Friday, October 07, 2016

நியாயத் தராசு நமக்கானது மட்டுமே

ட்டகத்தின் திறன் பனிப்பிரதேசத்தில் சல்லிக்காசிற்கு உதவாது. ஒரு ஒட்டகம் அதன் அளவுகோலைக் கொண்டு பனிக்கரடியை அளக்க நினைத்தால் எப்படி இருக்கும்? நமது நியாயத் தராசுகளைக் கொண்டு அடுத்தவர்களை, அடுத்த துறையை , அடுத்த இடத்தை எடைபோட்டுவிட முடியாது. அதுபோல ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு புனிதர் பட்டங்களையோ வேறு எந்த வணிக, பரம்பரைப்பட்டங்களின் பொருட்டு மரியாதை கொடுக்க முடியாது. ஒருவருக்கு மற்றவரின் மீதான அன்பு அல்லது மரியாதை என்பது, இருவ‌ருக்கும் பொதுவான ஒரு தளத்தில் ஏற்பட்டு இருக்கவேண்டும். அங்கே இருவருக்குமான உரையாடலும் சாத்தியப்பட்டு இருக்க வேண்டும். பீடங்களில் இருந்து கொண்டு பிரசங்கம் செய்வதும் , பார்வையாளனாக கேட்பதும் ஒரு அறிமுகமாக இருக்கலாம். ஆனால் அதுதாண்டி உரையாடல் தளத்திற்கு செல்வது என்பது , இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் சம அளவு மரியாதையில்தான் உள்ளது.

இரு மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் என்பது , அதில் இருக்கும் ஒருவருக்கான உரிமை அல்ல. ஒருவகையான சலுகைதான் (privilege). அந்த சலுகையை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது உரையாடலை முறித்து சூன்யத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.

செலிபிரட்டி என்று நான் யாரையும் வியந்தோதுவது இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறந்தவர்களே.  பணம் , அதிக அளவில் விளம்பரம்  , பதவிகளால் வரும் வெளிச்சம் என்று எல்லாம் கலந்துகட்டி சிலர் அதிகம் வெளிச்சத்தில்  இருப்பது ஒரு நிகழ்தகவு தான் (probability) .

உதாரணம்: அருகருகே இருக்கும் கடையில் ஒரே பொருள் , ஒரே விலையில் விற்கப்பட்டாலும், வரும் ஒரு வாடிக்கையாளர் , ஏதோ ஒரு கடையில் நுழைந்துவிடுவது சின்ன கணிதம்தான். அப்படி நடந்துவிடுவதால் மட்டுமே அந்தக் கடையில் சிறப்பு ஏதும் இல்லை. அப்படி வந்த ஒருவரை தக்க வைத்துக்கொள்வதில்தான் அடுத்த கட்டம் உள்ளது. அது இருதரப்பு மரியாதை மற்றும் மனிதம் போற்றும் பண்புகளால் வருவது.

ஏதோ ஒரு காரணத்தினால் நான் பின்தொடர்ந்த‌ சிலரை நான் இப்போது தொடருவதை நிறுத்திவிட்டேன். அதுபோல பலர் என்னை அவர்களின் வேலிக்கு வெளியே வைத்துள்ளார்கள் (blocked) . இது சரியான ஒன்றே.

ஒருவருடனான உரையாடல் என்பது, அவர்கள் நமக்கு அளிக்கும் உயர்ந்த பட்ச மரியாதை (இணையத்தில்) அது மறுக்கப்படும்போது அல்லது உரையாட அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அது இழப்பே. நான் சிலரோடு உரையாடுவதை நிறுத்திவிட்டேன். அதுபோல பலர் என்னிடம் உரையாடுவதை நிறுத்திவிட்டார்கள் அல்லது எனக்கு தொடர்பில்லாத தளங்களில் என் கண்ணிற்கு தெரியாத வண்ணம் உரையாடுகிறார்கள். இருதரப்பிற்கும் இது இழப்புத்தான். இது தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு இருதரப்பிலும்.

பதிவர் இளவஞ்சியின் (http://www.ilavanji.com)  "உங்களைப் போலவே நானும் தனித்துவமானவன்" என்ற வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. "ஆம் அனைவரும் தனித்துவமானவர்கள்". தனித்துவம் கொண்டவர்களுக்கு இடையேயான‌ உரையாடல் என்பது,  இருதரப்பு மரியாதைக்குரியது. பீடங்களில் இருந்து சொல்லப்படும் வியாக்கியானங்களை/போதனைகளை அது ஏற்காது. அந்தப் புரிதலுடனே தனித்துவம் இயங்க முடியும்.


***

சமமான மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு வேலைகிடையாது.

டைலர் ஃசுவிட் (Taylor Swift) போன்ற இசைக் குழு , லாரி லாரியாக சாமான் சட்டுகளை எடுத்துச் செல்வார்கள் எங்கு போனாலும். அவர்களே அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள். இதற்கு என்றே பெரிய குழு (logistics  crew )இருக்கும். வாக்கி டாக்கியுடன் போர்க்கால அடிப்படையில் இயங்குவார்கள் இவர்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முந்தையநாள் இரவில் இருந்து, பம்பரமாய்ச் சுழன்று மேடை , வாத்தியக் கருவிகள், ஒலி & ஒளி அமைப்பைச் செய்வார்கள். நிகழ்ச்சி தொடங்கும் நாளில் பல மணிநேரம் ஒலிச் சோதனை (sound test) செய்வார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்த தமிழ்சங்க முத்தமிழ் விழாவில் , எங்களின் இசை நிகழ்ச்சி இடைவேளைக்கு முன் நடந்த ( just before the break ) ஒன்று.

