Tuesday, October 18, 2016

அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே!

ந்தியாவில் உள்ள 29 மாநிலங்களும் ( தெலுங்கானா பிரிவிற்குப் பின் 29 ) ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை கொண்டது. உணவு, உடை, மொழி,வாழும் முறை, விளையும் பயிர்கள், வனங்கள், புவியியல் மற்றும் இயற்கை அமைப்புகள் என்று. இந்த சூழலில் இந்தியாவின் மத்திய அரசு (ஃபெடரல் அரசாங்கம்), ஐரோப்பிய யூனியன் போல பல தனிநாடுகளைக் கொண்ட கூட்டமைப்பின் பிரதிநிதியாகவே இயங்க வேண்டும் / கருதப்பட வேண்டும். அதாவது தனித்தன்மை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாகவே மத்திய அரசு இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. மாநிலங்கள் அதிகாரத்தை மற்றும் தனித்தன்மையை இழந்து கல்லூரி தேர்வுமுதல் எது சாப்பிடலாம் கூடாது என்பது வரை மத்திய அரசாங்கம் தலையிட இந்தியாவில் வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் அப்படியான தனிச்சுதந்திரம் மாநில அரசாங்கத்திற்கு உள்ளது. மாநிலங்களின் தனித்தன்மையைக் காக்கவும், ஃபெடரல் அரசின் (மத்திய அரசு/ அதிபர் ) கட்டுப்பாட்டுக்குள், எதுவரை ஒரு மாநிலம் இருக்கலாம், என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான தனிக்கொடி, தனியான மாநிலப் பறவைகள் , மாநிலப் பூக்கள் என்று ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான நாடுகள் போன்றதுதான். ஒரு காலத்தில் அவர்களுக்கான தனித்தனி நாணயங்களும் இருந்ததுண்டு. அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம்  என்பது இன்றைய தேதியில் உருமாறிவிட்டது. ஆனால் ஒன்றுபட்ட அமெரிக்கா உருவான காலத்தில் , அதில் பங்கெடுத்த மாநிலங்கள், எதிர்த்த மாநிலங்கள் என்று பல சிக்கல்கள் இருந்தது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் (civil war) நடந்த காலத்தில், மாநிலங்கள் அதற்கான படைகளை வைத்து இருந்தார்கள். அந்தப் படைகள் மத்திய அரசை எதிர்த்து போரிட்டார்கள். எல்லாம் முடிந்து இன்றைய அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒன்றுபட்ட அமெரிக்காவில் இணைத்த காரணத்தினாலேயே மாநிலங்கள் அவர்களின் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. வரும் காலத்தில் மத்திய அரசு (ஃபெடரல் அரசாங்கம்) மாநிலங்களின்மீது அதிக அதிகாரம் செலுத்தி, மாநிலங்களின் தனித்தன்மையை நசுக்கிவிடக்கூடாது என்பதற்காக சேர்க்கப்பட்ட சட்ட இணைப்புதான். அமெரிக்க சட்ட சாசன இரண்டாவது சேர்க்கை (Second Amendment) .

//The Second Amendment of the United States Constitution reads: "A well regulated Militia, being necessary to the security of a free State, the right of the people to keep and bear Arms, shall not be infringed."// 

அதில் சொல்லியுள்ள "சுதந்திரமான மாநில அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வண்ணம் மக்களுக்கு துப்பாக்கிச் சுதந்திரம் வேண்டும்" என்பது முக்கியமானது. மத்திய அரசாங்கம் மாநிலத்தை நசுக்க நினைத்து ஃபெடரல் இராணுவம் தருவிக்கப்பட்டால் , மாநில மக்கள் அதை எதிர்த்துப் போரிட அவர்களுக்கு தளவாடங்கள் தேவை என்ற அர்த்தமும் கொண்டது இந்த அமெரிக்க சட்ட சாசன இரண்டாவது சேர்க்கை. இதை பலவாறு அர்த்தம் கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும், மக்கள் அரசை ஆயுதம் கொண்டும் எதிர்க்க வாய்ப்பைக் கொடுக்கும் சட்டவரைவாகவே பலரும் பார்க்கிறார்கள். இதைச் சொல்வதற்கான காரணம், மாநிலங்களின் தனிப்பட்ட உரிமைகள், தனித்தன்மை என்பது அமெரிக்காவில் மிக முக்கியமான ஒன்று. இத்தகைய மனநிலை கொண்ட அமெரிக்காவில், 'ஃபெடரல் அரசின்' முக்கிய அங்கமான 'அதிபரை' தேர்ந்தெடுப்பதில் மாநிலங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது . 

