Thursday, March 16, 2017

பேய்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை - கதபொக்

டுகபட்டியில் இருந்து 'தனிச்சியம்' பிரிவு வழியாக 'கொண்டையம்பட்டி' வந்து சேரவேண்டும். ஒரு நாளைக்கு மூன்றுமுறை மட்டுமே இந்த தடத்தில் அரசு பேருந்து இருக்கும். பகல் நேரங்களில், சர்க்கரை ஆலைக்குச் செல்லும் 'ட்ராக்டர் வண்டிக்காரர்' ஏற அனுமதித்தால் , அதில் ஏறி வந்துவிடலாம். 'டயர் வண்டிக்கார‌ (மாட்டு வண்டி with டயர் சக்கரம்) அண்ணனுக்கே உட்கார இடம் இருக்காது. கரும்பை கழுத்துவரை கட்டி இழுத்து வரும் வண்டி அது. எனவே சும்மா வண்டியை வழித்துணைக்குப் பிடித்துக்கொண்டே வரவேண்டும்.

அப்போது 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.  மதுரைப் பதிப்பாக வரும் 'தினத்தந்தி' மற்றும் 'தினமலருக்கு' இடையே கண்ணுக்கு தெரியாத வாய்க்கா வரப்பு தகராறு நடந்துகொண்டே இருக்கும். சில நேரம் அது வெளியில் தெரியும் அளவுக்கு "ஆதித்தனார் எல்லாருக்கும் அப்பாவா?" என்று தினமலர் அதன் தகுதிக்கு (அதன் தகுதி எனக்கு பின்னாட்களில்தான் தெரிந்தது) பேசும். அந்த வயதில் எனக்கு தினத்தந்தியில் வரும் "சிந்துபாத்" தொடரும் , தினமலரில் வரும் "டார்சன்" தொடரும் பிடிக்கும் என்பதால் , இரண்டுக்குமே இரசிகன். தினமலர் 'வாரமலர்' வந்தவுடன் , தினமலர் ஏதோ தரம் உயர்ந்துவிட்டது போல எனக்குத் தோன்றியது. அப்பாவிடம் சொல்லி , ஞாயிற்றுக்கிழமை மட்டும் தினமலர் வீட்டுக்கு வருமாறு சந்தா செலுத்தி வாரமலர் வாசகனாகிவிட்டேன்.


வாரமலரில் 'ஆர்னிகா  நாசர்' என்ற புனைப்பெயரில் வரும் பேய்க்கதைகள் , டெரர் கதைகள் அப்போது எனக்கு பிடித்திருந்தது. "அடுத்தவாரம் என்ன நடக்கும்?" என்று பள்ளியில் மதிய நேர இடைவேளையில் 'வாவரக்காச்சி' மரத்தடியில் உட்கார்ந்து விவாதிப்போம் நாங்கள். அப்படியான சூழலில் , "நாம் ஏன் டெரர் கதை எழுதக்கூடாது?" என்ற விபரீத ஆசை வந்தது எனக்கு. ஆனால் எனக்கு அந்த தேதியில் பேய் அனுபவங்கள் இருந்தது இல்லை என்பது பெருங்குறை.  நேரடி அனுபவம் இல்லாமல் எப்படி கதை எழுதமுடியும்? கதை புனைவாக இருந்தாலும்,  பார்க்காத பேய்களை கதையில் எப்படி கூட்டிவருவது? என்ற அறிவுச்சிக்கல் எனக்கு.

நீங்கள் பேயைச் சந்தித்து இருக்கிறீர்களா? எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.  ஒருவேளை பேய்களுக்கு என்னை பிடிக்காமல் போய் இருந்திருக்கலாம்.  இத்தனைக்கும் பக்கத்துவீட்டில் எதிர்காலத்தை கணிக்கும் சோதிடரும் , பேய்களையும் , முனிகளையும் பெண்களிடம் இருந்து விரட்டும் சாமியாடியும் (முத்தண்ணனின் தம்பி அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை) இருந்தார். எங்கள் பக்கத்துவீட்டுச் சோதிடரின் தம்பி பிற்காலத்தில் கேப்டனின் ஆஃச்தான சோதிடராக ஆகிவிட்டார் என்பது தனிக்கதை. நான் பத்தாவது பெயில் ஆவேன் , என்று கணித்துச் சொன்னவர் அவர். அப்பாலிக்கா 435 (445 ??) மார்க்கும் கணக்கில் சதமும் அடித்தபின்னால் அவர் வீட்டு வழி போகும் போதெல்லாம்,  'அய்யோ பாவம் விசயகாந்த்' என்றுதான் தோன்றும். நிசமாகவே கேப்டன் இன்று பாவமாகிவிட்டார்.


