Wednesday, October 19, 2016

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ?

மெரிக்காவில் குழந்தைகளுக்கு அரசியலமைப்பைச் சொல்லிக் கொடுக்கும் போது , பள்ளியில் முதலில் சொல்லித்தருவது , "அரசாங்கத்தின் பிரிவுகள் மூன்று,அவையாவன" என்று ஆரம்பிப்பார்கள். இந்தவகையான அரசாங்கப் பிரிவுகள் மாநில அரசிற்கும் பொருந்தும் என்றாலும் , இந்த அதிபர் தேர்தலின் முக்கியத்துவம் கருதி ஃபெடரல் அரசின் அந்த மூன்று முக்கிய பிரிவுகளைப் பார்க்கலாம்.

ஃபெடரல் அரசாங்கத்தின் மூன்று பிரிவுகள்.

  1. சட்டங்களை இயற்றவல்ல  The Legislative Branch.
  2. சட்டங்களை அமல்படுத்தக்கூடிய The Executive Branch.
  3. சட்டங்களை பரிசீலனை செய்யவும், அதன் பொருட்டு வரும் சிக்கல்களைத் தீர்க்கவும் அதிகாரம் படைத்த The Judicial Branch.


ஃபெடரல் அரசாங்கத்தின் இந்த மூன்று முக்கிய பிரிவுகளையும் , மாநில அரசாங்கங்கள் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வழியாக, கட்டுக்குள் வைத்துள்ளது. வெளிப்பார்வைக்கு "ஃபெடரல்" அரசு அமெரிக்க அதிபரின் கட்டுப்பாட்டில் இயங்குவது போல தோன்றினாலும், அது உண்மை அல்ல. அதிபரின் அலுவலகம் (The Executive Branch ) என்பது தனியான ஒரு அமைப்பு. மற்ற இரண்டு அமைப்புகளுடன் ஒத்து இயங்க வேண்டியவறாகிறார் அதிபர் .

மாநிலங்கள் அந்த அந்த மாநிலங்களின் தேர்தலை நடத்துகிறது. இதில் ஃபெடரல் அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. ஒரு மாநிலம் அதற்கான தேர்தலை நடத்தி, அதன் பிரதிநிதிகளை "ஃபெடரல் அரசில்" பங்கேற்க அனுப்பி வைக்கிறது. The Legislative Branch ல் இருக்கும் செனட் ( Senate )மற்றும் கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ் (House of Representatives) இரண்டும் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

மாநிலத்திற்கு இரண்டு செனட்டர் வீதம் மொத்தம் 100 செனட்டர்களை கொண்டது செனட்டர் சபை. ஒவ்வொரு செனட்டரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். இவர்கள் மக்களின் நேரடி வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். மாநிலத்திற்கான இரண்டு செனட்டரும் மாநிலம் முழுமைக்கும் பொறுப்பானவர்கள். ஒரு மாநிலத்திற்கென்று இரண்டு செனட்டர்கள் இருந்தாலும் , அந்த மாநிலத்தில் இரண்டு செனட் தொகுதிகள் இல்லை. ஒவ்வொரு செனட்டரும் அந்த மாநிலம் முழுமைக்கும் பொறுப்பானவர்கள். இப்ப‌டியாக தலா இரண்டு செனட்டர்களை ஒவ்வொரு மாநிலமும் அனுப்பி செனட் சபையை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அது போல மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலமும் அதற்கான மக்கள் தொகை விகிதாச்சார‌ அளவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" களை தேர்ந்தெடுத்து  (50 மாநிலங்களும் "டிஃச்ரிக்ட் ஆப் கொலம்பியாயும்" DC /The District of Columbia ) சேர்த்து 435 "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" உள்ளார்கள் . இப்படி "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" சபையையும் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மாநிலங்கள்.

திபர் தேர்வையும் மாநிலங்கள் அவற்றின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்பது உண்மை. அமெரிக்க அதிபரை மக்கள் நேரடி வாக்கில் தேர்ந்தெடுப்பது இல்லை. அதே சமயம், இந்த செனட்டர் (Senate)  மற்றும் கங்கிரசனல் உறுப்பினர்களும் (House of Representatives) அதிபரை தேர்ந்தெடுக்க உரிமை இல்லாதவர்கள். செனட்டருக்கான தேர்தல் ( 6 வருடங்களுக்கு ஒரு முறை) , "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" களுக்கான தேர்தல் (2 வருடங்களுக்கு ஒருமுறை) மற்றும் இந்த  "அதிபர்" தேர்தல் ( 4 வருடங்களுக்கு ஒருமுறை) அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத தேர்தல்கள். இப்படியான குழப்படிகளில் , இந்திய‌ "எம்.பி" கள் பிரதமரை தேர்ந்தெடுப்பது போல,  அமெரிக்க 'செனட்டரோ'  ,'கங்கிரசனல்' உறுப்பினர்களோ அதிபரை தேர்ந்தெடுப்பது இயலாத காரியம்.

சரி, பின் யார்தான் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், இங்குதான் எலக்டர் ( Electoral College) என்ற அமைப்பு வருகிறது. "செனட்" மற்றும் "காங்கிரஃச்" சபைகள் போல  Electoral College என்பது ஏதோ ஒரு கட்டிடத்தில் இயங்கும் சபை கிடையாது. அது ஒரு தேர்வு முறை , அதே சமயம் அந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிசமான மனிதர்களே

எலக்டர் (  Electoral College )யார்?

அதிமுக்கியமான அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் "எலக்டர்கள்" என்பவர்கள் இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்றாலும், அவர்கள் யார் என்பது அமெரிக்காவில் , அதிபர் தேர்தலில் ஓட்டுப்போடும் ஒரு அமெரிக்க குடிமகனுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படிச் சொல்வதால் , அவர்கள் 'பொது அறிவு' இல்லாதவர்கள் என்று அர்த்தமோ , மக்களுக்கு தெரியாமல் ஏதோ நடக்கிறது என்று அர்த்தமோ கிடையாது. தான் செலுத்தும் வாக்கின் மூலம் எந்த எலக்டர்  ( Electoral College) தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை சில மாநிலங்கள் தேர்தலின் போது அறியத்தருகிறது . சில மாநிலங்களில் அப்படி எந்த சட்ட அவசியமும் இல்லை. அமெரிக்க அரசியல் சட்டம் அப்படித்தான் உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும்  தேர்தலில், ஒவ்வொரு மாநிலமும் அதற்கான சட்டங்களை இயற்றி அவர்கள் பாணியில் எலக்டர்களை தேர்ந்தெடுக்கலாம். அதற்காக எப்படியும் செய்யலாம் என்பதும் இல்லை.

  1. எலக்டர் என்பவர்கள், அமெரிக்க அதிபரை தேர்வு செய்யும் மாநிலப் பிரதிநிதிகள். 
  2. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை எலக்டர் என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று. 
  3. செனட்டரோ அல்லது கங்கிரசனல் உறுப்பினர்களோ எலக்டராக இருக்க முடியாது.
  4. Electoral College என்பது அதிபர் தேர்தலின் போது மட்டும் வந்து போகும் தேர்வுமுறை.
  5. எலக்டர்கள் ஓட்டுப்போட்டு அதிபரைத் தேர்ந்தெடுத்தவுடன்  Electoral College என்ற  அமைப்பு தானாக மறைந்துவிடும்.

ஒரு மாநிலத்திற்கு எத்தனை எலக்டர்?

ஒவ்வொரு மாநிலமும் எத்தனை எலக்டரை ( அல்லது எலக்டரல் ஓட்டுகள்) தேர்வு செய்ய முடியும் என்பதை , அமெரிக்கச் சட்டம் Article II சொல்கிறது.

//Number of Electors, equal to the whole Number of Senators and Representatives to which the State may be entitled in the Congress: but no Senator or Representative, or Person holding an Office of Trust or Profit under the United States, shall be appointed an Elector//

ஒரு மாநிலத்திற்கான எலக்டர் = அந்த மாநிலத்திற்கான அமெரிக்க‌ செனட் பதவி எண்ணிக்கை  + அந்த மாநில அமெரிக்க கங்கிரசனல் பதவிகளின் எண்ணிக்கை.  

உதாரணத்திற்கு 'வடக்கு கரோலைனா' மாநிலத்தின்  மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 15.

 2 (செனட் பதவி) + 13 ( கங்கிரச‌னல் பதவிகள்) = 15 எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்).





இப்படியாக , அதிபர் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கிற்கும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'செனட்டர்' மற்றும் 'கங்கிரச‌னல் உறுபினர்களுக்கும்' தொடர்பே இல்லாத, எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்)
என்பவர்கள்தான்,மாநிலங்கள் சார்பாக  வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.

50 மாநிலங்களின் மொத்த எலக்டரல் ஓட்டுகள், மற்றும் "டிஃச்ரிக்ட் ஆப் கொலம்பியா"விற்கு அளிக்கப்பட்டுள்ள 3 எலக்டரல் ஓட்டுகள் என்று அமெரிக்கா முழுமைக்கும் மொத்தம் 538 எலக்டரல் ஓட்டுகள் உள்ளது.
  • இந்த 538 ல் குறைந்த பட்சம் 270 ஓட்டுகள் எடுப்பவர் அமெரிக்க அதிபராகிறார். 
  • இந்த எலக்டரல் வாக்கை அளிப்பவர்கள் எலக்டர் எனப்படுவார்கள். 
  • இந்த எலக்டர்களை நியமிப்பது மாநிலங்கள்.
எலக்டர்களை ( Elector / Electoral College ) மாநிலங்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறது?