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியத் தேர்தல் போல இல்லை. இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் ஒன்று. அமெரிக்காவில் அப்படி ஒரு மத்திய தேர்தல் ஆணையம் இல்லை. தேர்தல் நடத்துவது, அதிபர் தேர்தலில் எப்படியான அணுகுமுறையைக் கடைபிடிப்பது போன்றவை மாநிலங்களின் முடிவு. அதிபர் தேர்தலுக்கான பொதுவான நடைமுறைகள், வழிகாட்டி அமைப்புகள் இருந்தாலும், மாநிலங்களின் முடிவு மிக முக்கியமானது. அதன் விளைவே ஒவ்வொரு மாநிலமும் அதிபர் தேர்தலுக்கான வாக்கை கொடுப்பதில் (அதிபரை தேர்ந்தெடுக்க எலக்டரை தேர்ந்தெடுக்கும் முறை) வித்தியாசப்படுகிறது. அமெரிக்க ஃபெடரல் (மத்திய) அரசாங்கத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் என்பது மிக மிக முக்கியமானது. அதற்காகவே பல சட்டமுறைகள் உள்ளது. அதுவே அதிக குழப்பத்திற்கு வழிவகை செய்கிறது. 


அமெரிக்க ஃபெடரல் அரசாங்கத்தில் , அமெரிக்க காங்கிரஃச் (United States Congress)  என்பது இரண்டு சபைகள் கொண்டது. ஒன்று செனட் ( Senate)மற்ற ஒன்று "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்"  ( House of Representatives) 

Congress is made up of the Senate and the House of Representatives, and both senators and representatives of the House are referred to as congressmen. A senator can always be referred to as a congressman, but a congressman is not necessarily a senator in the event they are a representative.

சிறிதும் பெரிதுமாக அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளது. அலாஃச்கா (Alaska)பரப்பளவில் பெரியது 570,374 சதுர‌ மைல்கள் . ரோஃட் ஐலேண்ட் (Rhode Island) பரப்பளவில் மிகச்சிறியது 1,045  சதுர‌ மைல்கள்.  மக்கள் தொகை அளவில் , கலிபோர்னியா ( California) முதல் இடத்திலும், கடைசி இடத்தில் வயோமிங் (Wyoming ) ம் உள்ளது. இப்படியான மாறுபட்ட மக்கள் விகிதாச்சாரம் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய ஃபெடரல் அரசங்கம், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும், அனைவருக்கும் சரியான ஓட்டு விகிதாச்சாரம் வேண்டும் என்ற நோக்கில் சில விதிகள் உள்ளது. அதில் முக்கியமானது இந்த இரு சபைகளுக்கும் எப்படி பிரதிநிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது.

"கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" ( House of Representatives) தேர்ந்தெடுக்கும் முறை

து ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை சார்ந்தது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிகப் பிரதிநிதிகளைப் பெறும். இந்த பிரதிநிதிகள் மாநிலத்தில் உள்ள கங்கிரசனல்  மாவட்டங்களுக்கு (Congressional Districts ) ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள்  மட்டுமே. இந்த மாவட்டம் என்பது கவுண்ட்டி (County) அல்ல. இந்த கங்கிரசனல் மாவட்டம் என்பது, ஃபெடரல் அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளை அந்த மாநிலம் தேர்வு செய்ய வகுக்கப்பட்ட ஒரு எல்லை அளவு. இந்த "கங்கிரசனல் மாவட்ட எல்லை" என்பது, அந்த நேரத்தில் உள்ள மக்கள் தொகை, விகிதாச்சாரம் போன்ற அளவுகோளின்படி மாற்றியும் வரையப்படலாம். இது மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதே சமயம் இதில் மத்திய அரசாங்கத்தின் நீதிமன்றங்கள் தலையிடலாம். சமீபத்தில் வடக்கு கரோலைனா மாநிலத்தில் அப்படியான  கங்கிரசனல் மாவட்ட எல்லை மறு சீரமைப்பில் நீதி மன்றம் தலையிட்டுள்ளது. கவுண்ட்டி எல்லை என்பது மாறாத ஒன்று முக்கியமாக நிலப்பரப்பு சார்ந்தது. 

இப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனைதான் என்று காங்கிரஃச் உறுப்பினர்கள் உள்ளார்கள். 


இப்படி மக்கள் தொகை விகிதச்சாரத்தில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும்போது , அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிக அதிகாரத்தைப் பெறுகிறது. உதாரணத்திற்கு அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா ( California) மாநிலம் 53  "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" (   ( House of Representatives. ) பிரதிநிதிகளையும் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட வயோமிங் ( Wyoming ) ஒரே ஒரு பிரதிநிதியையும் பெறுகிறது. இங்கே அதிகாரப்பகிர்வு என்பது கேள்விக்குறியகிறது. இந்த சிக்கலைத் தீர்ப்பதுதான் "செனட்" சபை.

