Wednesday, October 30, 2013

குரல் வளம் தாண்டி உடல்வளமும் ஒரு தகுதி?

பாடகர்கள் (ஆண் / பெண்) என்பவர்கள் ஏற்கனவே உலகம் தைத்து வைத்துள்ள சட்டைக்குள் அடங்கக்கூடிய உடல் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பது போல் இசை உலகம் மாறிவிட்டது. அவர்களின் குரல் வளம் தாண்டி உடல்வளமும் ஒரு தகுதியாக மாறிவிட்டது. அல்லது அவர்களே உடல்வளத்தையும் மாற்றி அதையும் ஒரு அங்கமாக குரல்வளத்துடன் சேர்த்து சந்தைப்படுத்துகிறார்கள்.

 

மனதை மகிழச்செய்யும் உடல்வளம் என்பது நல்லதுதான். பாடல் என்பதுதாண்டி சின்ன அளவு காமமும் சேரும்போது சொக்கத்தான் வைக்கிறது. ஆனால் அந்த உடல்வளம் எல்லாப் பாடகர்களுக்கும் வாய்த்துவிடுவது இல்லை. வெறுமனே கிராமபோன் , வானொலி என்ற அளவில் இருந்தால குரலுக்குபின்னால் இருக்கும் உடல் பற்றிய தேவைகள் இருந்திருக்காது. தொலைக்காட்சியும், காட்சிகளுடன் கூடிய ஒலி-ஒளி தட்டுகள் வந்தபிறகு குரலுக்குப்பின்னால் உள்ள உடல் அழகு ஒரு முக்கியவிசயமாகமாறி வருகிறது.

அம்பேரிக்காவில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகள் (அதை பிரதியெடுத்து நடக்கும் டமில் நிகழ்ச்சிகள்) எல்லாம் உடல் அழகும் ஒரு பொருளாக மாறிவிட்டது.  Ray Charles ( http://www.youtube.com/watch?v=Q8Tiz6INF7I ) போன்று கண்தெரியாத  பலர் உள்ளார்கள். அவர்கள் புகழ் பெறவும் செய்துள்ளார்கள். பாடகர் வரிசையில்  Andrea Bocelli  (  http://www.youtube.com/watch?v=L8RG-U1LAG0 )  போல் பலர் உள்ளார்கள்.

ஆனால் வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஒரு உடல் குறைபாட்டுடன் (அப்படிச் சொல்வதில் உவப்பில்லை என்றாலும் வேறுபடுத்திக் காட்ட இந்த வார்த்தை) கையில் ஒரு ஊன்றுகோலை வைத்துக்கொண்டு  சாதித்துக் காட்டிவரும் Singer Chris Hendricks சாதனை மனிதர்தான். இரண்டு கிடார் வாசிப்பவர்கள், ஒரு ட்ரம்மர் கொண்டுள்ள இவரின் சின்ன இசைக்குழு பல சாதனைகளைச் செய்து வருகிறது. http://www.youtube.com/watch?v=B8Mv2ngrweM

Singer Chris Hendricks

Who Is Chris Hendricks?  http://www.youtube.com/watch?v=8BoN2djjYY0


சின்ன வயதில் பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும்.உதாசீனப்படுத்தலுக்கும் ஆளான இவர் அதையே ஒரு சவாலாக்கி சாதித்து வருகிறார். முக்கியமாக இவர்கள் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக பேசி, இசை நிகழ்ச்சி நடத்தும் ஒன்று சிறப்பானது. Singer Chris Hendricks  க்கும் அவரின் குழுவினருக்கும் எனது அன்பும் மரியாதையும்.

நேற்று எனது மக‌னின் பள்ளிக்கு வந்து இருந்தார்கள். அவர்களை அழைத்துவர உள்ளூர் வணிகநிறுவனங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நிதி உதவி செய்துள்ளது என்று நினைக்கிறேன்.

