Tuesday, August 27, 2013

உடலுறவின் தேவை என்ன?

னித இனம் மற்றும் இதர பல உயிரினங்களின் ஒரே நோக்கம் அதாவது "உயிர்த்து இருத்தலின் ஒரே நோக்கம் சந்ததி உருவாக்கம் என்பதே" என்று இன்றும் நம்புகிறேன். மற்ற எல்லா வாழ்வியல் அற‌ங்களும், தேவைகளும் சந்ததி உருவாக்கம் என்ற நாரின் மேல் கட்டப்பட்ட பூக்களே. இப்படியான மறு உருவாக்கம் என்பது, ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு மாதிரி உள்ளது. தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை என்பது காற்று, பூச்சிகள் என்று அடுத்தகூறுகளை நம்பிய ஒரு வடிவம். இரண்டு மரங்கள் நேரடியாக மரவுறவு (உடலுறவு) கொண்டுதான் காய்களை,கனிகளை,விதைகளை உருவாக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

தேனீக்கள் போன்ற மூன்றாம் ஆட்கள் மூலமாக இனப்பெருக்கத்திற்கான கூறுகளை அவுட்சோர்ஸ் செய்துவிட்டு மரங்கள் மரம்போல் நிற்கிறது. ஆண் பெண் என்று தனி இனம் இல்லாமல் ஒரு உயிரியே ஆணாக பெண்ணாக இரண்டு கூறுகளும் உடையனவாகவும் உள்ளது ( hermaphrodites ).   மனித இனத்தில் இருக்கும் பெரும்பாலனா ஒழுக்க,சாதி,சமய கூறுகள் எல்லாம் சந்ததி ,இனம்பெருக்கம், உடலுறவு போன்ற கூறுகளை நேரடியாக அல்லது மறைமுகமாகக் கொண்டவை. சந்ததிப் பெருக்கத்திற்கு நேரடி உடலுறவு தேவை இல்லை எனும்போது இவைகள் என்னவாகும்?

பல பெண்களை டேட் (Date) செய்தும் எந்த ஒரு பெண்ணின்மீதும் ஈர்ப்பு வராமல் கடைசியில் ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்ட சக ஊழியரை அறிவேன். இவர்களின் திருமணத்தில் உடலுறவு இருந்தாலும், அதன் தேவை சந்ததிப் பெருக்கத்திற்கானது  அல்ல. சந்ததிப் பெருக்கத்திற்கு ஏதோ ஒரு பெண்ணின் கருமுட்டையை வாங்கி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம அல்லது தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.

அதிகரித்து வரும் ஒருபால் திருமணங்களும், அறிவியல் வளர்ச்சியில் நேரடித் தொடர்பு இல்லாமல் கரு உண்டாக்கும் முறைகளும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், ஆண் பெண்ணின் உடலுறவு என்பது எந்த நோக்கத்திற்கானது? வலிந்து திணிக்கப்படும் பெண்ணுடல்/ஆணுடல் கவர்ச்சி விளம்பரங்களால் மூளையில் பதிய வைக்கப்பட்டுள்ள காரணிகள்தான் சட்டன்று உணர்வுகொள்ள வைக்கிறாதா? ஒரு வேளை இவை குறைந்து, சந்ததி தேவைக்கும் உடலுறவு தேவையே இல்லை, செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று நிலை வந்துவிட்டால் உடலுறவின் தேவை முற்றிலும் இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது.

நேரடி உடலுறவு கொண்டு பிற்காலத்தில் அது நின்று போய் மரங்கள்/தாவரங்கள் போல மகரந்தம் கடத்தலில் சந்ததி வளர்க்கும் உயிரினங்கள் ஏதும் உண்டா?

தொடுதல் , அணைப்பு, முத்தம் எல்லாம் சந்ததி உருவாக்க உதவாதவை , ஆனாலும் மனித இனம் இதனால் கிளர்ச்சி அடைகிறது என்பது உண்மையே. ஒருவேளை மனித இனம் ஒன்றின்மீது ஒன்று சார்ந்து இருக்கும் தேவையின் வெளிப்பாட்டிற்காக மட்டும் உடலுறவு என்றாகும் நிலை வருமோ?

1 comment: