Tuesday, November 29, 2005

தமிழ்நாடு மழை,வெள்ளம் எனது எண்ணங்கள்

பதிவு23:தமிழ்நாடு மழை,வெள்ளம் எனது எண்ணங்கள்

எனது அம்மா திருச்சியில் இருக்கிறார். இவர் எனது மனைவி வழி வந்த அம்மா அதாவது புரியும்படி தமிழில் சொல்லவேண்டுமானால் மதர் இன் லா. என்னைய முறைக்காதீங்க. யாராவது தனது சொந்தங்களை பிறருக்கு அறிமுகப்படுத்தும் போது தமிழில் சொல்கிறார்களா என்ன? இவுங்க தான் என்னோட யொவ்பூ. இவருதான் கஸ்பெண்டு, இவரு கசின் அப்படித்தான் நடைமுறை பேச்சு வழக்கம் உள்ளது. நீங்கள் அப்படி இல்லையென்றால் சந்தோசமே. தொலைக்காட்சி தொடர்களின் புண்ணியத்தில் இப்போதெல்லாம் மாமியார் என்றாலே எதோ வில்லி போல் இருக்கிறது.அத்தை என்பது மாமியாராகவும் இருக்கலாம் அல்லது அத்தையாக மட்டும் இருக்கலாம்.யாராவது மாமியாருக்கு மாற்றுத் தமிழ்ச் சொல் இருந்தால் சொல்லுங்கள். அதுவரை அம்மா என்று சொல்வதே எனக்குப் பிடித்திருக்கிறது.போனவாரம் வியாழன் இரவு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

வாரம் ஒருமுறை சனிக்கிழமை காலை வேளையில் நாங்கள் அவரிடம் பேசுவோம். மற்றபடி ஏதும் முக்கிய விசயம் என்றால் வார நாட்களிலும் பேசுவது உண்டு.இந்தியாவில் இருந்து திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தால் முதலில் நமக்கு வருவது பயம் தான் . யாருக்கு என்னவோ? ஏதாவது பிரச்சனையா ? என்பது போல் எதிர்மறை எண்ணங்களே முதலில் வரும். அது என்னவோ தொலைதூரத்தில் வசிக்கும் போது வீட்டில் இருந்து வரும் "எதிர்பாராத" தொலைபேசி அழைப்புகள் சிறிது பயத்தையே கொடுக்கின்றன. அதுவும் திருச்சியே தனித்தீவு போல் கிடப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் நம்மை பயம் கொள்ளச்செய்கின்றன. நல்லவேளை "சன்" போன்ற சமாச்சாரங்கள் வீட்டில் இல்லை.இருந்தாலும் இங்கே உள்ள உள்ளூர் தொலைக்காட்சியிலேயே தமிழ்நாட்டில் பெய்யும் மழையையும், பேருந்து ஆற்றில் மூழ்கி கிடப்பதும் முக்கியச் செய்தியாக வந்து போனது. இவ்வாறான சூழ்நிலையில் அம்மாவின் அழைப்பு வந்தது கொஞ்சம் பயத்தையே கொடுத்தது.அவரிடம் பேசியபின்பு, அவர் பத்திராமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொஞ்சம் நிம்மதியோனோம்.

தொடர்ந்து பெய்த மழையில் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்தளம் (தரைத்தளம் Ground Floor) தண்ணீரால் ஆக்ரமிக்கப்பட்டது. குளியலறை,கழிப்பறைகளின் கழிவுநீர்க்குழாய்களின் மூலமாகவும் தண்ணீர் வீடுகளுக்குள் வர ஆரம்பித்து விட்டது.பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சாமான் சட்டுகளை கட்டில்,பரண் மற்றும் உயரமான இடங்களில் பாதுகாப்பாக வைத்துவிட்டு தெரிந்த வேறு நண்பர்களின் வீடுகளில் சென்று தங்கியுள்ளனர்.தெருவில் ஓடும் மார்பளவு தண்ணீரில் இவரும் ஒருவழியாக தப்பித்து அருகில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
















