இறந்தவர்களின் உடல்கள், தினமும் வந்து போகிறது
இறுதிப்பயண மருத்துவமனை பரிசோதனைக்கு.
இறுதிப்பயண ஊர்திகள் நிற்கிறது ஊரின் எல்லையில்.
இறக்கும் பயணியை எதிர்பார்த்து.
சில மாலைகளைக் கட்டுகிறார்கள் பூ விற்பவர்கள்.
சில சாவுகளாவது நிச்சம் என்று.
மயானம் இயங்கிக் கொண்டே இருக்கிறது
மறந்தும் விடுப்பு எடுக்காமல்.
எனது இறுதிப் பக்கங்கள் இன்னும் வாசிக்கப்படவில்லை.
ஆனால் அது நிச்சயம் புனைவாய் இருக்காது.
எனது உடலும் கரியாகும் அல்லது புலிக்கு உணவாகும்.
ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் சிதறி அடிக்கவும்படலாம்.
வாழ்க்கையின் நோக்கம்
வாழ்வது தவிர வேறொன்றும் இல்லை.
வாழ்வின் சில தடைகளுக்கு
நடுவிரலைக் காட்டி நகர்ந்துவிடுதலும் கலையே.