Saturday, February 22, 2020

அப்பா 3: சகானாவின் இரசிகர் அப்பா

"கானாவப் பார்க்க போகலாம்பா" என்றேன். " சும்மா இர்றா. ஏதாவது வெட்டியா பேசிக்கிட்டு. நாளைக்கு ஊருக்குப் போற தேவையானதை எடுத்துவை" என்று, அவருக்கே உரிய கண்டிப்பில் சொல்லிவிட்டார்.

உங்களில் யாருக்கேனும் சகானாவைத் தெரிந்திருக்கலாம். எனக்குத் தெரியாது. சில அழகியல் விசயங்களில் அறிவியலை இழுத்து ஆழம் பார்க்கும் குணமுடையவன் நான். எனக்கான பகுத்தறியும் புத்தி சார் தேவை அது என்றாலும் , அழகியல் சமநிலையின் தேவை குறித்தான புரிதல் (consciousness) கொண்டவன். உதாரணத்திற்கு நீர் நிலைகள் மீது தீராத காதல் கொண்டவன்.

வாழும் ஊரில் நான் அதிகம் கேட்பது NPR 
பண்பலை. அதன் மாதாந்திர நன்கொடையாளர்கள் பட்டியலில் நானும்  உண்டு.

நேர்காணல் அல்ல ஒலி உரையாடல்:Radio Is Pure Sound
http://kalvetu.blogspot.com/2019/10/radio-is-pure-sound.html

மிழகத்தில் வானொலி பண்பலையின் உரையாடல்கள் எனக்கு கடுப்படிப்பவை.  "உங்க வாய்சு நல்லா இருக்கு மேடம். இதோ என் அண்ணாவும் பேசனுமாம். அவன்கிட்டயும் பேசுங்க" போன்ற பேச்சுகள், தாடி பாலாசியின் மொக்கை மொழி அனைத்தும் என்னை ஓட ஓடத் துரத்துபவை. தமிழகத்தில் பொழுதுபோக்கு ஊடகம் சார்ந்த உரையாடல்கள் மற்றும் கிண்டல்கள், பெருவாரியாக தொலைக்காட்சி சீரியல் பார்க்கும் பெண்களைச் சுற்றியே நடக்கும். வானொலி பண்பலை குறித்து அவ்வளவு இல்லை. அப்படியே இருந்தாலும், தாடி பாலாசி போன்ற "சென்னை" சாம்பார்களைச் சுற்றியே இருக்கும். தொலைக்காட்சிக்கு முந்திய காலங்களில், வானொலி பண்பலை கிராம மக்களிடம் ஒரு பெரிய இடத்தைப் பிடித்திருந்தது. வேளாண்மை, நாடகம், சினிமா பாடலகள் என்று பலவகை ஒலிகள். பலவகை இரசிகர்கள் இருந்த காலங்கள் உண்டு. இப்போதெல்லாம் வெகுசன உரையாடல்களில்  பண்பலை என்பது சென்னை தாண்டி இல்லை என்பது போல , ஒட்டுமொத்த வெகுசன ஊடக பந்தியும், சாம்பார் பாலாசி போன்றவர்களால் நிறைந்து இருக்கும்.

ந்த இடத்தில்தான் "சகானா" வின் இருப்பும், தேவையும் என்னை ஆச்சரியப்படுத்தியது. தூக்கம் , சாப்பாடு நேரங்கள் தவிர , அப்பா உட்கார்ந்த இடத்தில் அப்படியே இருப்பார். நடை குறைந்துவிட்டது. வீட்டின் முன்னால், பழகிய இடம் என்பதால், மெதுவாக , ஒரு கையில் குச்சியுடனும் , மறுகையில் வீட்டுச் சுவற்றைப் பிடித்துக்கொண்டும் , ஒரு மணி நேரம் நடப்பார். மற்ற நேரங்களில் அவரின் ஒரே பேச்சுத்துணை கோடை பண்பலை.
ப்பாவின் அதிகபட்ச ஆடம்பரம் இந்த வானொலி மட்டுமே. கண் பார்வை குறைந்த அவரால், தொலைகாட்சி பார்க்க முடியாது என்பதுதாண்டி , இதுவே அவரின் பொழுபோக்காக பல ஆண்டுகள் உள்ளது. அக்கா பிள்ளைகள் எங்கள் வீட்டில் இருந்தவரை , வானொலி நிலையங்கள் மாறிக் கொண்டிருக்கும்.தாத்தா கேட்கும் நேரத்தில் அவருக்கான நிலையத்தை வைத்துவிடுவார்கள். கடந்த ஐந்து வருடங்களாக , கோடை பண்பலை மட்டுமே மாற்றப்படாமல் நிலைத்திருக்கிறது. யாரையும் அந்த வானொலியைத் தொடவிடமாட்டார் அப்பா. அவரே விரும்பினாலும் அவராக ஏதும் மாற்ற இயலாது. அப்பாவின் உரையாடல் தளம் இப்போது இந்த நிலையத்தில் உறைந்துவிட்டது.

ப்பாவிற்கும் சரி , திருச்சியில் இருக்கும் என் மாமியாருக்கும் சரி வானொலிப் பொட்டிகளை வாங்கிக்கொடுத்தவன் நானே. ஒவ்வொரு நாளும் அது அவர்களுடன் பேசிக் கொண்டுள்ளது.

