Saturday, February 01, 2020

இப்படி ஒரு மாமாவோ நண்பனோ இருக்கலாம்:They are giving their share of life to you

லைக்கொட்டான் காராச்சேவு,கருப்பட்டி மிட்டாய் ,சீவல் என்று வாங்கி வந்துவிடுவார். ஒவ்வொருமுறை வரும்போதும் அந்த பனையோலைக் கொட்டானும் அதில் இருக்கும் காராச்சேவின் வாசமும் அவர் வந்துவிட்டார் என்பதைச் சொல்லும். கண்களைக் கசக்கிக்கொண்டு அவிழ்ந்த டவுசரை இறுக்கிக்கட்டிக்கொண்டு எழுந்திருப்பேன். பல் விளக்காமலேயே அந்த காரச்சேவை சாப்பிட ஆரம்பித்துவிடுவேன். சாத்தூர் கமிசன் கடையில் வேலைபார்த்த எங்கள் தாய்மாமாவுக்கு எப்போதும் இரவுப்பணிதான்.

சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து வரும் வத்தல், மல்லி, சோளம்,கம்பு, கேப்பை பல்லாரி வெங்காயம் என்று பல பொருட்களை அவரது கமிசன்கடையில் கைமாறிக்கொண்டிருக்கும். அவர் அந்த கடையில் ஒரு கூலிஆள்தான். ஓரளவு எழுதப்படிக்க தெரிந்ததால் கணக்கு வேலைகளையும் செய்து, முதலாளியின் நம்பிக்கையைப் பெற்றவர். எங்களுக்காக அவரின் இரவுப்பணி முடியும்போது , சண்முகம் அண்ணாச்சி கடையில் கடையில் சேவு போடும்போது சொல்லிவைத்து வாங்கிவருவார். சாத்தூரில் இருந்து இரவுப்பணிமுடித்து, மதுரை வந்து, அங்கிருந்து காலையில் எங்கள் கிராமத்திற்கு வரும் முதல் வண்டியில் வந்துவிடுவார். வந்து சேவு முட்டாசுப் பொட்டலங்களை வைத்துவிட்டு உடனே படுத்து உறங்கிவிடுவார் தாய்மாமா.

தாய்மாமனுக்கே எங்கள் அக்காவைக் கட்டிக்கொடுத்தார்கள். எங்கள் அக்கா எனது திருமணம் முடிந்து சில மாதங்களில் நெஞ்சுவலி வந்து இறந்துவிட்டார். என் அம்மாவிற்கு தன் தம்பிமேல் அதிக அன்பு. என் அம்மா இருக்கும்வரை மாமா அடிக்கடி வந்து போவார். அம்மா இறந்த பிறகு, என் அப்பாவிற்காக எங்கள் வீட்டிற்கு வந்து பல வருடம் தங்கி இருந்தார் என் மாமா. என் அப்பாவும் இறந்த பிறகு என் மாமா மிகவும் நொடித்துவிட்டார். இன்று சூரங்குடியில் கிராமத்தில் தேங்கிவிட்டார் கடைசிகாலத்தில்.



ன் மாமாவைப் பற்றி எழுத எனக்கு பலகதைகள் உண்டு. எழுத ஆரம்பித்தால் கண்ணீரை நிறுத்தவே முடியாது. இதோ இதைகூட அமெரிக்காவில் ஒரு காஃபிக்கடையில் இருந்து காலை 10:30 மணிக்கு Feb 01,2020 எழுதிக்கொண்டுள்ளேன். வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே. மாமாவிற்கு பெரிய எதிர்பார்ப்புகளில்லை. எங்கள் வீட்டில் எந்த வேலையாய் இருந்தாலும், விழாவாக இருந்தாலும், யாருக்கு ஏதாவது நோய் என்றாலும் வந்து தங்கிவிடுவார். கூடவே இருப்பார். 

ன்று நான் ஊருக்கு போனாலும் என்னுடனே இருப்பார். ஒருகாலத்தில் அவர் வாங்கிவரும் காரச்சேவுக்காக காத்திருந்தவன் நான். சாத்தூரில் மூன்றுமுகம் சினிமாவிற்கு எங்களை சூரங்குடியில் இருந்து சைக்கிளில் அழைத்துச் சென்றவர். எனக்கு நாயகனாக இருந்தவர். இன்று நான் கொடுக்கும் சில ஆயிரங்களையும் கண்களில் ஒற்றி, அக்கா மகன் கொடுத்த காசு என்று பெருமையாக வாங்கிக்கொள்கிறார். எனக்குத்தான் வலியாய் உள்ளது. அவருக்கு நான் கொடுக்கும் பணம் , அவருக்கு தேவையான ஒன்று. ஆனால், அவர் எங்களுக்கு செலவிட்ட நேரத்தை ஒப்பிடும்போது நான்தான் அவருக்கு வாழ்நாள் கடனாளி.

காலத்தை உதவியாக வழங்குவது என்பது நம் வாழ்நாளில் ஒரு பகுதியைக் கொடுப்பது . உடன் இருந்து உடலுழைப்பாக செய்யும் உதவிகள் என்பது பணத்தால் அளவிடமுடியாதது. ஆனால் ,பெரும்பாலும் அவை கவனம்பெறுவது இல்லை. நேரத்தை சேமிக்க முடியாது. உங்களின் சேமிப்பில் இருந்து பணத்தைக் கொடுக்கலாம் நேரத்தைக் கொடுக்கமுடியாது. நேரம் கொடுக்கப்பட்டுவிட்டால் திரும்பவும் வராது. கொடுத்தது கொடுத்ததுதான். 

"நீ சும்மா இருப்பா. மாமா வாங்கி கொடுக்கேன்". என்று காசைத்தேடுவார். தன் சட்டைப்பையில் இருக்கும் சில்லரைக்காசுகளில் இருந்தே அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் அக்கா மகனுக்கு டீ வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று விரும்புவார். அவரின் அன்பு அளவிட முடியாதது. அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்ட நிலையில் , நான் இனிமேல் நான் ஊருக்குப்போகவேண்டும் என்று நினைப்பது இவரைப் பார்க்கவும் இவருடன் நேரம் செலவிடமுமே இருக்கும்.

ன் அம்மா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது , ஒரு மாதத்த்திற்கும் மேலாக உடன் இருந்து பக்கத்துவீட்டு அக்கா ஒருவர் பார்த்துக்கொண்டார். எவ்வளவு விலை கொடுத்தாலும் அவரின் நேரத்திற்கு ஈடாகாது. இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்காக உடன் இருப்பவர்களின் அன்பு, பணத்தால் அளவிடவே முடியாத ஒன்று.

மெரிக்கா வந்தபிறகு பணம் இருந்தாலும், எனக்காக உடன் இருக்கும் எந்த உறவுமில்லை. நானும் பிறருக்காக உடன் இருந்து நேரம் கொடுக்க முடிவதில்லை. ஆனால் நான் கொடுக்கவே விரும்புகிறேன். கிடைக்கும் தருணங்களில் முடிந்த அளவு ஒரு ஆளாக போய் நிற்பேன். ஆனால்,எனது நேரமோ என் இருப்போ முதலிடமோ அல்லது முதல் கவனமோ பெறுவதில்லை. பணம் வைத்து இருப்பவர்கள் மேடையேறிவிடுவார்கள் சுலபமாக.

ரு வாரம் முழுக்க நான் ஓடி ஓடி உழைத்தாலும், ஒரு ஆயிரம் நன்கொடை கொடுத்தவனே மேடையில் ஏற்றப்பட்டு பாராட்டப்படுகிறான். இப்படியான இடங்களை நான் தவிர்த்துவிடுகிறேன். பணம் முன்னிறுத்தப்படுமிடங்களில் நான் ஒதுங்கிவிடுவேன். பணமெனக்கு எதிரியல்ல. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது தெரிந்தவன். ஆனால், நேரமாக கொடுக்கப்படும் உதவிகளுக்கு எதுவும் இணையில்லை.

வ்வளவு பணம் கொடுத்தாலும் என் மாமா போல கிடைக்கப்போவதில்லை என் வாழ்வில். எங்கள் வீட்டில் வந்து தங்கி, உண்டு, உறங்கி எங்கள் பிரச்சனைகள் தீர்ந்தேபிறகே டவுன் பேருந்து ஏறி அவர் ஊருக்குச் செல்வார். அவரின் வாழ்க்கையை நாங்கள் உறிஞ்சிக்கொண்டோம் என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் அதை விரும்பியே தன் அக்கா, அக்கா குழந்தகள் என்று செய்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அர்ப்பணிப்பு உறவு.

Time is the only thing you can’t save. You can’t deposit for future use. You can’t give it to your generation as a saving. 
When somebody is spending time for you, it is not from their savings. It’s their life. They are giving their share of life to you. Respect that.

ங்கள் வாழ்க்கையிலும் இப்படி ஒரு மாமாவோ நண்பனோ இருக்கலாம். பணம் என்பது வரும் போகும். ஆனால் , அவர்கள் உங்களுக்காக செலவழிக்கும் நேரம் என்பது உங்களால் திருப்பிக்கொடுக்க முடியாத ஒன்று. அவர்களும் அவர்கள் உபரிச் சேமிப்பில் இருந்து கொடுக்கவில்லை. அவர்களையே பிய்த்துக்கொடுக்கிறார்கள்.

வர்களின் நேரத்திற்கு மரியாதையும் அனபும் செலுத்துவதே உங்களால் முடிந்த ஒன்று. செய்துவிடுங்கள். இல்லையென்றால் You don’t forgive yourself in your old days.