உலகமே (ஆம் உலகம் முழுக்கத்தான்) இந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் கண் வைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்க தேர்தலில் "இரஃச்யா" (Russia) தன் உளவுவேலைகளின் மூலம் , ட்ரம்ப்-பை (Donald J. Trump) வெற்றிபெற வைக்கப் பார்க்கிறது என்று ஒரு செய்தி உலாவிக்கொண்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடர்பான "பிரக்ஃசிட்" (Brexit) பஞ்சாயத்துகளின் மத்தியில் நடக்கும் இந்த தேர்தல், தேர்ந்தெடுக்கப்படும்- 2016 அமெரிக்க அதிபர் , எப்படி யாருக்கு ( கிரேட் பிரிட்டன் vs ஐரோப்பிய யூனியன் ) சாதகமாக இருப்பார் என்று அவர்களுக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபர் 'ஒபாமா' அவர்கள் பிரக்ஃசிட் க்கிற்கு எதிரானவர். ஆனால் பிரக்ஃசிட் நடந்துவிட்டது.
தீர்க்கமுடியாத மத்திய கிழக்கு நாடுகளின் 'சிரியா' பஞ்சாயத்துகள் ஒருபுறம் இந்த தேர்தலை மிக முக்கியமான ஒன்றாக மாற்றியுள்ளது. இவை எல்லாம் தாண்டி, இந்தியாவில் இருந்து வரும் சுப்பிரமணிசுவாமி (Member of the Rajya Sabha) போன்றவர்களின் இந்துத்துவ மத அரசியலின் 'ட்ரம்ப்' ஆதரவுக் குரல்கள் கலக்கம் தருகிறது.
அமெரிக்காவையும் தாண்டி , உலக அளவில் நோக்கப்படும் இந்த "2016 அமெரிக்க அதிபர்" தேர்தலில் பலருக்கும் அறிமுகமானவர்கள் இருவர் . திருமதி "ஃகிளாரி கிளிண்டன்" Hillary Clinton (டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர்) மற்றும் திரு. "டொனால்ட் ட்ரம்ப்" Donald J. Trump (ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்). இவர்கள் இருவரையும் தாண்டி, இன்னும் பல கட்சிகள், கட்சி சாராத தனிநபர் கூட்டணிகள் "அமெரிக்க அதிபர் 2016" தேர்தலுக்கு போட்டியில் களத்தில் உள்ளார்கள்.
இன்றைய சூழ்நிலையில் கிளிண்டன் அல்லது ட்ரம்ப் தாண்டி மற்றவர்கள் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றாலும், சிலர் இன்னும் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள். அது எப்படி என்பதில் பல அரசியல் சட்டக் குழப்பங்கள் உள்ளது. இந்தியாவில் திரு.தேவகவுடா (Haradanahalli Doddegowda Deve Gowda) மற்றும் திரு.சந்திரசேகர் (Chandra Shekhar Singh) போன்றவர்கள் எதிர்பாராமல் பிரதமரானவர்கள். அது போல இலட்சத்தில் ஒரு வாய்பாக, சில குழப்பமான அமெரிக்க அதிபர் தேர்வு சட்டங்களின் துணையில், வெற்றி பெறலாம் என்று ஒரு வேட்பாளர் நம்பிக்கையில் உள்ளார்.
யார் யார் எந்தக் கட்சி சார்பாக களத்தில் உள்ளார்கள்?
அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான (Federal District") டிச்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா" (District of Columbia aka D.C )அனைத்திலும் போட்டியிடுபவர்கள்.
டெமாக்ரடிக் (DEMOCRATIC PARTY) கட்சி சார்பாக:
அதிபர் தேர்தலில்: ஃகிளாரி கிளிண்டன் ( Hillary Clinton )
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: டிம் கெயின் (Tim Kaine )
ரிபப்ளிகன் (REPUBLICAN PARTY)கட்சி சார்பாக:
அதிபர் தேர்தலில் : டொனால்ட் ட்ரம்ப் (Donald J. Trump )
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: மைக் பென்ஃச் (Mike Pence )
லிபரட்டேரியன் (LIBERTARIAN PARTY) கட்சி சார்பாக:
அதிபர் தேர்தலில் : கேரி சான்சன் (Gary Johnson )
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: வில்லியம் வெல்ட் (William Weld)
அமெரிக்காவில் உள்ள 40 மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசமான "டிச்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா"விலும் போட்டியிடுபவர்கள்.
