Sunday, March 15, 2020

உறவாடுதலே உறவு: இங்கேயே சாப்ட்ருவோம்ணே. முருகன் வீட்டுச் சோறு

"ம்பது ரூபா தானே சாப்பாடு. எப்படிக் கட்டுப்படியாகுதுன்னே தெரியல. ஒருத்தரா எல்லா வேலையும் பாக்குறார். இன்னைக்கு அங்கயே சாப்ட்ருவோமான்னே? உங்களுக்கு ஓகேவா?" என்றார்.

பலவருடங்களாக நேரில் பார்க்க வேண்டும் என்று மனதில் இருந்துகொண்டே இருந்தாலும், இந்த முறைதான் அது சாத்தியமாகியது. "சென்னை வந்திருக்கேன். இரண்டுநாள் இருப்பேன்.உங்களப் பாக்கணுமே. எப்ப வரலாம்ன்னு சொல்லுங்க?" என்ற போது, "நீங்க எங்க இருக்கீங்க நானே வந்து பாக்குறேனே?" என்றார்.

பிற்பாடு அவருக்கு சில வேலைகள் இருந்ததால், அன்று பார்க்க முடியவில்லை. அடுத்த நாள், தொலைபேசிய போது "இன்னிக்கு பகல் முழுக்க வீட்டில்தான் இருப்பேன். சாயந்திரம்தான் "வேலைக்காரன்" கேசட் ரிலீசுக்கு, போகணும், காலைல வாங்க" என்றார். காலையில் அக்காள் மகள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, ஊபர் பிடித்து வளசரவாக்கம் கிளம்பிவிட்டேன்.

ப்போது, நான் ஊபர் புக்கிங் எக்ச்பர்ட்டு ஆகி இருந்தேன். என் அக்கா மகளுக்கு, தன் சின்ன மாமா சென்னையில் எங்காவது தொலைந்து விடக்கூடாதே என்பது கவலை. பத்து வயது முதல் எங்கள் வீட்டில் வளர்ந்த பெண். நான் தூக்கி வளர்த்த பெண். மதுரைக்கு அருகிலேயே கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அப்பா நினைத்தார். மாப்பிள்ளை மதுரைதான் என்றாலும், அவரின் வேலை பட்டணம் என்பதால், இங்கே குடித்தனம். நிறைய மாறியிருந்தாள். திருமணம் ஆனவுடன் எல்லாப் பெண்களும் அம்மாவாகிவிடுகிறார்கள்.

"இறங்குன‌ உடனே போன் பண்ணுங்க மாமா. அதே போல வருவதற்கு முன்னும் போன் பண்ணுங்க. அட்ரசு தெரியலனா கூப்பிடுங்க" என்று என் மீது கரிசனம் காட்டிக்கொண்டே இருந்தது அந்தப் பெண். அம்மா இல்லாத பெண். சின்னமாமா என்று என் மீது கொள்ளைப் பாசம். என் அக்காவின் சாயல் என்பதால் எனக்கும் அதிகப் பாசம்.

ளசரவாக்கம் வந்து இறங்கியவுடன், "அண்ணே இங்க எற‌ங்கிட்டேன். இங்க இருந்து எப்படி வரணும்?" என்று தொலைபேசினேன்.

"வந்துட்டீங்களா?. இந்தா நான் வர்றேன். அப்படியே இந்தப்பக்கம் திரும்பி, வந்துக்கிட்டு இருங்க, இதோ வந்துட்டேன்" என்று சொன்னவர்,இரண்டு நிமிடத்தில், என் முன்னே நின்றார்.

முதல் முறையாக பார்க்கிறோம். ஏகப்பட்ட சண்டைகள், கருத்து வேறுபாடுகள், நேரடிச் சீண்டல்கள், கோபம் கொண்டு பேசிய வார்த்தைகள் என்று பல சாட்சிகள் இன்றும் பதிவுகளில் உள்ளது. கடிந்து ஒரு வார்த்தை பேசாதவர். மதம், கடவுள், திராவிட அரசியல், திமுக என்று எங்களுக்குள் பல சச்சரவுகள் இருந்தாலும், இவர் என் மனதில் உயர்ந்தே இருந்தார்.

