Monday, August 31, 2015

கடவுள்

டவுள் (God / Idea of God)  என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. அது குறித்து சொல்லிக்கொடுக்கப்பட்டவைகளை எல்லாம் துறந்துவிட்டு, அந்த வார்த்தையை அர்த்தம் இழந்த வெற்றுச் சொல்லாக மட்டுமே இன்று பார்க்க முடிகிறது இப்போது.  எப்படிச் சிந்தித்தாலும் அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்து, புதிய அர்த்தங்களை சேர்த்துக்கொள்ளவேண்டிய தேவை எனக்கு இல்லை இன்று. ஒரு வேளை தேவை ஏற்பட்டால், அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று தேடி , பின்னர் அது உள்ளதா? இல்லையா?என்று அடுத்த கேள்விக்கு போகலாம்.

அறிவியலின் இன்றைய நிலையில், நம்மைத்தாண்டி சில சாத்தியங்கள் இருக்கும் என்ற அடிப்படையில் இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுள்ளது. நமக்கு தெரியாத ஒன்றை "கடவுள்" என்று சொல்லி , பூசை செய்து சாத்திரங்கள் ஓதி அமர்ந்துவிடாமல்,  நமக்கு தெரியாத ஒன்று தெரியும்வரை பயணித்துக்கொண்டு இருப்பதுதான் அறிவியலின் அடிப்படை. 

முப்பரிணாமங்கள்தாண்டி அடுத்த பரிமாணங்களில் ( இன்டர்ஃச்டெல்லர்  படம் நினைவிற்கு வரலாம்) இயங்கக்கூடிய உயிர்கள் இருக்கலாம் என்ற அறிவியல்தேடலில் நான் கவனம் செலுத்துகிறேன். அத்தகைய உயிர்கள் (உயிர் என்று சொல்வது நமக்கு தெரிந்த வார்த்தையில் ) நம்மைவிட பலம் மிக்கவர்களாக இருக்கலாம். எறும்பைவிட நாம் எப்படி பலம்மிக்கவர்களோ அப்படி அவைகள் நம்மைவிட பலம்மிக்கவைகளாக இருக்கலாம்.

இன்று நாம் எதிர்கொள்ளும் புரிந்துகொள்ளமுடியாத இயற்கைச் சீற்றங்கள்கூட ஒரு வகை மேம்பட்ட பரிணாம பொருளின்/உயிரின் இயக்கமாக இருக்கலாம். இருந்துவிட்டுப்போகட்டும். என் கண்ணின் காணும் திறனைத்தாண்டிய ஒளி கீற்றுகளும், என் செவியின் கேட்கும் திறனைத்தாண்டிய ஒலி அலைகளும் நிறைந்துள்ள இந்த உலகில் நானும் வாழ்ந்துகொண்டுதான் உள்ளேன்.  என்னால் அவைகளை ஒன்றும் செய்யமுடியாது. எனது உணர்திறனுக்கு அப்பால் நடக்கும் பல எனக்குப் புரிய முடியாததாக உள்ளது என்பதற்காக,  அவற்றை ஏதோ ஒரு பெயர் சொல்லி அழைத்து (கடவுள்) சமாதானம் அடைய விரும்பவில்லை. அது தேங்கிவிடும் குட்டை நீர்போல.

எனது உணர்திறனுக்கு அப்பால் இருக்கும் சாத்தியங்களை அறிவியலின் துணைகொண்டு அறிந்துகொள்ள முயற்சிப்பதில்தான் உண்மையான தேடல் உள்ளது.

Idea of God
கடவுள் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் தேவை ஏற்படவில்லை. அதேசமயம் நாம் வாழும் இந்த உலகில் அதுகுறித்து தினமும் பேசப்படுவதால் அந்த வார்த்தைக்காண அர்த்தம் பிறரிடம் என்னவாக உள்ளது என்று சிந்திக்கும்போது அது ஒரு கருத்தாக்கம் (Idea) என்றுதான் தோன்றுகிறது. அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.

நாத்திகம்
நான் நாத்திகன் அல்ல.
இன்றைய அளவுகோலின்படி நாத்திகம் என்பது கடவுள் உள்ளார் என்ற கருத்தாக்கத்தை மறுக்கும் ஒற்றை நிலைப்பாடு.

இல்லாததை அல்லது என்னவென்று புரியாத தெரியாத‌ ஒன்றை, இருக்கிறது என்று ஆதரிப்பதும் ,இல்லை என்று மறுப்பதும் தேவையில்லாதது.

அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு என்ன?

.
Image courtesy: http://www.visual-arts-cork.com/

.