அது என்னவோ எங்கள் ஊர் பேய்களும் , முனிகளும் பெண்களை மட்டுமே பிடிக்கும் போல. பக்கத்துவீட்டு சாமியாடி அண்ணன் , பெண்களைப் பிடித்த பேய்களை ஓட ஒட விரட்டி  , 'கல்லணை' போகும் வழியில் உள்ள ஒரு மரத்தில், ஆணி அடித்து முடிப்பார்.  மண்டையை மரத்தோடு சேர்த்து , பெண்ணின் முடியில் சில கற்றைகளை எடுத்து ஆணியில் மரத்தோடு அறைந்து, சடக்கென்று மண்டையை ஆட்டி , முடி  பிடுங்கிக்கொள்ளுமாறு செய்வார்.. இந்த சிகிச்சை , பேயின் 'பிடி' தன்மைக்கு ஏற்ப மாறும். சில பேய்கள் சாமியாடி சொன்னாலே போய்விடும்.  சில பேய்களை தண்ணீர் அடித்து விபூதி அடித்து சில நேரம் கம்பால் அடித்தும் விரட்டுவார். இவரின் இந்த அட்டூழியங்களை அருகில் இருந்து பார்த்து பார்த்து , "எனக்கு பேய்பிடிச்சா சின்னப்பேயா பிடிக்கனும் விபூதி தண்ணீர் அடிப்பதில் ஓடும் பேயாக இருக்க வேண்டும்" என்று ஊர் முனியாண்டியிடம் வேண்டிக்கொள்வேன்.

இவர் ஆணி அடித்த‌ அந்த மரங்களைச் சுற்றி சுற்றி வந்தாலும், 'கூட்டாம்பீ பேள 'நண்பர்களுடன் பலமுறை மரத்தைச் சுத்தி உட்காந்தாலும் , பேய்கள் வந்து சிநேகம் கொள்ளவே இல்லை என்னிடம். அனுபவம் இல்லாமல் எப்படி வாரமலர் ஆர்னிகாக நாசர் மாதிரி பேய்க்கதை எழுதுவது?  எனக்கு அப்போது இது பெரும் சவாலாக இருந்தது. அதுவும் ஆர்னிகா நாசர் ஊட்டி போன்ற குளிர் பிரதேச 'முட்டைக்கோசு' தோட்டங்களை எல்லாம் வர்ணித்து எழுதும்போது,  எங்க ஊர் நெல்வயல் , பாரதிராசா  காதல் கதைகளுக்கு மட்டுமே உதவும் என்று நம்பிவிட்டேன். எங்கள்   ஊர் புளியமரங்கள்கூட என்னை பேய்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எனக்கும் பேய்க்குமான ஏழாம் பொருத்தங்களை . இத்தனைக்கும் சாமியாடி அண்ணன் பேயோட்டும்போது அவருக்கு எடுபிடி வேலைகளைச் செய்வது நானும் அவரின் மகன் சுப்பிரமணியனும்தான்.


இந்த தடைகளை எல்லாம் உடைத்து , பேய்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் , அந்த அனுபவத்தில் ஒரு ஆர்னிகாநாசர் தரக் கதை எழுதி புகழ் பெறவேண்டும் என்ற வெறி ஏறிக்கொண்டே போனது.  ஊர்தாண்டி 'புதுப்பட்டி' அருகே உள்ள 'செவக்காட்டு' பனங்காட்டில் ஒருவரை முனி அடித்துவிட்டதாக செய்தி வந்தது. இந்த 'செவக்காடு' ஒரு காலத்தில் சோளம் விளைந்த பூமி. வீடுகட்ட செம்மண் தோண்டி தோண்டி , இறுதியில் பெரும் பள்ளங்களும் , கத்தாழைகளும் ,பனைமரங்களும் மட்டுமே நிறைந்த இடமாகி, முனிகள் வாசம் செய்ய தோதான இடமாகிவிட்டது.  நான் சொன்ன அந்த பக்கத்து வீட்டு முத்தண்ணன் வழி சொந்தங்களில் ஒருவர்,  எருமைமாடு மேய்ப்பவர். சுமார் 40 எருமைகள் வைத்து இருப்பார். அவரின் சொந்த எருமைகள் போக , பிறரின் எருமைகளையும் கூலிக்கு மேய்ப்பார். அவரோடு சேர்ந்து சின்ன வயதில் அந்த செவக்காட்டு பகுதிக்கு மாடு மேய்க்க சென்றுள்ளேன். அப்போது அது சோளக்காடு.