"ங்கள நேர்ல‌ பாக்க வேணும் என்ற என் ஆசை நிறைவேறிருச்சுண்ணே" என்று சொல்லிக்கொண்டே, அவருடன் அவர் தங்கியிருந்த அபார்ட்மென்ட் மாடி ஏறினேன். எனக்கான bucket list ல் இருந்த விஐபிகளில் அண்ணனும் ஒருவர்.

மிக அழகான, துடைத்துக் கழுவியது போல சுத்தமான அறைகள். எனக்கு அவரிடம் பேச நிறைய இருந்தது. அமெரிக்க வாழ்க்கைமுறை, கல்வி பற்றி நிறையக் கேட்டுக்கொண்டார். அதற்கு முதல்நாள் சந்தித்த பாலா பற்றிப் பேசினோம். "எப்பேர்ப்பட மனுசன்னே அவரு" என்றார்.

திமுக தலைவர் கலைஞர் குறித்தும் , கட்சிக்காரர்களிடம் அவர் அணுகும் விதம் குறித்தும் சிலாகித்துப் பேசினார். வைகோ திமுகவில் இருந்து விலக இருந்த காலத்தில், பொன். முத்துராமலிங்கம் செய்த அரசியல், அதை கலைஞர் அணுகிய விதம். எல்லாம் தெரிந்தும் கலைஞர் காட்டிய பொறுமை. திண்டுக்கல் கூட்டத்தில் , கட்சிக்காரர்களுக்கு இடையே , கண்முன்னே நடந்த தகராறை கலைஞர் சுமுகமாக எப்படித் தீர்த்தார்? என்று பல கதைகள் சொன்னார்.

இன்றும் செயல் தலைவர் ஃச்டாலின் எப்படி கட்சியை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இல்லாமல், சாதுர்யமாக நடத்திச் செல்கிறார் என்றும் தகவல்கள் சொன்னார். வீரபாண்டி ஆறுமுகம் கதைகள், அவர் மகனின் அரசியல் என்று வெகு நேரம் திமுக அரசியல் பேசினோம்.

"ண்ணே என்ன சாப்ட்றீங்க? இங்கயே வாங்கிடலாம். பக்கத்துல நல்ல கடை இருக்கு" என்றார்.

"உங்களப் பாக்க வந்திருக்கேன். எங்க சொல்றீங்களோ அங்கே சாப்ட்ருவோம்ணே" என்றேன்.

அவரின் சினிமா தொழில் தொடர்பான பேச்சுக்கு திருப்பினேன். அனைவரையும் போலவே சினிமா ஆசையில், இயக்குநராக வேண்டும் என்று வந்தவர்தான் உண்மைத் தமிழன். இன்று முன்னணியில் இருக்கும் பல இயக்குநர்களின் நண்பர் இவர். சசிகுமார், சுரேச் காமாட்சி, கரு பழனியப்பன் என்று இவரது சினிமா நட்பு வட்டம் உள்ளது. கே.பாலச்சந்தரின் 'மின் பிம்பங்களில்' வேலை பார்த்தவர். பாலச்சந்தர் இருந்தவரை, இவரின் பிறந்த நாளுக்கு அவரிடம் சென்று ஆசி வாங்குவாராம். இளையராசாவின் அபிமானியும்கூட. "பீப் சாங்" வந்தபோது, இளையராசாவிடம் அது குறித்து கேட்டு, வாங்கிக்கட்டிக்கொண்ட‌ ஒரு பத்திரிக்கையாள‌ர் குறித்துச் சொன்னார்.

"சோ" குறித்துப் பேசினோம். சோவிற்கும் பாலச்சந்தருக்கும் இருந்த நட்பு குறித்துச் சொன்னார். "சோ" ஏன் சோவாக இருந்தார், அவரின் பத்திரிக்கை நிர்ப்பந்தங்கள் குறித்துப் பேசினோம்.

"உண்மைத் தமிழன்" ஒரு தகவல் களஞ்சியம்.