யார் எலக்டராக இருக்கலாம் என்பதைவிட , யார் எலக்டராக இருக்க முடியாது என்பதை அமெரிக்கச் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. அமெரிக்க சட்டம் Article II, section 1, clause 2

//  no Senator or Representative, or Person holding an Office of Trust or Profit under the United States, shall be appointed an Elector.  //

ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் எலக்டர்களை தேர்ந்தெடுப்பது இரண்டு படிகள் கொண்ட நடைமுறை.

மாநிலங்களின் எலக்டர் தேர்வின் முதல் படி:
அந்த அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி சார்பாக யார்?  யார்? எலக்டராக‌ இருப்பார்கள் ( Potential Electors ) என்று தேர்தலுக்கு முன்னரே தெரிவு செய்துகொள்ளும். முக்கியம், இவர்கள்  Potential Electors தான் தவிர,  இன்னும் மாநிலத்தால் அதிகாரபூர்வ எலக்டராக அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளான "டெமாக்ரடிக்" மற்றும் "ரிபபளிகன்" கட்சிகள், அவர்களின் கட்சியில் உள்ள முக்கிய நபர்களை  Potential Electors ஆக தெரிவு செய்து வைத்துக்கொள்வார்கள். அதிபர் தேர்தலில் போட்டியிடும் சின்னஞ்ச்சிறு கட்சிகள், கட்சி சாரா தனிநபர்களும் அவர்களுக்கான Potential Electors ஐ தெரிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க உட்கட்சி நியமனம். இவர்களை தெரிவு செய்வதில் , இந்த முதல் படியில்,  மத்திய/மாநில அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.

உதாரணத்திற்கு தற்போதைய தேர்தலில் (2016) வடக்கு கரோலைனா மாநிலத்தில் உள்ள 'ரிபப்ளிகன்' கட்சி , அந்த கட்சி சார்பாக 15 எலக்டர்கள் பட்டியலை மாநில அர‌சிடம் கொடுக்கும். அது போலவே 'டெமாக்ரடிக்' கட்சி அந்தக் கட்சி சார்பாக 15 எலக்டர்கள் பட்டியலை மாநில அர‌சிடம் கொடுக்கும்.

இரண்டாவது நிலை ( Electors)
இப்படி கட்சிகள் தெரிவு செய்து வைத்துள்ள  (Potential Electors  list ) அட்டவ‌ணையில் இருந்து , மாநிலத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள (உதாரணம் வடக்கு கரோலைனா மாநிலத்திற்கு 15 எலக்டர்கள்) எண்ணிக்கை எலக்கடர்களை மட்டும் தேர்ந்தெடுத்து (அங்கீகரித்து) மாநில அரசு சான்றிதழ் வழங்கும்.

// Each state's Certificates of Ascertainment confirms the names of its appointed electors. A state's certification of its electors is generally sufficient to establish the qualifications of electors.//

கட்சிகள் எப்படி அவர்களுக்கான எலக்டர்களை மாநில அரசிடம் பதிவு செய்கிறது?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு வேட்பாளரும் செய்ய வேண்டி முக்கியமான ஒன்று , ஒவ்வொரு மாநிலங்களின் வேட்பாளர் பட்டியலில் தத்தம் பெயரை பதிவு செய்துகொள்வது. அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது ஃபெடரல் அரசு நடத்துல் தேர்தல் அல்ல. அது மாநிலம் நடத்தும் தேர்தல். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதற்கான அலுவலர் மூலம் (Secretary of State or appropriate election office ) பதிவுசெய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு என்பது, வேட்பாளர் பெயர் மட்டும் அல்ல. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு மாநிலத்திலும் கீழக்கண்டவற்றைச் செய்ய வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் சில வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் இதுதான் பொதுவான நடைமுறை.
  1. அவர்களின் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் மற்றும் துணை அதிபரின் பெயர்கள்.
  2. அவர்களின் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள எலக்டர்களின் பெயர்கள்.(கட்சிக்கு விசுவாசமாக‌ இருப்பதாக எலக்டர்கள் எடுத்த உறுதிமொழிப் பத்திரத்துடன்)
  3. எலக்டர்கள் கட்சி விசுவாசத்தை மீறி ஏதேனும் செய்தால் அவர்களுக்கான மாற்று நபர்கள்.

என்று பலவற்றை மாநில பதிவர்/செயலர்/தனி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 50 மாநிலங்களிலும் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வார்கள். சிலர் காலதாமதத்தால் அல்லது சுய விருப்பத்தால் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே பதிவு செய்துகொள்வார்கள். அந்த அந்த மாநிலத்தில் பதிவு செய்தவர்களின் பெயர்கள் மட்டுமெ அந்த அந்த மாநில வாக்குச் சீட்டில் இடம் பெறும்.