செவக்காட்டுப் பகுதி மட்டும் இல்லாமல், கொண்டையம்பட்டி செல்லும்வரை பல பேய்கள் இருப்பதாக 'கள்வேலிபட்டி' சகா ஒருவன் சொன்னான். ஆர்னிகா நாசர் பித்தம் தலைக்கேறி, பேய்களைச் சந்தித்து மல்லிப்பூ மற்றும் கொலுசு சத்தத்தை நேரிடையாக அனுபவிக்க வேண்டும் இப்படி எல்லா ஆசைகளும் சேர்ந்து என்னை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தது.  வடுகபட்டியில் உள்ள சக ஆசிரிய நண்பரிடம் அப்பா கடன் வாங்கி இருந்தார். அவரிடம் வட்டிப்பணம் கொடுத்துவிட்டு வருவதற்காக என்னை அனுப்பினார். அந்தி சாயும் வேளையில், வடுகபட்டியில் இருந்து வரும் பேருந்தில் திரும்பிவந்துவிடச் சொல்லி என்னை அனுப்பினார். போகும்போது பேருந்தில் சென்றுவிட்டேன். வரும்போது எனது 'பேயாசை' பிடித்து ஆட்ட , வேண்டும் என்றே பேருந்தை தவறவிட்டு விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன்.

'வடுகபட்டியில்' இருந்து 'தனிச்சியம்' வரை வருவது சிக்கல் இல்லை. NH 7 ஃகைவேயில் நடந்து வந்துவிடலாம்.  திண்டுக்கல் செல்லும் பேருந்தில் அடிபடாமல்  இருந்தால் போதும். ஆனால், தனிச்சியம் பிரிவில் இருந்து , 'கொண்டையம்பட்டி' வழியாக ஊர் வந்து சேருவது என்பது இம்சையானது. கரும்புக்காடுகள் சூழ ஆங்காங்கே மண்ட‌வெல்லம் காய்ச்சும் கூடாரங்களில் சிலர் வேலை செய்து கொண்டிருக்க என்று கலவையான வழி. கவலையானதும் கூட. பல மைல் தூரங்களுகுக்கு தவக்கா சத்தம் மட்டுமே துணை.

என் கவலை எல்லாம் பேய்கள் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதுதான். எனவே , ட்ராக்டர் , டயர்வண்டி எல்லாவற்றையும் தவிர்த்து,  மங்கிய‌ நிலா வெளிச்சத்தில் நடக்க ஆரம்பித்தேன். கொண்டயம்பட்டி தாண்டி மேலச்சின்னன்பட்டி வரும்வரை பேய்கள் என்னைப் பார்க்கவே இல்லை. கள்வேலிபட்டிக்கும் நான் சொன்ன அந்த செவக்காட்டுக்கும் இடையில் பேய்கள் என்னை சந்தித்தால்தான் உண்டு. இல்லையென்றால் ஊர்வந்துவிடும். கடைசிவரை எந்த கொலுசு சத்தமோ மல்லிகை வாசமோ எனக்கு கிடைக்கவே இல்லை.

புதுப்பட்டி அருகே வரும்போது முதல் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பெண்களின் கொலுசு சத்தமும், அவர்கள் தலையில் வைத்து இருந்த மல்லிகைப்பூ வாசமும்தான் அந்த செவக்காட்டுப் பகுதியில் கிடைத்தது. பேய்கள் என்னைச் சீந்தவே இல்லை.

ஒருவேளை ஊட்டி முட்டைக்கோசு தோட்டங்களில் ஆர்னிகாநாசருக்கு மட்டுமே  பேய்கள் கிடைக்கும்போல என்று மனதைத் தேத்திக்கொண்டேன். வீடு வந்து அப்பாவிடம் மண்டகப்படி அர்ச்சனையும் அம்மாவின்  பூசைகளும் கிடைத்து கிளைக்கதை. அப்ப எல்லாம் செல்போனா இருந்தது? போன ஆள் திரும்ப‌ வரும் அவரை காத்து இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. திரும்பி வந்துவிட்டால் சாத்துவார்கள் ஏன் போனே என்று. திரும்பி வராவிட்டால் ஊரே கவலைப்பட்டு ஆத்துப்பக்கம் போய் பிணந்தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

இருந்தாலும் நான் சில பேய்களைச் சந்தித்ததாக கதைகட்டி , அடுத்த நாள் ப‌ள்ளிக்கூட வாவரக்காச்சி மரத்தில் கதை கட்டிவிட்டேன். உணவு இடைவேளைக்குப் பிறகும் கதை தொக்கி நின்றதால், கதை எழுதும் நிலை வந்துவிட்டது. நானே ஏற்படுத்தினேன் என்று சொல்லக்கூடாது அது எழுத்தாளருக்கு அழகல்ல.  வாரம் ஒரு பகுதியாக திகில்கதை எழுதி கதையின் தொடர்ச்சி கெட்டுவிடாமல் இருக்க அவ்வப்போது செவக்காட்டுப்பக்கம் நடந்துகொண்டு இருப்பேன்.  நண்பர்களுக்குத்தான் திகில் பிடித்தது எனக்கு கடைசிவரை பேய்பிடிக்கவே இல்லை.

#கதபொக்

No comments:

Post a Comment