"ப்ப பாத்தாலும் பதிவுல‌ திமுக கலைஞர்ன்னு திட்டிக்கிட்டே இருக்கீக. ஆனா, நேர்ல பல நல்ல தகவல்களைச் சொல்றீங்களே, நீங்க சொன்ன கலைஞர் குறித்த கருத்துகள் முக்கியமானவை. அப்படி அவரின் நல்ல செயல்களை, கட்சி நடத்தும் ஆளுமைத் திறனை, பொறுமையை, பலரையும் அணைத்துச் செல்லும் பண்பை எல்லாம் முன் வைத்து கட்டுரை எழுதலாமே அண்ணே" என்றேன்.

"என்னத்த எழுதி" என்றார் சலித்துக்கொண்டே.

கட்சியில் சீட்டு கேட்டு வந்த ஒருவர், கலைஞரிடம் நேரிடையாகவே " உங்க குடும்பம் மட்டும் இருக்கலாமா எல்லாப் பதவியிலும்?" என்று கேட்டதும், அதற்கும் கலைஞர் கோபம் கொள்ளாமல், அவரை சாந்தப்படுத்தி பதில் சொன்னவிதமும், உதா அண்ணன் சொல்லிக் கேட்க‌ வேண்டும்.


லைப்பதிவு காலங்களில் அறிமுகமான "உத" விற்கும்  (உண்மைத் தமிழன்)  எனக்கும் பல பூர்வ சென்ம தொடர்புகள் உள்ளது. மதுரையில் நான் படித்த "பிரிட்டோ" பள்ளியில் இவர் நான் படித்த அதே காலத்தில் படித்துள்ளார். திண்டுக்கல் சோலை நாடார் பள்ளியில் நான் படித்தபோது, இவரும் அந்த ஊரில் இருந்துள்ளார். வைகோ முதன் முதலாக மதுரையில் பொதுக்கூட்டம் போட்டபோது, நானும் அந்தப்பக்கம் இருந்தேன். ஏதோ ஒரு வேலைக்காக மதுரை வந்தவன் , வைகோ பொதுக்கூட்டதைப் பார்த்து சிறிது நேரம் இருந்தேன். அண்ணன் உதாவும் அப்போது அங்கே இருந்ததாகச் சொன்னார்.

திண்டுக்கல்லில் இருந்த விமான இறங்குதளம் குறித்துப் பேசினோம். ஒரு மில் ஓனர் அவரைப் பார்க்க வரும் ஒரு நடிகைக்காக சொந்த செலவில் கட்டிய விமானத் தளம் என்ற கிசுகிசுக்களைப் பகிர்ந்துகொண்டார். அந்த விமானத்தைப் பார்க்கவும், அந்த நடிகையைப் பார்க்கவும் , 10 கிமீ சைக்கிள் மிதித்து வந்த கதையைப் பகிர்ந்து கொண்டார்.

தற்குள் எங்களுக்குப் பசி வந்துவிட்டது. மாடிக் குடியிருப்பில் இருந்து இருவரும் இறங்கி, ஐம்பது ரூபா சாப்பாட்டுக்கடையை நோக்கிச் சென்றோம். போகும் வழியில் இருந்த ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தைக் காட்டி, "அனுசா" என்ற ஒரு நடிகைக்குச் சொந்தமானது என்றார். நடிகை இன்னும் மாடி வீட்டில்தான் உள்ளார் என்ற தகவலையும் சொன்னார்.

கடையில் இருவருக்கும் சேர்த்து இரண்டு சாப்பாட்டுப் பார்சல் வாங்கிக் கொண்டோம். அந்தக் கடை ஒரே ஒரு அறை கொண்டது. கடையில் ஒருவர் மட்டுமே. அவரே முதலாளி. அவரே அனைத்து சமையலையும் செய்து, சாப்பாடு பொட்டலம் கட்டி வைத்துவிடுகிறார். ஒரு குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் என்று அவருக்கு தொழில் ஓடிக்கொண்டுள்ளது. 'உத' அண்ணனும் , நானும் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு, அறையை நோக்கி நடந்தோம். நடக்கும்போது அந்த ஏரியாவில் விற்பனையாகாத கட்டிடங்களைக் காட்டினார். ஏதோ சில காரணங்களால் சில கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டும் பல ஆண்டுகளாக யாரும் வராமல், மறு விற்பனைக்கு உள்ளது. வாங்க யாரும் இல்லை.

வீட்டிற்கு சென்று, தரையில் நியூச் பேப்பர் விரித்து, சாப்பிடத் தயாரானோம்.