கோடை பண்பலையில், இன்று நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்த அப்பாவை , கலாய்த்துக் கொண்டிருந்தேன். எனது 'தாய் மாம்' , "அப்பாவுக்கு இதில பேசுறவுக பேர் எல்லாம் தெரியும். இந்த 'சகானா நேரம்' விரும்பிக் கேட்பார்" என்றார் 
சிரித்துக்கொண்டே.
அரசியல் மற்றும் சோசியம்தான் அப்பாவின் ஃபேவரிட் டாபிக். சினிமா பார்க்கவே மாட்டார். 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் படம் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.நன்றாக நடந்து திரிந்து கொண்டிருந்த ஓய்வு நாட்களில், டீக்கடை அரசியல் பேசிக் கொண்டிருந்தவருக்கு, இன்று சகானா முக்கியமானவராயிருக்கிறார். அம்மா இருந்தவரை, ஏதாவது பொரணிகளை பேசிக் கொண்டிருப்பார். இப்போது அப்பாவுக்கு சகானா மட்டுமே தோழி.

ப்பா போல் எத்தனையோ பெரியவர்களுக்கு சகானாவும் அவரின் கோடைப் பண்பலை சகாக்களும் பேச்சுத்துணையாய், தினசரி வாழ்வில் ஒரு அங்கமாய் உள்ளார்கள். இங்கிருக்கும் நாட்களில் அப்பாவுடன் சேர்ந்து கேட்டுக் கொண்டுள்ளேன். அப்பா போன்ற முதியவர்களின் தோழியாய் உள்ளார் சகானா. அவர் மட்டுமல்ல அவரின் சகாக்களும்தான். நான் அமெரிக்கா திரும்புவதற்குள் ஒருநாள் சகானாவை பார்க்க அப்பாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தே அவரிடம் "சகானாவப் பார்க்க போகலாம்ப்பா" என்று சொன்னேன்.

அவருக்கே உரிய கண்டிப்புடனும் கடுகடுப்பும் சேர்த்து  "வேலையப் பார்றா. வெட்டியா ஏதாவது பேசிக்கிட்டு" என்று சொல்லிவிட்டார். ஓரளவு வெட்கமும் இருந்ததை என்னால் காணமுடிந்தது.அருகில் இருந்த என் தாய்மாமா, சிரித்துகொண்டே இதைப் பார்த்துக்கொண்டிருந்தார். 
நம் சமூகம் ஆசை இருந்தாலும் வெளியில் சொல்லாத ஒன்று. இதுவே ஏதோ ஒரு சக்கி சாமியார் என்ற போர்வையில் ஆன்மீக கொண்டாட்டம் என்றால் சமூகம் அங்கீகரிக்கும். சுலபமாக ஒரு ஆண் சாமியாரையோ பெண் சாமியாரையோ போய் பார்த்துவிட முடியும்.

"இல்லப்பா , உங்களைப் போல எத்தனையோ பெரியவர்களுக்கு கோடை எஃப் எம் ஒரு வடிகாலா இருக்கலாம். இப்படியான மனிதர்களை , நம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவர்களை, முடிந்தால் பார்த்து , நன்றி சொல்வது நல்லது. உங்களைப் போன்ற பெரியவர்கள், அவரின் இரசிகர்களாய் இருக்கிறீர்கள் என்பதை அறிந்தால் , அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்" என்றேன்.பிடிவாத அப்பா அதற்கு மேல் பேசவில்லை.

ம்மா இல்லை. எங்கள் வீட்டிலேயே வளர்ந்த என் அக்கா மகள்கள் இருவரும்  திருமணமாகி போய்விட்டார்கள். அண்ணனின் மகன் அப்பாவிற்கு துணையாக இருந்தான். அவனும் கல்லூரி, வேலை என்று சென்றுவிட்டான். அண்ணி வேலைக்குச் சென்றுவிடுவார். அண்ணன் அவனுக்கென்று சோலிகள். அப்பா தனிமையாகிவிட்டார் அவர் ஆண்ட அந்த வீட்டிலேயே. என் தாய்மாமன் மட்டுமே அப்பாவிற்கு இப்போது. அதுவும் அவர் சில நாட்கள் அவர் ஊருக்குச் சென்றுவிடுவார்.

அப்பாவிற்கு துணை என்பது, அவரை அண்டி வாழும் "கருப்பா" என்ற நாயும், கோடைப் பண்பலை சகானாவின் குரலும்தான். இதையெல்லாம் அருகில் இருந்து பார்க்கும் எனக்கு, கண்கள் குளமாகும். நான் அழுவது அப்பாவிற்கு தெரியாது. அவர் அவருக்கான சேரில் அமர்ந்திருக்க , நான் ஆளில்லாத அந்த வீட்டின் மூலையில் அழுது கொண்டிருப்பேன் என் 45 வயதில். 

நான் பிறந்து வளர்ந்த வீடு. சோலைபோல இருந்த ஒன்று இன்று பாலையாக‌ ஒடுங்கிவிட்டது. றுமுறை வரும்போது சகானாவைச் சந்திக்க அப்பாவை அழைத்துப் போக வேண்டும். அல்லது அவரை அழைத்து வரவேண்டும் ஊருக்கு. அப்பாவிடம் அன்றாடம் பேசுவதும் , அதிகம் பேசுவதும் அவரே.

உங்களுக்கு கோடைப் பண்பலை சகானா தெரிந்திருந்தால் , அவரிடம் சொல்லுங்கள், அவர் பல முதியவர்களின் பேச்சுத்துணையாய் உள்ளார் என்று. 

 💐💐💐

Dec 16, 2017

No comments:

Post a Comment