#அடுத்த பெட்னாவிற்கு ஆண்ட்ரியாவா? என்று சொல்லி முடிக்கிறேன்

Wednesday, October 09, 2013

மேடை சார்ந்த நடிப்பு மற்றும் தொப்புள்


நடிகர்கள் , அதுவும் குறிப்பாக நடிகைகள் குறித்து எனக்கு நிறைய மரியாதை உண்டு. சின்னவயதில் " டேய் சூப்பரா நடிச்சிருக்காண்டா ரஜினி"  என்ற அளவில் பேசித் திரிந்துள்ளேன். மரியாதை என்பது கற்றுத்தரப்படவில்லை என்பதைவிட பால்காரன், வேலைக்காரன் என்ற அளவில் சினிமா நடிகர் நடிகைகளையும் ஒருமையில் அழைக்கும் நோய் அதுவாகவே எனக்கும் வந்து சேர்ந்து இருந்தது. எனக்கு மட்டும் அல்ல என் வயதினர் அனைவரும் அப்படியே.

கல்லூரி காலங்களில்கூட அந்த நோய் இருந்தது. எப்போது மாறினேன் என்று தெரியவில்லை. நடிகர் நடிகர்களை மரியாதையுடன் அழைக்க / பேச வலிந்து மாற்றிக்கொண்டேன். எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் படம் பார்க்க ஆரம்பித்தவுடன் , நடிகர் நடிகைகளை மிகவும் மரியாதையாக‌ அறிமுகம் செய்து வைத்தேன். குழந்தைகளுக்கு வடிவேல் மிகவும் பிடிக்கும். வடிவேல் / விஜய் நகைச்சுவைக்காட்சிகள் அதிகம் பிடிக்கும். அபப்டி அவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் நேரத்தில் "இவர்தான் வடிவேல் அங்கிள். இவருக்கும் குடும்பம் உள்ளது. மனைவி, குழந்தைகள் உள்ளார்கள். அப்பா வேலை செய்வதுபோல இவர் நடிக்கும் வேலை செய்கிறார்."  என்ற அள‌வில் அறிமுகம் இருக்கும்.

நடிகைகள் என்றால்... "இந்த ஆண்டி அப்பா கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து நடிக்கிறார். இவருக்கு குழந்தைகள் உள்ளார்கள். (குழந்தைகளின் பெயர்கள் தெரிந்து இருந்தால் அவையும் சொல்லப்படும்) அப்பா இவருக்கு இரசிகராக இருந்தேன். நன்றாக நடனம் ஆடுவார்" என்ற அளவில் இருக்கும். கமலின் குழந்தைகளை யார் என்றும் சொல்லி உள்ளேன்.

Shakira - Hips Don't Liஎ குடும்பத்துடன் அடிக்கடி பார்ப்போம்.... அப்போதும் அதில் நடனம் ஆடும்  Shakira  அழகு, நளினம் வெளிப்படையாக பேசப்படும். அந்தப் பாட்டு பண்பலையில் வந்தால் அப்பா உங்க பாட்டு என்று சொல்லிவிடுவார்கள் குழந்தைகள். 

Taylor Swift எப்படி இளமைக் காலத்தில் இருந்து பாடல்களில் ஆர்வம் காட்டி கடின உழைப்பில் முன்னேறினார் என்பது போன்ற  ஆவணப்படங்களும் பார்ப்பது உண்டு. பொழுதுபோக்கு ( திரைப்படம், தொலைக்காட்சி, ...)  உலகத்தில் இருப்பவர்கள் இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன் குழந்தைகளிடம்.

இதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்வதன் காரணம்..... நடிகர்/நடிகைகளின் புற அழகு / குரல் / நடனம் இரசிக்கப்பட்டாலும் அது அவர்கள் திரையில் செய்யும் ஒரு தொழில்/வேலை தானே தவிர , அவர்களுக்கும் குடும்பம் உள்ளது.  திரை வாழ்க்கைக்கும் நிச வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக‌.