"கைலி மாத்திக்கிறேங்ளாண்ணே?" என்றார். போட்டிருந்த பேன்ட்டே வசதியாக இருந்தது சம்மணம் போட்டு சாப்பிட. கைலி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

"என்ன சொன்னாலும், இந்தாளு கேட்க மாட்டேன்கிறார். இங்க பாருங்க இவ்வளவு சாப்பாடு கொடுத்திருக்கார். என்னால எல்லாம் சாப்பிட முடியாது" என்றார்.

"ஏன்" என்றேன்.

"சர்க்கரை வியாதிணே. மருந்து மாத்திரைல ஓடிட்டு இருக்கு" என்றார்.

"ஏன்ணே, இந்த பேலியோ...." என்றேன்.

"சும்மாருங்கண்ணே அதெல்லாம் கட்டுபடியாகது நமக்கு. அதிகச் செலவு" என்றார்.

எனக்கு அவர் அண்ணே அவருக்கு நான் அண்ணே . அதுதான் எங்கள் உறவு.

பேலியோ ஒரு மேல்தட்டு வர்க்க ரோட்டரி கிளப். "சக்கி யோகா கெளப்" வகை கடை என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்துள்ளேன். அரிசியைக் 'குறை' சொல்லலாம். ஆனால், அது மட்டுமே வாய்க்கப்பட்டவர்களிடம், "ஆதி மனிதன் காண்டாமிருகம் சாப்பிட்டான்" என்று உனது காரில் வந்து நீ பிரச்சாரம் செய்வது, சாமான்யனைக் காண்டாக்கும். பாதாமும் , சீசும் , பணக்கார , அப்பர் மிடில் கிளாசு மாதவன்களுக்கே ஆகும் காரியம். இந்தியாவில். பேலியோ கூட்டம் ஒரு பணக்காரர்களின் சாப்பாட்டு ரோட்டரி கெளப். அவ்வளவே. ஒரு விவசாயியின் வீட்டில் பாதாமும், சீசுக்கட்டிகளும் புழங்கும் போது அது அனைவருக்கும் பயன்படலாம்.

சர்க்கரை வியாதிக்கு நல்லதுதான். ஆனால் சாமன்ய மக்களுக்கு எட்ட வேண்டுமே இந்த பிரசாதம். அதுவரை அது தேவர்களுக்கான உணவு. அசுரர்களுக்கு அல்ல.

சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டவுடன், புளிக்குழம்பு போல இருந்த பாலிதீன் பாக்கட்டை பிரித்தேன். தகதகவென்று இருந்த வெள்ளரிக்காய் துண்டு போல இருந்தது ஒன்று. சந்தேகத்துடன் , சாப்பாட்டில் ஊற்றும்முன், "அண்ணே இது புளிக்குழம்பு தானா?" என்றேன்.

"ஊத்திராதிங்க அது மீன். மீன் குழம்பு" என்றார். ஆம் நான் ஒரு "அகறி" (non meat eater).

ஐம்பது ரூபா சாப்பாட்டில், முட்டை, மீன் குழம்பு, இரண்டு வகை காய், சாம்பார் , இரசம், மோர் என்று எல்லாம் கொடுக்கிறார் அந்தக் கடைக்காரர். சாப்பாடு ஒரு மூட்டை அளவு கட்டிக் கொடுக்கிறார். வளசரவாக்கம் மெயின் ரோட்டில் ஏதாவது "பவன்கள்" இருந்தால் இதையே 200 ரூபாய்க்கு விற்பார்கள் என்று நினைக்கிறேன்.

செல்லும் இடத்தில், அவர்களின் சாப்பாட்டை அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் இடங்களுக்கு செல்வதுதான் எனக்குப் பிடித்தமானது. பத்து ரூபாய் செலவில் ஒரு இட்லி வாங்கி உண்டாலும், நண்பர்களுடன் , சேர்ந்து சாப்பிடும் அனுபவமே எனக்கு முக்கியம். அன்று முருகனின் வீட்டில் கிடைத்தது பெரிய விருந்து. மீன் சாப்பிட மாட்டேன் நான். அது தவிர அனைத்தையும் காலி செய்துவிட்டு, கை கழுவிவிட்டு அடுத்த ரவுண்டு பேச்சை ஆரம்பித்தோம்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, உத, வீட்டின் உரிமையாளர் சார்பாக, ஒரு சிறுவன், அந்த மாதத்திற்கான வாடகை பில்லைக் கொடுத்துச் சென்றான்.