Thursday, August 27, 2015

சமூகச்சமநிலையும் இட ஒதுக்கீடும்

பொது இடங்களில் அதாவது கற்றோர் (பெத்தப்படிப்பு படித்து அதன்மூலம் காசு சம்பாதிப்பவர்கள் என்று கொள்க) கூடியிருக்கும் இடங்கள் அல்லது ஏட்டுச் சுரைக்காய் மட்டும் புசித்து மூளைவீங்கிகள் இருக்கும் இடங்கள் போன்றவற்றில் முடிந்த அளவு மிக்சரை வாயில் திணித்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டு இருப்பதுபோல நேரத்தை ஓட்டிவிடுவேன். ஆனாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இப்படியான பொது இடங்களில் சில உண்மைகளைப் பேசவேண்டியதாகிவிடுகிறது. ஆம் இங்கே உண்மை என்பது நான் பட்டறிந்த உண்மைகள். அய்யோ பாவம், அந்த வாய்ப்பு உங்களுக்கு இல்லை என்றால் அது உங்களுக்கான உண்மையல்ல. ஏதாவது கதை பொக் படித்து செட்டிலாகிவிடுங்கள். உண்மை என்பது பக்கச் சார்பானதுதான். எனது உண்மையும் உங்களுடைய உண்மையும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் நாட்டு அரசியல் வகைப்பேச்சுகள் ஏதாவது நடந்தால் பலர் எடுத்த எடுப்பிலேயே திமுக தலைமையைத் திட்டுவது என்பதை சம்பிரதாயமாக கொண்டுள்ளார்கள். இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் கிந்தியை எதிர்த்தும் கருணாநிதி அவர்கள் செய்த செயல்களால்தான் தமிழ்நாடு இப்படியாகிவிட்டது என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பல நேரம் பொத்திக்கொண்டு இருந்தாலும் சிலநேரங்களில் பத்திக்கொண்டுவிடுகிறது. நான் எந்த அரசியல் கட்சியின் அடிமைகிடையாது இருந்தாலும் இட ஒதுக்கீட்டு என்ற‌ விசயத்தில் எனக்கான சில நிலைப்பாடுகள் உண்டு.

இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் கல்வி பெற்று (கற்று) அம்பேரிக்காவிற்கு வந்து பெரிய சம்பளம் கொடுக்கும் வேலைகளில் இருக்கும் கணவான்கள் எல்லாம் இட ஒதுக்கீட்டை இன்று எதிர்க்கிறார்கள். ஆனால் அதே சமயம் அவர்களே சாதி இருக்க வேண்டும் என்றும் கொடிபிடிக்கிறார்கள். அப்படியான ஒரு உரையாடலில் சினிமா, அரசியல், இட ஒதுக்கீடு , கற்பு கருமாதி என்று தமிழர்களின் கிப்போகிரேட் மனநிலையை கோடிட்டுக்காட்டினேன். சில எதிரிகளை உருவாக்கி இருக்கக்கூடும் இருந்தாலும் சிலவற்றைச் சொல்வதில் தயக்கம் இருக்கக்கூடாது என்று இன்றும் நம்புகிறேன்.

இம்சை அரசன் அவர்களை நாட்டுக்கு தாரைவார்த்த இந்த உலகில் இருக்கும் ஒரே புண்ணிய பூமியான குசராத்தில் இன்று நடக்கும் இட ஒதுக்கீட்டு ஒலங்கள் பல "ராம பக்தர்களை" ஆச்சர்யப்படுத்தி உள‌ளது. ஆம் இன்று இட ஒதுக்கீடு கேட்பவர்கள் எல்லாம் "கடவுள் இராமன் அவர்களின் நேரடி வாரிசு வழி பரம்பரையாளர்கள்".

http://indianexpress.com/article/india/india-others/hardik-patel-leads-obc-quota-protests-here-are-his-top-10-quotes/
// We are the descendants of Lord Ram… we are the descendants of Sardar Patel. //

மண்டல் கமிசன் காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொடிபிடித்த இந்த "கடவுள் இராமனின் பரம்பரையினர்"  இன்று மகாபாரதம் படித்து ஞானியாகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த சந்தில் , சிலர் கோட்டா என்றால் அறிவு கம்மி என்றும் சிந்து பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

Coming full circle on reservations: Here's why Patels' OBC status demand should worry India
http://www.firstpost.com/politics/coming-full-circle-on-reservations-patels-demand-for-obc-status-should-worry-india-2407116.html

பேசிப் பேசி அலுத்துப்போன விசயம் இருந்தாலும் பொணமாகும்வரை காலாட்டிக்கொண்டு இல்லாவிட்டால் இந்த அறிவாளிகள் நம்மையும் மிதித்துவிடுவார்கள் என்பதால் பழைய நினைவுகள்.

இட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல
http://kalvetu.balloonmama.net/2012/12/blog-post.html

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?
http://kalvetu.balloonmama.net/2006/05/blog-post_23.html

ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு   (குழலி)
http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_30.html

.
Picture courtesy: http://www.marieclaire.co.uk/

.