Monday, August 31, 2015

கடவுள்

டவுள் (God / Idea of God)  என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. அது குறித்து சொல்லிக்கொடுக்கப்பட்டவைகளை எல்லாம் துறந்துவிட்டு, அந்த வார்த்தையை அர்த்தம் இழந்த வெற்றுச் சொல்லாக மட்டுமே இன்று பார்க்க முடிகிறது இப்போது.  எப்படிச் சிந்தித்தாலும் அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்து, புதிய அர்த்தங்களை சேர்த்துக்கொள்ளவேண்டிய தேவை எனக்கு இல்லை இன்று. ஒரு வேளை தேவை ஏற்பட்டால், அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று தேடி , பின்னர் அது உள்ளதா? இல்லையா?என்று அடுத்த கேள்விக்கு போகலாம்.

அறிவியலின் இன்றைய நிலையில், நம்மைத்தாண்டி சில சாத்தியங்கள் இருக்கும் என்ற அடிப்படையில் இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுள்ளது. நமக்கு தெரியாத ஒன்றை "கடவுள்" என்று சொல்லி , பூசை செய்து சாத்திரங்கள் ஓதி அமர்ந்துவிடாமல்,  நமக்கு தெரியாத ஒன்று தெரியும்வரை பயணித்துக்கொண்டு இருப்பதுதான் அறிவியலின் அடிப்படை. 

முப்பரிணாமங்கள்தாண்டி அடுத்த பரிமாணங்களில் ( இன்டர்ஃச்டெல்லர்  படம் நினைவிற்கு வரலாம்) இயங்கக்கூடிய உயிர்கள் இருக்கலாம் என்ற அறிவியல்தேடலில் நான் கவனம் செலுத்துகிறேன். அத்தகைய உயிர்கள் (உயிர் என்று சொல்வது நமக்கு தெரிந்த வார்த்தையில் ) நம்மைவிட பலம் மிக்கவர்களாக இருக்கலாம். எறும்பைவிட நாம் எப்படி பலம்மிக்கவர்களோ அப்படி அவைகள் நம்மைவிட பலம்மிக்கவைகளாக இருக்கலாம்.

இன்று நாம் எதிர்கொள்ளும் புரிந்துகொள்ளமுடியாத இயற்கைச் சீற்றங்கள்கூட ஒரு வகை மேம்பட்ட பரிணாம பொருளின்/உயிரின் இயக்கமாக இருக்கலாம். இருந்துவிட்டுப்போகட்டும். என் கண்ணின் காணும் திறனைத்தாண்டிய ஒளி கீற்றுகளும், என் செவியின் கேட்கும் திறனைத்தாண்டிய ஒலி அலைகளும் நிறைந்துள்ள இந்த உலகில் நானும் வாழ்ந்துகொண்டுதான் உள்ளேன்.  என்னால் அவைகளை ஒன்றும் செய்யமுடியாது. எனது உணர்திறனுக்கு அப்பால் நடக்கும் பல எனக்குப் புரிய முடியாததாக உள்ளது என்பதற்காக,  அவற்றை ஏதோ ஒரு பெயர் சொல்லி அழைத்து (கடவுள்) சமாதானம் அடைய விரும்பவில்லை. அது தேங்கிவிடும் குட்டை நீர்போல.

எனது உணர்திறனுக்கு அப்பால் இருக்கும் சாத்தியங்களை அறிவியலின் துணைகொண்டு அறிந்துகொள்ள முயற்சிப்பதில்தான் உண்மையான தேடல் உள்ளது.

Idea of God
கடவுள் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் தேவை ஏற்படவில்லை. அதேசமயம் நாம் வாழும் இந்த உலகில் அதுகுறித்து தினமும் பேசப்படுவதால் அந்த வார்த்தைக்காண அர்த்தம் பிறரிடம் என்னவாக உள்ளது என்று சிந்திக்கும்போது அது ஒரு கருத்தாக்கம் (Idea) என்றுதான் தோன்றுகிறது. அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.

நாத்திகம்
நான் நாத்திகன் அல்ல.
இன்றைய அளவுகோலின்படி நாத்திகம் என்பது கடவுள் உள்ளார் என்ற கருத்தாக்கத்தை மறுக்கும் ஒற்றை நிலைப்பாடு.

இல்லாததை அல்லது என்னவென்று புரியாத தெரியாத‌ ஒன்றை, இருக்கிறது என்று ஆதரிப்பதும் ,இல்லை என்று மறுப்பதும் தேவையில்லாதது.

அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு என்ன?

.
Image courtesy: http://www.visual-arts-cork.com/

.