Saturday, March 07, 2020

அப்பா 5: டீ வடை தினத்தந்தி கோடைப் பண்பலை காலை

தோ இன்னும் அரைமணி நேரத்தில் "மூர்த்தி" அண்ணன் வந்துவிடுவார். மதுரையில் அரசாங்க பயன்பாடு தவிர வேறு "அம்பாசிடர்" பிளசர்கார் பார்த்தீர்களேயானால் அது, எங்கள் ஊர் மூர்த்தி அண்ணனுடையதாக இருக்கலாம். பதினைந்து வருடங்களாக அவர்தான். அவரும் மாறவில்லை அவரின் பிளசரும். மெதுவாகவே போகும். மகிழ்வுந்து என்று இதை மட்டுமே சொல்லலாம். வேகத்திற்கு எதிரி. சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் ஒன்று. அவர் ஒரு வோக்ச் வேகன் வைத்துள்ளார். அது மகனின் காராம். 


காலையில் 5 மணிக்கே எழுந்துவிட்டேன். காலியாக உள்ள பெயிண்ட் வாளி ஒன்றில், தண்ணீர் பிடித்து பல் விளக்கிவிட்டு பேருந்து நிலையம் சென்றேன் 'டீ' குடிக்க. ஊர் மெதுவாக விழித்துக் கொண்டு இருந்தது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நியூச் பேப்பர் ஏசண்டாக இருக்கும், "கங்கை" அவர்கள் இன்னும் அவரின் கடையை நடத்திக் கொண்டுள்ளார். பத்து பேர் ரோட்டின் ஓரத்தில் உட்கார்ந்து , நியூஃச் பேப்பர் பிரித்து அடுக்குவார்கள். இன்றும் அது நடக்கிறது. அவரிடம் தினத்தந்தி வாங்கிவிட்டு, 'கோட்டைமேட்டு' கடையில் டீ வாங்கினேன். டீ - க்காக அல்ல அந்த டீக்குடிக்கும் அனுபவத்திற்காக.

தே தண்ணீரில் நூறு முறை கழுவப்படும் டீ கிளாசு, வடை சாப்பிட்டு எறியப்பட்ட இலைகள், சுற்றி வரும் நாய்கள், 'புதுப்பட்டி' போக டெம்ப்போ வேனிற்கு காத்திருக்கும் பெண்கள் என்று, இந்தக் கடையின் வடிவம் அப்படியே உள்ளது.


ப்பா, ஆறு மணிக்கு எழுந்துவிட்டார். அப்பாவுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டேன். அப்பாவின் கவலை , அவரின் மருந்துகளை நான் சரியாக பிரித்து வைத்தேனா என்பதிலேயே இருந்தது. "ஆர் கே நகர்" தேர்தல் அநியாயங்களை வாசித்துக் காட்டினேன். சிறிது நேரம் பேசினோம். அண்ணன் வாங்கி வந்த தினமலர் வாரமலர் , ஆரம்பகாலங்களுக்கு இப்போது மெலிந்திருந்தது. அந்துமணி அதே பேத்தல் மணியாக பதில் சொல்லிக் கொண்டுள்ளார். என்னமோ என் அண்ணன் தினமலரை வாங்கிக்கொண்டுள்ளான் இன்னும்.


னக்குப் பிடிக்கும் என்று, அண்ணி மிளகாய் சட்னி செய்திருந்தார்.அவர் எங்கள் அத்தை மகள். என்னை விட ஒன்று அல்லது இரண்டு வயது மூத்தவர் என்று நினைக்கிறேன். அண்ணனுக்கு திருமணம் ஆன நேரத்தில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். பரதேசியான நான் வீட்டிற்கு வரும் போதெல்லாம் மறக்காமல் மிளகாய் சட்னியும் இட்லியும் வைத்துவிடுவார் அவர் பங்கிற்கு. அண்ணன் காலையிலும் வடை வாங்கி வந்தான். 

றவுகளில் ஒருவர் என் வயதுக்காரர். பாலிடெக்னிக் படித்து வேலை செய்த இடத்தில் ஏதோ நடந்து, அதற்குப்பிறகு சிறிது மனப்பிறழ்வு ஏற்பட்டது. நான் வந்திருப்பது அறிந்து " செலவுக்கு காசு கொடு" என்று வந்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சிறிது பணம் கொடுத்தேன். "வாப்பா போட்டோ எடுப்போம் என்று போட்டோவும் எடுத்துக் கொண்டேன்.

