Tuesday, October 13, 2015

சர்வரோக நிவாரணி ஆதி பல்பொடி

ணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இங்கே முன்னோர்கள் எனப்படுபவர்கள்,  ஆதி ஆதி ஆஆஆ ஆதி அந்தம் எல்லாம் தாண்டிய ஆதிமனிதர்கள். இந்த ஆதி காலம் என்பது ஆத்தீசூடிக்கு முன்னால் உள்ள காலம். ஆதி காலம் என்பது இந்த ஆதாமுற்கு முந்திய முன்னால் உள்ள காலம். காலங்களுக்கு முந்திய காலம். கலாமாலும் கண்டுபிடிக்கமுடியாத காலம்.ஆத்திச்சூடியும் இருந்தாலும் இது அவை எல்லாவற்றுக்கும் முந்திய காலம். அக்காலத்தில் இருந்தவர்கள் வாயால்தான் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை எங்களது பேசு புக் மடத்தில் பேசிப் பேசிக் கண்டுபிடித்தோம்.

சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புதான் இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த அனைத்திலும் சிறந்தது என்று "தாமசு ஆல்வா எடிசன்" ( ஆல்வா -வில் உள்ள "ஆ" வை கவனிக்க) இன்று கனவில் அனைவருக்கும் செய்தியைச் சொன்னார். இதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" . சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த சிற‌ப்புக்கொண்டது இது. பேசிப் பேசி கண்டுபிடிக்க முடியாத அல்லது பேசு பொக் கணக்கு இல்லாத சாதரண மனிதர்கள் பலநேரம் "ஆதி என்றால் எந்த ஆண்டு என்று கி.மு வில் ஒரு எண் சொல்லு" என்கிறார்கள் இவர்களின் பேச்சைக் கேட்கவேண்டாம் என்று அவசரச் செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே நம்பிக்கையாளர்கள் பேசு பொக் பக்கம் வந்து எங்கள் பசனைக் கூட்டத்தில் சேர்ந்து பேசிப் பேசி பலவற்றைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்.

ஆதி மனிதனின் பெயரே ஆதிதான். ஆதி1 ஆதி2 ஆதி 3 என்று பெயர் இருக்கும். ஆதி மனிதன் எப்படி எண்களைப் பயன்படுத்தினான் என்று நீங்கள் கேட்பீர்களேயானல் உங்களைப் பார்த்து சிரிப்பதைத்தவிர‌ வேறுவழியில்லை. எல்லாம் தெரிந்தவன்தான் ஆதி. அடுத்த தலைவர் படத்திற்குகூட "ஆதி" என்றுதான் பெயர் வைக்கப்பட உள்ளது. ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான் என்ற கண்டுபிடிப்பைக் பேசு பொக் மடத்தில் ஆதிக் கடவுள் அறிவித்த தருணம் ஆதி உலகில் முக்கியமானது. அவர்  சொன்னபோது அனைவரும்

ஆதி ஆதி ஆஆ தீ
ஆதி ஆதி ஆத்தாடி
ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி
ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ!

என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். ஆதிமனிதன் போலவே ஆனால் ஒரே ஒரு "ஆதி ஆடு" மட்டும் ஆப்பிள் சாப்பிட்ட காரணத்தால் எதிர்த்து கேள்வி கேட்டது. "நாமும்தான் வாயால் சாப்பிடுகிறோம் எல்லாப் பக்கிகளும்தானே வாயால் சாப்பிடுது. நீங்க என்ன புச்சா கண்டுபிடிச்சிட்டீக?" என்றது அந்த ஆதி ஆடு சாரி கறுப்பு ஆடு. ஒரு கேள்வியால் காண்டாகிப்போன ஆதிக்கடவுள், அவரை பேசு போக் மடத்தில் இருந்து விலக்கிவிட்டார். இருந்தாலும் ஏதாவது ஒரு பதில் சொல்லி கூட்டத்தைக் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை உண‌ர்ந்தார் ஆதிக்கடவுள்.

மருதையில் மண்டபம் பிடித்து "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" என்ற உண்மையை விளக்கிக்கொண்டிருந்த தனது செயலாளரை புறாவைவிட்டு வரவ‌ழைத்தார். (ஆதி ஆதி ஆதி எல்லாம் ஆதிமுறை) . புஃச்ப வாகனத்தில் வந்து இறங்கிய செயலாளர், இறங்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாக் தெரிந்தார். என்னவென்று நேரடியாகக் கேட்டால் கடவுளின் பதவிக்கு இழுக்கு என்று எண்ணி,  ஆதி கடவுள் மோந்து பார்த்தார். உரேகா ..ஆம் மருதையில் இருந்து வந்திறங்கிய செயலாளரின் வாயில் இருந்து ஒருவித புதிய‌நெடி வந்துகொண்டு இருந்தது. அது என்ன என்று கேட்ட ஆதிகடவுளிடம் , தான் மருதை அரசரடி டீக்கடையில் வாங்கிய பல்பொடி பாக்கெட்டைக் குடுத்தார் செயலாளர். அந்தக் கணமே அதற்கு ஆதி பல்பொடி என்று நாமகரணம் சூட்டினார் ஆதி கடவுள். 

அடுத்த நாள் பேசு பொக் கூட்டத்தில் இவ்வாறு ஆதிக் கடவுள் அறிவித்தார்.

உணவே மருந்து.
ஆதி வாயால் சாப்பிட்டான்.
ஆதி பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான்.
ஆதி பல்பொடியில் பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான்.

என்ன வேணுமினாலும் சாப்பிடலாம் .
எவ்வளவு வேணுமினாலும் சாப்பிடலாம்.
ஆனால் ஆதி பிராண்ட் பல்பொடியில் பல்வெளக்கிய பிறகே சாப்பிட வேண்டும்.

அனைத்து தொண்டர்களும் ஆரவரம் செய்தார்கள்.

ஆதி ஆதி ஆஆ தீ
ஆதி ஆதி ஆத்தாடி
ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி
ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ!

என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். 

அனைவருக்கும் பலவித பேனர்கள் வழங்கப்பட்டது. 


  • ஆதி பல்பொடியே அனைத்திற்கும் மருந்து.
  • மார்சியன் படத்தில் கீரோ ஆதி பல்பொடியை எடுக்காமல் போனதாலே பிரச்சனை வந்தது.
  • ஆதி பல்பொடியில்  பல்வெளக்கிய பிறகு பச்சைப் பாம்பை, கருநாகம் விசத்தில் வறுத்து சாப்ப்பிட்டாலும் ஒன்னியும் ஆவாது.
  • முடவர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு நடக்கிறார்கள்.
  • குருடர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு பார்க்கிறார்கள்.
  • பல் இல்லாத பாட்டிகளுக்கு பல் முளைக்கிறது ஆதி பல்பொடியால்.


மூட்டை முடிச்சுகளுடன் புதிய ஆதிச் செய்தியை பரப்ப மேற்கண்ட பேனர்களுடம் தொண்டர்கள் கெளம்பினார்கள்.


பக்கவாட்டு குறிப்பு: 
"தமிழ் பேலியோ" மதத்திற்கும் இதற்கும் தொடர்பு அல்ல. இது முழுக்க முழுக்க புனைவு.