"இந்தாண்ணே நீங்க சாப்பிட்டத்துகான பில், பத்தாயிரம்" என்று அந்த வாடகை பில்லை என்னிடம் கொடுத்து , சாக் ட்ரீட்மென்ட் கொடுத்தார் 'உத'.

'உத'வின் குடும்பம், வேலை, சினிமா என்று பலவாறு பேச்சு ஓடிக்கொண்டு இருந்தது. இடையில் டீக்கடைக்குச் சென்று , "லெமன் டீ" வாங்கிக் கொடுத்தார் அண்ணன். அப்போது, பதிவு உலக இருட்டு காலமான, டோண்டு, விடாது கறுப்பு , வழக்குகள் குறித்துப் பேச்சுப் போனது. தனக்குச் சரி என்று பட்டதை செய்துவிடுவார் 'உத'. விடாது கறுப்பு விசயம் முடிவிற்கு வந்ததில் அண்ணனின் பங்கும் முக்கியமானது.

ன்னும் திருமணம் ஆகவில்லை அண்ணனுக்கு. இவர் வணங்கும் ம்ருகனுக்கு ரெண்டு பொண்டாட்டிகள். பக்தர்களைச் சோதிக்கிறான் கடவுள். 'உத' அண்ணன் அவரின், இணையத்தளத்திற்கான சினிமா செய்திகளை தட்டச்சு செய்ய ஆரம்பித்தார். எனக்காக , டிவியில் பாலிமர் செய்தி போட்டார். "இப்போதைக்கு இதுதான்ணே நல்ல செய்திச் சேனல்" என்றார்.

மாலன் குறித்து பேச்சுப்போனது. எந்தத் திசை என்றாலும் தகவல் களஞ்சியமாக உள்ளார். "மாலன் ஏன் இப்படி இருக்கிறார்?" என்ற கேள்விக்கு பதில் கொடுத்தார். மாலன் குறித்து எனக்கு எப்போதும் பெரிய அபிப்பிராயங்கள் இருந்தது இல்லை. அவரும் சக பிளாக்கரே எனக்கு. இப்போது அவர் எடுத்திருக்கும் நிலை, மிகவும் பரிதாபத்திற்கு உரியது. டுவீட்டரில் அவரின் ட்வீட்டுகள் அவரைக் காட்டிக்கொடுக்கும்.

மாலையில் 'உத'விற்கு, "வேலைக்காரன்" பட பாட்டு வெளியீட்டு விழாவிற்கு போக வேண்டிய வேலையும் இருந்தது. அவரைப் பிரிய மனமில்லாமல், "அண்ணே தொடர்பில் இருங்கள்" என்று அணைத்து விடைபெற்றேன். வீதிவரை வந்து கை காட்டி வழி அனுப்பி வைத்தார்.

"சினிமா விமர்சனத்தில் ஏன்ணே இப்படி முழுக்கதையையும் எழுதுறீங்க?" என்றதற்கும் அவரிடம் பதில் இருந்தது.

சகனிமாப் படங்களை , அதன் கதைகளுடன் ஆவணப்படுத்த திட்டம் வைத்துள்ளார். புத்தகமாகப் போடும் கனவும் உள்ளது. "முதலில் அமேசான் மின்புத்தகமா மாற்றுங்கள் முருகா" என்றேன். செய்வார் என்று நினைக்கிறேன்.

இதயம் கனக்கிறது. இப்படியான அப்பழுக்கில்லாத உறவுகளை இணையமே தேடிக்கொடுத்தது எனக்கு. எனக்கு அனைவரும் சக மனிதர்களே. எவரின் பதவியும், பவிசும், பொருளாதரமும் என்னை அவர்களை தனித்துக் காட்டுவதில்லை. சக‌ பதிவராக மட்டுமே பழகிய உறவுகள் நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

"உண்மைத் தமிழன் அண்ணே நீ நல்லாருக்கணும்னே"

Dec 03,2017

1 comment: