இப்படியான உரையாடல்களை நான் கேட்டு வளர்ந்திருக்கிறேன். இன்றும் பலர் பேசக் கேட்டுள்ளேன் இந்தியாவில். என் அண்ணன் மகன் பொறியியல் கல்லூரிப்படிப்பு முடித்து ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனிடம், "உள்ளூரில் இருக்கும் வார்டு தேர்தல் தொடங்கி, பாராளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை வரை அடிப்படையாவது தெரியுமா? என்று கேட்டால் , "அது எதுக்கு சித்தப்பா என்பான்?"
நாம் என்ன மாதிரியான கல்வி கற்கிறோம்? பள்ளிக்கு என்ன உடை போடப்போகிறோம்? பள்ளியில் நாம் சாப்பிடப் போகும் உணவில் வெங்காயம் பூண்டு இருக்கலாமா? படித்த பிறகு வங்கி வேலை கிடைக்குமா? சேமித்த காப்பீட்டுப்பணம் இருக்குமா? உள்ளூர் ரயில் ஓடுமா? அடுத்த நாட்டுடன் போர் வருமா? நம்மூர் அருள்மிகு முனியாண்டி கோவில் "சிரி முனியாண்டி பகவான்" என்று மாறுமா?
இவை அனைத்தையும், நாம் வாழப்போகும் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் , பாதையையும் தீர்மானிப்பது அரசியல். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நீங்கள் ஓட்டுப்போடுகிறீர்களோ இல்லையோ, உங்களை அறிஞர் அண்ணாவோ , எடப்பாடி பழனிச்சாமியோ யாரோ ஒருவர் ஆளப்போகிறார்கள். உங்களின் வாழ்க்கையை, உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் கொள்கை முடிவுகளை, எடுத்து உங்களின் வாழ்க்கையை சிதைக்கவோ அல்லது சிறப்பாக்கவோ செய்யமுடியும் அவர்களால்.
காந்தி தென்னாப்பரிக்காவில் அரசியலில் இறங்கியது குடியுரிமை சார்ந்த போராட்டத்தினால்தான். அண்ணாவும் கலைஞரும் அரசியலுக்கு வந்ததும், இன்று ரசினி அரசியலுக்கு வர நினைப்பதும் ஒரே காரணம் அல்ல. அது போல, அரசியலுக்கு வந்துவிட்டாலும், கமலுக்கு தமிழக அரசியல் குறித்து எதுவும் தெரியாது. ஏன் இட ஒதுக்கீடு? மதிய உணவிற்கு காமராசரும் , எம்சிஆரும், கலைஞரும் பட்ட துயரங்கள் என்ற வரலாறு தெரியாதவர் கமல். அவரும் அரசியல் கட்சி நடத்துகிறார்.
அமெரிக்காவில் பள்ளிகளில் அரசிலமைப்பு கற்றுத்தரப்படுகிறது. ஒரு சட்ட வரைவு (Bill /மசோதா) எப்படி சட்டமாகிறது என்பதில் ஆரம்பிக்கும் ஆரம்பக்கல்வி, மேல்நிலைப்பள்ளிகளில் அது விரிவடையும். விருப்பப்பாடமாக எடுக்கலாம். இந்தியாவில் வளரும் மனப்பாட மெசின்களைவிட ஒப்பீட்டளவில் இங்குள்ள குழந்தைகள் ஓரளவு அரசியல் கல்வி கற்கிறார்கள் எனலாம்.
I'm Just a Bill
https://www.youtube.com/watch?v=OgVKvqTItto
உங்களை ஒருவர் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆளுகிறார். உங்கள் வாழ்வைப் பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார். உங்கள் படிப்பு உங்கள வேலை, உங்கள் சேமிப்பு, உங்கள நிலம் , உங்கள் வயல் , உங்கள மருத்துவம் என்று எல்லாம் பாதிக்கிறது. இதைத் தெரிந்துகொள்வது மட்டும் போதாது. ஒவ்வொருவரும் அவர்களின் பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். கட்டடங்களில் உள்ள கற்சிலைகளிடம் வேண்டி பயன் இல்லை. அவைகள் உங்களுக்கு என்றும் உதவாது. நீங்கள்தான் அதுக்கும் காசு கொடுக்கவேண்டும்.
அரசியலில் பழகுவதும், அதில் ஆக்கபூர்வமாக பங்கெடுப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை. சிலைகளைப் பார்க்க கட்டிடங்களுக்கு வருடம் ஒருமுறை செல்லும் நேரத்தில் ஒரு போராட்டங்களிலாவது கலந்து கொள்ளுங்கள்.
நான் பலமுறை சொன்னது.
“A republic . . . if you can keep it.”
அமெரிக்க அரசியல் குறித்து இன்றும் இந்தியாவில் மேம்போக்கான பல பொதுக்கருத்துகள் உள்ளது. எடுத்துக்காட்டாக "அமெரிக்காவின் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள்" என்பது போன்ற தவறான தகவல்கள். தமிழில் அமெரிக்க அரசியல் களம் குறித்து விரிவான கட்டுரைகளோ அல்லது தகவல்களோ இருப்பதாக தெரியவில்லை. அதை ஆவணப்படுத்த முடிந்த அளவு முயல்கிறேன் நான்.
பிற நாட்டின் அரசியலைத் தெரிந்து கொள்வது, உள்ளூர் அரசியலை சீர்தூக்கிப் பார்க்க உதவும்.
எனவே அரசியல் பழகுங்கள் தோழர்களே!