Monday, March 11, 2013

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம்

ரண்டு நாடுகள் மோதிக்கொள்ளும் இராணுவப் போரில் அதிக உயிர்களை அதாவது அதிக  எதிரிநாட்டு உயிர்களைக் கொன்று வாகைசூடும் நாடு வெற்றுபெற்றதாகக் கருதப்படும். அதுதான் அதன் வடிவம் விதிகள். அதுபோல உண்ணாவிரத போராட்டம் என்பதற்கு ஒரு வடிவம் உள்ளது. இதில் உண்ணாநோன்பு இருப்பவரின் நிலை தோல்வியை நோக்கியே.  எப்போதும் அவருக்கு தோல்வி அல்லது சாவு மட்டுமே நிரந்தரம். அந்தப்போராட்டம் வெற்றிஅடைவது என்பது அவரின் கையில் இல்லை , அவர் யாரை நோக்கிப்போராடுகிறாரோ அவரின் கையில் உள்ளது.

ஆனால் இந்தப் போராட்டவடிவத்தில் ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு உள்ளது. அதுதான் பேச்சுவார்த்தை. எதிர்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால்கூட அது ஒரு அடையாள வெற்றிதான். காந்தி ,திலீபன், அன்னாகசாரே , இராம்தேவ் என்று இதுவரை நடந்த போராட்டங்கள் எல்லாம் அடுத்த தரப்பை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்கும் ஒரு உத்தி. அதாவது தன்பால் ஒரு இரக்க‌த்தை அல்லது அனுதாபத்தை பொதுமக்கள் மத்தியில் வரவைத்து, அதன்மூலம் அதனது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்து எதிர் தரப்பை பேச்சுவார்த்தைக்கு வரவைக்கும் ஒரு போராட்டம்.

இந்தகைய‌ போராட்டங்கள் எப்போதும் போராடுபவனால் வெற்றி பெறாது. மாறாக யாரை நோக்கி போராட்டம் செய்யப்படுகிறதோ, அந்த தரப்பு மனது வைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். காந்தியின் போராட்டங்கள் வெற்றி என்று சொல்லித்திரிவது காந்தியின் வெற்றி அல்ல. எதிர்தரப்பில் இருந்த பிரிடிஷ் தரப்பு அந்த போராட்டங்களை மதித்து ஏதோ செய்தத்தால் கிடைத்த வெற்றி. திலீபன் விசயத்தில் அவர் யாரை நோக்கி போராட்டம் நடத்தினாரோ அந்ததரப்பு ஒன்றும் செய்யவில்லையாதலால் அவரின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

உண்ணா நோன்பு போன்ற எளிய போராட்டங்கள் ஒரு சாதாரண மனிதனால் சட்டென்று செய்துவிடக்கூடிய ஒன்று. அதிக பண பலமோ ஆள்பலமோ தேவை இல்லை. அதனால்தான் அந்த வடிவம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால் இத்தகைய போராட்டங்கள் மனிதாபிமானம் உள்ளவர்களை நோக்கி செய்யப்படும்போதுதான் , குறைந்த பட்ச பேச்சுவார்த்தையாவது சாத்தியம். மனசாட்சியற்ற அதிகார வர்க்கங்களை எதிர்த்து செய்யப்படும் உண்ணா நோன்பு போராட்டங்கள் நசுக்கப்படும்.

மீபத்தில் நடந்த லயோலா கல்லூரிமாணவர்களின் போராட்டம் என்பது, தங்களின் நிலையை உலகுக்கு உரக்கச் சொல்லத் தவிக்கும் மாணவர்களின் போராட்டம் என்பதால் நான் ஆதரித்தேன். இப்படி போராடுவதால் என்ன கிடைக்கும்? உனது மகனை அனுப்புவாயா? என்று கேட்கும் கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆனால் சிலவற்றை விளக்கவேண்டிய தேவை உள்ளது.

அவரவர் கட்சிக்கு நேர்ந்துவிட்டுக்கொண்ட அடிமைகள் சில உண்ணாவிரதங்களை நினைவில் கொள்ளவேண்டும்.

1. ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டி லஞ்ச்பிரேக் உண்ணாவிரதம் இருந்தவர், என்ன சாதித்தார் அந்த உண்ணாவிரதத்தால்? கடைசியில் மழை நின்றாலும் தூறல் விடவில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

2. காவிரி நீர்வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர், என்ன சாதித்தார் அப்போது அந்த உண்ணாவிரதத்தால்?

இவர்கள் இருவரும் தாங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்தபோது சகல வசதிகளுடன் உண்ணாவிரதம் இருந்தார்கள். இப்படியான வரலாறு கொண்ட கட்சி முதாலாளிமார்களின் அடிமைகள் இன்று லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்துகிறார்கள்.

த‌லைமை சொன்னால் சட்டையை மாற்றுவது, வள்ளுவர் கோட்டத்தின் முன்னால் கூடுவது போன்ற செய‌ல்களைச் செய்கிறீர்கள். மேலும் மண்சோறு சாப்பிடுவது, தேர் இழுப்பது, காலில் விழுவது , பேரன் பேத்திகளின் இரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருப்பது என்று நீங்கள் செய்யும் எல்லா அடிமைச் செயல்களுக்கும் , பதவி என்ற பிஸ்கெட்டுகள் அல்லது ஏதோ ஒரு சுயஇலாபம் என்ற பொறைகளே அடிநாதமாக இருப்பதை மறக்க வேண்டாம்.

ஆம் ஒத்துக்கொள்கிறேன் குறைந்த பட்சம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பண்பிலா தேசத்தில், உண்ணாவிரதம் என்பது கேலிப்பொருளே. எதிர்தரப்பு அகிம்சைவாதிகளாக இருந்தால்தான் இத்தகைய அகிம்சை போர்கள் அவர்களின் மனதில் வலியை ஏற்படுத்தும். இல்லாவிட்டால் இப்படியான கைதுகளில்தான் முடியும். அல்லது ஒட்டுமொத்த கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுத்து நசுக்கப்படும்.

ஓட்டுப்போடும் வயது வந்த இளைஞர்கள் , அவர்கள் நம்பும் பிரச்சனைக்கு இப்படியான போராட்டங்களை நடத்துவதை வரவேற்க வேண்டும். வேறு என்ன போராட்ட வடிவம் உள்ளது இந்தியா ஜனநாயகத்தில்? 10 பேர் கூடி கோசம்போடுவதால் கவன ஈர்ப்பு வரப்போவது இல்லை. தேர்தல் முறையில்தான் வெல்ல வேண்டும் என்றால், நல்ல தலைவர்கள் வேண்டும்.தேர் இழுப்பது , மண்சோறு சாப்பிடுவது போன்ற அடிமைகளின் இயக்கத்தில் நல்ல தலைவர்களை எங்கே தேடுவார்கள் இவர்கள்?

ஆம் 18 வயதிற்குப்பிறகு எனது மகன் அல்லது மகள் இத்தகைய சமூகப்பிரச்சனைகளில் இப்படியான போராட்டங்களைச் செய்தால் நான் ஆதரிப்பேன். மறந்துவிடாதீர்கள் , உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரிமாணவர்களுக்கும் பெற்றோர்கள் உண்டு. அவர்கள் மனது பாறை அல்ல. ஆம் வலிக்கும் வலிக்கத்தான் செய்யும்.

பதவிக்காக சட்டையை மாற்றுவது அல்லது தேர் இழுப்பது அல்லது மண்சோறுசாப்பிடும் பிள்ளை இருந்தால்தான் வெட்கப்படுவேனே தவிர இப்படியான பிள்ளைகள் இருந்தால் பெருமைதான்படுவேன்.

மறந்துவிடாதீர்கள் லயோலா கல்லூரி மாணவர்களாவது கைது செய்யப்பட்டார்கள். உங்களின் தலைவர்கள் வெற்றி வெற்றி என்று அவர்களாகக் கூவிக்கொண்டு அவர்களாகவே எழுந்துபோனார்கள்.

.

No comments:

Post a Comment