இந்த 2016 அதிபர் தேர்தலில் திரு.டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் கட்சி , மினசோட்டா (Minnesota) மாநிலத்தில் அவர்களின் பெயரை பதிவு செய்ய மறந்து அது பல குழப்பங்களுக்கு உள்ளானது.

Trump makes Minnesota ballot at last minute
https://www.washingtonpost.com/news/the-fix/wp/2016/08/25/how-donald-trump-almost-missed-the-ballot-in-minnesota-and-what-that-says-about-his-campaign/

எல்லா மாநிலத்திற்கும் பொதுவான ஒரு பதிவாளார் என்று இல்லை. அமெரிக்காவிலும் ஒரு தேர்வாணையம் உள்ளது (Federal Election Commission  http://www.fec.gov/ , ஆனால் அது இந்திய தேர்தல் ஆணையம் போல தேர்தல் நடத்தவோ , மேற்பார்வையிடவோ, வெற்றியாளரை அறிவிக்கவோ அல்ல. அது வேட்பாளர் செலவு செய்யும் பணம் மற்றும் அது சார்ந்த கட்டுப்பாடுகளுக்கானது.

எலக்டர்களை (Electoral College) தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு பங்கு உண்டா?

மாநில அரசு எலக்டர்களை தேர்வு செய்கிறது.அவர்கள் அதிபரை தேர்வு செய்கிறார்கள். எல்லாம் சரி, கைப்புள்ள ரேஞ்சில் ஓட்டுப்போடும் மக்களின் கதி? அவர்கள் யாருக்குத்தான் ஓட்டுப்போடுகிறார்கள்? அவர்களின் ஓட்டு என்ன காமெடிப் பீசா?   அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அவர்களின் ஓட்டு என்ன "விழலுக்கு இறைத்த நீரா?" என்றால் அதுவும் இல்லை.  அவர்களுக்கும் பங்கு உள்ளது. ஆனால் அவர்களே முடிவு செய்வதில்லை என்பதுதான் "அமெரிக்க அடேங்கப்பா" சிக்கல் அரசியல்.

இந்த தருணத்தில்தான் , அதிகம் பேசப்படும் அமெரிக்க அதிபர் தேர்தலின் இடியாப்பச் சிக்கல் தொடங்குகிறது.

ஒரு மாநிலம் நடத்தும் அமெரிக்க அதிபர் தேர்தலில், அந்த மாநிலத்தின் அரசாங்கத்திடம் பெயரைப் பதிவு செய்த "அதிபர் வேட்பளர்கள்" வாக்குச் சீட்டில் இடம் பெறுவார்கள். அந்த வாக்குச்சீட்டில் மக்கள் செலுத்தும் வாக்கு என்பது , உண்மையில் அந்த வேட்பாளர் சார்ந்துள்ள கட்சியின் சார்பாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள  Potential Electors எலக்டரை தேர்ந்தெடுக்கச் சொல்லி மாநிலத்திற்கு வழிகாட்டும் செயல். ஆம் வழிகாட்டும் செயல்தான். ஏன் என்றால், இவர்களின் ஓட்டு மட்டுமே அதிபரை முடிவு செய்வதில்லை.

அமெரிக்க குடிமகன், நான்காண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச்சீட்டில் இடும் அந்த வாக்கின் அர்த்தம் இதுதான்.  ..."அமெரிக்க குடிமகனகிய நான் , இந்த அதிபர் மற்றும் துணை அதிபர் சார்ந்துள்ள கட்சி ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள 'எலக்டர்களை' ஆதரித்து , எனது வாக்கைச் செலுத்துகிறேன். எனது மாநில அரசாகிய நீங்கள் , நான் வாக்களித்துள்ள நபர்கள் (அதிபர்/துணை அதிபர்) சார்ந்துள்ள கட்சி எலக்டர்களை தேர்வு செய்யுமாறு  (அங்கீகரிக்குமாறு certify  )  மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்..."

சில மாநிலங்களில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான வேட்பாளர்களின் பெயருடன் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் எலக்டர்களின் பெயரும் அச்சிடப்பட்டு இருக்கலாம். ஆனால் அது அவசியம் அல்ல. இது முழுக்க முழுக்க மாநில நடைமுறை சார்ந்த விசயம். இப்படியாக அனைத்து மாநிலங்களிலும் , எலக்டரைத்தான் தேர்வு செய்கிறார்கள் தவிர நேரடியாக அதிபரை அல்ல.

ஒரு மாநிலம் அதற்கான எலக்டர்களை எப்படி அங்கீகரிக்கிறது இந்த தேர்தல் வழியாக? ... தொடரும்.

********

தொடர்பான பதிவுகள்
அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும்
http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html

அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே!
http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html