகைமுரண்.

இராமசாமி அய்யா "இதுதான் 10 கட்டளைகள். இதை தினந்தோறும் ஓதினால் அல்லது கடைபிடித்தால் நீ என் விசுவாசி/அடிமை/பக்தன் என்று போட்டுக்கொள்ளலாம்" என்று சொல்லியது இல்லை.

அவர் சொல்லியவற்றை சீர்தூக்கிப் பார்த்து ,  பகுத்து அறிந்து எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் ,  அதில் ஏதாவது  உங்களுக்கு சரி என்று பட்டால் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவர் சொன்னதில் இருந்து பட்டி டிங்கரிங் பார்த்து "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றும் உங்களுக்கான புதிய‌ இசங்களை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் , அப்படி அமைத்துக்கொண்ட பிறகு ,  அதை அவர் சொன்னார் என்று அவர் கருத்தாகச் சொல்ல வேண்டாம். அது உங்கள் கருத்தாகவே இருக்கட்டும்.

ஏதோ ஒரு இடத்தில் இன்று அய்போன் பயன்படுத்தும் ஒரு 6 ஆம் வகுப்பு மாணவருக்கு,  கிரகாம்பெல்லில் இருந்து ஃச்டீவ் வரையும் ,  போனுக்கு செலவிடும் மின்சாரத்தை கடத்தி வர , விஞ்ஞானிகளுக்குள் நடந்த AC vs DC சண்டைகளும் மின்சார வரலாறும், அய்போன்  தயாரிக்க சீன மக்கள் கொடுக்கும் விலையும், அதன் முதலீட்டார்களின் பயன்களும் ஏதும் தெரிந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. அந்த மாணவருக்கு அது அவரின் அப்பா கொடுத்த ஒரு gadget  அவ்வளவுதான். அவரிடம் போய் மல்லுக்கு நிற்பது , 'யாட்கின்' ஆற்றில் மீன் பிடிக்கும் 70 வயது வெள்ளைக்கார முதியவரிடம் "அம்மாதான் தமிழகத்தின் நிரந்த முதல்வர் , ஆனா செத்துட்டார், நிரந்தர பொதுச்செயலாளர் சிறையில் இருக்கார்..." என்ற கதைகள்  எல்லாம் தேவை அற்றது.

ட்வீட்டரில் "ராமசாமி என்ன கிழித்தார் எனக்கு?" என்று கேட்கும் பெண்களின் கேள்விகளுக்கு விடை . "அம்மா அவர் ஒன்றும் கிழிக்கவில்லை அப்படி ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கவே இல்லை. சுவீட் எடு கொண்டாடு " என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதான்.

இராமசாமியை விமர்சிக்க எத்தனையோ இருக்கிறது. அதைவிடுத்து

  • எனக்கு என்ன செய்தார்?
  • கிழவன் குமரியைக் கல்யாணம் செய்யலாமா?
  • பெரியாரைப் பிடிக்கும் என்று சொல்கிறாயே நீ ஒரு கிழவனைக் கட்டிக்கொள்வாயா?

போன்ற மயிர் பிளக்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உள்ளது? மனைவி இறந்த பிறகு , சட்டப்படி திருமண வயதை அடைந்த பெண்ணை , மனம் ஒப்பி மணப்பதை எதிர்க்கும் சம்முவம் இப்படியான கேள்விகளையும் கேட்கலாம்.

  • ரெண்டு பொண்டாட்டிக்கார கடவுளை வணங்குகிறீர்களே , "அய்யாம் ஆல்ரெடி மேரிடு, பட் அய் லைக் யூ ஆசைக்காக கட்டிக்கொள்கிறேன் " என்று ஒரு குறவர் வந்து கேட்டால் , ரெண்டாவது பொண்டாட்டியாக வாக்கப்படுவீர்களா?
  • அடுத்தவன் பொண்டாட்டியை அபகரித்த கடவுளை வணங்குகிறீர்களே  உங்கள் குடும்பத்தில் அப்படி நடந்தால் அதை ஏற்பீர்களா?
  • சிறு பிள்ளைகளை மணந்தவர்களை புகழ்கிறீர்களே , சிறு பிள்ளைகளை காவுகேட்டவர்களை கடவுள் சொல்கிறீர்களே என்று கேட்டுக்கொண்டே போகலாம். Hypocrisy  க்கு ஏதேனும் விடை உள்ளதா என்ன?

இராமசாமியை விமர்சித்து துவைத்துக் காயப்போடுவதே நீங்கள் அவருக்கு செய்யும் நல்ல செயல். அதற்காக இப்படி மொக்கை வாதங்களை வைக்க வேண்டாம்.

அன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களுக்கான விடைகளையும் சேர்த்தே கேளுங்கள்.  கடவுள் என்ற கதாபாத்திரம் சொன்னதாகச் சொன்னாலும் நம் வள்ளுப்பாட்டையா சொன்னதைக் கடைபிடியுங்கள். பாட்டையாவையும் கேள்வி கேளுங்கள்.  ஈரோட்டுக் கிழவனின் வாய் என்றாலும் , கடவுளின் வாய் என்றாலும் உங்களின் காதுகளுக்கு வரும் செய்திகளை,  கேள்வியோடு எதிர்கொள்ளுங்கள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
.