இடைவேளை முடிந்தவுடன் (immediately  after the break)  நடக்க இருந்த நிகழ்ச்சி "அந்தோணிதாசன்" அவர்களின் இசைக்குழு நிகழ்ச்சி. அவர்கள் கொட்டு மேளம், நாதசுவரம், உருமி மேளம் போன்ற வாத்தியங்களுடன் Bass கிடாரும் வைத்து இருந்தார்கள். அவர்களில் ஒரு ட்ரம்மரும் உண்டு. ஆனால் ட்ரம் செட் (drum set) கிடையாது. பயணத்தில் ட்ரம் செட் எடுத்துச் செல்வது என்பது யானையைக் கூட்டிக்கொண்டு அலைவது போன்றது. எனவே அவர்கள் ட்ரம் செட் இல்லாமல் வந்து இருந்தார்கள். அந்த ட்ரம்மர் ஒரு Octapad  வைத்து இருந்தார். உள்ளூரில் யாரிடமாவது வாங்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளார்கள். சங்கத்து நிர்வாகிகள் அவர்களுக்கு ஏதோ ஒரு ட்ரம் செட் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார்கள். எங்களின் இசைக்குழுவின் ட்ரம் செட் , அதற்கான மைக் மற்றும் அனைத்தும் கொண்ட ஒரு தொழில்முறை நேர்த்தி கொண்டது (professionally equipped) . அதைப் பார்த்த அந்த ட்ரம்மர் , அவர்களின் நிலையைச் சொல்லி எங்களின் ட்ரம் செட்டையே அவர்களின் நிகழ்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டார்.


இதில் எந்த மிடில் மேனும் கிடையாது. அவரே நேரிடையாக எங்கள் குழு ட்ரம்மரிடம் பேசி உதவ முடியுமா என்று கேட்டார். நான் இந்த இடத்தில் இளையராசா அல்லது இரகுமான் போன்றவர்களின் இசைக்குழுவை ஒப்பிட நினைக்கிறேன். ஒருவேளை அவர்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், இரகுமான் கீபோர்ட் (Keyborad) கேட்டு எங்களை அணுகமாட்டார். இராசா இடதுகையால்கூட எங்களைச் சுட்டமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். யாராவது உதவியாளர்கள் வந்து "அய்யா இதைக்கேட்கிறார்" என்றுதான் சொல்லி இருப்பார்கள். அப்படி நடந்து இருந்தால் "போங்க பாசு போய் வீட்டுல பெரியாள் இருந்தா வரச்சொல்லுங்க" என்றுதான் சொல்லி இருப்பேன் நான்.

அந்தோணிதாசன் குழுவில் உள்ள யாரும் தங்களை பீடங்களில் வைத்துக் கொள்ளவில்லை. Down-to-earth என்று சொல்வார்களே அந்த அளவில் மிகவும் எளிய உள்ளங்களாக இருந்தார்கள். அந்தோணிதாசனின் மனைவியும் பாடகியான "ரீட்டா" அவர்களிடம் , என் மனைவி சென்று " உங்கள் குரல் கணீரென்று சிறப்பாக உள்ளது" என்று சொன்னதற்கு, "எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்தாம்மா" என்று சொல்லியுள்ளார். அதைக்கண்டு திகைத்துவிட்டார் என் மனைவி. சினிமா புகழ் / ஒளி வட்டத்தில் இருந்தாலும், "இரசிகர்களின் ஆசிர்வாதத்தில்தான் எலாம்" என்று சொல்லும் பாங்கு அதிசியமானது இந்தக்காலத்தில். என் மனைவியும் பாடகி ரீட்டா அந்தோணிதாசன் அவர்களும் அப்படியே குழந்தை குட்டி, அவர்களின் படிப்பு என்று  பேசி வழக்கமான அம்மாக்களின் உரையாடல் டெம்ப்பிளேட்டில் ஐக்கியமாகிவிட்டார்கள்.


இடைவேளையின் போது அந்தக் குழுவின் ட்ரம்மருடன் நான் பேசினேன். அவரும் மதுரைக்காரர் என்றவுடன் ஊர்ப்பாசமும் கூடிவிட்டது. எங்களின் ட்ரம்செட்டை அவரின் விருப்பதிற்கு ஏற்ப அமைத்துக் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியின் முடிவில் அனைவரிடமும் பேசினேன்.

"அண்ணே நீங்க வாங்கண்ணே, நீங்களும் வாங்கண்ணே" என்று "அந்தோணிதாசன்" தான் அனைவரையும் அழைத்து போட்டோ பிடிக்க வைத்தார். அவர்களுக்கான சிகரங்களைத் தொட்டாலும், மற்றவர்களை சக மனிதர்களாக மட்டும் நினைத்துப் பழகும் /மதிக்கும் அந்த மனிதர்களின் வாஞ்சையான அன்பு மறக்க முடியாதது.

அந்தோணிதாசன்
https://www.youtube.com/watch?v=g3N-jZTXn7k

http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/singer-anthonydasan-cinema-entertainment-115051600033_1.html

****
எனவே உரையாடல் என்பது ஒரே தளத்தில்தான் சாத்தியமாகும். உரையாட‌லுக்கான வாய்ப்பு என்பது எனக்கு நீங்கள் கொடுக்கும் சலுகை/வாய்ப்பு என்பதில்  நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அந்த வாய்ப்பிற்கு என்றும் நன்றி!

பீடங்களில் இருந்து வருவது சத்தமாக மட்டுமே எனக்கு கேட்கும்.

*