மழை,வெள்ளம் சேதங்களைப் பயன்படுத்தி ஆங்காங்கே திருட்டுகள் நடந்துள்ளது.இதன் பொருட்டு பலர் வீடுகளைக் காலி செய்யாமல் தண்ணீரிலேயே வாசம் செய்துள்ளனர். அல்லது வீட்டுக்கு ஒருவர் என்று வீடுகளைப் பாதுகாக்க இருந்துள்ளனர். எனது அம்மாவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ளவர்கள், பெரிய உதவிகளைச் செய்து உள்ளனர். காலி செய்துவிட்டுப்போன வீடுகளைக் கண்காணித்து திருட்டு போன்ற செயல்களில் இருந்து காத்துள்ளனர். மேலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து சமையல் செய்யமுடியாமல் இருந்த அக்கம் பக்கத்தவர்களுக்கு உணவு வழங்கியும், சில வீடுகளில் ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கிப் பொழுதைக் கழித்துள்ளனர்.இது போன்ற துயர் நேரங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது நல்லது. எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பது போல் , திருட்டுக் குற்றங்கள் நடத்துவோரை என்ன செய்வது?

இப்போது தமிழகத்தில் சமீபத்தில் நிலவும் சூழ்நிலை அசாதாரணமானது. சுனாமி வந்த பின்பும் இது போன்ற இயற்கைச் சீற்றங்களின் வீரியம் இன்னும் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன்.வெள்ள நிவாரணப் பொருட்கள் தருவது,பணம் தருவது போன்ற தற்காலிகத் தீர்வுகள் அவசியமானவைகளே.ஆனால், இதுபோன்ற காலங்களில் மக்கள் என்ன செய்யவேண்டும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.சென்னையில் நிவாரண உதவி வழங்குவதில் வந்த குழப்பத்தினால் சில அப்பாவி உயிர்கள் பலியாயின.பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் அல்லது அறியாமையால் அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் பேருந்துகள் தண்ணீரில் மூழ்கி பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. நடந்துவிட்ட இயற்கைச்சீற்றங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு, அரசின்மீதோ அதன் செயல்பாட்டிலோ, குற்றம் குறை காண்பது எனது நோக்கமல்ல.இனிவரும் காலங்களில் இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதே நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய விசயமாகும்.

இயற்கையின் சீற்றமும் அதனால் ஏற்படப்போகும் மழையின் அளவு, புயலின் பாதை போன்றவை 99% கணிக்கப்படக்கூடியதே. சுனாமி வேண்டுமானால் நமது நாட்டுக்கு புதிய இதுவரை கண்டிராத இயற்கைச் சீற்றமாக இருக்கலாம். மழை,புயல் போன்றவை இப்போதுள்ள தொழில்நுட்பங்களால் துல்லியமாக கணிக்கப்படக்கூடியவையே. அமெரிக்காபோல் தினமும் ஒரு தட்பவெப்பம், பனி, சூறாவளி போன்ற தொடர் பாதிப்புகள் இல்லாவிட்டாலும், நாம் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.தற்போது உள்ள சாலைகளையோ, ஏரி மற்றும் குளத்தையோ உடனே சீர்திருத்திவிடமுடியாது.உடைந்து போன கரைகளையும், சாலைகளையும் செப்பனிடலாமே தவிர அதனை முழுதுமாக சீர்திருத்திவிடமுடியாது. பலியான அப்பாவி உயிர்கள் என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதவை.நல்ல திட்டங்களை 5 அல்லது 10 வருட தொலை நோக்குத்திட்டமாகப் பிரித்து பல காரியங்களைச் செய்ய வேண்டும்.இதற்கான நிதிநிலை (பட்ஜெட்) மக்களின் நலத்தை கவனத்தில் கொண்டு ஒரு நிரந்தர அமைப்பாக இருக்கும்படி ஏதாவது செய்யவேண்டும். அரசியல் கட்சிககளின் மாற்றத்தால் பாதிக்கப்படாத ஒரு தொலை நோக்குத்திட்டமாக இருக்க வேண்டும்.


இயற்கைச் சீற்றங்கள் வருவதற்குமுன் கீழ்க்கண்டவைகள் செய்யப்படவேண்டும்.
இது ஏதோ ஒருமுறை செய்துவிட்டு பின்பு கிடப்பில் போடும் திட்டமாக இல்லாமல் உண்மையான அவசரகாலத் திட்டமாக இருக்க வேண்டும்.

வானிலை அறிக்கையை உண்மையான ஒரு ஆக்கபூர்வமான அறிக்கையாக மாற்றவேண்டும்.

புயலின் திசை, அதன் வீரியம் பாதிக்கப்போகும் பகுதிகள் போன்றவை தெளிவாக மக்களுக்கு எடுத்துக் கூறப்படவேண்டும்.

