Wednesday, November 23, 2005

சாய்பாபாவின் விழா மனது கஷ்டமாய் இருக்கிறது.



பதிவு 21: சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள்- மனது கஷ்டமாய் இருக்கிறது.

நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் இருக்கும் வேறுபாடுகளும், ஆத்திகத்துக்குள்ளேயே இருக்கும் மத வேறுபாடுகளும், ஒரு மத அமைப்புக்குள்ளேயே இருக்கும் சாதிப் (அல்லது உட்பிரிவுகள்) பிரிவுகளும் மனித இனம் இருக்கும் வரைக்கும் தீராதவை. இது பற்றிய விவாதங்களும் முடிவு பெறாதவை. கோவில்களில் இருக்கும் பணம் சார்ந்த அணுகுமுறைகளும் கடவுளைக் கும்பிடுவதில் புகுத்தப்பட்டுள்ள பல இடியாப்பச் சிக்கல்களும் (சாமிய இப்படிக் கும்பிடனும், இப்படி பூசை செய்யாட்டி கெட்டது... ) ,சாதீய அணுகு முறைகளும், என்னை கோவில்களில் இருந்து வெகுதூரத்தில் வைத்து விட்டன.

மேலும் கடவுள் பற்றிய எனது நம்பிக்கைகள் சிறுவயதில் இருந்த அளவிற்கு இப்போது இல்லை.எனது முயற்சிகள் தோல்வி அடைந்து அலுப்பாய் இருக்கும் போது "கடவுள் நகரத்தில்" உள்ள எல்லாக் கடவுள்களுக்கும் முருகா என்றோ, இன்சா அல்லா என்றோ, ஓ ஜீசஸ் என்றோ ஒரு தூதுவிடுவேன். மற்றவர்களை எப்படிக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. :-). "இன்சா அல்லா " என்ற வார்த்தை நான் குவைத்தில் வேலை பார்க்கும் போது வந்து ஒட்டிக்கொண்டது. கிறித்துவப் பள்ளிகளில் படித்ததால் ஜீசமும் , சிறுவயதில் ராணிமுத்துக் காலண்டரில் பார்த்த அழகான உருவத்தால் முருகனும மனதில் ஒட்டிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிறருக்கு உதவுவதன் மூலம் மிக எளிதாக மன அமைதியை அடைய முடிவதால் கடவுளைவிட்டு வெகுதொலைவுக்கு வந்துவிட்டேன். குழந்தைகளை நல்வழிப்படுத்த இந்த (சாப்பிடாட்டி சாமி கோச்சுக்கும் என்பது போன்ற பய முறுத்தல்களுக்கு) நம்பிக்கைகள் உதவும் என்பதற்காகவே சில சமயங்களில் கோவிலுக்குச் செல்வது உண்டு.

இன்று சத்ய சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாப்படங்களை தினமலரில் பார்க்க நேர்ந்தது. சுனாமியாலும் , மழை வெள்ளத்தாலும் இன்னும் பல இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கும் பல குழந்தைகளைக் கொண்ட நமது நாட்டில், இப்படி ஒரு ஆடம்பர விழா தேவையா?. பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அரசியல் தலைவர்களும் சில சினிமா நட்சத்திரங்களும் செய்யும் இந்த ஆடம்பர விழாக்களை இவர் ஏன் செய்ய வேண்டும்?
















படங்கள்: தினமலர்

இவர் கடவுளா, கடவுளின் அவதாரமா என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.இவரையோ அல்லது வேறு எந்த மனிதர்களியும் கடவுளாகவோ அல்லது கடவுளின் அவதாரமாகவோ நான் பார்க்கவில்லை. இவர் ஏற்கனவே செய்துள்ள ஒரு தண்ணீர்த்திட்டம் மக்களுக்கு உண்மையாக உபயோகமானது. எப்படியோ ஒரு பெரிய கூட்டமும் பணமும்,செல்வாக்கும் இவருக்கு சேர்ந்துவிட்டது. இதை நல்லமுறையில் பயன்படுத்தி மேலும் பல நல்ல திட்டங்களைச் செய்யலாமே.அதுபோல் இவர் மனது வைத்தால் பல காரியங்கள் செய்யலாம்.

பக்தர்களின் கொண்டாட்டங்கள் அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. அவரை நம்புபவர்களை நான் குறைகூறவோ, அல்லது அவர்களின்ன் நம்பிக்கைகளை விமர்சிக்கவோ இல்லை. கொண்டாட்டங்கள் தேவைதான் ஆனால் கட்டவுட்டும்,அரசியல் தலைவர்களைப் போல கார் பவனியும் கொஞ்சம் என்னை வெட்கப்படவைக்கிறது. இவருக்கு முன்னோடியாக அறியப்படும் "ஸ்ரீடி பாபா" http://www.saibaba.org/ இந்த அளவுக்கு கொண்டாட்டங்களை விரும்பியவராகத் தெரியவில்லை.

சத்ய சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாப்படங்களை தினமலரில் பார்க்க
http://www.dinamalar.com/photo_album/23nov2005/index.asp


பி.கு:
இவருக்கு ஆதரவாக http://www.sathyasai.org/ போன்ற எண்ணற்ற செய்தித்தளங்களும் ,இவர் செய்யும் செயல்களை விமர்சித்தும் பல செய்தித்தளங்களும் உள்ளது. இவரைப்பற்றி BBC ன் செய்திகள் பல முறை வலைப்பதிவுகளில் விவாதிக்கப்பட்டு விட்டது.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040621_saibaba.shtml

மேலும் இவரது முன்னாள் பக்தர்கள் பல செய்திகளை இந்த இணையத்தளதில் பதிந்துள்ளார்கள்.http://www.exbaba.com/

****************



****************