கிரீன் பார்ட்டி (GREEN PARTY) சார்பாக:
அதிபர் தேர்தலில் : சில் ஃச்டெயின் (Dr. Jill Stein)
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: அசாமு பார்க்கா(Ajamu Baraka )
கான்சிடிடுயூசன் (CONSTITUTION PARTY) கட்சி சார்பாக:
அதிபர் தேர்தலில் : டேரல் கேஃச்டில் (Darrell Castle )
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: ஃச்காட் பிராட்லி( Scott Bradley )
இவர்களைத் தவிர கட்சி சார்பற்ற பலர் போட்டி போடுகிறார்கள். இதில் ஒருவர் யாருமே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் கணக்கில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது மக்கள் நேரடியாக அதிபரைத் தேர்ந்தெடுப்பட்துபோல வெளி உலகிற்கு தோற்றம் கொடுத்தாலும் , உண்மை அதுவல்ல. அது சிக்கலானது. அந்த அந்த சிக்கலான தேர்தல்முறை மேலும் பல சிக்கல்களை தோற்றுவிக்க வல்லது.
அமெரிக்க வரலாற்றில் இப்படி ஒரு பெருங்குழப்பம் நடந்துள்ளது. 1797–1801 ஆண்டிற்கான அதிபர் தேர்தலின் முடிவு யாரும் எதிர்பார்க்காத விடையைக் கொடுத்தது. அப்போது நடந்த தேர்தலில் இரும்பெரும் கட்சிகளின் சார்பாக அதிபர் பதவிற்கு போட்டியிட்டவர்கள் இருவர். "பெடரலிஃச்ட் கட்சி" (Federalist Party - the first American political party) சார்பாக "சான் ஆதம்ஃச்" (John Adams) ம், அந்த பெடரலிஃச்ட் கட்சியை எதிர்த்து "டெமாக்ரடிக் ரிபப்ளிகன்" (Democratic-Republican Party) என்ற புதுகட்சி தொடங்கி , எதிர் தரப்பில் போட்டியிட்டவர் "தாமஃச் செபர்சன்" (Thomas Jefferson) .
இந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு யாரும் எதிர்பார்க்காத அதிசியத்தைக் கொடுத்தது. அதிபராக "சான் ஆதம்ஃச்" (John Adams) ம் , அதே சமயம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட "டெமாக்ரடிக் ரிபப்ளிகன்" கட்சி வேட்பாளர் "தாமஃச் செபர்சன்" (Thomas Jefferson) துணை அதிபராகவும் தேர்ச்தெடுக்கப்பட்ட வரலாறு நடந்தது. அம்மா "செயலலிதா" முதல்வராகவும் தாத்தா "கலைஞர்" துணைமுதல்வராகவும் அல்லது அன்னை "சோனியா" பிரதமரகவும் அண்ணன் "மோடி" துணை பிரதமாராகவும் வந்தால் எப்படி இருக்கும்? அப்படியான சிக்கலைத்தான் அமெரிக்கா 1797–1801 தேர்தலில் சந்தித்தது.
அதிபர் ஒரு கட்சி , துணை அதிபர் ஒரு கட்சி என்று எதிர்காலத்தில் மறுபடியும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதற்குப்பிறகு சேர்க்கப்பட்ட அரசியல் சாசன சட்டம்தான் 12 ஆவது பிற்சேர்க்கை (12TH AMENDMENT) எனப்படும் அமெரிக்க அரசியல் சாசனம். இந்த சட்டம், எதிரெதிர் முகாமில் இருந்து எதிரும் புதிருமான கொள்கையுள்ள, அதிபர் மற்றும் துணை அதிபர் வருவதை தவிர்க்கவே. மற்றபடி இன்னும் அடேங்கப்பா அதிபர் தேர்தல் குழப்பமான நடைமுறைகள் அப்படியே உள்ளது.
அப்படியான சட்டக்குழப்பங்களின் மத்தியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடாலாம் என்ற நம்பிக்கையில் ஒருவர் 2016 தேர்தலில் களத்தில் உள்ளார். அவர்தான் "இவான் மெக்முல்லன்" Evan McMullin (Utah). அவரோடு சேர்ந்து துணை அதிபருக்கு போட்டியிடுபவர் கூகிள் மற்றும் டிவிட்டரில் நிறுவனங்களில் வேலை பார்த்த Mindy Finn (District of Columbia)
அமெரிக்காவின் குழப்படியான அதிபர் தேர்தல் முறை தொடரும்.....