மக்களை எச்சரிகை செய்ய சரியான ஊடகங்கள் பயன்படுத்தப்படவேண்டும்.அனைத்துப்பகுதி மக்களுக்கும் சரியான நேரத்தில், சரியான தகவல் போய்ச்சேரும்படி இது அமைக்கப்படவேண்டும்.

கிராம,வார்டு அளவில் இது போன்ற நேரங்களில் மக்கள் எங்கு தங்கவேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பவை முன்னரே திட்டமிடப்படல் வேண்டும். இது வருடம் ஒருமுறை சரிபார்க்கப்படல் வேண்டும்.மாற்றங்கள் இருப்பின் அதுபற்றி மக்கள் அறிவுறுத்தப்படவேண்டும்.

தங்குமிடங்கள் சரியான தகவல் தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.தங்குமிடங்களில் உணவு,தண்ணீர்,மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.சரியான கால அளவிகளில் இவை சரிபார்க்கப்பட்டு, எப்போதும் நல்ல பொருட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.(பள்ளிகள்,கல்லூரிகள் போன்றவை நல்ல இடங்களாகும்)

ஒவ்வொருஅரசு மற்றும் தனியார் பேருந்துகள்,கனரக வாகனம் போன்றவைகளில் சரியான தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படவேண்டும்.


இயற்கைச்சீற்றங்கள் வரும் போது ,நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது கீழ்க்கண்டவைகள் செய்யப்படவேண்டும்.

அரசு மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும்.இதற்கென்று ஒரு செய்தித்டொடர்பாளர் இருக்க வெண்டும்.

அரசின் செய்தி அரசின் செய்தியாக அப்படியே மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும்.

அனைத்து (தனியார்,அரசு) ஊடகங்களும் அரசின் செய்தித்தொடர்பாளர் தரும் செய்தியை அப்படியே மக்களுக்கு ஒளி/ஒலி பரப்பவேண்டும். இது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அரசு உண்மையச் சொல்லுமா என்று கேட்கவேண்டாம். நிச்சயம் ஆளும் அரசுகள் பீதியைக் கிளப்பும் (சன் வகையறா அல்லது தாத்தா ஆட்சியில் ஜெயா வகையறா) வண்ணம் தகவல் தராது.

நீண்ட காலத்திட்டங்களாக செயல்படுத்த வேண்டியது.

கண்மாய்/குளம்/ஏரி மற்றும் ஆறுகள் தூர்வாருதல்/சுத்தப்படுத்துதல்.

கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள கழிவு நீர்/மழை நீர் வெளியேற்றும் வழிகளைச் சீர் செய்வது.

தொழில் சார்ந்த நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு அமைப்போர் தங்களின் நிலத்தில் 1/3 பங்கு அப்படியே நிலமாக வைத்து இருக்க வேண்டும். அதாவது அந்த பங்கு நிலம் தார்,சிமெண்ட் கொண்டு பூசப்படாமல் (மூடப்படாமல்) இருக்க வேண்டும்.அதில் மரங்கள் வளர்ப்பதோ தோட்டங்கள் போடுவதோ ஊக்குவிக்கப்படவேண்டும்.

தனிநபர் இடங்கள் (வீடுகள்) 1/4 பங்கு நிலத்தை நிலமாக வைத்து இருக்க வேண்டும்.

நிலத்தடி நீருக்கு வரி வேண்டும். அதாவது ஒருவர் அல்லது ஒரு தொழில் நிறுவனம் தனது நிலத்தில், தானாக கிணறோ, ஆழ்துளைக் கிணறோ வைத்திருப்பாரேயானால் அவர்கள் அரசுக்கு வரி செலுத்தவேண்டும்.

அரசும் இதன் மூலம் வரும் வருமானத்தை வேறு வகையில் திருப்பாமல் நிலத்தடி நீர் மற்றும் அது சார்ந்த மூன்னேற்றத்திட்டங்களுக்கும், நீர் வளம்/கழிவு நீர் சார்பான திட்டங்களுக்கு பயன் படுத்த வேண்டும்.

இதுபற்றி மற்றவர்களின் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

















இதுபோன்ற நெருக்கடிக்காலத்தில் கடமையாற்றும் அரசு,இராணுவம்,காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வ நண்பர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் வீரர்கள்.

படங்கள்: நன்றி தினகரன்

****************


****************