Wednesday, January 06, 2016

புத்தாண்டில் கடவுளானேன்

ந்தப் பெண்கள் முதல்முறை வந்தபோது "வேலையாக இருக்கிறேன் மன்னிக்க". என்று சொல்லி சமாளித்தேன். அக்மார்க் உண்மையாக அன்று நான் வீட்டில் இருந்து அலுவலக வேலைதான் பார்த்துக்கொண்டு இருந்தேன். கதவைத் தட்டினார்கள் என்பதற்காக அவர்களிடம் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்ன். அதில் ஒரு புண்ணியவதி  " எல்லாரும் வேலைதான் பார்க்கிறார்கள்" என்று நக்கலாக ஆனால் சிரித்துக்கொண்டே சொன்னார். அப்படியே "நீங்கள் இந்துவா?" கேள்வியைச் சொருகினார்கள். "எனக்கு வேலை உள்ளது மன்னிக்க" என்று சொல்லி , அவர்கள் விடைபெற்றுச் சென்றவுடன் கதவை மூடிவிட்டேன்.  வீட்டிற்கு Desi TV புரோக்ராம் வாங்குங்கள் என்று வரும் விளம்பர அட்டைகள் முதல் இப்படி மதவிற்பனையாளர்கள் வரை மொகரையை வைத்து சிலவற்றை முடிவு செய்கிறார்கள்.

ஏற்கனவே பலமுறை இப்படி எனக்கு நடந்துள்ளது. இதற்கு முன் ஒருமுறை "மார்மன்" நம்பிக்கையைச் சார்ந்த யுவதிகள் நாங்கள் இருந்த அடுக்ககத்தில் எங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் தங்கி இருந்தார்கள்.  மார்மன் (https://en.wikipedia.org/wiki/Mormonism  ) நம்பிக்கையாளர்கள் இப்படி "மிசன்" தொண்டு செய்யவேண்டும் என்பது ஒருவித அமைப்பு முறை.

சென்ற தேர்தலில் ஒபாமாவுடன் மோதிய Mitt Romney இந்த அமைப்பச் சேர்ந்தவர்தான். அம்பேரிக்காவில் பல இளைஞர்களை பார்க்கலாம் . இரட்டை இரட்டையாக மிதிவண்டியில் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.   எங்கள் வீட்டெதிரில் இருந்த இந்தப் பெண்கள்  தினமும் வெளியில் வந்து உடற்பயிற்சி செய்வார்கள். ஒருமுறை கடவுள், மதம் பற்றிய கேள்வியை என்னிடம் கேட்டார்கள். அவர்களின் நோக்கம் அவர்களின் 'மதப்பரப்பல்' அதுதாண்டி ஒன்றும் இல்லை. "எனக்கு மதம் அல்லது கடவுள் தேவை இல்லை. ஏன் என்றால் நான்தான் கடவுள், எனக்காக உங்களைப்போல் பலர் ஊழியிம் செய்கிறார்கள்" என்று சொல்லிவிட்டேன்.

நான் சொன்னபதிலில் அவர்கள் அதற்கடுத்து என்னிடம் கடவுள் குறித்து பேசுவது இல்லை. அங்கே இருந்தவரை வெறும் அண்டைவீட்டு நட்பு அளவில், சிரித்து முகமன் கூறிக்கொள்வோம் அவ்வளவே.

ந்த முறை புத்தாண்டு தினத்தில் நான் முதலில் சொன்ன அதே பெண்கள் கதவைத் தட்டினார்கள்.  சன்னல் வழியே அவர்களைப் பார்த்த மனைவி " நீங்களே போய் பதில் சொல்லுங்கள்.அவர்கள் பைபிள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள்" என்று என்னை விரட்டினார்.  இந்தமுறையும் நான் அவர்களிடம் சரியான பதிலைச் சொல்லாவிடில் , அவர்கள் மூன்றாம் முறையாகவும் கதவைத் தட்டக்கூடும் என்பதால், நேரம் எடுத்து பேசத் தயாரானேன்.  வந்தவர்கள அதே இரு பெண்கள்தான். உள்ளூர் தேவாலய முகவரி அச்சிடப்பட்ட சில அட்டைகளை என்னிடம் திணித்தார்கள். அவர்களே அவர்களின் முந்தைய வரவை நினைவு கூர்ந்து, "இன்று உங்களுக்கு விடுமுறைதானே? வேலையில் இல்லவே" என்று பேச்சை ஆரம்பித்தார்கள். "ஆம்" என்று சொல்லி அவர்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொன்னேன்.  வந்தவரில் ஒருவர்,  இயேசு சொன்னார் என்று ஏதோ ஒரு வார்த்தையை அட்டையில் இருந்து எடுத்துச் சொல்லி,  "நீங்கள் எந்த மதம்?" என்று என்னைக் கேட்டார்.

நான் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவருக்கும் கை கொடுத்து "I love you " என்று சொன்னேன்.  சொன்னபிறகு,  "நான் இப்படி உங்கள் மீது அன்பு செலுத்த எனக்கு எந்த கடவுளும் தேவை இல்லை . எந்த புனித புத்தகங்களும் தேவை இல்லை.  கீழே விழப்போகும் ஒரு குழந்தையை தாங்கிப்பிடிக்க, அல்லது எப்படிப் பிடிக்க வேண்டும் என்று மதங்கள் சொன்னால்தான் செய்வேன் என்று நான்  இருப்பது இல்லை. இவை எல்லாம் ஒரு மனிதன் சக மனிதனுக்கு காட்டும் அன்பு.  எனக்கு அது உள்ளது. உங்களுக்கும், அது இருக்கும் இந்தப் புத்தங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்." என்றேன்.

அதுக்கும் மசியாமல் "இதயேதான் ஏசும் சொன்னார்" என்றார் வந்தவரில் ஒருவர். நான் சிரித்துக்கொண்டே "அடுத்த வீடுகளுக்கு போகும்போது நானும் இதையே சொன்னதாகச் சொல்லவும்" என்று சொன்னேன். நமட்டுச் சிரிப்புடன் போய்விட்டார்கள். இனிமேல் கதவைத் தட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.