செனட்டர்களை (United States Senate) தேர்ந்தெடுக்கும் முறை

நிலப்பரப்பு, மக்கட் தொகை என்று எந்த அளவுகளும் பாதிக்காத வண்ணம், சிறிதோ பெரிதோ , நெட்டையோ குட்டையோ , அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தில் இருந்து இரண்டு செனட்டர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.  இந்த 'செனட்டர்' பதவியின் காலம் ஆறு ஆண்டுகள். செனட்டருக்கு என்று பிரிக்கப்பட்ட தொகுதிகள் இல்லை. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட் பதவிகள் இருந்தாலும், அந்த மாநிலத்தில் இரண்டு 'செனட்' தொகுதிகள் இருப்பது இல்லை. மாநிலங்களுக்கான இரண்டு செனட்டர்களும் மாநில முழுமைக்கும் பொதுவாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு மாநிலத்தின் எந்தப்பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்களுக்கான செனட்டர் இருவருமே. யாரை வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாம் உங்களின் பிரச்சனைகளுக்காக. 

50 மாநிலங்களைக் கொண்ட அமெரிக்காவில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2 செனட்டர் என்ற அளவில் "100 செனட்டர்களை" மட்டுமே கொண்டது செனட்டர் சபை. எந்த ஒரு புதிய சட்ட வரைவுகளும் (bill)  சட்டமாவதற்கு முன் இரு சபைகளின் (செனட் மற்றும் கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்) ஒப்புதல் பெற்ற பிறகே அதிபருக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதால், சின்ன மாநிலங்களுக்கும் இதில் சம அளவில் அதிகாரம் கிடைக்கிறது. இதை சாத்தியமாக்குவது இந்த செனட் சபையின் பிரதிநிதித்துவம்.

ந்தியாவில் அப்படி அல்ல. பாராளுமன்ற உறுப்பினர் தேர்வு ( Lok Sabha- Members of Parliament ) என்பது மாநிலங்களின் மக்கள் தொகை சார்ந்த ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிகப் பிரதிநிதளைப் பெறும். உத்திரப் பிரதேசம் 80 மக்களைவை உறுப்பினர்களையும்,  திரிபுரா,மிசோரம், சிக்கிம் மற்றும் நாகலாந்து போன்றவை ஒரே ஒரு மக்களைவை உறுப்பினரையும் கொண்டவை. சரி மக்களைவைதான் இப்படி உள்ளது, மாநிலங்களவை (Rajya Sabha ) உறுப்பினர் தேர்வுமுறையாவது இதைச் சமன் செய்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 

மாநிலங்களவை (Rajya Sabha ) உறுப்பினர்களின் எண்ணிக்கை , அந்த அந்த மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் கொடுக்கப்படும்போது , அது மறுபடியும் "அதிக மக்கள் அதிக உறுப்பினர்"என்றே முடிகிறது. இதனால் திரிபுரா,மிசோரம், சிக்கிம் மற்றும் நாகலாந்து போன்றவை மாநிலங்களவையிலும் சிறுபான்மையாகிவிடுகிறது. ஆம் அங்கும் அவர்களுக்கு ஒரு உறுப்பினர்தான். சனாதிபதியால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களை இங்கு கணக்கில் கொள்ளவில்லை.

மெரிக்காவில் அதிபர் தேர்தலில் மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டது. தேர்தல் நடத்துவதில் இருந்து, யாரை அதிபராக்குவது என்பது வரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிக பங்குள்ளது. இந்தியா போல மத்திய அரசே தேர்தல் நடத்தி, மத்திய அரசே முடிவு செய்துகொள்ளும் முறை  அல்ல. மாநிலங்களின் கூட்டாட்சி முறை என்பது , மாநிலங்களுக்கான தனிக்கொடி, தனிச் சின்னம், தனித்தன்மை, ஒருவேளை ஏதாவது ஏடாகூடமாக நடந்து மறுமுறையும் சிவில் யுத்தம் வந்தால், அதில் மத்திய அரசை எதிர்கொள்ள மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை, பத்திரிக்கை மற்றும் பேச்சு சுதந்ததிரம் என்று ஒப்பீட்டளவில் அமெரிக்கா மற்ற நாடுகளைவிட மாநிலங்களின் உரிமையில் அதிக கவனம் கொண்ட அமைப்பு. இந்தகைய பின்னனிகொண்ட அமெரிக்காவில், அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல, மாநிலங்களால் (ஆளும் மாநில அரசால்) நியமிக்கப்படும் எலக்டர் ( Elector / electoral college ) என்பவர்களே.  தொடரும்..