ன்னும் சில மணி நேரத்தில் கண்டம் கடக்கும் பயணம். அப்பாவிடம் விடைபெற்றபோது , "துன்னூறு வச்சு விடுங்க" என்று சொல்ல, அம்மா இல்லை. அம்மாவின் நினைவாக நானே என் விரலில், திருநீற்றை தோய்த்து , அப்பாவின் கையைபிடித்து நானே வைத்துக்கொண்டேன். 

"பாத்து போப்பா.எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீல?" என்றார் அப்பா. அதுதான் அவர் திருநீறு வைத்தவுடன் எப்போதும் சொல்லும் வாழ்த்து. 

வருக்கும் அம்மாவிற்கும் இது ஒரு சடங்கு. திருநீறு வைத்து விடை கொடுப்பது. உள்ளூர் முனியாண்டி கோவிலில் இருந்து அம்மா பிறந்த ஊர் எல்லை தெய்வங்கள் வரை பல கடவுள்களின் சாம்பல் குவியல் வீட்டில் ஒரு தட்டில் இருக்கும். இதுவரை கொட்டி காலி செய்யப்பட்டதாக நினைவில்லை. எடுப்பதும், சேர்ப்பதுமாக அமுதசுரபிச் சாம்பல் அது. எனக்கு சாம்பல் பூச்சு அடையாளங்களில் விருப்பம் இல்லை. முடிந்தவரை இயல்பாக அணைத்து அன்பைத் தெரிவித்துவிட்டு வந்தேன். 

ங்கள் வீட்டிற்கு வந்து நீங்கள் அன்பாக திருநீறு வைத்தாலும் ஏற்றுக் கொள்வேன். பொது வாழ்க்கையின் சமரசங்கள் இவை. நான் சாதி மதச் சடங்குகளை என் குழந்தைகளின் முதுகில் ஏற்றவில்லை. அவர்களுக்கு என் அணைப்புதான். 
அப்பா இருக்கும் வரை அவருக்காக சில சமரசம். எனது அப்பாவின் பிடிவாதம் எனக்குப் பிடிக்காத ஒன்று. அவரைப் போலவே பிடிவாதம் மற்றும் "நான் செய்வதே (சொல்வதே) சரி" என்ற ஒற்றைத்தன்மை, எனக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன். 

றவாடுதலே உறவின் தேவை.உங்களிடம் நிகழ்த்தும் உரையாடல்கூட, வேறுபாடுகளுக்கு இடையே மனிதத்தை முன் நிறுத்தியே சக தோழராக 💐 .மத நம்பிக்கை உள்ளவர்கள், அரசியல் கட்சிக்காரர்கள் என்று பலர். உரையாடல் நடந்து கொண்டுதான் உள்ளது. இன்றும்.

ங்கள் குடும்ப உறவுகள் மட்டும் இன்றி , கல்லூரி நண்பர்களின் குடும்பம், தூரத்து உறவுகள் என்று பலர் வீடுகளுக்கு சென்றேன். ஒவ்வொன்றும் ஒரு கதை. முதியவர்களின் உடல்சார் பிரச்சனைகளை பார்த்தும், அடுத்தலைமுறை , அவர்களின் சொத்துச் சண்டைகளில் கவனம் செலுத்துவது கவலை தருகிறது.

ப்பாவிடம் பேசிப்பேசி அவரை சில விசயங்களுக்கு சம்மதிக்க வைத்தேன். அவருக்கு உதவி செய்தவர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்வது. பல சந்திப்புகள் நெகிழ்வானவை. அன்பை , நன்றியை , வார்த்தைகளால் சொல்லத்தெரியாத அல்லது பழகியிராத கிராம மனிதர்களுக்கு அது சிக்கலாகவே இருந்தாலும், அப்பா என்னுடன் ஒத்துழைத்தார்.

ஒவ்வொன்றிலும் எனக்குச் சொல்ல ஆயிரம் கதைகள். அவைகளையும் தனியாகப் பதிந்துவைக்க ஆசை. 
💐💐

Dec 17, 2017