***

இவை எல்லாம் சினிமா இரசிகன் தொடங்கி கதைபுத்தக இரசிகன் வரை அனைவருக்கும் தெரியவேண்டும்.

டமில் வொலகத்தில் இருக்கும் பிரச்சனையாக நான் (நான் ) நினைப்பது இரசிகர்கள் மட்டும் நடிகர்/கதைபுக் ரைட்டர்களின் துதிபாடிகளாக இருப்பது இல்லை.... அந்த நடிகர்/கதைபுக் ரைட்டர்களும் அதையே விரும்புகிறார்கள் அல்லது அவர்களின் தொழில் பிம்பத்தை அவர்களே உண்மையாக நினைத்து வாழவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அந்த வழியில்தான் இந்த இளம் நடிகையும் என்று நினைக்கிறேன். உங்களின் மதங்கள் எதை அனுமதிக்கிறது என்று தெரிந்துகொண்டு திரைக்கு வருவது நல்லது. இப்படியான புகார்கள்/மதங்களைத் தொடர்புபடுத்தி காரியங்கள் செய்து படத்திற்கு விளம்பரங்கள் செய்வதற்கு பதில் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துவிடலாம். அங்குதான் எந்தவிதான செயலும் மக்கள் நலனாக‌ அல்லது சாணக்கியத்தனமாக போற்றப்ப‌டும்.

Wednesday, October 02, 2013

அக்டோபர் 2

ன்னளவில்....அம்பேத்கர், பெரியார்  போன்றோர்களின் சாதிய நிலைபாடுகளுக்கும் காந்தியின் சாதிய நிலைப்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. மதங்களில் காந்தி ஒரு வகையான நிலைப்பாடு கொண்டவர். விமர்சனங்களுக்கு  அப்பாற்பட்ட மனிதர்கள் கிடையாது அது காந்தியே என்றாலும். காந்தி குறித்த உரையாடல்கள் மாசி (மா. சிவக்குமார்) அவர்களின் வலைப்பதிவில் நிறைய நடத்தி ஓய்ந்தாகிவிட்டது.


அம்பேரிக்காவில் கருப்பின இளைஞர்கள் ஒருகாலத்தில் நடத்திய "உணவகங்களில் அமர்வுப்போராட்டங்கள் Greensboro sit-ins (http://en.wikipedia.org/wiki/Greensboro_sit-ins) எல்லாம் காந்தியின் பாதிப்பு என்று நினைக்கும்போது "அமைதியாக எதிர்த்தல்" என்ற காந்தியவழியில் மதிப்பு வருகிறது. உணவகங்களில் உணவு பரிமாற மறுத்த வெள்ளையின மக்களை அமைதியாக எதிர்கொண்டார்கள் கருப்பின இளைஞர்கள்.  இப்படி பல அமைதிப் போராட்டங்கள் இந்த மண்ணில் நடந்துள்ளது.

ஆனால் அவை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது. அம்மாவின் உண்ணா நோன்பும் அய்யாவின் உண்ணா நோன்பும் கசாரேவின் உண்ணாநோன்பும் இராம்தேவ் உண்ணா நோன்பும் நகைப்பிற்கு உரியது.

***

குட்ரோச்சி ( Ottavio Quattrocchi ) மற்றும் சவார்க்கர் ( Vinayak Damodar Savarkar )  வகையறாக்கள் எல்லாம்  காந்தியை சொந்தம் கொண்டாடும் போது கெதக் என்று இருக்கிறது.  கள்ள நோட்டு அடிப்பவர்கள்கூட அதிக காந்திபடம் வெளியிடுவதால், காந்தியவாதிகளாக காட்டிக்கொள்ளலாம. எல்லாம் அவர்கள் உரிமை.

***

மக்களின் பேரன்பை பெற்ற காந்தியையும் , இன்று நான் உட்பட பலர் பொட்டிதட்ட , கல்வி கற்க காரணமாய் இருந்த காமராசரையும் நினைவில் கொள்கிறேன்.