நிற்கும் வரை பயணிப்பேன்
உடன் பயணித்த தக்கைகளும் சக்கைகளும்
கரை ஒதுங்கிவிட்டன.
சவாரி செய்த ஓடங்கள் அவற்றுக்கான
இலக்கோடு நின்றுவிட்டன.
எரியப்பட்ட கற்கள் ஆழம் சென்று
அமைதியாய் தூங்கிவிட்டன.
தடுத்த அணைகளின் இடுக்குவழி
கசிந்தோடுகிறேன் நான்.
வற்றிவிடும் நீரென்றாலும்
குளத்தில் காய்ந்துவிட மனமில்லை.
சோவென்று தரையில் அடித்து விழுந்தோடுகிறேன்
கடலில் கலக்க விரும்பியல்ல.
வீழ்ச்சிகளில் நீர் வீழ்ச்சியே
ரசிக்கப்படுவதும் கொண்டாடப்படுவதும் பிறரால்.
கடலில் கலப்பதும் சாபம் என்பதால்.
நான் ஓடிய நிலையில்
வற்றி மறைய விரும்புகிறேன்.
நிற்கும் வரை பயணிப்பேன்