Saturday, February 29, 2020

அப்பா 4: கடைசி இரவு பிறந்த மாநிலச் சீதனம்


மலகாசனின் வாழ்த்துச் செய்தியுடன் கோடைப் பண்பலை ஒலித்துக்கொண்டுள்ளது. மாலை 5:30 .
பூங்காற்று புதிதானது
புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து .....
என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இதை எழுதுகிறேன். இந்த மாலை வேலையில் சூடாக ஒரு டீ குடிக்க ஆசை. அப்பாவின் நண்பர் ஒருவர் வந்து சென்றார்.அவரும் ஓய்வு பெற்ற ஆசிரியரே. அப்பாவைவிட இளமையானவர். அப்பா அவரிடம் பேசிக்கொண்டே நடந்து கொண்டு இருந்தார். அப்பாவின் ஒரு மணி நேர நடைப் பயிற்சிக்கான நேரம் இது. தவம் போல் நடந்து கொண்டுள்ளார்.

வைகிங் பனியனுக்கான நேரம் என்று கோடைப் பண்பலை நேரம் சொல்லிச்சென்றது. விளம்பரதாரர் நிகழ்ச்சி என்ரு நினைக்கிறேன். வந்த இருவாரங்களில் மூன்று முறை துணி துவைத்துவிட்டேன்.இன்று இறுதியாக 10 ரூபாய் "சர்ப் எக்செல்" பவுடர் வாங்கி, காலை 9 மணிக்கு ஊற வைத்தது. மதுரைக்குச் செல்லும் முன் அலசிப் போட்டுவிடேன். இதோ இப்போது துணிகளை மடித்துக் கொண்டுள்ளேன்.

ரில் இருந்து அக்கா மகன், சாத்தூர் சேவும் மிட்டாயும் வாங்கி வந்தான். அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு காலையில் கிளம்ப வேண்டும். எழுதிக் கொண்டிருந்த போதே, 'தாய் மாம்' உடன் பேருந்து நிலையக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு வந்தேன். "கோட்டமேட்டுக்கடை" என்று சொல்லப்படும் டீ கடையின் டீயே ஃச்ட்ராங்கானது என்ற நம்பிக்கை இன்னும் பலருக்கு உள்ளது. அந்தக்கடைக்காரர் அருகில் உள்ள "கோட்டைமேடு" என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

டுத்த எப்போ வருவது? வரும் போது அப்பா இருப்பாரா? போன்ற விடையில்லா கேள்விகளுடன் போராடிக் கொண்டுள்ளேன்.அயல் வாழ்க்கை திரிசங்கு நிலையின் உறவுச் சிக்கல் இது. அண்ணன் அவன் பங்கிற்கு "பால் பன்" வாங்கி வந்து சாப்பிடச் சொன்னான். இப்படித்தான், இரு நாட்களுக்கு முன் அமெரிக்கத் தம்பிக்கு என்று, மதுரை செயராம் பேக்கரியில் "பிட்சா" வாங்கி வந்தான். மைதா ரொட்டியின் மீது ஏதோ போட்டிருந்தார்கள். அவனின் அன்பின் அடையாளம் அவனால் முடிந்த ஒன்று. சண்டைகள் பல இருந்தாலும் இது போன்ற தருணங்கள் நெகிழ்ச்சியானவை.

தூத்துக்குடியில் இருந்து மக்ரூன் (Macaroon), கோவையில் இருந்து ஏ-1 சிப்ச், சாத்தூரில் இருந்து முட்டாய் மற்றும் சேவு, திருச்சியில் இருந்து மயில் மார்க் இனிப்புகள், மதுரை பிரேம விலாச் அல்வா,கடைசி நேரத்தில் அண்ணன் வாங்கி கொடுத்த கடலைமிட்டாய் பாக்கெட்டுகள்,  என்று எனக்கு சீதனம் கொடுத்த மனிதங்களை நினைத்துக் கொண்டே பெட்டியில் அடுக்குகிறேன்.


திருச்சியில் இருக்கும் ஒரு சின்ன மாமியார், (மனைவியின் சித்தி) வீட்டு வேலை செய்பவர். ஒரு வாகன விபத்தில் கணவனை இழந்து தலைகீழாகிப்போன வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அவர் வாங்கிக் கொடுத்த 200 கிராம் நிலக் கடலைப் பொட்டலம் அதிக அன்புடன் கனத்து. எல்லா நிலை மனிதர்களின் அன்பால் நிறைந்துள்ளது பெட்டி. "சாமி புத்தம் படிக்க மாட்டீக ஊறுகாயாவது சாப்பிடுவீக" என்று ஒரு சோசிய, யோகா தொழிலில் இருக்கும்  நண்பர் கொடுத்த ஊறுகாயும் உள்ளது பெட்டியில்.

எட்டு மணியில் இருந்து எட்டரைக்குள் இரவுச் சாப்பாடு சாப்பிட்டு படுத்துவிடுகிறார் அப்பா. முழுதான தூக்கம் இல்லை. நான் பெட்டியை அடுக்கும் போது வரும் தொலைபேசி அழைப்புகளை கவனிக்கிறார். கைபேசி வழியாக நான் தட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து என்ன செய்கிறாய் என்றும் கேட்கிறார். அவரிடம் சொல்லிவிடேன் நான் என்ன செய்கிறேன் என்பதை. ஒன்றும் சொல்லவில்லை அவர்.

இரவு பதினொன்றுக்கு மணிக்கு "கடுக்காய் பொடி" கலக்கி குடிக்கிறார். இன்று அப்படி அதற்காக எழுந்திருக்கும் போது, கோடைப் பண்பலையில் "இரவுச் சிறகு" நிகழ்ச்சி வரும் என்று சொன்னார். சிறிது நேரம் அவருடன் சேர்ந்து கேட்டேன்.

"இன்னுமா எடுத்து வைக்கவில்லை" என்றார். அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் ஒதுக்கப்படும் எடை அளவையும், எடை பார்த்து வைக்கவேண்டிய முறைகளையும், ஏன் அப்படி என்றும் விளக்கினேன். அம்மா இருந்த காலங்களில் அப்பா எதையும் கண்டு கொள்வது இல்லை. அம்மாதான் எங்களைச் சுற்றி சுற்றி வருவார். ஓட்டில் சொருகி வைத்துள்ள சில காகிதங்களை எடுத்து "இத போனதடவை விட்டுட்டுப் போயிட்ட வேணுமா பாரு" என்பார். அது ஏதேனும் கடை இரசீதாக அல்லது எதுவாகவோ இருக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவிற்கு, பிள்ளைகள் மறந்துபோகும் காகிதங்கள் எல்லாம் முக்கியமான பட்டயங்களாய் இருந்தது.

அம்மா இல்லை என்ற நிலையில், அப்பா கேட்டு வைக்கிறார். இப்படிச் செய், அப்படிச் செய் என்று அவரளவில் சொல்கிறார். பிடிவாத மனிதர்களின் அன்பு இப்படித்தான் இருக்கும்.பொட்டியை கட்டியாகிவிட்டது. அப்பாவும் படுத்துவிட்டார். காலையில் மதுரையில் இருந்து விமானம். அம்மா இருந்தவரை கார் வரை வந்து அனுப்பி வைப்பார். கடந்த இரண்டு முறையாக யாரும் அப்படி வருவதில்லை. அப்பாவால் வர முடியாது. வீட்டில் சேரில் இருந்து கொண்டே வழியனுப்பி வைப்பார்.

காலையில் சீக்கிரம் எழுந்துவிட வேண்டும். பேருந்து நிலைய டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு , தினத்தந்தி பேப்பர் வாங்கி, அப்பாவிற்கு ஆர் கே நகர் அரசியலை அப்டேட் செய்ய வேண்டும்.

Dec 16,2017

No comments:

Post a Comment